உயிரினங்களின் ஒருங்கமைவு | அலகு 18 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - உறுப்பு மண்டலம் | 8th Science : Chapter 18 : Organisation of Life
உறுப்பு மண்டலம்
ஒத்த உறுப்புகள் ஒன்றுசேர்ந்து உறுப்பு மண்டலத்தை உருவாக்கி
குறிப்பிட்ட ஒரு பணியை ஒருங்கிணைந்து செய்கின்றன. இதயமும், இரத்தக் குழல்களும் இணைந்து
இரத்த சுற்றோட்ட மண்டலத்தை உருவாக்குகின்றன. மூக்கு, தொண்டை, சுவாசக்குழாய், நுரையீரல்கள்
மற்றும் உதரவிதானம் போன்றவை இணைந்து சுவாச மண்டலம் உருவாகின்றது. வாய், உணவுக்குழாய்,
இரைப்பை, சுவாச மண்டலங்கள், முன் சிறுகுடல் மற்றும் குடல்கள் இணைந்து செரிமான மண்டலம்
உருவாகிறது. இதேபோல் நாளமில்லாச் சுரப்பி மண்டலம், எலும்பு (சட்டக) மண்டலம், சிறுநீரக
மண்டலம், நோய்த் தடைகாப்பு மண்டலம் போன்றவை பிற உறுப்பு மண்டலங்களாகும். உறுப்பு மண்டலத்திற்கான
எடுத்துக்காட்டாக மனிதனின் சுவாச மண்டலத்தை விரிவாகக் காண்போம்.
1. சுவாச
மண்டலம்
நமது சுவாச மண்டலம் வளிமண்டலத்திற்கும் நுரையீரலுக்கும் இடையே
வாயுப் பரிமாற்றத்தில் ஈடுபடும் உறுப்புகளான மூச்சுக்குழாய், மூச்சுக்கிளைக்குழாய்
மற்றும் நுரையீரல்களைக் கொண்டுள்ளது. சுவாச மண்டலத்தில் உள்ள உறுப்புகளை தற்போது விரிவாகக்
காண்போம்.
மூக்கு
நாம் காற்றை நாசித்துளை வழியாக உள்ளே இழுக்கின்றோம். நாசித்
துளைகள் நாசிக்குழியாக தொடர்கின்றன. இக்குழியின் உட்புறச் சுவர் நுண்ணிய ரோமங்கள் மற்றும்
கோழைச் சுரப்பு செல்களால் ஆனது. இவை ஒட்டும் தன்மையையும் ஈரப்பதத்தையும் உருவாக்குகின்றன.
ரோமம் மற்றும் கோழை ஆகியவை தூசுக்களையும் நுண்ணுயிரிகளையும் வடிகட்டி அவை சுவாசப் பாதையின்
உள்ளே நுழைவதைத் தடுக்கின்றன. உள்ளிழுக்கப்படும் காற்றை இதமாக (வெப்பமாக) வைத்துக்
கொள்ள மூக்கில் உள்ள இரத்த நாளங்கள் உதவுகின்றன.
மூச்சுக் குழாய்
நாசிக் குழியை அடுத்து, காற்றானது தொண்டையினுள் நுழைகிறது. பிறகு
அது டிரக்கியா என்னும் மூச்சுக் குழாய்க்குள் செல்கிறது. மீளும் தன்மை கொண்ட இந்த மூச்சுக்குழாய்,
கழுத்து முழுவதும் மற்றும் மார்பறையின் பாதி வரையிலும் நீள்கிறது. தொண்டைக்கும், மூச்சுக்குழாய்க்கும்
இடையே சிறிய காற்றுப் பாதையாக குரல்வளை என பொதுவாக அழைக்கப்படும் லாரிங்ஸ்
(Larynx) காணப்படுகிறது. தசை மடிப்புகளால் ஆன குரல்வளை காற்று நுழையும்போது அதிர்வடைந்து
ஒலியை எழுப்புகிறது.
மூச்சுக் கிளைக்குழாய்
மூச்சுக் குழாய் இரண்டு மூச்சுக் கிளைக் குழல்களாகப் பிரிகிறது.
ஒவ்வொரு மூச்சுக் கிளைக் குழலும் நுரையீரலினுள் நுழைந்து, மேலும் பல கிளைகளாகப் பிரிந்து
நுண் கிளைக்குழல்களாக மாறுகின்றன.
நுரையீரல்
நுரையீரல்கள் மார்பறையில் காணப்படும் உறுப்புகளாகும். இவற்றின்
மூலம் வாயுப் பரிமாற்றம் (கார்பன் டைஆக்ஸைடை மற்றும் ஆக்சிஜன்) நடைபெறுகிறது. நுரையீரல்கள்
மார்பறையின் ஒவ்வொரு புறமும் காணப்படும் பஞ்சு போன்ற மீளும் பைகளாகும். மார்பறையானது
முதுகுப்புறத்தில் முதுகெலும்பாலும் வயிற்றுப்புறத்தில் மார்பெலும்பாலும் பக்கவாட்டில்
விலா எலும்புகளாலும், அடிப்புறத்தில் குவிந்த உதரவிதானத்தாலும் சூழப்பட்டுள்ளது. இடது
நுரையீரலானது இதயத்திற்கு இடமளிக்கும் வகையில் வலது நுரையீரலை விட சற்று சிறியதாக உள்ளது.
நுரையீரல்களினுள் ஒவ்வொரு மூச்சுக்கிளைக் குழலும் கொத்தான காற்று நுண்ணறைகளாக முடிவடைகின்றன.
ஓய்வு
நிலையில் உள்ள ஒரு வளர்ந்த மனிதன் சராசரியாக நிமிடத்திற்கு 15 - 18 முறை மூச்சை உள்ளிழுத்து
வெளி விடுகின்றான். கடும் உடற்பயிற்சியின்போது இச்சுவாச வீதம் நிமிடத்திற்கு 25 முறைகளுக்கும்
இருக்கும்.
புகைபிடித்தல்
நரையீரல்களை சேதப்படுத்துகிறது. புகைப்பிடித்தல் புற்று நோய்க்குக் காரணமாவதால் அது
தவிர்க்கப்பட வேண்டும்.
உங்களுக்கு
தும்மல் ஏற்படும்போது நீங்கள் நாசித் துவாரங்களை மூடிக் கொள்ள வேண்டும். இதன்மூலம்
நீங்கள் வெளியேற்றும் அயல் பொருள்கள் அருகில் இருப்பவர்களுக்குப் பரவாமல் தடுக்க முடியும்.
காற்று நுண்ணறைகள்
நுரையீரல்களுள் காணப்படும் காற்றி நுண்ணறைகள் நுண் கிளைக்குழலின்
முடிவில் பை போன்று மிக நுண்ணிய அமைப்பாகக் காணப்படுகின்றன. காற்று நுண்ணறைகள் ஆக்சிஜன்
மற்றும் கார்பன் டைஆக்சைடின் வாயுப் பரிமாற்றத்திற்கு உதவுகின்றன.
2. சுவாசச்
செயலியல் உள்சுவாசம் (inspiration)
காற்றை நுரையீரல்களுக்குள் எடுத்துக் நிகழ்வு உள்சுவாசம் எனப்படும்.
கொள்ளும் நிகழ்வு உட்சுவாசத்தின்போது மார்பெலும்பு மேல் நோக்கியும், வெளிநோக்கியும்
தள்ளப்படுவதோடு, உதரவிதானம் கீழ்நோக்கி இழுக்கப்படுகிறது. இதனால் மார்பறையின் கொள்ளளவு
அதிகரித்து, அழுத்தம் குறைகிறது. நுரையீரல்களினுள் அழுத்தம் குறைவதால் வெளிக்காற்றானது
நுரையீரல்களினுள் நுழைகிறது. இங்கு, காற்றுக்கும் இரத்தத்திற்கும் இடையே வாயுப் பரிமாற்றம்
நிகழ்கிறது.
வெளிச் சுவாசம் (Expiration)
நுரையீரல்களிலிருந்து காற்றை வெளியேற்றும் நிகழ்வு வெளிச் சுவாசம்
எனப்படும். வெளிச் சுவாசத்தின்போது நுரையீரல்கள் காற்றை அதிக விசையுடன் வெளித்தள்ளுகின்றன.
பின்னர் விலா எலும்பிடைத் தசைகள் மீட்சியடைந்து, மார்பறையின் சுவர் அதன் பழைய நிலைக்குத்
திரும்புகிறது. உதரவிதானமும் மீட்சியடைந்து மார்பறையில் மேல் நோக்கி நகர்கின்றது. இதன்
காரணமாக மார்பறையின் அழுத்தம் புறச்சூழலை ஒப்பிடும்போது அதிகரிக்கிறது. மார்பறைக்கும்
வளி மண்டலத்திற்கும் இடையே காணப்படும் இந்த அழுத்த வேறுபாட்டால் காற்றானது விசையுடன்
வெளியேறுகிறது. நுரையீரல்களிலிருந்து காற்று வெளியேற்றப்படும் இந்நிகழ்வு செயலற்ற
(Passive) நிகழ்வாகக் கருதப்படுகிறது.
காற்று நுண்ணறைகளினுள் வாயுப் பரிமாற்றம்
காற்று நுண்ணறைகளிள் உள்ளே இழுக்கப்படும் காற்றில் உள்ள ஆக்சிஜனின்
அளவு அங்குள்ள இரத்தக் குழல்களினுள் உள்ள ஆக்சிஜனின் அளவை விட அதிகம். இதனால் எளிய
பரவல் மூலம் ஆக்சிஜன் இரத்தத்தினுள் நுழைகிறது.இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்சிஜனுடன்
ஆக்சிஹீமோகுளோபினாக இணைந்து மாறுகிறது. ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு இரத்தமானது இரத்தக்
குழல்கள் வழியே இதயத்தை அடைகிறது. இதயம் சுருங்கி இந்த ஆக்சிஜன் உள்ள ரத்தத்தை உடலின்
அனைத்துத் திசுக்களுக்கும் அனுப்புகிறது. திசுக்கள் வெளியேற்றும் கார்பன் டைஆக்சைடு
இரத்தத்தின் வழியே காற்று நுண்ணறைகளுக்கு எடுத்துவரப்படுகிறது. இரத்தத்திலிருந்து பரவல்
முறையில் கார்பன் டைஆக்சைடு காற்று நுண்ணறைகளில் நுழைந்து வெளிச் சுவாசத்தின் போது
உடலை விட்டு வெளியேற்றப்படுகிறது.
செயல்பாடு 2
நேராக
நின்று உனது கைகளை பக்கவாட்டில் அசைக்கவும். மூச்சை ஆழ்ந்து இழுத்துவிட்டு உனது விலா
எலும்புகளின் இயக்கத்தைக் கவனி பிறகு, சுமார் நூறு மீட்டர் தொலைவிற்கு ஓடிவிட்டு விலா
எலும்புகளின் இயக்கத்தை உற்றுநோக்கு. நீ உற்றுநோக்கியதைப் பற்றி உனது வகுப்பில் கலந்துரையாடு.
செயல்பாடு 3
நுரையீரல்
மாதிரியைத் தயாரித்தல். தேவையான பொருள்கள்
Y
வடிவ குழாய், ஒரு பெரிய பலூன், இரு சிறிய பலூன்கள், ஒரு லிட்டர் நெகிழிபாட்டில்
[botle] தக்கை.
உருவாக்கும் முறை
நெகிழி
பாட்டிலைக் குறுக்காகப் பாதியில் வெட்டவும். Y வடிவ குழாயின் முனையில் இரு சிறிய பலூன்களைப்
பொருத்தவும். தக்கையின் மையத்தில் ஒரு துளையிட்டு படத்தில் காட்டியுள்ளவாறு, கூடிவக்குழாயை
இணைக்கவும். பெரிய பலூனை, இரண்டாக வெட்டியெடுத்து நெகிழிப் பாட்டிலின் திறந்த முனையில்
இறுக்கமாகக் கட்டவும்.
வேலை செய்யும் விதம்
பெரிய
பலூனின் மையப்பகுதியை படத்தில் காட்டியவாறு கீழ் நோக்கி இழுக்கவும். பாட்டிலின் உட்புறத்தில்
உள்ள பலூன்களில் ஏற்படும் மாற்றத்தை உற்று நோக்கவும். தற்போது பலூனை பழைய நிலைக்கு
விடவும்.