இயற்சிதைவு, வேதியியல் பாறைச் சிதைவு, உயிரின பாறைச் சிதைவு - பாறைச் சிதைவு | 11th Geography : Chapter 4 : Lithosphere: Exogenic Processes
பாறைச் சிதைவு (Weathering)
பாறைகளின் சிதைவுறுதல் மற்றும் வேதிப்பிரிகையை பாறைச்
சிதைவு என்கிறோம். காலநிலை, தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற உயிரிகளால் பாறைகளானது
இயற்வேதியியல் - உயிரின சிதைவுகளால் உடைகின்றன. பாறைச் சிதைவானது மூன்று வகைப்படும். அவை இயற் பாறைச்
சிதைவு, வேதியியல் பாறைச் சிதைவு
மற்றும் உயிரின பாறைச் சிதைவு.
இயற்சிதைவு (Physical weathering)
வானிலை கூறுகளின் தூண்டுதலால்
பாறைகள் உடைதலை இயற்சிதைவு என்கிறோம். இயற்சிதைவானது சிறிய கூரிய பாறைத்
துண்டுகளாக இப்பாறையிலிருந்து உருவாகின்றது. வெப்பநிலை மாற்றம், அழுத்தம், நீர் மற்றும் காற்று ஆகியவற்றின்
மாற்றத்தினால் இது ஏற்படுகின்றது. இயற்சிதைவானது பல்வேறு பிரிவுகளாக
பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன 1. வெப்பச் சிதைவு, 2. உறைபனி உடைப்பு மற்றும் 3. பரப்பு விரிசல்.
வெப்பச்சிதைவு (Thermal weathering)
வறண்ட மற்றும் அரை வறண்ட
பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பதனால் பகல் நேரங்களில் வெப்பநிலையானது
அதிகரிப்பதால் பாறை வெப்பமாகி விரிவடைகிறது. இரவு நேரங்களில் குளிரால் பாறை
சுருங்குகிறது. இந்த வேறுபட்ட தீவிர வெப்பநிலை மாற்றத்தால் பாறைகளில் விரிசல்
ஏற்பட்டு, இரண்டாகஉடைகிறது. இயற்சிதைவானது
வெப்பநிலையின் அடிப்படையில் இரண்டு வகையாக பிரிக்கலாம்.
அ) குருணையுரு சிதைவு மற்றும் (Granular disintergration)
ஆ) பிளாக் சிதைவு (Block disintergration)
அ) குருணையுரு சிதைவு (Granular disintergration)
வெப்பநிலை மாற்றங்களின் விளைவாக
பாறைக் கனிமங்கள் விரிவடைதல் மற்றும் சுருங்குவதால் பாறைகள் குருணை வடிவில்
சிறுசிறு துண்டுகளாக உடைகின்றன. இதனை குருணையுரு சிதைவு என்கிறோம்.
ஆ) பிளாக் சிதைவு (Block disintergration)
மிக அதிக வெப்ப
மாறுவிகிதத்தினால் தீப்பாறை அல்லது படிவு பாறையில் உள்ள வெடிப்பின் வழியாக பாறைகள்
பெரிய செவ்வக வடிவ தொகுதிகளாக உடைகின்றன. இதனை பிளாக்சிதைவு என்கிறோம். இது
பெரும்பாலும் கிரானைட் பாறைகளில் ஏற்படுகின்றது.
உறைபனி உடைப்பு (Frost wedging)
உறைதலின் போது கிட்டத்தட்ட
திரவங்கள் அனைத்தும் சுருங்கும். ஆனால் நீர் உறைதலின் போது அது பெரியதாகி அல்லது
அதிக இடத்தை பிடிக்கும். நீர் விரிவடைவதால் பாறைகளில் பெரும் அழுத்தம்
ஏற்படுகிறது. நீர் பாறைகளின் வெடிப்பில் சென்று உறையும்பொழுது பாறைகளின் மீது
செலுத்தப்படும் அழுத்தமானது வெடிப்பின் சுவர்களை பிளக்க ஏதுவானதாக இருக்கிறது.
இதனால் பாறையில் உள்ள வெடிப்பு விரிவடைந்து ஆழமடைகிறது. இவ்வாறு உறைபனி
உடைப்பினால் பாறைச்சிதைவு ஏற்படுகின்றது.
பரப்பு விரிசல் (Exfoliation)
பொதுவாக பாறைகளின்
மேற்பரப்புகள் அதிக அளவில் வெப்பமடைகிறது அல்லது குளிரடைகிறது. வெப்பநிலையில்
ஏற்படும் மாற்றம், வெங்காயத் தோல் உரிதல் போன்றுபாறைகளின் மேற்புறப் பகுதிகள்
தனித்தனிப் பகுதிகளாகப் பிரிந்துவிடும். பாறைகளிலிருந்து வளைந்த பாறைத் தகடுகள்
உடைந்து அரைக் கோள வடிவ ஒற்றைக்கல் தோற்றத்தை ஏற்படுத்தும் செயல் முறையை பரப்பு
விரிசல் (Exfoliation) என்று அழைக்கிறோம். இதனை
வெங்காயச் சிதைவு எனவும் அழைக்கலாம். இது பொதுவாக வறண்ட பகுதிகளில் ஏற்படுகின்றது.
வேதியியல் பாறைச் சிதைவு (Chemical Weathering)
வேதியியல் சிதைவு என்பது
பாறைகளின் வேதிப்பிரிகை ஆகும். எடுத்துக்காட்டாக, வேதியியல் சிதைவானது கிரானைட்
பாறையிலிருந்து உருவான கியோலினைட் (சீனக்களிமண்) போன்ற மாற்றி அமைக்கப்பட்ட பாறைப் பொருட்களை
உருவாக்குகிறது. வேதியியல் சிதைவின் வகைகள் பின்வருமாறு.
1. கரைசல்: (Solution) பாறைகளில் உள்ளநீரில் கரையக்கூடிய சில
கனிமங்கள் நீருடன் சேரும் போது கரைந்து விடும். காலப்போக்கில் பாறைகளில் உள்ள
கனிமங்கள் கரைந்து சில சமயங்களில் குகைகள் உருவாகலாம்.
2. ஆக்ஸிகரணம்: (Oxidation) ஆக்ஸிஜன் நீர் மற்றும் இரும்புடன்
சேரும்போது அது பாறைகளை வலுவற்றதாக்கி உடைத்து விடும். (எ.கா) இரும்பு
துருப்பிடித்தல்.
3. நீராற்பகுப்பு: (Hydrolysis) நீருடன் சேரும் போது வேதியியல் முறையில்
பாறைகள் சிதைந்து, நீரில் கரையாத களிமண் போன்ற படிவுகளை உருவாக்குகிறது.
கிரானைட் பாறையில் உள்ள பெல்ஸ்பார் (feldspar) களிமண்ணாக மாறுவது நீராற்பகுப்புக்கு மிகவும் பொருத்தமான
எடுத்துக்காட்டாகும்.
4. கார்பனேற்றம்: (Carbonation) கார்பன் டை ஆக்ஸைடு நீருடன் கலந்து
கார்போனிக் அமிலமாக மாறுவதை கார்பனேற்றம் என்கிறோம். கார்போனிக்
அமிலமானது பாறைகளில் உள்ள கனிமங்களுடன் வினைபுரிகிறது. இவ்வகை பாறைச் சிதைவானது குகைகள்
உருவாவதில் முக்கிய பங்கு
வகிக்கிறது.
5. நீரேற்றம்: (Hydration) நீரேற்றம் என்பது பாறைகளில் உள்ள கனிமங்களில்
நீர் உட்கிரகிக்கப்படுவதாகும். நீரேற்றம் பாறைகளின் பரும் அளவை அதிகரித்து
சிதைவடையச் செய்கிறது. நீரற்ற கால்சியம் சல்பேட் (Anhydrite) நீரை உட்கிரகிக்கும் போது
ஜிப்சமாக உருவாவது நீரேற்றத்திற்கு சிறந்த உதாரணமாகும்.
உயிரின பாறைச் சிதைவு (Biological Weathering)
தாவரங்கள், விலங்குகள், மற்றும் மனிதனின் நடவடிக்கைகளால்
பாறைகளில் மாற்றம் ஏற்படுகின்றது. இதனை உயிரினச் சிதைவு என்கிறோம். குழி மற்றும்
விரிசல்களை உண்டாக்கும் மண் புழுக்கள், கரையான், எலிகள் போன்ற உயினங்கள் ஈரப்பதம் மற்றும் காற்றினை
உட்புகுத்தி பாறைகளின் மேற்பரப்பில் வேதியியல் மாற்றங்கள் ஏற்பட வழிவகுக்கின்றன. விவசாயம்
மற்றும் பிற நடவடிக்கைகளுக்காக மனிதர்கள் தாவரங்களை அகற்றுவதன் மூலம் பாறைகளில்
உள்ள காற்று, நீர் மற்றும் தாதுப்பொருட்கள்
ஆகியவற்றிற்கு இடையே புதிய தொடர்புகளை உருவாக்குவதற்கு உதவுகின்றன. தாவரங்களின்
வேரானது பாறைகளின் மீது அதிக அழுத்தத்தினை ஏற்படுத்தி அவற்றை உடைக்கும்.