தொல்
தாவரவியல்
தொல் தாவரவியல் (Palaeobotany) என்ற
சொல் கிரேக்க மொழியிலிருந்து உருவாக்கப்பட்டது. Palaeon (தொல்)
என்னும் சொல்லின் பொருள் தொன்மையான எனவும் Botany (தாவரவியல்)
என்னும் சொல் தாவரங்களைப் பற்றிப் படிக்கும் அறிவியல் எனவும் பொருள் தரும். இது
தொல் பொருளியலின் ஒரு பிரிவு ஆகும். இதன் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்,
பூமியில் புதையுண்ட தாவரப் பாகங்கள் பற்றி அறியலாம்.
தாவரப்புதை உயிர்ப் படிவம்
என்பது முன்பு இறந்த தாவரங்களின் ஏதேனும் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும்.
புதைபடிவமானது பலமில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக மண்ணுக்குள் புதைந்து படிவம்
ஆனது. பெரும்பாலும் தாவரப் புதை உயிர்ப் படிவங்கள், தாவரத்தின் ஏதேனும் ஒரு உடைந்த
பகுதியாக இருக்கலாம். முழுமையாகக் கிடைப்பது அரிது.
i. முந்தைய
தாவரங்களைப் பற்றிய வரலாறு மற்றும் பரிணாமத்தைப் பிரதிபலிக்கிறது.
ii. தாவர புதை
உயிர்ப் படிவங்கள் மூலம் தாவர உலகத்தைப் பற்றிய ஒரு வரலாற்று அணுகுமுறையை அறிய
முடிகிறது.
iii. தாவர
வகைப்பாட்டியலுக்கு இது உதவுகிறது.
iv. தாவரப் புதை
உயிர்ப் படிவங்கள், தாவரங்களைப் பற்றிய தெளிவான
விளக்கத்தையும் உள்ளமைப்பையும் ஒப்பிட உதவுகிறது.
கஸ்பர் மரியா வான் ஸ்டெர்ன்பெர்க் (Kaspar Maria Von
Sternberg)1761-1838
ஐரோப்பாவில் பிறந்த இவர், ‘தொல்
தாவரவியலின் தந்தை’ என அழைக்கப்படுகிறார். இவர் பிராகு
என்ற ஊரில் பொகிமியன் தேசிய அருங்காட்சியகத்தை நிறுவி, நவீன
தொல் தாவரவியலுக்கு அடித்தளமிட்டார்.
பீர்பால் சகனி (Birbal Sahani) 1891-1949
இவர் ‘இந்திய தொல்
தாவரவியலின் தந்தை’ என அழைக்கப்படுகிறார். இவர்
தனது ஆய்வைத் தொல் தாவரவியலின் இரண்டு வேறுபட்ட வகைகளில் மேற்கொண்டார் (i) பேலியோஸோயிக்
பெருந்தாவரங்களின் உள்ளமைப்பு மற்றும் புற அமைப்பியல் பற்றியது. (ii) இந்திய கோண்டுவானா தாவரங்கள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டார்.
1. படிவமாதல்
பாறைகளில் புதை உயிர்ப்
படிவங்கள் உருவாவதைப் படிவமாதல் என்கிறோம்.
புதை
உயிர்ப் படிவமாதலின் வகைகள்
பொதுவாகப் புதை உயிர்ப்
படிவங்கள் கல்லாதல்,
அச்சு மற்றும் வார்ப்பு, கார்பனாதல், பதப்படுத்துதல், அழுத்தம் மற்றும் ஊடுருவல் ஆகிய
வகைகளில் உருவாகின்றன.
கல்லாதல்
சிலிக்கா போன்ற கனிமங்கள், இறந்த
உயிரியின் உள்ளே ஊடுருவி, திசுக்களை அழித்து ஒரு பாறை போன்ற
புதைப் படிவத்தை உருவாக்குகிறது. இந்த வகைப் படிவமாதலில் கடின மற்றும்
மென்மையான பாகங்கள் படிவம் ஆகின்றன. பெரும்பாலும் எலும்புகளும் மரக்கட்டைகளும்
இம்முறையில் படிவம் ஆகின்றன.
அச்சு
மற்றும் வார்ப்பு
தாவரம் அல்லது விலங்கு பாறைகளுக்கு
இடையே அதே அமைப்பு மாறாமல் பதப்படுத்தப்படுகிறது. படிவுகளுக்கு இடையே உயிரிகள்
புதைவுறும்போது நிலத்தடி நீரினால் அவ்வுயிரியின் உடல் சிதைக்கப்பட்டு ஓர் வெற்றிடம்
உருவாகிறது. அந்த வெற்றிடத்தில் புதையுண்ட தாவரம் அல்லது விலங்கு போன்ற ஓர் அச்சு
ஏற்படுகிறது. இதன் மூலம் நம்மால் அந்த உயிரியின் உள்ளமைப்பை அறிய இயலாது.
பின்பு கனிமங்கள் அல்லது படிவங்கள் இந்த வெற்றிடத்தை நிரப்பும். இது வார்ப்பு
எனப்படும்.
பதப்படுத்தல்
பனிக்கட்டி அல்லது மரங்களின் தண்டுப்
பகுதியில் கசியும் பிசின் போன்றவற்றில் பதியும் உயிரிகள் அழுகிப் போகாமல்
பாதுகாக்கப்படுகின்றன. முழுத்தாவரம் அல்லது விலங்கு இம்முறையில்
பதப்படுத்தப்படுகிறது.
அழுத்திய
சின்னங்கள்
கடலுக்கு
அடியில்
உள்ள இறந்த உயிரினங்களின் கடின உறுப்புகள், படிவுகளால் மூடப்படுகிறது. படிவு உருவாதல்
தொடர்ச்சியாக நடபெற்று, புதை உயிர்ப் படிவமாக மாறுகிறது.
ஊடுருவுதல்
அல்லது பதிலீட்டுதல்
சில வேளைகளில் கனிமப்
படிவமானது செல் சுவரைத் தாண்டிச் செல்கிறது. இந்தக் கனிம ஊடுருவலானது சிலிகா, கால்சியம்
கார்பனேட், மெக்னீசியம் கார்பனேட் போன்ற கனிமங்களால்
நிரப்பப்படுகிறது. கடினப் பகுதிகள் கரைக்கப்பட்டு அப்பகுதி கனிமங்களால்
நிரப்பப்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
வாழும் தொல் உயிர்ப் படிவங்கள் (Living Fossils)
இவை
தற்போது உயிருள்ளவை. இவை படிவமாக மாறிய முன்னோரைப் போன்ற தோற்றத்தை ஒத்திருப்பதால்
இவற்றை வாழும் தொல் உயிர்ப் படிவங்கள் என்கிறோம்..
எ. கா.: ஜிங்கோ பைலோபா
2. படிவங்களின் வயதினைக் கணக்கிடல்
படிவங்களின் வயதினை அவற்றில்
உள்ள கதிரியக்கத் தனிமங்களால் கண்டுபிடிக்கலாம். அத்தனிமங்கள் கார்பன், யுரேனியம்,
காரீயம் மற்றும் பொட்டாசியமாக இருக்கலாம். இவை தொல் தாவரவியல்
மற்றும் மானுடவியலில் மனிதப்படிவங்களின் வயதினையும் சுவடிகளின் காலத்தையும் அறிய
உதவுகின்றன.
இந்தக் கதிரியக்கக் கார்பன்
முறையைக் கண்டுபிடித்தவர் W.F. லிபி (1956). உயிரிழந்த
தாவரங்களும் விலங்குகளும் கார்பனை உட்கொள்வதில்லை. அதன் பின்பு அவற்றிலுள்ள
கார்பன் அழியத் தொடங்குகிறது. உயிரிழந்த தாவரத்தில் அல்லது விலங்கில் உள்ள கார்பன்
(C14) அளவைக் கொண்டு அந்தத் தாவரம் அல்லது
விலங்கு எப்போது உயிரிழந்தது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
மேலும் அறிந்து கொள்வோம்
புவி அமைப்புக் கால அளவை என்றால் என்ன?
புவி
அமைப்புக் கால அளவை என்பது, பாறை அடுக்குகளின் அமைப்பினைக் கால
வரிசைப்படி அறிந்து கொள்ளும் முறை ஆகும். இதன் மூலம் புவி அமைப்பு வல்லுநர்கள்,
தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் புவி சார் அறிஞர்கள் புவியின்
வரலாற்றினைக் காலத்தோடும் நிகழ்வுகளின் தொடர்போடும் இணைத்து விளக்குகின்றனர்.
உங்களுக்குத் தெரியுமா?
திருவக்கரை (விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு)
கல்மரப் படிவப் பூங்கா இரண்டாயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு
முன்பு தாவரத் தண்டுப் பகுதியானது ஆற்றங்கரையில் மண்ணில் புதையுண்டு காலப்போக்கில்
அதிலுள்ள கரிமப் பொருள்கள் சிலிகாவினால் நிரப்பப்பட்டுப் படிவமாகியுள்ளது.
கல்மரமான பின்பும் இத்தாவரங்கள் முந்தைய நிறம், வடிவம் வரித் தன்மை
முதலானவற்றைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. ஆண்டு வளையம், நிறங்களின்
அடுக்கு, கணுப் பகுதிகள் போன்ற அனைத்துப் பண்புகளும்
கல்மரமான பிறகும் புலப்படும் வகையில் அமைந்துள்ளன.