Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | உரைநடை: விரிவாகும் ஆளுமை

இயல் 9 | 9 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: விரிவாகும் ஆளுமை | 9th Tamil : Chapter 9 : Anpenum arane

   Posted On :  19.08.2023 09:31 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே

உரைநடை: விரிவாகும் ஆளுமை

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே : உரைநடை: விரிவாகும் ஆளுமை | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மனிதம்கூ

உரைநடை உலகம்

விரிவாகும் ஆளுமை



நுழையும்முன்

தமிழியல் ஆய்வு வளரக் காரணமாக இருந்த தமிழறிஞர் பலர். பேராசிரியர் தனிநாயகம் அவர்கள் இதழ்கள், கருத்தரங்குகள், மாநாடுகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் தமிழியலை உலகச் செயல்பாடாக ஆக்கினார். தமிழின் பரப்பையும் சிறப்பையும் உலகின் பல நாடுகளில் பரவலாக்கினார். அவரது வாழ்வு, தமிழ் வாழ்வாகவே இருந்தது. அவர் இலங்கையில் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை, மனிதனுக்குத் தேவையான ஆளுமை பற்றி விளக்குகிறது.


உலக நாடுகளையும் மக்களையும் உட்படுத்தி அன்பு பாராட்டுவது நம் இயல்பு. இது இருபதாம் நூற்றாண்டில் வானூர்திப் போக்குவரத்து வளர்ந்த பின்பு தோன்றியதோர் பண்பு என்று நாம் நினைக்க வேண்டியதில்லை. பண்டைத் தமிழ் இலக்கியங்களிலேயே தமிழ்ப்புலவர்களால் இப்பண்பு பாராட்டிப் பாடப்பட்டுள்ளது. அக்காலத்திலேயே ஒரு நாட்டவர் பிற நாட்டவரோடு உறவு பாராட்ட விரும்பியுள்ளனர். இதனைக் கீழ்க்காணும் இரு செய்யுள்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவருங் கேளிர்" என்னும் கொள்கை எல்லா நூற்றாண்டுகளுக்கும் பொருத்தமாக உள்ளது.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் 

சாந்துணையும் கல்லாத வாறு (குறள்.397) 

என்னும் திருக்குறள், முன்பு எப்போதையும்விட நம் காலத்திற்குப் பொருத்தமான அறிவுரையாக விளங்குகின்றது.


மேற்கண்ட பாடல்களில் ஆளப்பட்டுள்ள 'ஊர்', 'நாடு', 'கேளிர்' என்னும் தமிழ்ச்சொற்கள் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு பொருண்மைகளைக் கொண்டிருக்கலாம். ஆயினும், இம்மேற்கோள்கள் காட்டும் பரந்த ஆளுமையும் (personality) மனித நலக் கோட்பாடும் (humanism) இலத்தீன் புலவர் தெறென்ஸ் (Terence) கூறிய கூற்றுடன் ஒப்பிடத்தக்கவை ஆகும். "நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று" என்பதே அவரது கூற்று.

மூன்று இலக்கணங்கள்

முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை என்கிறார் கோர்டன் ஆல்போர்ட் (Gordon All port) என்னும் உளநூல் வல்லுநர். முதலாவதாக மனிதன், தன் ஈடுபாடுகளை விரிவாக வளர்ப்பவனாக இருத்தல் வேண்டும்; பிறருடைய நலத்திற்கும் இன்பத்திற்கும் பாடுபடக்கூடிய வகையில் தன் ஆளுமையை விரிவடையச் செய்து செழுமைப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, ஒருவன் பிறரால் எவ்வாறு கணிக்கப்படுகிறானோ அதை அறிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவனாக  இருத்தல் வேண்டும் (self objectification). மூன்றாவதாக அவனது வாழ்க்கைக்குத் தன் ஓர்மையைத் தரும் வாழ்க்கைத் தத்துவத்தைக் கடைப்பிடித்து நடத்தல் வேண்டும் (unifying philosophy of life-self-unification).

இலட்சியங்களைக் கடைப்பிடித்தும் கற்பித்தும் வருவதால்தான் சமுதாயம் முன்னேற்றம் அடைகிறது. அது மக்களுக்கு வேண்டிய இன்பத்தையும் சீர்திருத்தத்தையும் அளிக்கின்றது. குறிக்கோள் இல்லாத சமுதாயம் வீழ்ச்சி அடையும் என்னும் உண்மையைப் பண்டைக் காலத் தமிழரும் நன்கு உணர்ந்திருந்தனர். குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப் பிண்டம் என்பதைப் "பூட்கையில்லோன் யாக்கை போல" (புறம். 69) என்னும் அடியில் புலவர் ஆலத்தூர்கிழார் நிலைநாட்டுகிறார்.

பிறர் நலவியல்

விரிவாகும் ஆளுமையை உருவாக்கும் நோக்கம் கொண்டுள்ள மக்கள் சமுதாயமே இன்பத்தை அளிக்கும் சமுதாயமாகக் காணப்படும். எந்த அளவிற்குப் பிறர் நலத்திற்காக மனிதன் பாடுபடுகின்றானோ அந்த அளவிற்கு அவனது ஆளுமை வளரும். பிறருக்காகப் பணி செய்வதால்தான் ஒருவனுடைய வாழ்க்கை , பண்புடைய வாழ்க்கை ஆகின்றது. 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்னும் குறிக்கோள், வாழ்க்கையைத் தன்னலம் தேடுவதிலிருந்து விடுவித்து ஆளுமையை முழுமைப்படுத்தும் பண்பாக ஆக்குகின்றது.

பிறர் நலவியல் (Altruism) என்னும் பண்பு, மக்கள் வரலாற்றில் படிப்படியாகத்தான் தோன்றும். மேம்படாத சமுதாயத்தில் மனிதன் தன்னுடைய குடும்பத்தையும் தன் இனத்தையும் (tribe) காப்பாற்றவே முயல்வான். படிப்படியாக அறிவு வளர வளர எங்கு வாழ்ந்தாலும் மக்கள் அனைவரும் தன் இனத்தவர்; எல்லா உயிர்க்கும் அன்புகாட்டுதல் வேண்டும் என்னும் சிந்தனை அவனுக்குத் தோன்றும்.

வெவ்வேறு பண்பாடுகள் வெவ்வேறு காலத்தில் பிறர் நலவியலைக் கற்பித்து வந்திருக்கின்றன. சீனநாட்டில் பொ.ஆ.மு. 604ஆம் ஆண்டில் பிறந்த லாவோட்சும் (LaoTsc) அவருக்குப் பின்பு கன்பூசியசும் (Confucius பொ.ஆ.மு. 551-479) தம் காலத்திலேயே இந்தக் கொள்கையை ஒருவாறு தெளிவாகக் கற்பித்துள்ளனர். ஆனால், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்கத் தத்துவ ஞானிகள் கிரேக்கக் குடியினரை மட்டுமே தம் சிந்தனைக்கு உட்படுத்தினர்.

பண்டைக்கால தருமசாத்திர நூல்களும் பிறரைக் கவனத்தில் கொள்ளவில்லை. 'விந்திய மலைத்தொடருக்கும் இமய மலைக்கும் இடையே உள்ள நிலப்பரப்பே கருமபூமி; வீடுபேறு அடைவதற்கு அப்பூமியிலே பிறந்திருக்க வேண்டும்' என்பதே அவற்றின் கருத்தாக இருந்தது.

தமிழ் மக்களிடமோ, ஸ்டாயிக்வாதிகள் கூறியது போல 'மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள்; பிறப்போ , சாதியோ , சமயமோ அவர்களைத் தாழ்த்தவோ உயர்த்தவோ முடியாது' என்னும் நம்பிக்கை பண்டுதொட்டே நிலவியுள்ளது. இந்திய வரலாற்றில் பண்டைக் காலத்திலேயே இத்தகைய அரிய கொள்கையைத் தமிழ் மக்கள் கடைப் பிடித்திருந்தனர் என்னும் உண்மை பெரும் வியப்பைத் தருகின்றது. ஒழுக்கவியலை (Ethics) நன்கறிந்து எழுதிய உலகமேதை ஆல்பர்ட் சுவைட்சர், திருக்குறளைப் பற்றிக் கூறும்போது "இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது" என்பார். ஆனால், இத்தகைய கொள்கைகள் திருவள்ளுவர் காலத்திற்கும் முன்பே தமிழ் மக்களால் போற்றப்பட்டுள்ளன.

ஒற்றுமை உணர்ச்சி

தமிழ் இலக்கியத்தை ஆராயும்போது, பிறர் நலக்கொள்கையையும் பிறர் மீதான அன்பு பாராட்டலையும் முதன் முதலில் பரப்புவதற்குக் காரணமாய் இருந்தவர்கள் தமிழ்நாட்டுப் பாணரும் புலவருமே ஆவர் என்பதை அறிய முடிகிறது. பாணர்க்கும் புலவர்க்கும் சொந்த ஊரும் நாடும் உண்டு. ஆயினும், அவர்கள் தமிழ் வழங்கும் இடமெங்கும் சென்று அரசர்களையும் வள்ளல்களையும் மக்களையும் வாழ்த்தி வந்ததால் 'தமிழகம்' என்ற ஒற்றுமை உணர்வு உண்டானது. அம்மொழி பரவிய நிலம் அனைத்தையும் "தமிழகம்" என்றும் "தமிழ்நாடு" என்றும் வாழ்த்தினர்.

பிறநாடுகளைக் குறிப்பிடும் போது வேற்று நாடு, பிறநாடு என்று குறிக்காது மொழிமாறும் நாடு - மொழிபெயர் தேயம் - என்றே வரையறுத்துக் கூறியுள்ளனர்.

இலக்கணத்தில் பரந்த மனப்பான்மை

அகத்திணை இலக்கியம் பல்வேறு வழிகளில் பரந்த மனப்பான்மையையும் விரிவான ஆளுமையையும் வளர்த்தது. ஐவகை நிலங்களின் பெரும்பொழுது, சிறுபொழுது, கருப்பொருள் ஆகியவற்றைப் புலவரும் பாணரும் இலக்கியம் பயில்வோரும் தவறாது கற்றுவந்தனர். தொல்காப்பியர் நிலத்தைப் பிரித்தமுறை உலகின் பிரிவாகவே அமைந்தது.

படுதிரை வையம் பாத்திய பண்பே -

(தொல். 948) 

களவொழுக்கத்திலும் கற்பொழுக் கத்திலும் பிற உயிரொன்றைக் காதலிப்பதாலும் குழந்தைகளைப் பேணுவதாலும் இருவருடைய ஆளுமையும் இன்னும் விரிவடைய வாய்ப்பிருந்தது. புலவர்கள் தம் செய்யுள்களில் தலைவன், தலைவி, தோழி, செவிலித்தாய் ஆகியோரைக் கற்பனை செய்து பாடுவதால் பிறர் பற்றி அறியும் பண்பை அவர்கள் எளிதாகப் பெற்றிருக்க வேண்டும்.

நன்மை நன்மைக்காகவே

அன்பு வாழ்க்கையிலும் பிறருடன் கலந்து வாழும் முறைகளிலும் பிறர்நலம் பேணுவதிலும் தமிழ்ப் பண்பாட்டின் இன்றியமையாத கொள்கை உருப்பெறுகிறது. கடையெழு வள்ளல்களுள் ஒருவரான ஆய் என்பவரைப் போற்றுவதற்குக் காரணம் அவர், நன்மையை நன்மைக்காகவே செய்ததுதான். பிறர் போற்றுவார்கள் என்றோ வேறு நலன்களைப் பெறலாம் என்றோ அவர் நன்மைகளைச் செய்யவில்லை.

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும் 

அறவிலை வணிகன் ஆய் அலன்

- புறம். 134 ( அடி 1-2)

பிறர்க்காக வாழும் மக்கள் இவ்வுலகில் இல்லையென்றால், நாம் வாழ்வது அரிது. பிறர்க்காக வாழ்வதே உயர்ந்த பண்பும் பண்பாடும் ஆகும். "உண்டாலம்ம இவ்வுலகம்" என்ற புறப்பாட்டு இந்தப் பண்பை அழகாக  எடுத்துக் காட்டுகின்றது.


பண்புடைமை என்னும் அதிகாரத்திற்கு உரை கண்ட பரிப்பெருமாள் பின்வருமாறு கூறியுள்ளார்: "பண்புடைமையாவது யாவர்மாட்டும் அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர் வருத்தத்திற்குப் பரிதலும் பகுத்து உண்டலும் பழிநாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை".

இமயவரம்பு

இதுவரை வடவேங்கடம் தென்குமரிக்கு இடைப்பட்ட நிலப்பரப்பில் விரிவான ஆளுமையின் வளர்ச்சியைக் கண்டோம். ஆனால், தமிழ் ஈடுபாடு, தமிழகத்தோடு நிற்கவில்லை .

வட இந்தியாவுடன் தொடர்புகள் வளர வளரக் கங்கையும் இமயமும் அடிக்கடி தொகைநூல்களில் எடுத்தாளப்பட்டன. இமயமலை, நீடிக்கும் உறுதிக்கு மேற்கோளாகக் காட்டப்படுகின்றது.

இமயத்துக் 

கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத் 

தீது இல் யாக்கையொடு மாய்தல் 

தவத்தலையே

(புறம். 214, 11-13) 

புலவர்கள் குமரி ஆறு, காவிரி ஆறு போன்ற மணல் நிறைந்த இடங்களை நீண்ட வாழ்க்கைக்கு உவமையாகக் கூறுகிறார்கள். அத்துடன் கங்கையையும் இமயத்தில் பெய்யும் மழையையும் உவமையாகச் சேர்த்துக் கொள்கிறார்கள்.

"இமயத் தீண்டி இன்குரல் பயிற்றிக் 

கொண்டல் மாமழை பொழிந்த

நுண்பல் துளியினும் வாழிய பலவே".

புறம் 34 (அடி 21-23) 

சில புலவர்கள் இமயத்தையும் கங்கையையும் தமிழ்நாட்டு மலைகளுடனும் ஆறுகளுடனும் சேர்த்தே பாடுகின்றனர்.

ஒவ்வொருவரும் சான்றோர் ஆகலாம்

திருக்குறளில் பூட்கைமகன் அல்லது குறிக்கோள் மாந்தனின் இயல்புகள் பல கூறப்பட்டிருக்கின்றன. ஒன்று பிறர்பால் அன்புடைமை ஆகும். இல்லற வாழ்க்கையின் நோக்கம் ஈகை, விருந்தோம்பல் போன்ற பண்புகளால் ஆளுமையை வளர்த்தல் ஆகும்.

தமிழ் மக்கள் "சான்றோன்" எனப்படும் குறிக்கோள் மாந்தனைப் பாராட்டிய காலத்தில் இத்தாலிய நாட்டில் உரோமையர் "sapens" (அறிவுடையோன்) எனப்படும் இலட்சிய புருஷனைப் போற்றி வந்தனர். உரோமையருடைய "சாப்பியன்ஸ்" அல்லது சான்றோன் என்பவன் சமுதாயத்திலிருந்து விலகி, தன் சொந்தப் பண்புகளையே வளர்ப்பனாக இருந்தான். உரோமையருடைய சான்றோர் அரிதாகவே சமுதாயத்தில் தோன்றுவர்.

ஸ்டாயிக்வாதிகளின்படி அவர்களுடைய இலட்சிய மனிதர்கள் ஒரு சிலரே. அச்சிலர் தனிமையாகத் தம் இல்லங்களில் வாழ்ந்து வருவர். திருக்குறளின் சான்றோரோ பலர். பெருமை, சான்றாண்மை, பண்புடைமை, நட்பு முதலான அதிகாரங்களில் இச்சான்றோனுடைய இயல்புகள் எல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் சான்றோன் ஆதல் கூடும். அவனை அவ்வாறு ஆக்குவதே கல்வியின் நோக்கம். ஒவ்வொரு தாயும் தன் மகன் சான்றோன் ஆக வேண்டும் என்றே எதிர்பார்ப்பாள். தன் பிள்ளையைச் சான்றோன் ஆக்குதல் ஒவ்வொரு தந்தைக்கும் கடனாகும்.

தமிழ்ச் சான்றோன் சமுதாயத்திலேயே வாழ்ந்து தன்னால் இயன்ற வரை சமுதாயத்திற்குப் பல நன்மைகளைச் செய்வான். பிசிராந்தையார், கோப்பெருஞ் சோழனுக்குக் கூறியது போலத் தமிழ்ச் சான்றோர் பலர் வாழும் ஊரே வாழ்க்கைக்கு இன்பத்தைத் தருவதாகும் (புறம் 191).

ஒன்றே உலகம்

உரோம நாட்டுச் சிந்தனையாளர்களும் ஏறத்தாழத் தமிழ்ப் புலவர்களைப் போல அதே காலத்தில் ஒன்றே உலகம் என்ற கொள்கையைப் பாராட்டி வந்தனர்.

ஸ்டாயிக்வாதிகள் உலகில் ஒற்றுமை உண்டு என்றும், மக்கள் அனைவரும் ஒரே குலத்தவர் என்றும், எல்லா உயிர்களும் தொடர்பால் இணைக்கப்பட்டுள்ளன என்றும் கற்பித்தனர். ஒன்றே உலகம் என்ற மனப்பான்மையும் கொள்கையும் முதன் முதல் மேலை நாட்டில் ஸ்டாயிக்வாதிகளால் போற்றப்பட்டது.

செனக்கா என்னும் தத்துவ ஞானி கூறியதாவது: "எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய் நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும்".

மார்க்ஸ் அரேலியஸ் என்னும் பேரரசர் கூறியதாவது: "நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன்; நான் அன்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன்; நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன்" இவ்வாறு உலக மாந்தரின் ஒற்றுமைத்தன்மை மிகவும் அழகாகக் கூறப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் மக்கட்தன்மையை வளர்க்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் திருக்குறள். ஜி.யு. போப் திருவள்ளுவரை "உலகப் புலவர்" என்று போற்றுவது மிகவும் பொருத்தமானதாகும்.

மக்கள் அனைவரையும் ஒரே குலத்தவர் என்று கருதுவதோடு உயிர்கள் அனைத்தையும் மக்களோடு சேர்த்து ஒரே குலத்தவை என்று கருதும் பண்பும் திருக்குறளுக்கும் ஸ்டாயிக் வாதிகளுக்கும் பொதுவான ஒரு தன்மை.

உரோம நாட்டவர் எழுதும்போது "நாம்", "நம்மவர்" என்ற செருக்கோடு உரோமரைக் கருதியே எழுதுகின்றனர். வள்ளுவரோ எல்லா உலகிற்கும் எல்லா மாந்தர்க்கும் பயன்படும் வகையில் உலகமெல்லாம் தழுவுவதற்குரிய பான்மையில் தம் நூலை யாத்துள்ளார்.

விரிவாகும் ஆளுமை

இறுதியில், அன்பர்களே, திருவள்ளுவரின் கூற்றுடன் இவ்விரிவுரையை முடிக்க விரும்புகின்றேன். விரிவாகும் ஆளுமையைப் பற்றி ஒரு சில உண்மைகளைக் கண்டோம். திருவள்ளுவரோ இரண்டு அறவுரைகளில் இந்தக் குறிக்கோளை எவ்வாறு அடையலாம் என்று காட்டியுள்ளார். "உள்ளற்க உள்ளம் சிறுகுவ" (798) என்றும் "உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்" (596) என்றும் கற்பித்துள்ளார்.


நூல் வெளி 

தமிழுக்குத் தொண்டாற்றிய கிறித்துவப் பெரியார்களுள் தனிநாயகம் அடிகள் குறிப்பிடத்தக்கவர். அடிகளாரின் சொற்பொழிவுகள் தமிழர் புகழைப் பரப்பும் குறிக்கோளைக் கொண்டவை. இலங்கையில் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய பஸ்கர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு, பாடமாக இடம்பெற்றுள்ளது. தம் சொற்பொழிவு வாயிலாக உலகம் முழுவதும் தமிழின் புகழைப் பரப்பினார். அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாகவும் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாகவும் இவர் காரணமாக இருந்தார் இவர் தொடங்கிய தமிழ்ப் பண்பாடு என்ற இதழ் இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது.

Tags : Chapter 9 | 9th Tamil இயல் 9 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 9 : Anpenum arane : Prose: Virivakum aalumai Chapter 9 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே : உரைநடை: விரிவாகும் ஆளுமை - இயல் 9 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பென்னும் அறனே