Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | உரைநடை: இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

மா.சு. அண்ணாமலை | இயல் 7 | 9 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு | 9th Tamil : Chapter 7 : Vaaliya Neelanea

   Posted On :  19.08.2023 08:50 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே

உரைநடை: இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே : உரைநடை: இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு - மா.சு. அண்ணாமலை | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

நாடு – எ 

உரைநடை உலகம் 

இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

- மா.சு. அண்ணாமலை



நுழையும்முன்

இந்திய தேசிய இராணுவம் இந்திய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பின்  தூண்களாகத் திகழ்ந்தவர்கள் நம் தமிழர்கள். விடுதலைப் போராட்டத்தை ஒளி மங்காமல் பாதுகாத்தவர்களுள் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுடன் இணைந்து இந்திய தேசிய இராணுவப் படையில் போராடிய தமிழர்களின் பங்கு வியந்து போற்றத்தக்கது.


இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த 1942 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள், ஆங்கிலேயப் படைகள் மலேயாவில் ஜப்பானியரிடம் சரணடைந்தன. இப்படையில் இந்திய வீரர்களும் இருந்தனர். சரணடைந்த அவ்வீரர்களைக் கொண்டு ஜப்பானியர்கள், மோகன்சிங் என்பவரின் தலைமையில் இந்திய தேசிய இராணுவம் (ஐ.என்.ஏ.) என்ற படையை உருவாக்கினர்.

இந்திய தேசிய இராணுவத்திற்கு மக்கள் ஆதரவு பெருகியது. அக்காலகட்டத்தில் தமிழகத்தில் இருந்து மலேயா, பர்மா போன்ற நாடுகளுக்குப் பிழைப்பிற்காகச் சென்ற தமிழர் பலர் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தனர். இந்திய தேசிய இராணுவத்தில் பல பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. அதில் ஒன்றுதான் ஒற்றர்படை. ஜப்பானியர்கள் ஒற்றர்படையில் இருந்த வீரர்களை, இந்தியாவில் உள்ள ஆங்கிலேய இராணுவத்தைப் பற்றி ஒற்றறிய நீர்மூழ்கிக்கப்பல் மூலம் கேரளாவிற்கும் குஜராத்திற்கும் அனுப்பினர். சிலரைத் தரைவழியில், பர்மாக் காடுகள் வழியாக இந்தியாவிற்கு அனுப்பினர். இந்திய இராணுவம் அவர்களைக் கைது செய்து சென்னைச் சிறைக்கு அனுப்பியது; பலருக்கு மரண தண்டனை அளித்தது.


தூண்களாகத் திகழ்ந்தவர்கள்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்க, 91நாள்கள் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூர் வந்தடைந்தார். 1943 ஆம் ஆண்டு சூலை மாதம் 9ஆம் நாள் பதவியேற்றார். அவர் உரையாற்றிய மாபெரும் கூட்டத்தில் "டெல்லி நோக்கிச் செல்லுங்கள் "(டெல்லி சலோ) எனப் போர்முழக்கம் செய்தார். இவரின் வேண்டுகோள் அனைவரது மனத்திலும் பசுமரத்தாணிபோல் பதிந்தது.

நேதாஜி தமிழ் வீரர்களைப் பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியத் தமிழனாகப் பிறக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார்.

- பசும்பொன் முத்துராமலிங்கனார்


நேதாஜி தலைமையில் இருந்த இந்திய தேசிய இராணுவப்படை பிரித்தானிய அரசை எதிர்த்தது. அப்போது தமிழகத்திலிருந்து பெரும்படையைத் திரட்டி இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர் பசும்பொன் முத்துராமலிங்கனார்.

இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான், "இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்" என்றார்.


தெரியுமா?

வான்படைப் பிரிவு 

இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45 வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு, வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த 45பேர் கொண்ட பயிற்சிப் பிரிவின் பெயர்தான் டோக்கியோ கேடட்ஸ்.

போர்ச் சூழலுக்கு நடுவில் இந்திய தேசிய இராணுவ வீரர்கள் டோக்கியோ செல்வது ஒரு சவாலாக இருந்தது. பர்மாவில் இருந்து காட்டுவழியாகப் பயணம் செய்து, சயாம் மரண ரயில் பாதையைக் கடந்து, அங்கிருந்து படகு வழியாகத் தப்பிச் சென்று, பழைய கப்பல் ஒன்றில் ஏறி, சீறும் அலைகளில் சிக்கித் தவித்து முடிவில் ஜப்பானின் "கியூசு" தீவை அடைந்தனர். அந்தத் தீவு, கடற்படையின் வசம் இருந்தது. 

காலை 5 மணிக்கு எழுந்து மூன்று கல் தூரம் ஓடவேண்டும். அப்போது குளிர், சுழியத்திற்குக் கீழ் இருக்கும். உதடுகள் வெடித்து வலி தாங்க முடியாது. பனிப்புகை படர்ந்த மைதானத்தில் ஓடுவார்கள். மூன்று கல் தூரம் ஓடியதும் ஐந்து நிமிடங்கள் ஓய்வு, பிறகுதான் சிறப்புப் பயிற்சிகள். அதை முடித்துக்கொண்டு அவசரமாகக் குளித்துத் தயாராகி வர வேண்டும்.

- பசும்பொன் மடல், மடல் 32, இதழ் 8,சனவரி 2018, ப.14-16


மகளிர் படை உருவாக்கம்


இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சிராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் டாக்டர் லட்சுமி. இப்படையில் தமிழ்ப் பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர். இவர்களில் தலைசிறந்த தலைவர்களாக ஜானகி, இராஜாமணி முதலானோர் விளங்கினர்.

நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் கேப்டன் லட்சுமி, சிதம்பரம் லோகநாதன் முதலான தமிழர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள். சிறந்த வீரர்களை உருவாக்க நேதாஜி 45 இளைஞர்களை டோக்கியோ அனுப்பினார். அவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். அதில் பயிற்சி பெற்றவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கேப்டன் தாசன் ஆவார்.

அவர் பின்பு சுதந்திர இந்தியாவில் செசல்ஸ் நாட்டுத் தூதுவராகப் பணியாற்றினார்.


இரண்டாம் உலகப்போர்க் காலம்

இந்திய தேசிய இராணுவம் ஜப்பானிய இராணுவத்தோடு சேர்ந்து, ஆங்கிலேயரோடு போரிடப் பர்மா வழியாக இந்தியா வரத் திட்டமிட்டது.

மக்கள் துணையுடன் போராடிய நேதாஜியைக் கண்டு ஆங்கிலப் பிரதமர் சர்ச்சில் கோபம் கொண்டார். 'மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது' என்று சர்ச்சில் கூறினார். அதற்கு நேதாஜி இந்தத் தமிழினம்தான் ஆங்கிலேயர்களை அழிக்கும் என்று பதில் கூறினார்.


நேதாஜியின் பொன் மொழி

அநீதிகளுக்கும் தவறான செயல்களுக்கும் மனம் ஒப்ப இடம் தருதல் மிகப் பெரிய குற்றமாகும். நீங்கள் நல்வாழ்வைத் தந்தே ஆக வேண்டும் என்பதுதான் காலத்தால் மறையாத சட்டமாகும். எந்த விலை கொடுத்தாவது சமத்துவத்திற்குப் போராடுவதே மிகச்சிறந்த நற்குணமாகும்.

மனதை மலரவைக்கும் இளங்கதிரவனின் வைகறைப் பொழுது வேண்டுமா? அப்படியானால் இரவில் இருண்ட நேரங்களில் வாழக் கற்றுக்கொள்.

தெரிந்து தெளிவோம்

நேதாஜியின் பொன்மொழி 

விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனநிறைவும் வேண்டுமா? அப்படியானால் அதற்கு விலையுண்டு. அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும்தான்.

இரண்டாம் உலகப்போரில் பர்மாவில் நடந்த போர் "மிகவும் கொடூரமானதாகும்". இந்திய தேசிய இராணுவம் 1944 ஆம் ஆண்டு மார்ச் 18அன்று ஆங்கிலேயரை வென்று இந்தியாவிற்குள் மணிப்பூர்ப் பகுதியில் 'மொய்ராங்' என்ற இடத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றியது. ஆனால், அமெரிக்கர்களும், ஆங்கிலேயர்களும் சேர்ந்து போரிட்டதால் இந்த வெற்றி நிலைபெற்று நீடிக்கவில்லை. இப்போரில் ஒரு இலட்சம் இந்தியரும் ஜப்பானியரும் வீரமரணம் எய்தினர்.


மரணம் பெரிதன்று

இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த பதினெட்டு இளைஞர்கள், 194345ஆம் ஆண்டுகளில் சென்னைச் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.

1944ஆம் ஆண்டு பதினெட்டே வயதான இராமு என்பவர் தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கிலிடப்படுவதற்கு முதல்நாள் இரவு, "நான் என் உயிரைக் கொடுப்பதற்குக் கொஞ்சமும் கவலைப்படவில்லை; ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை" என்று கூறினார்.

மரணதண்டனை பெற்ற அப்துல்காதர் பின்வருமாறு கூறினார்.

"வாழ்வின் பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல் நிலை அடைவான். நாட்டிற்காக உயிர்நீத்த முழுநிலவினைப் போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திதான்".

இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத் தந்ததில் இந்திய தேசிய இராணுவத்தினரின் பங்கினை நாம் மறந்து விட முடியாது. அவர்கள் தாயக நலனுக்காகத் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்தனர். இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்ட தமிழர்கள் பலர் வீரமரணத்தைத் தழுவினர். அவர்களின் வீரம் போற்றுதலுக்குரியது. தங்கள் இன்னுயிர் இழந்த முகம் தெரியாத தமிழர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும் அஞ்சாத வீரத்தையும் நாட்டுப்பற்றையும் என்றும் போற்றுவது நம் கடமையாகும்.


நூல் வெளி 

பேராசிரியர் மா.சு.அண்ணாமலை: "இந்திய தேசிய இராணுவம் - தமிழர் பங்கு" என்ற நூலுக்காகத் தமிழக அரசின் பரிசுபெற்றவர். இவர் தலைமையில் எடுக்கப்பட்ட குறும்படங்கள் சர்வதேச அளவில் பரிசுகள் பெற்றன.

Tags : by maa.su. Annamalai | Chapter 7 | 9th Tamil மா.சு. அண்ணாமலை | இயல் 7 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 7 : Vaaliya Neelanea : Prose: India desiya raanuvathil Tamilar pangu by maa.su. Annamalai | Chapter 7 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே : உரைநடை: இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு - மா.சு. அண்ணாமலை | இயல் 7 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே