Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | இந்திய விடுதலைக்குப் பின் உள்ளாட்சி அமைப்புகள்

குடிமையியல் - இந்திய விடுதலைக்குப் பின் உள்ளாட்சி அமைப்புகள் | 9th Social Science : Civics: Local Self Government

   Posted On :  10.09.2023 11:45 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : உள்ளாட்சி அமைப்புகள்

இந்திய விடுதலைக்குப் பின் உள்ளாட்சி அமைப்புகள்

உள்ளாட்சி அமைப்புகள் என்ற முறையின் கருத்துருவாக்கம், 1957ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு வரை, நான்கு முக்கிய குழுக்களின் உருவாக்கம் மற்றும் அவற்றின் முயற்சியினால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பின் உள்ளாட்சி அமைப்புகள்

உள்ளாட்சி அமைப்புகள் என்ற முறையின் கருத்துருவாக்கம், 1957ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு வரை, நான்கு முக்கிய குழுக்களின் உருவாக்கம் மற்றும் அவற்றின் முயற்சியினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சமூக அபிவிருத்தி திட்டம் (1952) மற்றும் தேசிய நீட்டிப்பு சேவை (1953) ஆகியன, 1957ஆம் ஆண்டின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு அடிப்படையாகத் திகழ்ந்தன.

 

73 மற்றும் 74 வது அரசமைப்பு திருத்தச் சட்டங்களின்(1992) சிறப்பம்சங்கள்

 ஊராட்சி மற்றும் நகராட்சிகள் 'உள்ளாட்சிஅமைப்பு நிறுவனங்களாகச் செயல்படும்.

 குடியரசு அமைப்பின் அடிப்படை அலகுகள்: வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள உரிய வயதுடையோரைக் கொண்ட கிராம சபைகள் (கிராமங்கள் மற்றும் பகுதி குழுக்கள் நகராட்சிகள்) ஆகியன.

  கிராமங்கள் இடையில் காணப்படும் வட்டாரம்/ வட்டம் / மண்டலம் மற்றும் மாவட்ட அளவில் ஊராட்சிகள் என மூன்றடுக்கு முறையில் செயல்படுகின்றன. இரண்டு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையை உடைய சிறு மாநிலங்களில் பஞ்சாயத்துக்கள் இரண்டடுக்கு முறையில் இயங்குகின்றன.

  நேரடித் தேர்தலின் மூலம் அனைத்து அளவிலும் இடங்கள் நிரப்பப்படுகின்றன.

அனைத்து அளவு நிலைகளில் பஞ்சாயத்து தலைவர்களுக்கான இடங்களில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு, மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.

பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் பெண்களுக்கும் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. எல்லா அளவு நிலைகளிலும் தலைவர்கள் பதவிக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரே மாதிரியான ஐந்தாண்டு பதவிக்காலம் மற்றும் பதவிக்காலம் நிறைவடையும் முன்பாகவே தேர்தல்கள் நடத்தப்பெற்று புதிய அமைப்புகள் உருவாக்கப்படுதல் வேண்டும். ஆட்சி கலைக்கப்பட்டால், ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படுதல் வேண்டும்.


 

1994 தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள்

1994ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒரு புதிய சட்டத்தின் அடிப்படையில், புதிய பஞ்சாயத்து ராஜ் அமைப்பு செயல்படுத்தப்பட்டது. அதன் சிறப்பம்சங்களவன:

 () மூன்று அடுக்கு அமைப்பு () கிராம சபை () தேர்தல் ஆணையத்தினை நிறுவுதல் () நிதி ஆணையத்தினை நிறுவுதல் () மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதத்தில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு () பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு மற்றும் () மாவட்ட திட்டக்குழுக்களை அமைத்தல்.


கிராம ஊராட்சி

கிராமங்களில் செயல்படும் உள்ளட்சி அமைப்புகள், கிராம ஊராட்சி என்று அழைக்கப்படுகின்றன. தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 18வயது பூர்த்தியடைந்தோர்) அவர்களது பணிக்காலம் 5 வருடங்கள் ஆகும். கிராம ஊராட்சியின் ஆய்வளராக மாவட்ட ஆட்சியர் செயல்படுகின்றார் நூறுக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்டுள்ள ஒவ்வொரு கிராமமும் கிராம ஊராட்சியாக உருமாறியுள்ளது.

கிராம ஊராட்சியின் செயல்பாடுகள்

குடிநீர் வழங்குதல்

தெருவிளக்குகளைப் பராமரித்தல்

சாலைகளைப் பராமரித்தல்

கிராம நூலகங்களைப் பராமரித்தல்

சிறிய பாலங்களைப் பராமரித்தல்

 வீட்டுமனைகளுக்கு அனுமதி அளித்தல்

வடிகால் அமைப்புக்களைப் பராமரித்தல்

தொகுப்பு வீடுகளைக் கட்டுதல்

 தெருக்களைச் சுத்தம் செய்தல்

இடுகாடுகளைப் பராமரித்தல்

பொதுக்கழிப்பிட வசதிகளைப் பராமரித்தல்

விருப்பப் பணிகள்

1994ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் சட்டம் கீழ்க்கண்ட விருப்ப செயல்பாடுகளை உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் நடைமுறைப்படுத்தியது.

கிராமங்களிலுள்ள தெரு விளக்குகளைப் பராமரித்தல்

சந்தைகளையும் திருவிழாக்களையும் நடத்துதல்

 மரங்களை நடுதல்

விளையாட்டு மைதானங்களைப் பராமரித்தல்

 வண்டிகள் நிறுத்தப்படும் இடங்களில் உள்ள வாகனங்கள், இறைச்சி கூடங்கள் மற்றும் கால்நடைகளின் கொட்டகை ஆகியவற்றைப் பராமரித்தல்

 பொருட்காட்சிகள் நடைபெறும் இடங்களைக் கட்டுப்படுத்துதல்

வருவாய்

மூன்றடுக்கு அமைப்பு உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பில் கிராம ஊராட்சி மட்டுமே வரி விதிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் வரலாற்றுத் தொடக்கம் மற்றும் வளர்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் கல்வெட்டுகளில் காணப்படுகின்ற ஆதாரங்களின்படி, உள்ளாட்சி அமைப்புகளில் தமிழ்நாடு ஒரு நீண்ட வரலாற்றினைக் கொண்டதாக அறியப்படுகின்றது. அக்காலத்தில் தமிழ்நாடு பல கிராம குடியாட்சியைக் கொண்ட நிலமாக விளங்கியது. பல சமூகக் குழுக்கள் தங்களது பகுதி மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பத்து மற்றும் பதினோறாம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற சோழர்களது ஆட்சிக் காலத்தில், இந்த முறை உச்சநிலையை அடைந்தது கிராம சபைகள் வரி விதித்தன சமூக வாழ்வினை மேம்படுத்தின; தங்களது குறிப்பிட்ட பகுதியில் நீதியையும் நிலைநாட்டின. இந்தக் கிராம சபைகள் சோழ அரசர்களுடன் வலிமையான உறவுகளைக் கொண்டிருந்தனர். கிராம சபையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க குடவோலை முறை என்ற இரகசிய தேர்தல் முறை புழக்கத்தில் இருந்தது


சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு கிரம தன்னாட்சி சரியவும், நிலப்பிரபுக்களின் மையப்படுத்தப்பட்ட நிர்வாக முறை மேலோங்கவும் தொடங்கியது இம்முறை, ஆங்கிலேய காலனி ஆதிக்க ஆட்சி உள்ளாட்சி அமைப்புகளை அவர்களுக்கு ஏதுவாக இருக்கும் விதமாக அறிமுகம் செய்யும் வரை தொடர்ந்தது


சுதந்திர இந்தியாவில், ஜனநாயக பரவலாக்கத்தின் முதல் சட்டமாக, 1950 இல் மதராஸ் கிராம பஞ்சாயத்து சட்டம் இயற்றப்பட்டது. 1957, உள்ளூர் நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பாக வெளியான விவரங்களின் தொடர்ச்சியாக, 1958ல் மதராஸ் பஞ்சாயத்து சட்டமும், மதராஸ் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் சட்டமும் இயற்றப்பட்டன.


வரிகள்

சொத்து வரி

தொழில் வரி

வீட்டு வரி

குடிநீர் இணைப்புக்கான கட்டணம்

நில வரி

கடைகள் மீது விதிக்கப்படும் வரிகள்

உனது கிராமத்திலுள்ள உள்ளாட்சி அமைப்பு அலுவலகத்திற்குச் சென்று அங்குவிதிக்கப்படும் வரிகள் பற்றி அறிக.

கிராம சபை கூட்டங்கள்

ஒவ்வொரு வராட்சியிலும், அவ்வூராட்சி அதிகார எல்லைக்கு உள்ளே வசிக்கும் மக்களே கிராம சபை உறுப்பினர்களாக இருப்பர், ஊராட்சித் தலைவர் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவார். கிராம சபை கூட்டங்களில், வரவு செலவு கணக்குகளும், திட்டங்களினால் பயனடைந்தோர் பற்றியும் கலந்துரையாடப்படும்.


ஒரு வருடத்தில் நான்கு முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும்.

1. சனவரி 26 -  குடியரசு தினம்

2. மே1  -  உழைப்பாளர் தினம்

3. ஆகஸ்ட் 15  -  சுதந்திர தினம்

4. அக்டோபர் 2  -   காந்தி பிறந்ததினம்

5. நவம்பர் 1 உள்ளாட்சி தினம்

6. மார்ச் 22உலக தண்ணீர் தினம்

ஊராட்சி ஒன்றியம்

பல ஊராட்சிகள் ஒன்றிணைந்து ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்படுகின்றது. மக்கள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களை (கவுன்சிலர்) நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றனர். உறுப்பினர்கள் தங்களில் ஒருவரை ஊராட்சி ஒன்றியத் தலைவராகத் (Chairman) தேர்ந்தெடுகின்றனர்.


ஊராட்சி ஒன்றியத்தின் பணிகள்

குடிநீர் வழங்கல்

 கிராம சுகாதார நிலையங்கள் பராமரிப்பு

காலைகள் பராமரிப்பு

மகப்பேறு விடுதிகளை நிறுவுதல்

பொதுக் கண்காட்சிகள் நடத்துதல்

 கால்நடை மருத்துவமனைகளை நிறுவுதல்

 சமூக காடுகளை பராமரித்தல்

 துவக்கப்பள்ளிகட்டங்களை சீர் செய்தல்

உங்களது பகுதியில் தெரு விளக்குகள் எரியாவிட்டாலே குழாயில் குடிநீர் வரவில்லை என்றாலோ யாரிடம், எங்குச் சென்று முறையிடுவீர்கள்?

மாவட்ட ஆட்சியர், திட்ட அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் ஊராட்சி ஒன்றியத்தின் வளர்ச்சிப் பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்றுள்ளனர்.

 மாவட்ட ஊராட்சி

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது 50,000 மக்கள் தொகை என்ற அடிப்படையில் மாவட்டம் பல பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. பகுதி உறுப்பினர்கள் மக்களல் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவ்வுறுப்பினர்கள் தங்களில் ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கின்றனர். அவர்களது பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்.

 மாவட்ட ஊராட்சியின் பணிகள்

 கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அரசுக்கு தெரிவித்தல்

 மாவட்ட திட்ட ஆணையத்தின் பணிகளை  மேற்பார்வையிடல்

நகர்ப்புற உள்ளாட்சி

 பேரூராட்சி

 நகராட்சி

 மாநகராட்சி

காந்தியின் கிராமசுயராஜ்யம்


காந்தியடிகள் கிராமப்புறங்களின் பிரதிநிதிகளைக் மக்களாகக் கொண்ட கிராம சுயராஜ்ஜியத்தை விரும்பினார். இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது என்பதை உணர்ந்தார் காந்தியடிகள். சுதந்திர இந்தியாவில், கிராம குடியரசு எனும் பஞ்சாயத்துக்களை கனவு கண்டார்.

காந்தியடிகள் பஞ்சாயத்து ராஜ் ஒரு அதிகார பகிர்வு கொண்ட அரசாக இருக்க அறிவுறுத்தினார். இந்திய அரசியலமைப்பின் அடிப்படையாக திகழும் கிராமங்கள் தங்களின் தேவைகளுக்கு தாங்களே பொறுப்பாவர்.

எளிமையான சொற்களில் சொல்வதென்றால் காந்தியின் சுயராஜ்ய கிராமம், அடிப்படையில் சுயசார்புடையதாக இருக்கவேண்டும். வாழ்க்கைக்குத்தேவையான உணவு தூய்மையான நீர், சுகாதாரம், வீட்டு வசதி, கல்வி மற்றும் பிற தேவைகளுக்கு என அனைத்து தேவைகளையும் ஏற்கும் அரசாங்கம் மற்றும் சுய பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் வழங்க வேண்டும்.

பேரூராட்சி

பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் வாழும் பகுதி பேரூராட்சி எனப்படும். பேரூராட்சித் தலைவரும் உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். பேரூராட்சியின் நிர்வாகத்தினை மேற்கொள்ள ஒரு செயல் அலுவலர் நியமிக்கப்படுகிறார்.

நகராட்சி

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் பகுதி நகராட்சி எனப்படும். நகர சபைத் தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் (கவுன்சிலர்) மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களது பதவிக்காலம் ஐந்தாண்டுகளாகும். இந்நகராட்சியினை நிர்வாகம் செய்ய ஒரு நகராட்சி ஆணையர் அரசால் நியமிக்கப்படுகிறார்.

மாநகராட்சி

பல இலட்சம் மக்கள்தொகை கொண்ட பெரு நகரப்பகுதிகள் மாநகராட்சி என அழைக்கப்படுகிறது. மாநகராட்சித் தலைவர் மேயர் என்று அழைக்கப்படுகிறார். மேயர் மற்றும் பிற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும். இம் மாநகராட்சிக்கு மாநகராட்சி ஆணையர் நிர்வாக அலுவலர் ஆவார்.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள் உள்ளன. அவை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல், ஆவடி, ஓசூர் , நாகர்கோவில், தாம்பரம், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், கடலூர், மற்றும் சிவகாசி

இந்திய ஆட்சிப்பணி (IAS) அதிகாரி ஒருவர் மாநகராட்சியின் ஆணையராக நியமிக்கப்படுகிறார். மாநகராட்சி சபையில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் அனைத்தும் இவரால் செயல்படுத்தப்படுகிறன. மாநகராட்சி அலுவலகம் இவரது செயல்பாடுகளுக்கு உதவுகின்றது.

சென்னை மாநகராட்சித் கட்டடத்திற்கு எந்த ஆங்கிலேயப் பிரபுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது?


மாநகராட்சித் தலைவரின் (மேயரின்) முக்கிய பணிகள்

 அரசுக்கும் மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் இடையே ஓர் இணைப்புப்பாலமாக மேயர் செயல்படுகிறார்.

மாநகராட்சி குழு கூட்டங்களுக்குத் தலைமை தாங்குகிறார்.

வெளிநாட்டு பிரமுகர்களை வரவேற்று உபசரிப்பார்.

பிற நகர்ப்புற பஞ்சாயத்துக்கள்

அறிவிக்கப்பட்ட பகுதி குழுக்கள்

நகர் பகுதி குழுக்கள்

இராணுவக் குடியிருப்பு வாரியம்

குடியிருப்புகள்

துறைமுகப் பொறுப்பு கழகம்

 சிறப்பு நோக்க நிறுவனம்

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள்

உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களை பொதுத் தேர்தல்களைப் போன்றே மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்துகின்றது. வாக்காளர் பட்டியல் பகுதி வாரியாகத் தயாரிக்கப்படுகின்றது. பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு சுழற்சி முறையில், மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

உள்ளாட்சி அமைப்புகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், சவால்களும்

 நமது மக்களாட்சிக்கு உள்ளாட்சி அமைப்புகளே அடிப்படைகளாகும். உள்ளாட்சி அமைப்புகளின் அரசமைப்பு நிலை, அவற்றின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியத்துவத்தினை அளிக்கின்றது. இருப்பினும், இந்தியாவில் இவற்றின் செயல்பாடுகளில் ஒரு சில நெருக்கடிகள் உள்ளன. அவற்றின் முதன்மையான சிக்கல்களும் சவால்களும் கீழேகொடுக்கப்பட்டுள்ளன.

உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் மற்றும் அதிகாரங்களைப் பற்றிய தெளிவான வரையறையின்மை.

நிதி ஒதுக்கீடு மற்றும் தேவைகளின் மதீப்பீடு ஒத்துப்போவதில்லை.

 உள்ளாட்சி அமைப்புகள் எடுக்கும் முக்கிய முடிவுகளில் சாதி, வகுப்பு மற்றும் சமயம் ஆகிய மூன்றும் முக்கியப் பங்காற்றுகின்றன.

மக்களாட்சியின் அடிப்படை நிலையிலுள்ள அலுவலர்கள் மற்றும் தேர்ந்ததெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பொறுப்பற்ற நிலை.

நகராட்சி தலைவராக பெரியார்


பெரியார் .வே இராமசாமி அவர்கள் 1917 ஆம் ஆண்டில் இருந்து பல ஆண்டுகள் ஈரோடு நகராட்யின் பெருந்தலைவராக பதவி வகித்தார். அவரது பதவிக் காலத்தில் ஈரோடு நகராட்சி மக்களுக்கான முறையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தருவதில் முனைப்பு காட்டினார். 1919 இல் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் முறையினை பெரியார் செயல்படுத்தினார். இந்திய நகராட்சி நிர்வாகங்களின் வரலாற்றில் இத்திட்டத்தினை முதன்முதலில் செயல்படுத்தியவர் பெரியார் என அறியப்படுகிறது.

 

மீள்பார்வை

உள்ளாட்சி அமைப்புகள் சமூகத்தின் அடிமட்ட அளவிலிருந்து   செயல்படுகின்றன.

ரிப்பன் பிரபு 'உள்ளட்சி அமைப்புகளின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

சோழர் காலத்தில் கிராம நிர்வாகக் குழு உறுப்பினர்கள் குடவோலை முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

● 1994 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் புதிய பஞ்சாயத்து ராஜ் அமைப்பு நடைமுறையில் உள்ளது.

கிராம ஊராட்சி என்பது கிராமங்களின் உள்ளாட்சி அமைப்பு ஆகும்.

கிராம சபைக் கூட்டங்கள் ஆண்டுக்கு 4 முறை நடைபெறுகின்றன.

ஊராட்சி ஒன்றியங்கள் பல ஊராட்சிகள் ஒன்றிணைவதால் உருவாகின்றன.

மாவட்ட ஊராட்சிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கப் பட்டுள்ளன.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் நகரப்பஞ்சாயத்துகள் ஆகியன நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஆகும்.

மாநகராட்சியின்  தலைவர் மாநகர தலைவர் (மேயர்) என்றழைக்கப்படுகிறார்.

உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தலை, மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது.

Tags : Indian Civics குடிமையியல்.
9th Social Science : Civics: Local Self Government : Local Self Governments since Independence Indian Civics in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : உள்ளாட்சி அமைப்புகள் : இந்திய விடுதலைக்குப் பின் உள்ளாட்சி அமைப்புகள் - குடிமையியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : உள்ளாட்சி அமைப்புகள்