Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | கவிதைப்பேழை: குறுந்தொகை

பாலை பாடிய பெருங்கடுங்கோ | இயல் 9 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: குறுந்தொகை | 9th Tamil : Chapter 9 : Anpenum arane

   Posted On :  19.08.2023 09:35 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே

கவிதைப்பேழை: குறுந்தொகை

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே : கவிதைப்பேழை: குறுந்தொகை - பாலை பாடிய பெருங்கடுங்கோ | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மனிதம்கூ

கவிதைப் பேழை

குறுந்தொகை

- பாலை பாடிய பெருங்கடுங்கோ



நுழையும்முன்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று மனிதம் பேசிய சங்கக் கவிதைகள் தமிழ்ச் சமுதாயத்தின் மாண்புகளைக் காட்டும் காலக் கண்ணாடியாய்த் திகழ்வன. அவற்றுள் ஒன்றான குறுந்தொகை ஓர் அக இலக்கிய நூலாகும்; அதன் சிறப்புக் கருதியே 'நல்ல குறுந்தொகை என்று அழைக்கப்படுகிறது; குறுந்தொகைப் பாடல்கள் பலவும் இயற்கைக் காட்சிகள் மூலம் அன்பின் வளத்தைப் படம்பிடித்த காட்டுவன. தலைவனைப் பிரிந்த தலைவியின் துயரைத் துடைக்கத் தோழி ஆறுதல் கூறுவதாக அமைந்த ஒரு பாடல் மனிதத்தை உணர்த்துகிறது.


நசை பெரிது உடையர்; நல்கலும்  நல்குவர்

பிடிபசி களைஇய பெருங்கை வேழம் 

மென்சினை யாஅம் பொளிக்கும்

அன்பின தோழி அவர் சென்ற ஆறே. (37)



பேரன்பு உடையவன் பெரிதுனக்குத் தருவான் 

பொருள் தேடச் சென்றவன் பறந்தோடி வருவான் 

பசித்தீ அணைக்க மெல்லிய யாமரக் 

கிளையொடித்து உதவும் யானைக் காட்சியே 

உன்நினைவு தூவி இங்கவனை அழைத்துவரும் 

மலரினும் மெல்லியளே மனக்கவலை கொள்ளாதே

திணை: பாலை

துறை: தலைவன் விரைந்து வருவான் எனத் தோழி தலைவியை ஆற்றியது.


சொல்லும் பொருளும்

நசை-விருப்பம்; நல்கல் -வழங்குதல்; பிடி

பெண்யானை; வேழம் -ஆண்யானை; 

யா-ஒரு வகை மரம், பாலை நிலத்தில்

வளர்வது; பொளிக்கும் - உரிக்கும்; ஆறு-வழி

பாடலின் பொருள்

தோழி தலைவியிடம், "தலைவன் உன்னிடம் மிகுந்த விருப்பம் உடையவன். அவன் மீண்டும் வந்து அன்புடன் இருப்பான். பொருள் ஈட்டுதற்காகப் பிரிந்து சென்ற வழியில், பெண் யானையின் பசியைப் போக்க, பெரிய கைகளை உடைய ஆண்யானை, மெல்லிய கிளைகளை உடைய யா மரத்தின் பட்டையை உரித்து அதிலுள்ள நீரைப் பருகச்செய்து தன் அன்பை வெளிப்படுத்தும்' (அந்தக் காட்சியைத் தலைவனும் காண்பான்; அக்காட்சி உன்னை அவனுக்கு நினைவுபடுத்தும். எனவே, அவன் விரைந்து உன்னை நாடி வருவான். வருந்தாது ஆற்றியிருப்பாயாக) என்று கூறினாள்.

இப்பாடலில் இறைச்சி அமைந்துள்ளது.


இலக்கணக் குறிப்பு 

களைஇய - சொல்லிசை அளபெடை, 

பெருங்கை, மென் சினை - பண்புத் தொகைகள்,

பொளிக்கும் - செய்யும் என்னும் வினைமுற்று, பிடிபசி - ஆறாம் வேற்றுமைத் தொகை, அன்பின - பலவின்பால் அஃறிணை வினைமுற்று,


பகுபத உறுப்பிலக்கணம்

உடையர் = உடை+ ய் + அர்

உடை - பகுதி

ய் - சந்தி (உடம்படுமெய்)

அர் - பலர்பால் வினைமுற்று விகுதி

பொளிக்கும் = பொளி + க் + க் + உம்

பொளி - பகுதி

க் - சந்தி; க் --எதிர்கால இடைநிலை

உம் - வினைமுற்று விகுதி


நூல் வெளி 

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை. இது, தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுகிறது; கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களைக் கொண்டது. இதன் பாடல்கள் நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்டவை. 1915ஆம் ஆண்டு சௌரிப்பெருமாள் அரங்கனார் முதன் முதலில் இந்நூலைப் பதிப்பித்தார். நமக்குப் பாடமாக வந்துள்ளது 37ஆவது பாடல் ஆகும். இப்பாடலின் ஆசிரியர் பாலை பாடிய பெருங்கடுங்கோ '. இவர் சேர மரபைச் சேர்ந்த மன்னர்; கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியதால் பாலை பாடிய பெருங்கடுங்கோ' என அழைக்கப் பெற்றார்.

Tags : by Palai Padiya perungudungo | Chapter 9 | 9th Tamil பாலை பாடிய பெருங்கடுங்கோ | இயல் 9 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 9 : Anpenum arane : Poem: Qurunthokai by Palai Padiya perungudungo | Chapter 9 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே : கவிதைப்பேழை: குறுந்தொகை - பாலை பாடிய பெருங்கடுங்கோ | இயல் 9 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே