Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: இளைய தோழனுக்கு

மு.மேத்தா | இயல் 9 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: இளைய தோழனுக்கு | 8th Tamil : Chapter 9 : Kuntraena nimirnduneel

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில்

கவிதைப்பேழை: இளைய தோழனுக்கு

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில் : கவிதைப்பேழை: இளைய தோழனுக்கு - மு.மேத்தா | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்பது

கவிதைப்பேழை

இளைய தோழனுக்கு


நுழையும்முன்

மனித உடலில் இரண்டு கைகள் உண்டு. உள்ளத்தில் இருக்கவேண்டிய 'கை' ஒன்று உண்டு. அதுவே நம்பிக்கை. இது மக்கள் அனைவருக்குள்ளும் இருந்தாலும், அதன் ஆற்றவை உணர்ந்து, வாழ்வுக்கு உறுதுணையாக்கி வாழ்வில் வென்றவர் சிலரே. உங்களுக்குள் துவண்டிருக்கும் நம்பிக்கையைத் தட்டி எழுப்பும் கவிதை ஒன்றை அறிவோம்.

 

நட

நாளைமட்டுமல்ல

இன்றும்

நம்முடையதுதான்

 

நட

பாதங்கள்

நடக்கத்

தயாராய் இருந்தால்

பாதைகள்

மறுப்புச் சொல்லப்

போவதில்லை.

 

நெய்யாய்த் திரியாய்

நீயே மாறினால்

தோல்வியும் உனக்கொரு

தூண்டுகோலாகும்!

வெற்றி

உனைச்சுற்றி

வெளிச்சவிதை

விதைக்கும்!

 

கவலைகளைத்

தூக்கிக்கொண்டு

திரியாதே ...

அவை

கைக்குழந்தைகளல்ல..

 

*ஓடிவந்து கைகுலுக்க

ஒருவருமில்லையா?

உன்னுடன் நீயே

கைகுலுக்கிக் கொள்!

 

தூங்கி விழுந்தால்

பூமி உனக்குப்

படுக்கையாகிறது.

விழித்து நடந்தால்

அதுவே உனக்குப்

பாதையாகிறது!

 

நீ

விழித்தெழும் திசையே

பூமிக்குக் கிழக்கு!

உன்

விரல்களில் ஒளிரும்

சூரியவிளக்கு!

 

நட!

நாளைமட்டுமல்ல

இன்றும்

நம்முடையதுதான்

நட! *

- மு.மேத்தா

 

பாடலின் பொருள்

செயல்படத்தொடங்கு! நாளை மட்டுமல்ல, இன்றும் நமது நாள்தான். உனது பாதங்கள் நடக்கத் தயாராக இருந்தால், நீ செல்லும் பாதைகள் உன்னை எதிர்க்கப்போவதில்லை.

உலகிற்கு ஒளியேற்ற எண்ணெயாய், திரியாய் உன்னையே நீ மாற்றினால் தோல்வியும் உன் உயர்விற்குத் தூண்டுகோலாகும்! வெற்றி உன் அங்கமாகி, வாழ்வில் ஒளியேற்றும்.

கவலைகளை உள்ளத்தில் தேங்கவிட வேண்டாம். உன்னைப் பாராட்டிப் புத்துணர்வூட்ட ஒருவரும் இல்லையென்று வருந்தாதே! உன்னைவிட ஒருவரும் உன்னைப் பாராட்டிப் புத்துணர்வூட்ட முடியாது.

நீ சோர்ந்து தளர்ந்தால் பூமி உன் நோய்ப்படுக்கையாகும். நீ கிளர்ந்து எழுந்தால் அதுவே உனக்குப் பாதையாகும்.

நீ செயல்படப் புறப்படும் திசைதான் இனி இந்தப் பூமிக்குக் கிழக்கு. கதிரவன் உன் விரல்களில் விளக்காக ஒளிவீசும். செயல்படத் தொடங்கு! நாளை மட்டுமல்ல, இன்றும் நமது நாள்தான்.

 

நூல் வெளி

வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு. மேத்தா. புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்; கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம், சோழநிலா, மகுடநிலா உள்ளிட்ட பல நூல்களையும் திரையிசைப்பாடல்களையும் எழுதியுள்ளார்; கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புதுக்கவிதை நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

மு. மேத்தா கவிதைகள் என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.

Tags : by mu.Mehta | Chapter 9 | 8th Tamil மு.மேத்தா | இயல் 9 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 9 : Kuntraena nimirnduneel : Poem: Ilaya tholanuku by mu.Mehta | Chapter 9 | 8th Tamil in Tamil : 8th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில் : கவிதைப்பேழை: இளைய தோழனுக்கு - மு.மேத்தா | இயல் 9 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில்