Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | கவிதைப்பேழை: முத்தொள்ளாயிரம்

இயல் 7 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: முத்தொள்ளாயிரம் | 9th Tamil : Chapter 7 : Vaaliya Neelanea

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே

கவிதைப்பேழை: முத்தொள்ளாயிரம்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே : கவிதைப்பேழை: முத்தொள்ளாயிரம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

நாடு – எ

கவிதைப் பேழை

முத்தொள்ளாயிரம்



நுழையும்முன்

ஒரு நாட்டின் வளத்தைப் பாடுவதைப் புலவர்கள் கவிமரபாகக் கொண்டிருந்தனர். பிற்காலக் காப்பியங்களில் நாட்டுவளம் தவறாது இடம்பெற்றது. முத்தொள்ளாயிரம் சேரன், சோழன், பாண்டியன் ஆகியோருடைய நாடுகளின் வளங்களை நயமாக வெளிப்படுத்துகிறது.




1. சேரநாடு

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ 

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ 

நச்சிலைவேல் கோக்கோதை நாடு.* 

சொல்லும் பொருளும்: 

அள்ளல் - சேறு; பழனம் - நீர் மிக்க வயல்; வெரீஇ - அஞ்சி; பார்ப்பு - குஞ்சு.

அணி - தற்குறிப்பேற்ற அணி


2. சோழநாடு

காவல் உழவர் களத்துஅகத்துப் போர் ஏறி 

நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை - காவலன்தன் 

கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே 

நல்யானைக் கோக்கிள்ளி நாடு. 

சொல்லும் பொருளும்: 'நாவலோ' - நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து; இசைத்தால் - ஆரவாரத்தோடு கூவுதல்.

அணி - உவமை அணி


3. பாண்டியநாடு

நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும் 

பந்தர் இளங்கமுகின் பாளையும்-சிந்தித் 

திகழ்முத்தம் போல்தோன்றும் செம்மற்றே தென்னன் 

நகைமுத்த வெண்குடையான் நாடு.

சொல்லும் பொருளும்: நந்து - சங்கு; 

கமுகு – பாக்கு. 

முத்தம் - முத்து

அணி – உவமை அணி


பாடலின் பொருள் 

1. சேறுபட்ட நீர்மிக்க வயல்களில் அரக்கு நிறத்தில் செவ்வாம்பல்கள் மெல்ல விரிந்தன. அதைக் கண்ட நீர்ப்பறவைகள் தண்ணீரில் தீப்பிடித்துவிட்டது என்று அஞ்சி விரைந்து தம் குஞ்சுகளைச் சிறகுகளுக்குள் ஒடுக்கி வைத்துக் கொண்டன. அடடா! பகைவர் அஞ்சும் வேலைக் கொண்ட சேரனின் நாட்டில் இந்த அச்சம் இருக்கின்றதே.

2. நெல்லை அறுவடை செய்து காக்கும் உழவர்கள் நெற்போர் மீதேறி நின்றுகொண்டு மற்ற உழவர்களை 'நாவலோ' என்று கூவி அழைப்பர். இவ்வாறு அவர்கள் செய்வது வீரர்கள் போர்க்களத்தில் கொல்யானை மீது ஏறி நின்றுகொண்டு மற்ற வீரர்களை 'நாவலோ' என்று அழைப்பது போலிருந்தது. யானைப்படைகளை உடைய சோழனது நாடு, இத்தகு வளமும் வீரமும் மிக்கது.

3. சங்குகள் மணலில் ஈனுகின்ற முட்டைகள் முத்துகள் போலிருக்கின்றன. தரையில் உதிர்ந்து கிடக்கும் புன்னை மொட்டுகள் முத்துகள் போலிருக்கின்றன. பந்தல் போட்டது போல் தோன்றும் பாக்கு மரத்தின் பாளையிலிருந்து சிந்தும் மணிகளும் முத்துகள் போலிருக்கின்றன. முத்துகளால் ஆன வெண்கொற்றக் குடையை உடைய பாண்டியனது நாடு இத்தகைய முத்து வளம் மிக்கது.

இலக்கணக் குறிப்பு 

வெண்குடை, இளங்கமுகு - பண்புத் தொகைகள் 

கொல்யானை, குவி மொட்டு - வினைத்தொகைகள்.

வெரீஇ - சொல்லிசையளபெடை

பகுபத உறுப்பிலக்கணம் 

கொண்ட - கொள்(ண்) + ட் + அ 

கொள் – பகுதி(ண் ஆனது விகாரம்) 

ட் - இறந்தகால இடைநிலை; 

அ - பெயரெச்ச விகுதி


நூல் வெளி 

வெண்பாவால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம்; மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாகப் பாடுகிறது. மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் முத்தொள்ளாயிரம் என்று பெயர்பெற்றது. நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன. அவை முத்தொள்ளாயிரம் என்னும் பெயரில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. ஆசிரியரின் பெயரை அறியமுடியவில்லை . இவர் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார். சேரநாட்டை அச்சமில்லாத நாடாகவும் சோழநாட்டை ஏர்க்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாடாகவும் பாண்டிய நாட்டை முத்துடை நாடாகவும் பாடப்பகுதி காட்டுகிறது.

Tags : Chapter 7 | 9th Tamil இயல் 7 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 7 : Vaaliya Neelanea : Poem: Muththolayiram Chapter 7 | 9th Tamil in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே : கவிதைப்பேழை: முத்தொள்ளாயிரம் - இயல் 7 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே