Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | உரைநடை: ஏறு தழுவுதல்

இயல் 3 | 9 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: ஏறு தழுவுதல் | 9th Tamil : Chapter 3 : Ullathin sher

   Posted On :  19.08.2023 04:36 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர்

உரைநடை: ஏறு தழுவுதல்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர் : உரைநடை: ஏறு தழுவுதல் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

பண்பாடு -

உரைநடை உலகம்

ஏறு தழுவுதல்



நுழையும்முன்

வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செழிப்பிற்கும் செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப்படுத்தப்படுபவை மாடுகள். முல்லை, மருத நிலங்களில் கால் கொண்டு தமிழர்தம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து பண்பாடாகியுள்ளது ஏறுதழுவுதல். ஏறுதழுவுதல், தமிழரின் நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு; இளைஞர்களின் வீரத்தைப் பெருமிதப்படுத்தும் பண்பாட்டு நிகழ்வு. இது, நூற்றாண்டுகள் பல கடந்தும் தமிழர்தம் அடையாளமாகவே நிறுவப்பட்டிருக்கிறது.



பண்பாட்டுத் தொன்மையும் இலக்கிய வளமையும் வாய்ந்தது தமிழர் வரலாறு. இயற்கையைச் சார்ந்தும் பிற உயிர்களோடு இணைந்தும் வாழ்ந்தனர் சங்ககாலத் தமிழர்கள். இதற்குச் சங்க இலக்கியங்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றுள் ஒன்று ஏறு தழுவுதல் நிகழ்வாகும்.

இலக்கியங்களில் ஏறு தழுவுதல்

சங்க இலக்கியமான கலித்தொகையில், ஏறு தழுவுதல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைநில ஆயர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வு, அவர்களின் வீரத்தினை மெய்ப்பிக்கக்கூடிய ஒன்றாகத் திகழ்கிறது.

எழுந்தது துகள், 

ஏற்றனர் மார்பு 

கவிழ்ந்தன மருப்பு, 

கலங்கினர் பலர்

(கலி - 102: அடி 21-24) 

என்று முல்லைக்கலியில் ஏறு தழுவுதல் களம் குறித்த அடிகள், காட்சியை நம் கண்முன்னே நிறுத்துகின்றன. காளைகளின் பாய்ச்சல் பற்றியும் கலித்தொகை கூறுகிறது.

திமில் பெருத்த காளைகள் பல, காலாலே தரையைக் கிளறி, புழுதியை எழுப்பின.

சில நிலத்தை நொறுக்கின; சில தம்முள் முரண்பட்டு ஒன்றோடொன்று எதிர்த்துக் கொண்டன; சில மண்டியிட்டுப் பாய்ந்தன. இந்தக் காளைகள் மிடுக்குடனும் வீரத்துடனும் போருக்குச் செல்லும் மருத நிலத்துப் போர் வீரர்களை நிகர்த்தனவாக இருந்தன. இதனை, 

நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை. 

மாறுஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்  

துளங்கு இமில் நல்ஏற்றினம் பல களம்புகும் 

மள்ளர் வனப்பு ஒத்தன

(கலி- ice 24 7-10) 

என்று கலித்தொகை விவரிக்கிறது.

கலித்தொகை தவிர, சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களிலும் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.

ஏறு தழுவுதல் பற்றிப் பிற்காலச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பள்ளு இலக்கியத்திலும் குறிப்புகள் உள்ளன. எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைக் கண்ணுடையம்மன் பள்ளு பதிவு செய்துள்ளது. 

தொல்சான்றுகள்

ஏறு தழுவுதல் குறித்த  பல நடுகற்கள், புடைப்புச் சிற்பங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுன்னன. சேலம் மாவட்டத்தில் எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட எருது பொருதார் கல் ஒன்று உள்ளது. கோவுரிச் சங்கன் கருவந்துறையிலே எருது விளையாடிப் பட்டான் சங்கன் மகன் பெரிய பயலு நட்டகல்லு என்பது அந்நடுகல் பொறிப்பு. கருவந்துறை என்னும் ஊரில் எருதோடு போராடி இறந்துபட்டவனாகிய சங்கன் என்பவனுக்கு அவனுடைய மகன் பெரிய பயல் எடுத்த நடுகல் என்பது இதன் பொருள்.


தெரிந்து தெளிவோம்

எகிப்தில் உள்ள பெனி - ஹாசன் சித்திரங்களிலும், கிரீட் தீவிலுள்ள கினோஸஸ் என்னுமிடத்தில் உள்ள அரண்மனைச் சித்திரங்களிலும் காளைப்போர் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.

கூரிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவதுபோன்ற பண்டைய ஓவியம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கரிக்கையூரில் காணப்படுகிறது. திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூத்து மேட்டுப்பட்டியில் கண்டறியப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் மயிலாடும் பாறை அருகே சித்திரக்கல் புடவு என்ற இடத்தில் திமிலுடன் கூடிய காளை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது.

சிந்துவெளி நாகரிக வரலாற்றிலும் காளை முக்கியப் பங்கு வகிக்கின்றது. இம்மக்கள் காளையைத் தெய்வமாக வழிபட்டதை அகழாய்வில் கிடைக்கப்பெற்ற சான்றுகள் வாயிலாக அறிகிறோம். சிந்துவெளி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மாடு தழுவும் கல் முத்திரை ஒன்று தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளமான ஏறு தழுவுதலைக் குறிப்பதாக ஐராவதம் மகாதேவன் தெரிவித்துள்ளார்.


பண்பாட்டு அடையாளம்

ஏறு தழுவுதல், முல்லை நிலத்து மக்களின் அடையாளத்தோடும் மருத நிலத்து வேளாண் குடிகளின் தொழில் உற்பத்தியோடும் பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது. இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது.

ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய காளை மாடுகள் ஏர் மாடுகள், எருதுகள், ஏறுகள் என்று அழைக்கப்பட்டன. தமிழக உழவர்கள் தங்களின் உழவு சார்ந்த கருவிகளோடு அறுவடைக்குப் பெரிதும் துணைநின்ற மாடுகளைப் போற்றி மகிழ்விக்க ஏற்படுத்திய விழாவே மாட்டுப் பொங்கல். அவ்விழாவன்று

மாடுகளைக் குளிப்பாட்டிப் பல வண்ணங்களில் பொட்டிட்டு, மூக்கணாங் கயிறு, கழுத்துக் கயிறு, பிடி கயிறு அனைத்தையும் புதிதாக அணிவிப்பர். கொம்புகளைப் பிசிறு சீவி, எண்ணெய் தடவி, கழுத்து மணியாரம் கட்டி, வெள்ளை வேட்டியோ, துண்டோ கழுத்தில் கட்டுவர். பின்னர், பூமாலை அணிவித்துப் பொங்கலிட்டுத் தம்மோடு உழைப்பில் ஈடுபட்ட மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் தளிகைப் பொங்கலை ஊட்டிவிடுவர்.

இதன் தொடர்ச்சியாக, வேளாண் குடிகளின் வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்துகிடந்த மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும் மரபாக உருக்கொண்டதே ஏறு தழுவுதலாகும்.

ஏறு தழுவுதல், தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. அது மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சுவிரட்டு, வேலி மஞ்சுவிரட்டு, எருது கட்டி, காளை விரட்டு, ஏறு விடுதல், சல்லிக்கட்டு எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது.

சல்லிக்கட்டு பேச்சுவழக்கில் திரிபுற்று, ஜல்லிக்கட்டு என அழைக்கப்படுகிறது. சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற வளையத்தினைக் குறிக்கும். புளியங்கொம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணிவிக்கும் வழக்கம் தற்போதும் உள்ளது. அக்காலத்தில் புழங்கிக் கொண்டிருந்த சல்லி நாணயங்களை, துணியில் முடிந்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கமும் இருந்தது. மாட்டைத் தழுவும் வீரருக்கு அந்தப் பணமுடிப்புச் சொந்தமாகும்.

ஏறு தழுவுதலும் தமிழர் அறமும்

மேலைநாடுகளில் குறிப்பாக, தேசிய விளையாட்டாகக் காளைச் சண்டையைக் கொண்டிருக்கும் ஸ்பெயின் நாட்டில், காளையைக் கொன்று அடக்குபவனே வீரனாகக் கருதப்படுவான். அவ்விளையாட்டில், ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.


சில நாட்டு விளையாட்டுகளில் காளையை அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும் ஆட்டத்தின் முடிவில் அந்தக் காளை கொல்லப்படுதலும் உண்டு. மேலைநாடுகளில் ஆண்டு முழுவதும் நடத்தப்படும் காளை விளையாட்டு, மனிதனுள் ஒளிந்திருக்கும் வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவது போல் இருக்கிறது.

தமிழகத்தில் நடை பெறும் ஏறு தழுவுதலில் காளையை அடக்குபவர்கள் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக் கூடாது. நிகழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் காளைகளுக்கு வழிபாடு செய்வர். எவராலும் அடக்க முடியாத காளைகளும் உண்டு. எனவே, காளைகளும் வெற்றி பெற்றதாகக் கருதப்படும். அன்பையும் வீரத்தையும் ஒருசேர வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில் காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.

நம் கடமை

தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்கும் ஏறு தழுவுதல் இரண்டாயிரம் ஆண்டுகாலத் தொன்மையுடையது.

பண்டைய வீரவுணர்வை நினைவூட்டும் ஏறுதழுவுதல் விலங்குகளை முன்னிலைப்படுத்தும் வழிபாட்டையும் இயற்கை வேளாண்மையையும் வலியுறுத்தும் பண்பாட்டுக் குறியீடு ஆகும். நம் முன்னோரின் இத்தகைய பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.


Tags : Chapter 3 | 9th Tamil இயல் 3 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 3 : Ullathin sher : Prose: Aeru thaluvuthal Chapter 3 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர் : உரைநடை: ஏறு தழுவுதல் - இயல் 3 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர்