Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | துணைப்பாடம்: சந்தை

இயல் 7 | 9 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: சந்தை | 9th Tamil : Chapter 7 : Vaaliya Neelanea

   Posted On :  19.08.2023 09:02 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே

துணைப்பாடம்: சந்தை

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே : துணைப்பாடம்: சந்தை | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

நாடு 

விரிவானம்

சந்தை



நுழையும்முன்

வண்டிப் பட்டைகளின் தொடர்ந்த தாளக்கட்டோடு, இழுத்துச் செல்கிற மாடுகளின் கழுத்துமணி ஓசையோடு சந்தைக்குப் பொருள் கொண்டு போவதும் பொருள் வாங்கி வருவதுமான மகிழ்ச்சி பெருநகரங்களில் தொலைந்துவிட்டது. இருப்பினும், இன்றும் சில இடங்களில் சந்தை மரபு இருந்துகொண்டுதான் இருக்கிறது. பல்பொருள் அங்காடிகளின் வருகை, வணிகருக்கும் மக்களுக்குமான உறவைக் குறைத்து வருகிறது. சந்தையில் வணிகம் மட்டுமல்லாமல் வாங்குபவரின் மனநிறைவும் பேணப்பட்டது. தலைமுறை தலைமுறையாகப் பொருள்களை விற்பவர் - வாங்குபவர் உறவு வளர்த்த சந்தை வணிகம் அறியப்படவேண்டிய ஒன்று.


பூஞ்சோலை கிராமத்திலிருந்து புதுச்சேரியில் உள்ள தம்முடைய மகள் வீட்டிற்கு வந்திருக்கிறார் பெரியவர் தணிகாசலம். இவர், தம் ஊரில் மரபுவழி வேளாண்மை செய்பவர். ஊராட்சித் தலைவராகவும் தொண்டாற்றிய அனுபவம் மிக்கவர். ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் பெயரன் மூர்த்தியும் நான்காம் வகுப்பில் படிக்கும் பெயர்த்தி கீர்த்தனாவும் அவருடன் நடத்திய உரையாடலின் சிறு பகுதி.

கீர்த்தனா: தாத்தா! எங்க ஊர்ல புதுசா 'மால்' திறந்திருக்காங்க, வர்றீங்களா போய்ப் பார்த்துட்டு வரலாம்?

தாத்தா: 'மால்'னா, என்ன கண்ணு பொருள்?

மூர்த்தி: ஒரே இடத்துல எல்லாக் கடைகளும் இருக்கும் தாத்தா. குண்டூசியிலிருந்து கணினி வரைக்கும் வாங்கலாம். பல்லங்காடியகம்னு சொல்லலாம்.

தாத்தா: பழங்காலத் தமிழ் இலக்கியத்தில் 'நாளங்காடி', 'அல்லங்காடி' என்பார்களே அது மாதிரியா?

மூர்த்தி: நாளங்காடி, அல்லங்காடியா? ஒன்னும் புரியலியே?

தாத்தா: பகலில் செயல்படும் கடைவீதிகளை 'நாளங்காடி' என்றும் இரவில் செயல்படும் கடை வீதிகளை 'அல்லங்காடி' என்றும் சொல்வாங்க. நாள் என்றால் பகல்; அல் என்றால் இரவு.

மூர்த்தி: நீங்க கடை வீதியைப் பத்தி சொல்றீங்க. அது இல்ல தாத்தா இது. இங்க ஒரே கட்டடத்துல கடைகள், திரைப்பட அரங்கு, உணவகம், கேளிக்கை அரங்குகள் -ன்னு எல்லாமே இருக்கும் தாத்தா.

கீர்த்தனா: தாத்தா, அவன் ஏதாவது பேசிகிட்டே இருப்பான். நீங்க கிளம்புங்க போயிட்டு வரலாம்.

தாத்தா: சரி கண்ணு. நீதான் கிளம்பணும். நான் தயாராகத்தான் இருக்கேன். எங்க காலத்துச் 'சந்தை' தான் இப்ப வளர்ந்து, நீங்க சொல்ற 'மால்' ஆயிடுச்சா மூர்த்தி?

மூர்த்தி: சந்தையா? அது எப்படி இருக்கும்? நான் மேல்நிலை வகுப்பில் வணிகவியல் எடுத்துப் படிக்கலாம்னு இருக்கேன். அதனால அதைப்பற்றித் தெளிவாச் சொல்லுங்க தாத்தா.

தாத்தா: மனு சங்க நாடோடியா வேட்டையாடி வாழ்ந்த காலத்துல அவங்களுக்குக் கிடைச்ச உணவை அவங்களுக்குள்ளாவே பகிர்ந்துகிட்டாங்க. அதனால் அந்தக் காலத்துல பொதுச் சந்தைன்னு ஒன்னு தேவைப்படலை. பின்னாடி காலம் மாறி உற்பத்திப்பெருக்கம் ஏற்பட்ட போது தமிழ்நாட்டின் நால்வகை நிலங்களில் வாழ்ந்த மக்களோட தேவை, பயன்பாடு, உற்பத்தி ஆகியவை பெருகின. ஒன்றைக் கொடுத்து இன்னொன்று வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. விற்று வாங்குவதும், வாங்கி விற்பதுமான பண்டமாற்று முறை உண்டாச்சு.

கீர்த்தனா: தாத்தா கிளம்புங்க. இங்க இருந்து பக்கம்தான் நடந்தேகூட போயிடலாம்.

மூர்த்தி: எதுக்கு கீர்த்தனா தாத்தாவ நச்சரிக்கிற? தாத்தா சந்தையைப் பற்றிச் சொல்லி முடிக்கட்டும், அப்புறம் போகலாம்.

தாத்தா: பரவாயில்ல மூர்த்தி, நடந்துகிட்டே சொல்றேன் வா.

(மூவரும் தெருவில் இறங்கி நடந்து செல்கின்றனர்.)

மூர்த்தி : பண்டமாற்றுமுறை என்றால் காசு பணம் இல்லாம செய்கிற சிறு வணிகம் தானே. அது எப்படி தாத்தா சந்தை முறையா மாறிச்சு?

தாத்தா: கிராமத்து மக்கள் தங்களோட நிலத்தில் விளையும் காய்கறி, கீரை, தானியம் போன்ற பொருள்களை விற்கவும் தேவையான மாற்றுப் பொருள்களை வாங்கவும் விரும்பி முச்சந்தி, நாற்சந்தின்னு மக்கள் கூடும் இடங்களில் கடை விரிச்சாங்க. இதுதான் சந்தைங்கிற பொது வணிக இடமாகப் பின்னால் மாறியது.

கீர்த்தனா: தாத்தா! அங்க பாருங்க எவ்வளவு பெரிய விளம்பரம் வச்சிருக்காங்க.

தாத்தா: இப்பல்லாம் விளம்பரம் இல்லன்னா வியாபாரமே இல்லன்னு ஆயிடுச்சு. ஆளுக்கு ஒப்பனை செய்தது பத்தாதுன்னு இப்ப ஆப்பிளுக்கே ஒப்பனை செய்கிறார்கள். பிரபலங்களை வைத்து விளம்பரம் கொடுத்துச் செய்வதுதான் கல்லா கட்டும் தந்திரம்னு ஆயிடுச்சு! ஆனா, சமூகம் சார்ந்து உண்டான கிராமச்சந்தையில் அப்படி இல்ல. கலப்படம் இல்லாத நேர்மைதான் கிராமச்சந்தையோட அடிப்படை. ஒரு குறிப் பிட்ட ஊரை மையப்படுத்தி நூற்றுக்கணக்கான கிராம மக்கள் இப்படி நேர்மையா தங்களோட பொருள்களைப் பகிர்ந்துக்கிட்டாங்க.

மூர்த்தி: முதல்ல 'சந்தை'ன்னு சொல்லிட்டு, அப்புறம் ஏன் அத கிராமச்சந்தைன்னு மாத்திச் சொல்றீங்க தாத்தா.

தாத்தா: உள்ளூர்த் தேவைக்கு ஏற்ற மாதிரி, அங்க விளைகிற உணவுப் பொருள்களையும் விவசாயம், சமையல், வீடு ஆகியவற்றுக்குத் தேவையான பொருள்களையும் சிறிய அளவில் விற்கிற சிறு வணிகச் செயல்பாடுதான் கிராமச்சந்தை. மக்களோட அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யறதுதான் அதோட நோக்கம். நம்ம மனசை மயக்கிற மாதிரி வெறும் மிகைவரவு சார்ந்து இயங்குவது புதிய சந்தை. அதிலிருந்து வேறுபடுத்தத்தான் அப்படிச் சொன்னேன்.

மூர்த்தி: சந்தையில என்னவெல்லாம் வாங்கலாம் தாத்தா?

தாத்தா: கிராமச்சந்தையில் கிடைக்காத பொருள்களே இல்லை . கடுகு, சீரகத்தில் இருந்து உணவுத் தானியங்கள், காய்கறிகள்; கோழி, ஆடு, மாடு, குதிரைன்னு கால்நடைகள்; சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல்கள் போன்ற அலங்காரப் பொருள்கள்; இரும்புப் பொருள்கள், பாத்திரங்கள், துணிமணிகள்னு ஒரு குடும்பத்துக்கு, தொழிலுக்குத் தேவையான எல்லாத்தையும் வாங்கலாம். அது மட்டுமல்லாம பல பேருக்கு வேலை வாய்ப்பையும் கொடுத்தது கிராமச்சந்தை.

மூர்த்தி: காய்கறி, தானியம் சந்தையில விற்பார்கள் என்று சொன்னீங்க. ஆடு மாடுங்கள ஏன் தாத்தா சந்தையில் விற்கிறாங்க?

தாத்தா: மக்கள் நாகரிகம் குறிஞ்சி நிலத்துல வேரூன்றி, முல்லை நிலத்துல வளர்ந்து, மருதத்துல முழுமையும் வளமையும் அடைஞ்சுது. எல்லா நிலங்களிலும் மக்களுக்கு ஆடு, மாடுகளோடு தொடர்பு இருந்துகிட்டே இருக்கு. உழவுத் தொழில்ல மனுசனுக்குப் பக்கபலமா மட்டுமில்ல, இணையாகவும் துணையாகவும் கால்நடைங்க இருந்திருக்கு. அந்த வகையிலதான் அவற்றோட தேவை அதிகமாகி வாங்க வேண்டிய, விற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கு. கால்நடைச் சந்தை தமிழ்நாடு முழுவதும் இருக்கு. மதுரைப்பக்கம் மாட்டுச் சந்தைய 'மாட்டுத்தாவணி'ன்னு சொல்லுவாங்க. தாவணின்னா சந்தைன்னு பொருளாம். இப்ப மதுரைப் பேருந்து நிலையம் இருக்கிற இடம் அது.

கீர்த்தனா : கிராமச்சந்தை பத்திக் கேக்கவே ஆர்வமா இருக்கு. மேல சொல்லுங்க தாத்தா.

தாத்தா: கழைக் கூத்தும் பொம்மலாட்டமும் கிராமச்சந்தையில் உண்டு. சந்தைக்குப் போறது எங்க காலத்துல திருவிழாவிற்குப் போகிற மாதிரி; அக்கம் பக்கத்து ஊர் உறவுகளைச் சந்தித்துப் பேசலாம்; சாதி மதத்தைத் தாண்டி எல்லோருடனும் பழக முடியும்; ஆண்-பெண் பேதமில்லாம, ரெண்டு பேரும் சந்தைச் செயல்பாடுகள்ல கலந்துக்குவாங்க ; மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் தலைமுறை தலைமுறையா தொடர்பும் நட்பும் இருக்கும்; வாரம் ஒருமுறை உறவுக்காரர்களைப் பார்த்துட்டு வர்ற மாதிரி ஒரு மகிழ்ச்சி இருக்கும்.

தெரியுமா? 

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிச் சந்தை 18 ஏக்கர் பரப்பில் எட்டாயிரம் கடைகளுடன் இன்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூடுகிறது. பல ஊர்களைச் சேர்ந்த மக்கள், தக்காளி முதல் தங்கம் வரை வாங்குவதற்குக் கூடுகிறார்கள். விற்பவரும் வாங்குபவரும் உறவுகளாய்ப் பேசி மகிழும் ஆரவாரம் அங்கே ஒலிக்கிறது. 125 ஆண்டுகள் வயதான அச்சந்தையில் நான்கு தலைமுறை நட்பு நிலவுகிறது. கலப்படமில்லாத பொருள்களை வருவாய் நோக்கின்றி அச்சந்தை இன்றும் விற்பனை செய்கிறது.

மூர்த்தி: பூஞ்சோலை வீட்டுல அத்தனை ஆடுமாடு இருக்கே எல்லாமே சந்தையில் வாங்கியதுதானா?

தாத்தா: சந்தையில் வாங்கியதும் உண்டு, வீட்டிலேயே பிறந்து வளர்ந்ததும் உண்டு. சந்தையில் ஆடு, மாடு வாங்குவதை இப்ப நினைச்சா வேடிக்கையா இருக்கும். துண்டைப் போட்டுக் கைகளை மறைச்சுக்கிட்டு விலை பேசுவது ஒரு உத்தி. கொம்பு, பல், வால், திமிலைப் பார்த்து மாட்டோட வயசு, வலிமையைக் கண்டு பிடிக்கிறது ஒரு தனித்திறமை. நான் தஞ்சாவூர்ச் சந்தையில மாட்டை வாங்கி, அதைக் கொள்ளிடம் வழியா நடந்தே ஒரு வாரம் ஓட்டி வந்திருக்கேன்.

மூர்த்தி: ஆடு மாடுகளை மட்டுந்தான் சந்தையில் விற்பனை செய்வாங்களா தாத்தா?

தாத்தா: யார் சொன்னது? ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு சந்தைக்குப் பேர் போனது. மணப்பாறைன்னு சொன்னா மாட்டுச்சந்தை, அய்யலூர்னா ஆட்டுச் சந்தை, ஒட்டன்சத்திரம்னா காய்கறிச் சந்தை, நாகர்கோவில் தோவாளைன்னா பூச்சந்தை, ஈரோடுன்னா ஜவுளிச் சந்தை, கடலூருக்குப் பக்கமா இருக்கிற காராமணி குப்பம்னா கருவாட்டுச் சந்தை, நாகப்பட்டினம்னா மீன் சந்தை இப்படித் தமிழ்நாடு முழுதும் பல சந்தைகள் இருக்கு. இவை தவிர ஒவ்வொரு வட்டாரத்திலும் கிராமச் சந்தைகள் ஏராளம். கிழமையைக் கணக்கு வைத்து ஒவ்வொரு ஊர்ச் சந்தைக்கும் சென்று வரும் வியாபாரிகள் உண்டு. எந்தச் சந்தையில் எது சிறப்பு, எது விலை மலிவு என அனுபவத்தில் அறிந்து வாங்கிவர ஊர் ஊராகச் செல்லும் மக்களும் உண்டு.

கீர்த்தனா: அங்கே அதோ தெரியுது பாருங்க தாத்தா பெரிய கட்டடம். அதுதான் 'மால்'.

தெரியுமா?

இன்றைக்கும் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும், வாரச் சந்தைகளும் மாதச் சந்தைகளும் குறிப்பிட்ட சில பொருள்களை மட்டும் விற்கும் சந்தைகளும் மாலை நேரச் சந்தைகளும் நடந்தவண்ணம் உள்ளன.


மூர்த்தி: இந்த மாதிரி பன்னாட்டு அறிவியல் தொழில் நுட்பத்தோட இயங்குற வணிக வளாகங்களுக்கும் கிராமச்சந்தைகளுக்கும் என்ன வேறுபாடு? தாத்தா!

தாத்தா: நவீன சந்தையில் உற்பத்தி செய்கிறவன் ஒருத்தன்; மொத்தமாக வாங்குகிறவன் வேறு ஒருத்தன். சில்லறையாக விற்கிறவன் இன்னொருத்தன்னு இருப்பாங்கன்னு நினைக்கிறேன். கிராமச்சந்தையில் உற்பத்தியாளன்தான் விற்பனையாளன். பெரும்பாலும் இடைத்தரகர்களுக்கு வேலை இல்ல. குளிரூட்டப்பட்ட அறை இல்லை. வாடகை இல்லை . விற்கிறவனும் வாங்குகிறவனும் ஓர் உடன்பாட்டுக்கு வந்தால் அதுதான் பொருளோட விலை.

கீர்த்தனா: இதோ வந்தாச்சு. வாங்க அந்தத் தானியங்கிப் படிக்கட்டில் ஏறி மேலே போகலாம்.

தாத்தா: நீ என்ன வாங்கணும் மூர்த்தி?

மூர்த்தி: எனக்கு ஒன்னும் வேணாம் தாத்தா. கீர்த்திதான் பாக்கறதெல்லாம் கேப்பா.

(நடக்கிறவர்கள் பேசிக்கொள்வதும் இயந்திரங்களின் ஓசைகளும் பேரிரைச்சலை ஏற்படுத்தின.)

மூர்த்தி: 'சந்தைக்கடைச் சத்தம்' அப்படின்னு சொல்வாங்களே அதுவும் இந்தச் சத்தமும் ஒண்ணா தாத்தா?

தாத்தா: சந்தைக்கடை சத்தமாத்தான் இருக்கும். ஆனா இந்த மாதிரி இரைச்சலா இருக்காது. சந்தை வெறும் உதட்டு வியாபாரம் மட்டும் பேசும் களம் இல்லை . வாங்க வாங்க என ஏதோ கல்யாண வீடு போல வரவேற்று நலம் விசாரித்த பிறகுதான் ஒவ்வொரு கடையிலும் வியாபாரம் நடக்கும். விசாரிப்புகளுக்கு மத்தியில் ஓர் உறவுக் கம்பி இழையோடும். இதனால, உரிய வயசுல பேச்சு வராத குழந்தைங்களைச் சந்தைக்குக் கூட்டிக்கிட்டுப் போவோம். சந்தையில கேக்குற சொற்களையும் பலவித குரல் ஏற்ற இறக்கங்களையும் உள்வாங்கிக்கிற குழந்தைங்களுக்குப் பேச்சு வந்துவிடும்.

(கீர்த்தனா ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த பெரிய குரங்கு பொம்மை ஒன்றைத் தொட முயன்றாள். கடையின் வேலையாள் தொடக்கூடாதெனக் கீர்த்தனாவிற்குச் சைகை காட்டினார்.)

தாத்தா: பார்த்தியா? பொம்மையைத் தொடக் கூடாதுன்னு சொல்கிறார். குழந்தைகளை நாட்டுச்சந்தைக்குக் கூட்டிக்கொண்டு போனால், கடையில் இருக்கும் தக்காளி, கேரட் எனக் குழந்தை எதை எடுத்தாலும் அதற்குக் காசு இல்லை. குழந்தையின் ஆசையில் வணிகம் குறுக்கிடாது.

மூர்த்தி: வியாபாரத்துல கருணைக்கு இடம் கொடுத்தா, முதல் தேறாதே தாத்தா.

தாத்தா: நாட்டுச் சந்தையில் வியாபாரிக்கும் வாடிக்கையாளருக்குமான உறவு என்பது வெறுமனே பொருளை விற்று வாங்குவதோடு முடிந்து போவதில்லை. சந்தையில் பார்த்துப் பழகியவர்கள் சம்பந்திகளாகி உறவினர்கள் ஆகிவிடுவதுமுண்டு! சந்தையின் சாதாரண விசாரிப்புகளிலும் நேசம் உண்டு, நேர்மை உண்டு .

கீர்த்தனா: தாத்தா அங்கே பாருங்க அந்தக் குழந்தை பொம்மை எவ்ளோ பெருசா இருக்கு? விலை அதிகமா இருக்குமோ தாத்தா?

தாத்தா: விலையைப் பத்தி என்ன இருக்கு. உனக்குப் பிடிச்சிருக்கா சொல்லு.

கீர்த்தனா : 'ஏம்மா, இவ்வளவு பெரிய பொம்மைய வாங்கியாந்தே?'ன்னு அம்மா சத்தம் போடும் தாத்தா.

தாத்தா: அதை நான் பார்த்துக் கொள்கிறேன். (பொம்மை வாங்குகிறார்கள்) உனக்கு ஏதும் வேணுமா மூர்த்தி?

மூர்த்தி: வேணாம் தாத்தா. பழக்கூழ் வேணும்னா குடிக்கலாம் தாத்தா.

தாத்தா: சரி. குடிக்கலாம். எனக்குப் பனிக் கட்டி போடாமல் வாங்கு.

(மூவரும் பழக்கூழ் அருந்தியவாறே உரையாடுகின்றனர்)

மூர்த்தி: இவ்வளவு பிரம்மாண்டமான கடையில் பல அடுக்குகளில் பொருள்களைக் குவிச்சு வெச்சிருக்காங்க.

தாத்தா: ஆமா. யார்யாருக்கு எது வேணுமோ அததுக்குத் தனித்தனியான பகுதிகள் இருக்கு. தேவைக்கும் அளவுக்கும் ஏற்பப் பொருள்களை நாமே தேர்ந்தெடுக்கலாம் போல.

கீர்த்தனா: ஆமா, தாத்தா பெரும்பாலும் பல அளவுள்ள பொட்டலங்கள் போட்டு வைத்திருக்காங்க. கெடுநாளும் குறிச்சிருப்பாங்க. நாமதான் பாத்து வாங்கணும். சரி வீட்டுக்குப் போலாம் தாத்தா. 

தாத்தா: சரி, வாங்க போகலாம்

மூர்த்தி: இந்தமாதிரி அங்காடிகள் பலபேருக்கு நிரந்தர வேலை கொடுக்குது தாத்தா.

தாத்தா: அப்படிச் சொல்ல முடியாது. நிரந்தரப் பணியாளர் குறைச்சலாத்தான் இருப்பாங்க. தற்காலிகப் பணியாளர்தான் அதிகம். பலபேர் வந்து கொஞ்சநாள் வேலை பார்த்துட்டுப் போயிடுவாங்க.

கீர்த்தனா: பொருள்களை விற்கணும். தீர்ந்தவுடனே வாங்கிவைக்கணும். பெரிய வேலைதான் தாத்தா.

தாத்தா: இது போன்ற கடைகளைத் திட்டமிட்டாத்தான் நிருவகிக்க முடியும். அதற்கேற்ப மேலாண்மை, கண்காணிப்பு, கட்டமைப்பு வசதி, தொடர் பராமரிப்புன்னு இதன் பின்னால ஏகப்பட்ட தொடர் செயல்பாடுகள் இருக்கு. கிராமச்சந்தைல இருக்கறமாதிரி இங்க யார்வேண்ணாலும் கடை வைத்துவிட முடியாது. பெரிய அளவுல முதலீடு தேவைப்படும். 

(மூவரும் வீட்டை அடைந்தார்கள்)

கீர்த்தனா அம்மா: எதுக்குமா இவ்வளவு பெரிய பொம்மை? ஏற்கனவே நிறைய பொம்மைங்க இருக்கே!

தாத்தா: விடும்மா. குழந்தை ஆசையா கேட்டா. நான்தான் வாங்கித்தந்தேன்.

அம்மா : மூர்த்தி ஒன்னும் வாங்கலையாப்பா?


பொதியை ஏத்தி வண்டியிலே 

பொள்ளாச்சி சந்தையிலே

விருதுநகர் வியாபாரிக்கு - செல்லக்கண்ணு 

நீயும் வித்துப்போட்டுப் பணத்த எண்ணு செல்லக்கண்ணு .

- பாடலாசிரியர் மருதகாசி

மூர்த்தி: கீர்த்தனா, அவ ஆசைப்பட்ட பொம்மையை வாங்கிக்கிட்டா. நானும் என் படிப்புக்குத் தேவையான சந்தை பற்றிய விவரங்களைத் தாத்தாவிடம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். அந்தக் காலத்துச் சந்தையில மக்கள் பணத்தைவிட மனித மாண்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாங்க என்பதை நினைத்தாலே பெருமையா இருக்கு.

அம்மா: ஆமா, நானும் சந்தைக்குப் போயிருக்கேன். சந்தைன்னாலே சந்தோசம் தானா வரும். சரி வாங்க. தாத்தா ஊர்ச் சந்தையிலிருந்து வாங்கி வந்த காய்கறியில குழம்பு வெச்சுருக்கேன், சாப்பிடுங்க.

Tags : Chapter 7 | 9th Tamil இயல் 7 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 7 : Vaaliya Neelanea : Supplementary: Santhai Chapter 7 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே : துணைப்பாடம்: சந்தை - இயல் 7 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே