பருவம் 1 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம் : கனவு பலித்தது ( கடிதம் ): கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 1 Chapter 1 : Tamilthean
மதிப்பீடு
அத்தையின் சுடிதக் கருத்துகளைச் சுருக்கி எழுதுக.
விடை
‘கனவு பலித்தது’ – கடிதக் கருத்துகள் :
இன்சுவை :
ஆறாம் வகுப்பு படிக்கும் போதே அறிவியல் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தாள். அவ்விருப்பம் நிறைவேறியது. ஆம் அவள் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இளம் ஆராய்ச்சியாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.
இன்சுவை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்ததனால் தன் இலக்கை அடைவது கடினமானது என எண்ணினாள். ஆனால் அவளுடைய அத்தையின் ஊக்குவிப்பினால் தன் இலக்கை அடைந்தாள்.
சாதனையாளர்கள் :
சாதனை புரிவதற்கு மொழி தடை இல்லை. கணிதமேதை இராமானுஜம். மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோவின் தலைவர் சிவன், இஸ்ரோ அறிவியல் அறிஞர் வளர்மதி போன்றோர் தம் தாய்மொழித் தமிழில் பயின்ற சாதனையாளர்களாவர்.
தமிழர்களின் அறிவியல் சிந்தனை :
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்ததுதான் உலகம் என்பது அறிவியல் உண்மை. இக்கருத்தினைத் தொல்காப்பியரும் தமது தொல்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்’ மேலும், உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியுள்ளனர்.
இலக்கியங்கள் கூறும் சான்றுகள் :
கடல்நீர் ஆவியாகி மேகமாகிப் பின்னர் குளிர்ந்து மழையாகப் பொழியும் என்ற அறிவியல் உண்மையைப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அவை
கார் நாற்பது : ‘கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி……’
அறுவை மருத்துவம் :
போரில் புண்பட்ட வீரரின் மார்பை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி பதிற்றுப்பத்து என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு’. சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி நற்றிணை என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
கற்பவை கற்றபின்
1. இக்கடிதத்திற்கு நீங்கள் விரும்பும் வகையில் வேறொரு தலைப்பிடுக.
விடை
இக்கதைக்கு நான் விரும்பும் தலைப்பு “எண்ணம் ஈடேறியது.”
2. உங்கள் எதிர்காலக் கனவு குறித்து ஒரு கடிதம் எழுதுக.
விடை
மாணவர்களை தமிழில் ‘உங்கள் எதிர்கால கனவு’ குறித்து ஒரு கடிதம் எழுதச் செய்தல்.
இடம் : செஞ்சி,
நாள் : 05-06-2019.
அன்புள்ள அத்தை,
நான் இங்கு நலமாக இருக்கிறேன். நீங்கள் அங்கு நலமாக உள்ளீர்களா? உங்களின் அறிவுரையின் படியும் வழிகாட்டுதலின்படியும் நான் இன்று அறிவியல் துறையில் சிறந்து விளங்குகின்றேன்.
என் எதிர்காலக் கனவு நனவாவதற்கு என்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வேன். என் உயர்வும் உழைப்பும் நாட்டை உயர்த்துவதாக இருக்கும். என் இலட்சியப் பாதை மிகவும் சிறப்பானதாக அமையும். பத்துப் பேரோடு பதினொன்றாவது நபராக நான் இருக்கமாட்டேன். என் கடமையை உயிரென மேற்கொண்டு சாதனை புரிவேன்.
என்னுடைய அறிவியல் ஆய்வு மற்ற வல்லரசு நாடுகளுடன் போட்டியிடுவதாக இருக்காது. நம் நாட்டில் அழிவின் விளிம்பில் இருக்கும் விவசாயத்திற்கு உதவும் வகையில் இருக்கும் நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள், அக்கிராமங்களின் முதுகெலும்பு இளைஞர்கள், அவர்களுள் ஆர்வமுள்ள கிராமப்புற இளைஞர்களைக் கூட்டி விழிப்புணர்வூட்டி வேளாண்துறை மேம்படச் செய்வேன்.
மழைநீரைச் சேமிக்கவும், புதிய விவசாய உத்திகளைப் பயன்படுத்தி குறைந்த நாட்களில் மகத்தான விளைச்சலை உருவாக்குவேன். வேளாண் பணிக்கான புதிய எந்திரங்களைக் கண்டறிவேன். அவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்படையாதபடிப் பார்த்துக் கொள்வேன்.
நம்நாடுவறுமை, பஞ்சம், பிணிபோக்கி செழுமை, வளமை, பொருளாதார முன்னேற்றம் .. தொழில்வளம் கொழிக்க அறிவியலின் வழி நின்று பாடுபடுவேன். மேலும் வேறென்ன செய்யலாம் என்பதை நீங்கள் அவ்வப்போது கூறுங்கள்.
இப்படிக்கு
தங்கள் அன்புக்குரிய,
ச. விஷ்ணு
உறைமேல் முகவரி :
திரு. அ. கதிர் அவர்கள்,
எண். 7, பிள்ளையார் கோயில் தெரு.
பரனூர், சென்னை – 600
060.
3.
இன்சுவையின் எண்ணம் நிறைவேறக் காரணங்களாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?
விடை
(i) இன்சுவை, தான் எடுத்த செயலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். அவளுடைய அத்தை கூறிய அறிவுரைகளைச் சிரமேற்கொண்டு பின்பற்றினாள்.
(ii) நூலகம் சென்று பல நூல்களைப் படித்து சாதனையாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்து கொண்டாள். தன்னுடைய வாழ்வில் அதனை மேற்கொண்டாள்.
(iii) விடாமுயற்சியும், உழைப்பும் மனிதனை உயர்த்தும் என்பதற்கு இன்சுவை சான்றாகத் திகழ்ந்தாள்.
4.
'கனவு பலித்தது'
என்ற தலைப்பு இக்கடிதத்திற்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதனை விளக்குக.
விடை
கனவு பலித்தது என்ற தலைப்பு இக்கதைக்குப் பொருந்தும் விதம் :
(i) எண்ணங்கள் நேரானால் செயல்களும் நேராகும். வெற்றியும் நம் கைவசமாகும். இக்கதையில் வரும் இன்சுவை சிறுவயதிலேயே அறிவியல் துறையில் பணியாற்ற வேண்டும் என்பதைத் தன் விருப்பமாகக் கொண்டுள்ளாள்.
(ii) அவள் தமிழ்வழியில் படிப்பதால் தன் இலக்கை அடைய முடியுமா என அச்சமுற்றாள். இன்சுவையின் அத்தை பல சாதனையாளர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். மேலும் பண்டைத் தமிழர்களின் அறிவியல் சிந்தனைகளையும் எடுத்துக் கூறியிருந்தார்.
(iii) நூலகம் சென்று சாதனையாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்து கொள்வது இன்சுவையின் சிந்தனைக்கு வளம் சேர்க்கும், அறிவியல் மனப்பான்மை பெருகும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
(iv) இதனைச் சிரமேற்கொண்டு இன்சுவை, ஊக்கத்துடனும் விடாமுயற்சியுடனும் படித்து சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இளம் ஆராய்ச்சியாளர் பணிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாள்.
(v) இன்சுவையின் கடும் உழைப்பினாலும் விடாமுயற்சியினாலும் ஆர்வத்துடனும் படித்தனால் தன் இலக்கை அடைந்தாள். அவளுடைய கனவும் பலித்தது.