நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | பருவம் 1 | அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - தூய பொருள்கள் மற்றும் கலவைகள் | 6th Science : Term 1 Unit 3 : Matter Around Us
தூய பொருள்கள் மற்றும் கலவைகள்
சில பொருள்களை, அவை தூய்மையானவை என்று கூறி கடைகளில் விற்பனை
செய்வதைக் காண்கிறோம். பொதுமக்களைப் பொருத்தவரை தூய்மை என்றால் கலப்படமற்றது. அதாவது,
எந்தவொரு தரம் குறைந்த பொருளையோ அல்லது தீய விளைவுகளை ஏற்படுத்தும் பொருள்களையோ கலக்கவில்லை
என்பது பொருள். 100% தூய்மை எனக் கூறப்படும் பொருள்கள் உண்மையிலேயே தூய்மையானவையா?
ஒரு வேதியியலாளரைப் பொருத்தவரை 'தூய்மை' என்ற சொல்லின் பொருளே
வேறு!
❖ ஒரு தூய பொருள் என்பது
ஒரே தன்மையான துகள்களால் மட்டுமே ஆனது.
❖ தூய பொருள்கள் தனிமங்களாகவோ
அல்லது சேர்மங்களாகவோ இருக்கலாம்.
❖ ஒரு தனிமம் என்பது சிறிய
துகள்களாலான ஒரே வகை அணுக்களால் ஆனது.
❖ ஒரு மூலக்கூறு என்பது இரண்டு
அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களின் சேர்க்கையாகும்.
❖ ஒரு சேர்மம் என்பது இரண்டு
அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் வேதியியல் சேர்க்கை மூலம் இணைந்து உருவாகக்கூடிய
ஒரு பொருளாகும்.
❖ கலவை என்பது இரண்டு அல்லது
அதற்கு மேற்பட்ட பகுதிப் பொருள்களைக் கொண்டதாகும்.
நாம் கீழ்க்காணும் உதாரணங்களைப் பார்ப்போம். நாம் பலவித தின்பண்டங்களை
உண்கிறோம்.
பழக்கலவை மற்றும் மிக்சர் போன்றவற்றில் உள்ள சில பொருள்களை உங்களால்
கூற முடியுமா? இக்கலவைகளில் உள்ள பகுதிப் பொருள்களை அவற்றின் நிறம், தோற்றம் மற்றும்
சுவையின் அடிப்படையில் கண்டறியலாம்.
நாம் பொங்கல் தயாரிக்க அரிசி, பருப்பு, உப்பு, மிளகு, நெய் போன்ற
பல பொருள்களைச் சேர்க்கிறோம். பொங்கல் என்ற உணவும் ஒரு கலவையே
நாம் ஏன் இவற்றைக் கலவைகள் என்கிறோம்? ஏனெனில் இவை எளிதில் பிரிக்கக்கூடிய
இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிப் பொருள்களைக் கொண்டவை.
ஆராய்க...
ஒரு கலவையில் அடங்கியுள்ள பகுதிப் பொருள்களை நாம் எப்பொழுதும்
வெறும் கண்களால் பார்க்க இயலுமா?
நாம் காய்கறிக் கலவை மற்றும் சோடாவை ஒப்பிடுவோம். காய்கறிக்
கலவையில் அடங்கியுள்ள பகுதிப் பொருள்களைஎளிமையான முறையில் பிரிக்கமுடியும். சோடாவில்
அடங்கியுள்ள பொருள்களை நாம் காணவோ அல்லது தனித்தனியே எளிமையான முறையில் பிரிக்கவோ முடியாது.
நீங்களே
முயற்சிக்கவும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள கலவையைக் கண்டறிய.
அவை கலவை எனில் 'ஆம்' எனவும், கலவை இல்லை எனில் 'இல்லை' எனவும் அட்டவணையில் குறிப்பிடவும்.
உன்னால் தீர்மானிக்க இயலாத நிலையில் 'எனக்குத் தெரியாது' எனக் குறிப்பிட்டு, பின்னர்
அத்தகைய பொருள்களைப் பற்றி உனது ஆசிரியருடன் ஆலோசித்து அறியவும்.
ஆக்ஸிஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்ஸைடு, நீராவி, மந்த வாயுக்கள்
மற்றும் பிறவற்றை தன்னுள் கொண்டதால் காற்று என்பது ஒரு கலவையாகும். நீர், புரதம், கொழுப்பு
மற்றும் பிற பொருள்கள் பாலில் காணப்படுகின்றனாலும் ஒரு கலவையாகும்.
நாம் பருகும் எலுமிச்சைச் சாறும் ஒரு கலவையாகும். நம்மில் சிலர்
எலுமிச்சைச் சாறை குறைந்தளவு சர்க்கரையுடன் பருக விரும்புகிறோம். சிலர் அதிகளவு சர்க்கரையுடன்
பருக விரும்புகிறோம். சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவு வெவ்வேறாக இருப்பினும், அதிலுள்ள பகுதிப் பொருள்களான எலுமிச்சைச் சாறு, நீர் மற்றும் சர்க்கரை ஆகியவை ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அது எலுமிச்சைச் சாறு என்றே அழைக்கப்படும். சேர்க்கப்படும் நீரின் அளவோ அல்லது எலுமிச்சைச் சாறின் அளவோ மாறினாலும் அது கலவையாகவே இருக்கும். எனவே, கலவையில் அடங்கியுள்ள பகுதிப்பொருள்களின் அளவு நிலையான விகிதத்தில் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை..
• ஒரு கலவை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே தன்மையுடைய துகள்களைக்
கொண்ட தூய்மையற்ற பொருளாகும்.
• கலவையின் பகுதிப் பொருள்கள் எந்த விகிதத்திலும் கலந்திருக்கும்.
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் இணைந்து ஒரு கலவையாக
மாறலாம். எ.கா: 22 கேரட் தங்கத்தில் உள்ள தங்கம் மற்றும் தாமிரம் அல்லது தங்கம் மற்றும்
காட்மியம் கலவைகள்.
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சேர்மங்கள் இணைந்து ஒரு மாறலாம்.
எ.கா: நீர், கார்பன் டைஆக்ஸைடு, இனிப்பு மற்றும் நிறமூட்டி ஆகியவற்றைக் கொண்ட சோடா.
ஒரு தனிமம் அல்லது சேர்மம் இணைந்து ஒரு கலவையாக மாறலாம். எ.கா:
டிஞ்சரில் அயோடின் ஆல்கஹாலுடன் கலந்துள்ளது.