Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | கவிதைப்பேழை: மதுரைக்காஞ்சி

மாங்குடி மருதனார் | இயல் 7 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: மதுரைக்காஞ்சி | 9th Tamil : Chapter 7 : Vaaliya Neelanea

   Posted On :  19.08.2023 08:58 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே

கவிதைப்பேழை: மதுரைக்காஞ்சி

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே : கவிதைப்பேழை: மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

நாடு 

கவிதைப் பேழை 

மதுரைக்காஞ்சி

- மாங்குடி மருதனார்



நுழையும்முன்

மதுரையைச் சிறப்பித்துப் பாடியுள்ள நூல்களுள் பதினெண் மேற்கணக்கின், மதுரைக்காஞ்சி முதன்மையானது. இந்நூலில் மதுரை மாநகர் மக்களின் வாழ்விடம், கோட்டை கொத்தளம், அந்நகரில் நிகழும் திருவிழாக்கள், பலவகைப் பள்ளிகள், நாற்பெருங்குழு, அந்தி வணிகம் ஆகிய காட்சிகள் கவித்துவமாய் விரிந்துள்ளன. காலை தொடங்கி மறுநாள் விடியல்வரையில் நகரத்தைச் சுற்றிவந்து கண்ணுற்றதை முறைப்படுத்திக் கூறுவது போன்ற வருணனைப் பாடல் இது.


மதுரை மாநகர்

மண்உற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்

விண்உற ஓங்கிய பல்படைப் புரிசை

தொல்வலி நிலைஇய, அணங்குடை நெடுநிலை 

நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின் 

மழைஆடும் மலையின் நிவந்த மாடமொடு 

வையை அன்ன வழக்குடை வாயில்

வகைபெற எழுந்து வானம் மூழ்கி

சில்காற்று இசைக்கும் பல்புழை நல்இல்

ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்

பல்வேறு குழாஅத்து இசைஎழுந்து ஒலிப்ப

மாகால் எடுத்த முந்நீர் போல

முழங்கிசை நன்பணை அறைவனர் நுவல

கயம் குடைந்தன்ன இயம்தொட்டு இமிழிசை

மகிழ்ந்தோர் ஆடும் கலிகொள் சும்மை

ஓவுக் கண்டன்ன இரு பெரு நியமத்து

(அடிகள் 351-365)


மண்வரை ஆழ்ந்த தெளிந்த அகழி, 

விண்ணை முட்டும் கற்படை மதில்கள், 

தொன்மை உடைய வலிமை மிக்க

தெய்வத் தன்மை பொருந்திய நெடுவாசல், 

பூசிய நெய்யால் கறுத்த கதவுகள், 

முகில்கள் உலவும் மலையொத்த மாடம், 

வற்றாத வையைபோல் மக்கள் செல்லும் வாயில், 

மாடம் கூடம் மண்டபம் எனப்பல 

வகைபெற எழுந்து வானம் மூழ்கி 

தென்றல் வீசும் சாளர இல்லம், 

ஆற்றைப் போன்ற அகல்நெடும் தெருவில்

பலமொழி பேசுவோர் எழுப்பும் பேச்சொலி, 

பெருங்காற்று புகுந்த கடலொலி போல 

விழாவின் நிகழ்வுகள் அறையும் முரசு,

நீர்குடைந்ததுபோல் கருவிகளின் இன்னிசை, 

கேட்டோர் ஆடும் ஆரவார ஓசை, 

ஓவியம் போன்ற இருபெரும் கடைத் தெருக்கள்.



பாடலின் பொருள் 

மதுரை மாநகரில் ஆழமான தெளிந்த நீரையுடைய அகழி உள்ளது. பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட மதில் வானளவு உயர்ந்துள்ளது. பழைமையானதும் வலிமை மிக்கதும் தெய்வத்தன்மை பொருந்தியதுமாகிய வாயில் உள்ளது. அவ்வாயில் நெய்பூசியதால் கருமையடைந்த வலிமையான கதவுகளை உடையது. மேகங்கள் உலாவும் மலைபோல் மாளிகைகள் உயர்ந்து உள்ளன. இடைவிடாது ஓடுகின்ற வையை ஆற்றைப்போல மக்கள் எப்போதும் வாயில்கள் வழிச் செல்கின்றனர்.

மண்டபம், கூடம், அடுக்களை எனப் பல்வேறு பிரிவுகளைக்கொண்டு வான்வரை ஓங்கிய தென்றல் காற்று இசைக்கும் பல சாளரங்களையுடைய நல்ல இல்லங்கள் உள்ளன. ஆறு போன்ற அகலமான நீண்ட தெருக்களில் பொருள்களை வாங்க வந்த மக்கள் பேசும் பல்வேறு மொழிகள் ஒலிக்கின்றன. விழா பற்றிய முரசறைவோரின் முழக்கம் பெருங்காற்று புகுந்த கடலொலிபோல் ஒலிக்கிறது. இசைக்கருவிகளை இயக்குவதால் உண்டாகும் இசை, நீர்நிலைகளைக் கையால் குடைந்து விளையாடும் தன்மைபோல எழுகிறது. அதனைக் கேட்ட மக்கள் தெருக்களில் ஆரவாரத்தோடு ஆடுகின்றனர். பெரிய தெருக்களில் இருக்கும் நாளங்காடியும் அல்லங்காடியும் ஓவியங்கள் போலக் காட்சியளிக்கின்றன.

தெரியுமா? 

பொறிமயிர் வாரணம் .... 

கூட்டுறை வயமாப் புலியொடு குழும" (மதுரைக்காஞ்சி 673 - 677 அடிகள்) என்ற அடிகளின் மூலமாக மதுரையில் வனவிலங்குச் சரணாலயம் இருந்த செய்தியை மதுரைக் காஞ்சியின் மூலம் அறியலாம்.

பத்துப்பாட்டு ஆராய்ச்சி - மா. இராசமாணிக்கனார்


சொல்லும் பொருளும் 

புரிசை - மதில்; அணங்கு - தெய்வம்; சில்காற்று - தென்றல்; புழை - சாளரம்; மாகால் - பெருங்காற்று; முந்நீர் - கடல்; பணை - முரசு; கயம் - நீர் நிலை ; ஓவு - ஓவியம்; நியமம் - அங்காடி.


இலக்கணக் குறிப்பு

ஓங்கிய - பெயரெச்சம்; நிலைஇய - சொல்லிசை அளபெடை; குழாஅத்து - செய்யுளிசை அளபெடை; வாயில் - இலக்கணப் போலி. மா கால் - உரிச்சொல் தொடர்; முழங்கிசை, இமிழிசை - வினைத்தொகைகள். நெடுநிலை, முந்நீர் - பண்புத் தொகைகள்; மகிழ்ந்தோர் - வினையாலணையும் பெயர்.


பகுபத உறுப்பிலக்கணம்

ஆழ்ந்த - ஆழ் + த்(ந்) + த் + அ 

ஆழ் - பகுதி; த் - சந்தி (ந் ஆனது விகாரம்); த் - இறந்தகால இடை நிலை; அ - பெயரெச்ச விகுதி.

ஓங்கிய - ஓங்கு + இ(ன்) + ய் + அ ஓங்கு - பகுதி; இ(ன்) - இறந்தகால இடைநிலை

ய் - உடம்படுமெய் அ - பெயரெச்ச விகுதி.

மகிழ்ந்தோர் - மகிழ் + த்(ந்) + த் + ஓர் 

மகிழ் - பகுதி; த் - சந்தி (ந் ஆனது விகாரம்); த் - இறந்தகால இடைநிலை;

ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி


நூல் வெளி 

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி. காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள். மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது. இந்நூல் 782 அடிகளைக் கொண்டது. அவற்றுள் 354 அடிகள் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன. இதைப் பெருகுவள மதுரைக்காஞ்சி என்பர். இதன் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். மதுரைக்காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாங்குடி என்னும் ஊரில் பிறந்தவர். எட்டுத்தொகையில் பதின்மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.

Tags : by Makkudi marudhanar | Chapter 7 | 9th Tamil மாங்குடி மருதனார் | இயல் 7 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 7 : Vaaliya Neelanea : Poem: Madurai Kanchi by Makkudi marudhanar | Chapter 7 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே : கவிதைப்பேழை: மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார் | இயல் 7 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே