Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | துணைப்பாடம்: அகழாய்வுகள் (பட்டிமன்றம்)

இயல் 3 | 9 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: அகழாய்வுகள் (பட்டிமன்றம்) | 9th Tamil : Chapter 3 : Ullathin sher

   Posted On :  19.08.2023 04:41 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர்

துணைப்பாடம்: அகழாய்வுகள் (பட்டிமன்றம்)

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர் : துணைப்பாடம்: அகழாய்வுகள் (பட்டிமன்றம்) | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

பண்பாடு – ங

விரிவானம்

அகழாய்வுகள் 

(பட்டிமன்றம்)



நுழையும்முன் 

மனிதன் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் பண்பாட்டு அளவில் சிறந்த வாழ்வை வெளிப்படுத்திய தமிழர்களின் வரலாற்றை அறிந்துகொள்ளத் தமிழகத்தின் தொன்மையான நுழையும்முன்

பகுதிகளை அகழாய்வு செய்தல் இன்றியமையாதது. அகழாய்வு செய்தல் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பகுதியில் தோண்டிச் செதுக்கி ஆராய்தல் ஆகும். அகழாய்வு வரலாறு முழுமை பெற உதவுகிறது. அகழாய்வில் கிடைத்த பொருள்கள் நாம் வாழ்ந்த காலத்தை மட்டுமன்றி, நமது வரலாற்றையும் உணர்த்துகின்றன.


பட்டிமன்ற அழைப்பிதழ்


பள்ளி இலக்கிய மன்றத் தொடக்கவிழாவில் மாணவர்களே பங்கேற்று நடத்தும் சிந்தனைப் பட்டிமன்றம் 

நடுவர் : மாணவர் பூங்குன்றன்

முன்னிலை : தமிழாசிரியர் கலைவாணன்

இன்றைய சூழ்நிலையில் அகழாய்வு என்பது

தேவையான செயல்பாடே!    

மாணவர் பாத்திமா

மாணவர் செல்வன்

தேவையற்ற செலவினமே!

மாணவர் முத்து

மாணவர் அன்புமேரி

அனைவரும் வருக!


அறிமுகவுரை (இலக்கிய மன்றச் செயலர்)

அன்பிற்குரிய நல்லுள்ளங்களே! வணக்கம். இன்று நம் பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்கவிழா இனிதே தொடங்குகிறது. அதனை முன்னிட்டு நடைபெறவுள்ள பட்டிமன்றத் தலைப்பினை அறிய ஆவலாக இருக்கிறதா? இதோ சொல்கிறேன். இன்றைய சூழ்நிலையில் அகழாய்வு என்பது தேவையான செயல்பாடா? தேவையற்ற செலவினமா? (மாணவர்கள் கரவொலி எழுப்புதல்)

அண்மையில் நடை பெற்ற மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் முதல் பரிசுபெற்ற நம் வகுப்புத்தோழர் பூங்குன்றன் நடுவராகப் பொறுப்பேற்கிறார். வாதிடுவோராக நம்முடன் பயிலும் முத்து, பாத்திமா, அன்புமேரி, செல்வன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதோ பட்டிமன்றம் தொடங்குகிறது.


நடுவர்

அருந்தமிழ் வணக்கம்.

திட்பமும் நுட்பமும்

மதுரை நகருக்கு அருகே உள்ள கீழடி என்னுமிடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் சுடுமண் பொருள்கள், உலோகப் பொருள்கள், முத்துகள், கிளிஞ்சல் பொருள்கள், மான்கொம்புகள், சோழிகள், கிண்ணங்கள், துளையிடப்பட்ட பாத்திரங்கள், இரத்தினக்கல் வகைகள், பழுப்பு, கறுப்பு, சிவப்பு-கறுப்புப் பானைகள், சதுரங்கக் காய்கள், தானியங்களைச் சேகரிக்கும் கலன்கள், செம்பு, சங்கு வளையல்கள், எலும்பினால் ஆன கூர் முனைகள், தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கற்கருவிகள், நீர் சேகரிக்கும் பெரிய மட்கலன்கள், சிறிய குடுவைகள், உறைக்கிணறுகள், சுடுமண் கூரை ஓடுகள் போன்ற பல்வேறு தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளன. மூன்று வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த இவற்றுள் தொன்மையானவை சுமார் 2300ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கருதப்படுகின்றன. இதுவரை அகழாய்வு செய்யப்பட்ட பெரும்பான்மையான இடங்கள், இறப்புத் தொடர்பான தடயங்களை வெளிப்படுத்துவனவாக அமைந்திருந்தன. ஆனால், கீழடியில் கண்டறியப்பட்டுள்ள முழுமையான வாழ்விடப்பகுதியும் செங்கல் கட்டுமானங்களும் இதரப்பொருள்களும் தமிழரின் உயரிய நாகரிகத்தைக் கண்முன் காட்டும் சாட்சிகளாய் அமைந்துள்ளன.


மதிப்பிற்குரிய தமிழாசிரியர் அவர்களே! அன்பிற்குரிய ஆசிரியப் பெருமக்களே! அருமை மாணவ நண்பர்களே! அனைவருக்கும் அன்பான வணக்கம்.

வரலாற்றை அறிவதற்கு வழிகாட்டும் ஒரு தலைப்பெடுத்துப் பேச முனைகின்றோம். ஒரு செடி வளர்வதற்கு, விதையை ஊன்றுவதற்குக்கூடக் குழி தோண்டுகிறோம். தோண்டிய குழிக்குள் ஒரு பழம்பொருள் கிடைத்தால்கூடக் கொண்டாடுகிறோம். அதில் பயன் இருக்கிறதா என்பதைச் சிந்திப்பதற்கே இந்த மாபெரும் சிந்தனைப் பட்டிமன்றம்.

ஆய்வு என்பது அறிவின் வெளிப்பாடு. அதற்கு ஓய்வு என்பதே கிடையாது. இதோ! இன்றைய சூழ்நிலையில் அகழாய்வு என்பது தேவையற்ற செலவினமே! என்னும் தலைப்பில் உரைவீச்சைத் தொடங்க வருமாறு அன்புத் தோழர் முத்து அவர்களை அழைத்து என் முன்னுரையை நிறைவு செய்கிறேன். நன்றி, வணக்கம். ( மாணவர் கரவொலி)


முத்து

உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம். நடுவர் அவர்களே! உள்ளங்கையில் உலகத்தை அளந்து பார்க்கும் காலகட்டத்தில் மண்ணைத் தோண்டி எலும்புகளைத் தேடும் மனிதர்களைப் பற்றி நான் என்ன சொல்ல?

அறிவியல் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பழைய தலைமுறையைப் பற்றித் தெரிந்து என்ன செய்யப் போகிறோம்? செல்லிடப் பேசிக்குள்ளே, உலகத்தைச் சுற்றும் வேளையில் அகழாய்வில் கிடைக்கும் செல்லாக் காசுகளை வைத்து என்ன செய்வதாம்?

வானுலகத்தில் பறந்து செவ்வாயில் குடியேற வழிதேடும் நேரத்தில் பழைய வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் பற்றி அறிந்து என்ன பயன்? உள்ளங்கையில் உலகம் இருக்கிறது. மடிக்கணினி மலைக்க வைக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு மண் ஓடுகள், இறந்தோரைச் சுமந்த மண்தாழிகள் இவற்றைக் கண்டறிந்து எதைச் சாதிக்கப் போகிறோம்?

நாம் கண்டு பிடிக்க வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. அறிவை விரிவுசெய் எனப் பாவேந்தர் கூறினார். நாம் அறிவை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். எனவே, நடுவர் அவர்களே! அகழாய்வு என்பது தேவையற்ற செலவினமே, தேவையற்ற செலவினமே என்றுகூறி என் வாதத்தை நிறைவு செய்கிறேன். நன்றி, வணக்கம்.

நடுவர்

நண்பர் முத்து, காரசாரமான தன் வாதத்தை முன்வைத்தார். மிகவும் அருமை. இதற்குப் பாத்திமா, எப்படித்தான் பதில் சொல்லப் போகிறார் என்பது தெரியவில்லை. வாங்கம்மா! வாங்க எப்படிச் சமாளிக்கப் போறீங்க!


பாத்திமா

அவையோரை வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன்.

மண்ணைத் தோண்டிப் பார்ப்பது எலும்புகளைச் சேகரித்து எண்ணிப் பார்ப்பதற்கன்று. நம் முன்னோர்களின் பண்பாட்டை எண்ணிப் பார்ப்பதற்கு. கடந்த காலத்தைப் புரிந்துகொள்ளாமல் நிகழ்காலத்தில் வெற்றிபெற முடியுமா? எதிர்காலத்தைத்தான் கணிக்க இயலுமா?

நமது வரலாறு மிக நீண்டது. 150 ஆண்டுகளுக்கு முன்னால் 1863 ஆம் ஆண்டு இராபர்ட் புரூஸ்புட் என்னும் தொல்லியல் அறிஞர் சென்னைப் பல்லாவரம் செம்மண் மேட்டுப்பகுதியில் எலும்பையும் கற்கருவியையும் கண்டுபிடித்தார். இந்தக் கற்கருவிதான் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம். இந்தக் கல்லாயுதம் கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்பே, ரோமானியர்களின் பழங்காசுகளைக் கோவையில் கண்டெடுத்தோம்.

அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன. அதனால், ரோமானியர்களுக்கும் நமக்கும் இருந்த வணிகத் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது.

அதற்குப் பின்னால், 1914ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. நண்பர் சொன்னார்! உள்ளங்கையில் உலகம் இருக்கிறதாம். மடிக்கணினி மலைக்க வைக்கிறதாம். நம் முன்னோர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அறிவியல் அடிப்படையிலான பண்பாட்டு வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். தமிழர்களின் உணவு, உடை, வாழிடம் முதலியன இயற்கையைச் சிதைக்காத இயல்புகளைக் கொண்டவை என்பதற்கு அகழாய்வில் கண்ட சான்றுகளே ஆவணங்களாகத் திகழ்கின்றன.

தெரிந்து தெளிவோம்

பட்டிமண்டபம்

பட்டிமண்டபம் என்பதுதான் இலக்கிய வழக்கு. ஆனால் இன்று நடைமுறையில் பலரும் பட்டிமன்றம் என்றே குறிப்பிடுகிறார்கள். பேச்சுவழக்கையும் ஏற்றுக்கொள்கிறோம்.

மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன், பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம் என்று சிலப்பதிகாரத்திலும் (காதை 5, அடி 102)

பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின் என்று மணிமேகலையிலும் (காதை 1, அடி 16) 

பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே என்று திருவாசகத்திலும் (சதகம் 41) 

பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம் என்று கம்பராமாயணத்திலும் (பாலகாண்டம், நகரப் படலம் 154) பட்டிமண்டபம் என்ற சொல் பயின்று வருகிறது.

எதிரணித் தலைவருக்கு ஒன்றைச் சொல்லி விடைபெறுகிறேன். மடிக்கணினியில் பூக்கின்ற ரோஜா மணக்காது; செல்லிடப் பேசியில் பார்க்கும் வற்றல் குழம்பு சுவைக்காது; மாறாக நமது மூளையைக் குப்பைத்தொட்டியாக்கும்; நமது மண்ணை நெகிழிக் கிடங்காக மாற்றும். ஆனால், அகழாய்வில் கிடைத்த ஆவணங்களோ அடுத்த தலைமுறைக்கு நம் பண்பாட்டின் மேன்மையைப் பறைசாற்றும். எனவே, நடுவர் அவர்களே! அகழாய்வு என்பது நமக்கு மிகமிகத் தேவையான செயல்பாடே! என்று கூறி நல்ல தீர்ப்பு வேண்டி விடைபெறுகின்றேன்.

நடுவர்

அடேயப்பா! பாத்திமாவின் வார்த்தைகளுக்குள் மின்னிய வரலாறு புதிய வெளிச்சத்தைக் காட்டியது. என்ன அன்புமேரி! என்ன செய்யப் போறீங்க? பேசத்தான் போறீங்களா? இல்லை பட்டி மன்றத்தை இப்படியே முடிச்சிட்டுத் தீர்ப்பைச் சொல்லிவிடட்டுமா?


அன்புமேரி

பாரதியை வணங்கித் தொடங்குகின்றேன்.

ஐயா, நடுவர் அவர்களே! எங்க ஊர்ல ஒரு சொலவடை சொல்லுவாங்க. பகுமானக் கோழி பறந்துக்கிட்டே முட்டை போட்டுச்சாம்.

நடுவர்

என்ன! பகுமானக் கோழி பறந்துக்கிட்டே முட்டை போட்டுச்சா? சரி, தலைப்புக்கு வாங்கம்மா

அன்புமேரி

இல்லைங்கய்யா, வெட்டிப் பெருமைக்காகவே வீறாப்பா பேசுபவர்களைப் பற்றிச் சொல்ல வந்தேன். நாம் எப்படிப்பட்ட காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? உலகத்தில் குட்டி நாடுகள் கூட அறிவியல் விந்தைகளால் வானத்தை அளந்து பார்க்கின்றன. அமெரிக்காவில் இருக்கும் என் தோழியின் நட்பை இணையத்தளம் இணைத்துக் காட்டுகிறது. விபத்தில் துண்டிக்கப்பட்ட கால்களுக்கு அறிவியல், செயற்கைக் கால் பொருத்தி அழகு பார்க்கிறது. பழுதுபட்ட இதயத்திற்கு மாற்று இதயம் பொருத்தி மருத்துவ அறிவியல் மனிதனை வாழவைக்கிறது.

புற்றுநோய் என்னும் அரக்கனை வீழ்த்த, புதிய மருந்து கண்டுபிடிக்க அறிவியலாளர்கள் பெருமுயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இன்னும் எவ்வளவோ சாதனைகள் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த உலகப்போக்கிற்கு ஈடுகொடுத்து நாமும் நமது அறிவியல் பயணத்தை முன்னெடுக்காமல் அகழாய்வுக்குள் விழுந்து கிடப்பது என்ன நியாயம்? நானொன்றும் அகழாய்விற்கு எதிரானவள் இல்லை.

இன்றைய மாறிவரும் உலகச் சூழலில் அகழாய்வு என்ன, முக்கியத் தேவைகளுள் ஒன்றா? இருபத்தோராம் நூற்றாண்டு அறிவியலால் வியக்க வைக்கின்ற காலத்தில், இந்தப் பழைய காலத்துப் பொருள்களையும் கட்டடங்களையும் கண்டு பிடித்து என்ன சாதிக்கப் போகின்றோம்?

நடுவர் அவர்களே! பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று நமது இலக்கணப் புலவர் ஒருவர் சொன்னதை எதிரணிக்கு நினைவூட்டி நல்ல தீர்ப்புத் தருமாறு கேட்டு விடைபெறுகின்றேன். நன்றி, வணக்கம்.

நடுவர்

அருமை, அன்புமேரி... அருமை. உங்களுக்கு ஆதரவா நன்னூலை இயற்றிய பவணந்தி முனிவரையும் துணைக்கு இழுத்து வந்துட்டீங்க. மிக்க மகிழ்ச்சி. இப்போ இந்த அணி கொஞ்சம் சோர்ந்து போனமாதிரி தெரியுது. நண்பர் செல்வன் வாங்க. எப்படிப் பதில் சொல்லப் போறீங்க.


செல்வன்

அவைக்கு என் பணிவான வணக்கத்தைக் கனிவோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

நடுவர் அவர்களே! அறிவியலைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார் சகோதரி அன்புமேரி. ஏதோ, நாங்கள் எல்லாம் அறிவியலுக்குப் பகைவர் என்பதைப் போல. அகழாய்வே அறிவியலை அடிப்படையாகக் கொண்டதுதான் என்பதை அறியாதவராக இருக்கின்றார். இதில் பவணந்தி முனிவரைவேறு சாட்சிக்கு இழுத்திருக்கிறார். பழைமையின் பட்டையை உரித்துக் கொண்டுதான் புதுமையே பிறக்கும். தனியாகப் புதுமைக்கென்று வேரோ விதையோ கிடையாது நண்பர்களே!

கடந்த காலத்தை அறிந்துகொண்டால்தான் நிகழ்காலத்தைச் செம்மைப்படுத்திக் கொள்ளலாம். வருங்காலம் வளமாக அமைவதற்கு வலிமையான கட்டமைப்பை உருவாக்கலாம். நமது முன்னோர்கள் வாழ்ந்து பெற்ற பட்டறிவை வகைப்படுத்தித் தொகுத்துப் பார்ப்பதற்குத் தொல்லியல் ஆய்வே பெரும் கல்வியாக அமைகின்றது.

வேடிக்கை என்னவென்றால், தமிழகத்தில் பண்டைக் காலத்திலேயே நமது தமிழ் முன்னோர்கள் செம்மையான பண்பாட்டுக் கட்டமைப்போடு வாழ்ந்திருக்கிறார்கள் நாம்தான் அந்தத் தொன்மை வரலாற்றின் உண்மையை அறியாமல் தொடர்ச்சி அறுபட்டு இடையில் எங்கோ பாதைமாறி, பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

இன்றைக்கு நாம் ஒரு புதிய நாகரிகச் சூழலைப் பழகிக் கொண்டிருக்கிறோம். அது என்னவென்றால், ஒரு பொருளை ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறி என்பதாகும். எழுதுகிற பேனா, குடிக்கிற தண்ணீர்ப்புட்டி, பழுதுபட்ட மடிக்கணினி, செல்லிடப்பேசி போன்றவற்றை ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறிகிற வழக்கத்தால் மின்சாதனக் குப்பைகள் மலையெனக் குவிந்துவிட்டன. சுற்றுச் சூழல் சிதைந்து புற்றுநோயாளிகள் பெருகும் அபாயம் வந்துவிட்டது. ஆனால், நமது முன்னோர்கள் கண்டு பிடித்துச் சுடு மண்ணிலும் உலோகத்திலும் செய்து பயன்படுத்திய பொருள்கள் பல தலைமுறைகளைக் கடந்தும் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன.

பழுதுபட்டால் சரிசெய்து மீண்டும் பயன்படுத்துவோம். இது கடந்த நூற்றாண்டுவரை தொடர்ந்தது. எதிரணி கூறிய போலி அறிவியல் பண்பாட்டுச் சூழல் வளர்ந்த பின்தான் "பயன்படுத்து, தூக்கி எறி" என்ற பழக்கம் பிறந்து வளர்ந்தது. அதன் தொடர்ச்சி எதுவரை வந்தது தெரியுமா? பெற்றெடுத்து வளர்த்த தாய்தந்தையரையும் கூடப் பயன்படுத்திவிட்டு முதியோர் இல்லத்தில் தூக்கி எறிகிற மூடத்தனம் உருவாகியிருக்கிறது.

எனவே, நடுவர் அவர்களே! அகழாய்வு தரும் சான்றுகளின் மூலம் நமது வளமான வரலாற்றையும் பண்பாட்டையும் அறிந்துகொண்டு வலிமையான எதிர்காலத்தை உருவாக்க முடியும். நெடிய வரலாறு நமக்கு இருக்கிறது. எனவே, அதனை உறுதியுடன் வலியுறுத்துகிறோம்.

நடுவர் அவர்களே! அகழாய்வு என்பது தேவையற்ற செலவினமல்ல. தேவையான செயல்பாடே! என்று திசைகள் தோறும் அறிவியல் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. நல்ல தீர்ப்புத் தாருங்கள். நன்றி, வணக்கம்.

நடுவர்

செல்வனின் ஆய்வுக் கண்ணோட்டம் அருமையானது. அரிய செய்திகளோடு இரண்டு அணிகளும் வாதிட்டுள்ளன. 1863 இல் ஆரம்பித்த அகழாய்வுப் பணி இன்று வரையிலும் தொடரும் போது பல உண்மைகள் உறைக்கத் தொடங்கி இருக்கின்றன. பழையனவற்றை ஏன் தோண்டியெடுத்துப் பாதுகாக்க வேண்டும்? ஆராய வேண்டும்? அதற்கு நம் புழங்குபொருள் பண்பாடே சான்றாக நிற்கின்றது. தேவையற்ற செயல்பாடே! என்று பேசிய அணியினர் கூறியது போல அகழாய்வு என்பது அறிவியலுக்கு எதிரான சிந்தனை அன்று.

அறிவியலில் இரண்டு வகையுண்டு. ஒன்று வணிக அறிவியல். மற்றொன்று மக்கள் அறிவியல். வணிக அறிவியல், முதலீட்டைப் பெருக்குவதற்காகப் பொருள்களைக் கண்டுபிடிக்கிறது. அதனை விற்பனை செய்கிறது. அதன் விளைவுதான் நெகிழிக் குப்பைகள். ஆனால், அகழாய்வில் கிடைத்த சுடுமண், கல், இரும்பு, செம்பு ஆகியவற்றாலான புழங்கு பொருள்கள், கருவிகள் பல நூற்றாண்டுகளாக வாழையடி வாழையாகப் பயன்பாட்டில் இருந்தன. இயற்கையோடு இணைந்த பண்பாட்டு வாழ்க்கை நம்முடையது என்பதனை அறிந்து கொண்டோம். இதுவே, மக்கள் அறிவியல்.

மக்கள் அறிவியல் என்கிற மகத்தான சிந்தனையைப் புரிந்துகொள்வதற்கும் நமது பண்பாட்டின் மேன்மைகளை இன்றைய தலைமுறை எடுத்துக்கொண்டு சிறப்பாக வாழ்வதற்கும் அகழாய்வு துணைநிற்கின்றது.

எனவே, அகழாய்வு என்பது அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய, புரிந்துகொள்ள வேண்டிய, தேவையான செயல்பாடே! அகழாய்வைத் தொடர்வோம், தொன்மை வரலாற்றை மீட்போம் என்ற எனது தீர்ப்பினைக் கூறி, நல்ல வாய்ப்பைத் தந்த இலக்கிய மன்றத்திற்கு நன்றி பாராட்டி, பட்டிமன்றத்தை நிறைவு செய்கிறேன்.

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! 

வாழிய பாரத மணித்திருநாடு!

நன்றி, வணக்கம்.

Tags : Chapter 3 | 9th Tamil இயல் 3 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 3 : Ullathin sher : Supplementary: Aagalaaivukal (pattimandram) Chapter 3 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர் : துணைப்பாடம்: அகழாய்வுகள் (பட்டிமன்றம்) - இயல் 3 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர்