Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | கவிதைப்பேழை : இன்பத்தமிழ்

பாரதிதாசன் | பருவம் 1 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை : இன்பத்தமிழ் | 6th Tamil : Term 1 Chapter 1 : Tamilthean

   Posted On :  23.06.2023 07:27 am

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : தமிழ்த்தேன்

கவிதைப்பேழை : இன்பத்தமிழ்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : தமிழ்த்தேன் : கவிதைப்பேழை : இன்பத்தமிழ் - பாரதிதாசன் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் - ஒன்று

இன்பத்தமிழ்

கவிதைப்பேழை


 

நுழையும்முன்

நமது தாய்மொழியாகிய தமிழைத் தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன. தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாக ஆகிவிட்டது. பாரதிதாசன் தமிழைப் பலவாறாகப் போற்றுகிறார். கண்ணே! மணியே! என்று குழந்தையைக் கொஞ்சுவதும் உண்டு. அதுபோல அவர் நம் செந்தமிழுக்குப் பெயர்கள் பல சூட்டி மகிழ்வதைக் காண்போம்.

தமிழுக்கும் அமுதென்றுபேர் - அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! *

தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! *

தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! *

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்

தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

- பாரதிதாசன்

 

சொல்லும் பொருளும்

நிருமித்த - உருவாக்கிய

சமூகம் - மக்கள் குழு

விளைவு - வளர்ச்சி

அசதி சோர்வு

 

பாடலின் பொருள்

தமிழுக்கு அமுது என்று பெயர். இன்பம் தரும் அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு இணையானது.

தமிழுக்கு நிலவு என்று பெயர். இன்பத்தமிழ் எங்கன் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றது.

தமிழுக்கு மணம் என்று பெயர். அது எங்கள் வாழ்விற்காகவே உருவாக்கப்பட்ட ஊர் ஆகும்.

தமிழ் எங்கள் இளமைக்குக் காரணமான பால் போன்றது. நல்ல புகழ்மிகுந்த புலவர்களுக்குக் கூர்மையான வேல் போன்ற கருவியாகும்.

தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய வானம் போன்றது. இன்பத்தமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் தேன் போன்றது.

தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் தோள் போன்றது. தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க வாள் ஆகும்.

 

நூல் வெளி


பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். தம்

கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளார். எனவே, இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார். இவர் பாவேந்தர் என்னும் சிறப்பிக்கப்படுகிறார். இப்பாடல், 'பாரதிதாசன் கவிதைகள்' என்ற நூலில் 'தமிழ்' என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளது.

 

Tags : by Bharathidasan | Term 1 Chapter 1 | 6th Tamil பாரதிதாசன் | பருவம் 1 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ்.
6th Tamil : Term 1 Chapter 1 : Tamilthean : Poem: Inpa Tamil by Bharathidasan | Term 1 Chapter 1 | 6th Tamil in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : தமிழ்த்தேன் : கவிதைப்பேழை : இன்பத்தமிழ் - பாரதிதாசன் | பருவம் 1 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : தமிழ்த்தேன்