காற்றின் செயல்கள், காற்றின் அரித்தல் நிலத்தோற்றங்கள், காற்று படியவைத்தலினால் தோன்றும் நிலத்தோற்றங்கள் - காற்று | 11th Geography : Chapter 4 : Lithosphere: Exogenic Processes
காற்று
வறண்ட நிலங்களில் உள்ள
முக்கியமான புவிப்புறவியல் காரணி காற்று ஆகும். வறண்ட பகுதியில் காற்றின் வேகம்
அதிகமாதலால் அரித்தல் மற்றும் படிவித்தல் செயல்களை செய்கின்றது.
காற்றின் அரித்தல் மற்றும் படிவித்தல் செயல்களினால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்
காற்று வழி நிலத்தோற்றங்கள் (Aeolian landform)
என
அழைக்கப்படுகிறது.
காற்றின் செயல்கள்
கீழ்க்கண்ட
வழிகளில் காற்றின் செயல்கள் நடைபெறுகின்றன.
1. தூற்றுதல் (Deflation)
காற்றின்
மூலம் மணல் மற்றும் தூசுகள் நீக்கப்படுவதை தூற்றுதல் என்கிறோம். இச்செயல்
பாலைவனத்தில் பள்ளங்களை ஏற்படுத்துகிறது. இந்தப் பள்ளங்கள் நீரால் நிரப்பப்படும்
போது பாலைவனச் சோலைகள் (Oasis)
உருவாகின்றன.
2. சிராய்த்தல்
(Abrasion)
காற்றின்
செயல்களில், காற்றினால் கடத்தப்படும் மணல் துகள்கள்
பாறைகளின் மீது மோதி அரிக்கப்படுதலே சிராய்த்தல் ஆகும்.
3. உராய்தல் (Attrition)
காற்றினால்
கடத்தப்படும் மணல் துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி தேய்வது உராய்தல் எனப்படும்.
காற்றின் அரித்தல் நிலத்தோற்றங்கள்
(Erosional Landforms of Wind)
1. ஊதுபள்ளம் (Blow/Deflation
hollows)
காற்றின்
தூற்றுதல் செயலினால் ஏற்படும் ஆழமற்ற பள்ளங்களே 'ஊது
பள்ளங்கள்' எனப்படும்.
2. காளான் பாறை (Mushroom
Rock)
காளான் பாறைகள் பாறைபீடம்
(அல்லது) பீடப்பாறைகள் எனவும் அழைக்கப்படுகிறது. இவை இயற்கையாக
தோன்றும் காளான் போன்ற அமைப்பினைக் கொண்டிருக்கும்.
பாலைவனங்களில்
மிக அதிகமாக மணல் மற்றும் பாறைத் துகள்களை காற்று புவிப்பரப்பிற்கு மேலே கொண்டு
செல்வதால் அங்கு அமைந்துள்ள பாறைகளின் அடிப்பகுதிகள் மேல்புற பகுதிகளை விட அதிகமாக
அரிக்கப்படுகின்றன. இதன் விளைவாக பாறைத் தூண்கள் அடிப்பகுதியில் அதிகம்
அரிக்கப்பட்டும் மேல் பகுதி பரந்தும் காளான் போன்ற அமைப்பினைப் பெற்றுள்ளன.
3. யார்டாங் (Yardang)
காற்று வீசும் திசைக்கு
இணையாக 1 முதல் 10
மீட்டர்
உயரம் வரை பரந்த அமைப்பிலான பாறைகள் அரிக்கப்பட்டு குறுகிய பள்ளத்துடனும்
குழிகளுடனும் ஒழுங்கற்ற பாறை முகடுகளாக காணப்படும் நிலதோற்றமே யார்டாங் எனப்படும்.
இவை காற்றின் பல்வேறுபட்ட அரித்தல் செயல்களினால் ஏற்படுகின்றது. ஏரிகளில் காணப்படும் மணல்
துகள்களை எடுத்துச் செல்லும் காற்று எதிரே உள்ள பாறைகளின் வலுவற்ற பகுதிகளை
அதிகமாக அரித்து முகடுகளையும் மற்றும் பள்ளங்களையும் மாறி மாறி உருவாக்குகிறது.
மிகப் பெரிய அளவிலான யார்டாங்குகள் எகிப்தில் அஸ்வான் ஏரியின் வடக்குப் பகுதிகளில்
உள்ள கோம்ஓம்போ என்ற இடத்தில் காணப்படுகிறது.
உயர்சிந்தனை
காளான்
பாறையின் மேல்பகுதியினை விட கீழ்பகுதி அதிகமாக அரித்தற்கான காரணம் என்ன?
4. சியூகன் (Zeugen)
காற்றின்
உராய்ந்து தேய்தல் செயலினால் உருவாகும் நிலத்தோற்றத்தில் முகடுகளும் பள்ளங்களும்
அடுத்தடுத்து காணப்படுவதே சியூகன் எனப்படும். இவை 30
மீ
உயரம் வரை காணப்படும்.
காற்று படியவைத்தலினால் தோன்றும்
நிலத்தோற்றங்கள்
1. மணல் குன்றுகள் (Sand
Dunes)
வறண்ட
வெப்ப பாலைவனங்களே மணல் குன்றுகள் உருவாகும் சிறந்த இடமாக அமைகின்றது. மணல்
குன்றுகளின் வடிவத்தைப் பொறுத்து, பல வகையான மணல் குன்றுகள் காணப்படுகின்றன. அவை
பிறைவடிவ மணற்குன்று (Barchans),
சங்கிலித்
தொடர் மணல் குன்று (Seif dunes)
போன்றவையாகும்.
i.
பர்க்கான்ஸ் (Barchans)
பர்க்கான்ஸ்
பாலைவனத்தின் மிகச் சிறந்த ஒரு நிலத்தோற்றம் ஆகும். இவை பிறை வடிவம் கொண்டவை.
பிறையின் இரு முனைகளும் காற்றின் எதிர் திசையில் நீண்டுக் காணப்படுகிறது. இப்பிறை
வடிவக் குன்றுகள் 27 மீட்டர் உயரம் வரை
காணப்படும்.
ii. சங்கிலித் தொடர்மணல் குன்று
(Seif dunes)
நீண்ட
முகடுகளைக் கொண்ட மணல் குன்றுகளே சங்கலித் தொடர் மணல் குன்றுகள் எனப்படும். இவை
அங்கு வீசும் காற்றின் திசை அமைப்பில் காணப்படுகின்றன. சங்கிலித் தொடர் மணல்
குன்றின் பரப்பு தளம் (Slip)
காற்று
வீசும் திசையில் அமைவதற்கு, அதன் இரு முனைகளும் காற்றுச் சுழல்களை
கொண்டிருப்பதே காரணமாகும். சங்கிலித் தொடர் குன்று முகடுகளுக்கு இடையில் உள்ள
பள்ளங்களில் காணப்படும் மணல் காற்றினால் நீக்கப்படுகிறது. இந்த முகடுகள் பல கிலோ
மீட்டர் நீண்டு காணப்படும்.
2. காற்றடி வண்டல் படிவு
(லோயஸ்)
பல ஆயிரம் வருடமாக உலகின் பல
பகுதிகளில் மேற்பரப்பானது காற்றினாலும் அது ஏற்படுத்தும் தூசுப் புயல்களினாலும்
படிவிக்கப்பட்டப் படிவுகளால் நிரப்பப்பட்டுள்ளது. இந்த படிவுகளே காற்றடி வண்டல்
படிவு என அழைக்கப்படுகிறது.
3.
மலையடி சமவெளி (Pediplains)
பாலைவனங்களில்
உள்ள உயர் நிலங்கள் காற்றின் செயல்களினால் அரிக்கப்பட்டு எவ்வித நிலத்தோற்றமும்
அற்ற தாழ்நிலமாக மாறுவதே மலையடி சமவெளி எனப்படும்.