லாமார்க்கியம், டார்வினியம் - பரிணாமக் கோட்பாடுகள் | 10th Science : Chapter 19 : Origin and Evolution of Life
பரிணாமக்
கோட்பாடுகள்
பூமியின் பரிணாம வளர்ச்சியோடு
சேர்ந்து உயிரினங்களும் தோன்றின என்ற கருத்து 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வலுப்பெறத்
தொடங்கியது. பரிணாமம் என்பது கால மாற்றத்திற்கு ஏற்ப உயிரினங்களில் படிப்படியாகத்
தோன்றிய மாற்றங்கள் ஆகும். இயற்கைத் தேர்வுக்குத் துலங்கலாக உயிரினங்களின்
குறிப்பிட்ட பண்புகளில் பல தலைமுறைகளாக மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த மாற்றங்கள்
காரணமாகப் புதிய சிற்றினங்கள் உருவாகின. இதுவே பரிணாமம் என அழைக்கப்படுகிறது. இத்தகைய
இயற்கை மாற்ற நிகழ்வுகளை லாமார்க் மற்றும் டார்வின் ஆகியோரின் பரிணாமக்
கோட்பாடுகள் விளக்குகின்றன.
1. லாமார்க்கியம்
ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் (1744 - 1829) என்பார்
ஒரு ஃபிரெஞ்சு இயற்கை அறிவியலாளர். அவரின் பரிணாமக் கொள்கைகளுக்காகப் பெரிதும்
அறியப்பட்டவர். லாமார்க்கின் பரிணாமக் கோட்பாடுகள் 1809-ஆம்
ஆண்டு 'ஃபிலாசஃபிக் ஜுவாலஜிக்’ என்ற நூலில் வெளியிடப்பட்டது. இது ‘மரபுவழியாகப் பெறப்பட்ட பண்புகளின் கோட்பாடு’
அல்லது ‘பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமைக் கோட்பாடு’ அல்லது ‘லாமார்க்கியம்’ எனப் பிரபலமாக அறியப்படுகிறது.
(i) உள்ளார்ந்த
முக்கிய வல்லமை: உயிரினங்கள் அல்லது அவற்றின் பகுதிகள் தொடர்ச்சியாக அளவில் பெரியதாக
வளர்கின்றன. உயிரினங்களின் உள்ளுறைத் திறன் காரணமாக உயிரினங்களின் அளவு
அதிகரிக்கின்றது.
(ii) சூழ்நிலையும்
புதிய தேவைகளும்: சூழ்நிலையில் ஏற்படும் மாற்றம், உயிரினங்களின் தேவைகளிலும் மாற்றத்தை
ஏற்படுத்துகின்றது. மாறும் சூழ்நிலைக்கு ஏற்ப, உயிரினங்கள்
சில தகவமைப்புப் பண்புகளை உருவாக்கிக் கொள்கின்றன. இத்தகைய தகவமைப்புகள், உயிரினங்களில் புதிய உறுப்புகள் உருவாவதாக இருக்கலாம்.
(iii) பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை கோட்பாடு:
லாமார்க்கின் உறுப்புகளின் பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமைக் கோட்பாட்டின்படி ஓர் உறுப்பைத் தொடர்ச்சியாக
பயன்படுத்தும் போது,
அவ்வுறுப்பு நன்கு வளர்ச்சியடைந்து வலிமை பெறுகின்றது. ஒரு உறுப்பை,
நீண்ட காலம் பயன்படுத்தாத போது அது படிப்படியாகக் குன்றல் அடைகிறது.
ஒட்டகச்சிவிங்கியின்
முன்னோர்கள் குட்டையான கழுத்தையும், குட்டையான முன்னங்கால்களையும் பெற்றிருந்தன.
புற்களின் பற்றாக்குறை காரணமாக அவை மரங்களில் உள்ள இலைகளை உண்ண வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டது. தொடர்ச்சியாக கழுத்தையும் முன்னங்கால்களையும் நீட்டியதால் அவை
வளர்ச்சியடைந்து நீளமான கழுத்து மற்றும் நீண்ட முன்னங்கால்கள் உருவாகின. இது
தொடர்ச்சியான உறுப்பின் பயன்பாட்டிற்கான எடுத்துக்காட்டு. கிவி பறவையின்
சிறப்பிழந்த இறக்கைகள் உறுப்பைப் பயன்படுத்தாமைக்கான எடுத்துக்காட்டு.
(iv) மரபுவழியாகப்
பெறப்பட்ட பண்புகளின் கோட்பாடு: சூழ்நிலையில் மாற்றங்கள்
ஏற்படும் போது விலங்குகள் அந்த மாற்றங்களுக்கு எதிர்வினை புரிகின்றன. இந்த
எதிர்வினைகள் புதிய தகவமைப்புப் பண்புகளை உருவாக்குகின்றன. சூழ்நிலை
மாற்றங்களுக்கேற்ப தங்கள் வாழ்நாளில் விலங்குகள் பெறுகின்ற பண்புகள், பெறப்பட்ட
பண்புகள் என அழைக்கப்படுகின்றன. லாமார்க் அவர்களின்
கருத்துப்படி, பெறப்பட்ட பண்புகள் அதன் இளம் சந்ததிகளுக்கு
மரபு வழியாகக் கடத்தப்படுகின்றன.
2. டார்வினியம்
அல்லது இயற்கைத் தேர்வு கோட்பாடு
சார்லஸ்
டார்வின்
(1809 – 1882) என்பவர்
18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சிறந்த இயற்கை அறிவியலாளர்
மற்றும் தத்துவஞானி. அவர் 1809ஆம் ஆண்டு இங்கிலாந்தில்
பிறந்தார். அவர் கல்லூரியில் படிக்கும் போது, பேராசிரியர் J.S.
ஹென்ஸ்லோ என்பவரின் நட்பின் காரணமாக, இயற்கையின்
பால் ஈர்க்கப்பட்டார். அந்த நேரத்தில் பிரிட்டன் கடற்படை, H.M.S. பீகல் என்ற கப்பலில் ஐந்து வருடங்கள் (1831-1835)
தென் அமெரிக்காவைச் சுற்றி ஆய்வுப்
பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டது. ஒரு இளம் இயற்கை அறிவியலாளரை நியமிக்கும்படி Dr.ஹென்ஸ்லோ கேட்டுக்கொள்ளப்பட்டார். டார்வின் அவர்களுக்கு அந்த வாய்ப்பு
வழங்கப்பட்டது. அவர், கேலபாகஸ் தீவு மற்றும் பசிபிக் தீவு உள்ளிட்ட பல தீவுகளையும், உலகின் பல பகுதிகளையும் ஐந்து வருடப் பயணத்தின் போது பார்வையிட்டார்.
டார்வின், தான் பார்வையிட்ட பகுதிகளின் நிலம், தாவரம் மற்றும் விலங்குகளின் தன்மைப் பற்றி விரிவாகக் கண்டறிந்து பதிவுகளை
மேற்கொண்டார். மேலும், அவர் 20
ஆண்டுகள் அப்பணியைத் தொடர்ந்து, இயற்கைத் தேர்வு கோட்பாட்டை
வெளியிட்டார்.
டார்வின், தன்னுடைய
பதிவுகளையும், முடிவுகளையும் ‘சிற்றினங்களின்
தோற்றம்’ (Origin of Species) என்ற
பெயரில் 1859-ஆம் ஆண்டு வெளியிட்டார். டார்வினுடைய இந்தப்
புத்தகம், பரிணாமம் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்தியது. இது
பரிணாம மாற்றங்களுக்கான இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை விளக்கியது.
i. அதிக இனப்பெருக்கத்திறன்:
உயிரினங்கள், அதிக அளவு
உயிரிகளை இனப்பெருக்கம் செய்து தங்களுடைய சந்ததியை உருவாக்கும் திறன் பெற்றவை. அவை
பெருக்கல் விகித முறையில் இனப்பெருக்கம் செய்யும் ஆற்றல் உடையவை. இது
இனப்பெருக்கத் திறனை அதிகரித்து அதிக உற்பத்திக்கு வழிவகுக்கிறது.
ii. வாழ்க்கைக்கான போராட்டம்:
அதிக உற்பத்தி காரணமாக, பெருக்க விகித
முறையில் இனத்தொகை அதிகரிக்கிறது. உயிரினங்கள் வாழத் தேவையான இடமும், உணவும் அதே அளவில் மாறாமல் உள்ளது. இது உயிரினங்களுக்கான உணவு மற்றும்
இடத்திற்கான தீவிர போட்டியை உருவாக்கி, போராட்டத்திற்கு
வழிவகுக்கிறது. இது மூன்று வகைப்படும்
(அ) ஒரே சிற்றின உயிரினங்களுக்கு இடையேயான போராட்டம் : ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த
உயிரிகளுக்கு இடையேயான போட்டி.
(ஆ) இரு வேறுபட்ட சிற்றினங்களுக்கு இடையேயான போராட்டம் :
ஒன்றாக ஒரே இடத்தில் வாழக்கூடிய வெவ்வேறு சிற்றினத்தைச் சார்ந்த உயிரிகளுக்கு இடையேயான போட்டி.
(இ) சூழ்நிலை போராட்டம்: அதிக வெப்பம் அல்லது குளிர், வறட்சி மற்றும்
வெள்ளம் போன்ற இயற்கை சூழலும் உயிரினங்களின் வாழ்வியலை பாதிக்கின்றன.
iii. வேறுபாடுகள்
வேறுபாடுகளுடன் காணப்படுவது
அனைத்து தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சிறப்பு பண்பாகும். பரிணாமத்திற்கு சிறிய
வேறுபாடுகள் முக்கியமானவையாக உள்ளன. டார்வின் கூற்றுப்படி சாதகமான
வேறுபாடுகள் உயிரினங்களுக்கு உபயோகமாகவும், சாதகமற்ற வேறுபாடுகள்
உயிரினத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது பயன் அற்றவையாகவும் உள்ளன.
iv. தக்கன உயிர் பிழைத்தல் அல்லது இயற்கைத் தேர்வு:
வாழ்க்கைக்கான போராட்டத்தின்
போது, கடினமான சூழலை
எதிர்கொள்ளக்கூடிய உயிரினங்கள், உயிர் பிழைத்து சூழலுக்கு
ஏற்ப தகவமைத்துக் கொள்ளும். கடினமான சூழலை எதிர்கொள்ள
முடியாத உயிரினங்கள் உயிர் பிழைக்கத் தகுதியின்றி மறைந்துவிடும். சாதகமான
வேறுபாடுகளை உடைய உயிரினங்களைத் தேர்வு செய்யும் இச்செயல்முறை, இயற்கைத் தேர்வு என அழைக்கப்படுகிறது.
v. சிற்றினங்களின் தோற்றம்
டார்வின் கூற்றுப்படி, பல
தலைமுறைகளாக படிப்படியாக ஏற்பட்ட சாதகமான வேறுபாடுகளின் தொகுப்பினால் புதிய
சிற்றினங்கள் உருவாகின்றன.