பெருஞ்சித்திரனார் | பருவம் 1 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை : தமிழ்க்கும்மி | 6th Tamil : Term 1 Chapter 1 : Tamilthean
இயல் - ஒன்று
கவிதைப்பேழை
தமிழ்க்கும்மி
நுழையும்முன்
கூட்டமாகக்கூடிக் கும்மியடித்துப் பாடி ஆடுவது மகிழ்ச்சியாள அனுபவம். கும்மியில் தமிழைப் போற்றிப்பாடி அடுவது பெரும் மகிழ்ச்சி தருவதாகும். வாருங்கள்! தமிழின் பெருமையை வாயாரப் பேசலாம்; காதாரக் கேட்கலாம்; இசையோடு பாடலாம்; கும்மி கொட்டி ஆடலாம்.
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங்
கோதையரே கும்மி கொட்டுங்கடி - நிலம்
எட்டுத் திசையிலும் செத்தமிழின் புகழ்
எட்டிடவே கும்மி கொட்டுங்கடி!
ஊழி பலநாறு கண்டதுவாம் அறிவு
ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் பெரும்
அழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்
அழியாமலே நிலை நின்றதுவாம்!
பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் - அன்பு
பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் – உயிர்
மெய்புகட்டும் அறமேன்மை கிட்டும் இந்த
மேதினி வாழ்வழி காட்டிருக்கும் !
- பெருஞ்சித்திரனார்
சொல்லும் பொருளும்
ஆழிப் பெருக்கு - கடல் கோள்
மேதினி - உலகம்
ஊழி - நீண்டதொருகாலப்பகுதி
உள்ளப்பூட்டு - உள்ளத்தின் அறியாமை
பாடலின் பொருள்
இளம்பெண்களே! தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவிடும் வகையில் கைகளைச் கொட்டிக் கும்மியடிப்போம்.
பல நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ்மொழி. அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்ட மொழி.பெரும் கடல் சீற்றங்கள், கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும் அழியாமல் நிலைத்திருக்கும் மொழி.
தமிழ், பொய்யை அகற்றும் மொழி; அது மனத்தின் அறியாமையை நீக்கும் மொழி; அன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்கள் நிறைந்த மொழி; உயிர் போன்ற உண்மையை ஊட்டும் மொழி ; உயர்ந்த அறத்தைத் தரும் மொழி. இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழி தமிழ்மொழி.
நூல் வெளி
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம். இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார். தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார். தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர்.
இப்பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. இந்நூல் எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இது தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது.