Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | கலவைகளைப் பிரித்தல்

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | பருவம் 1 | அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - கலவைகளைப் பிரித்தல் | 6th Science : Term 1 Unit 3 : Matter Around Us

   Posted On :  15.09.2023 06:27 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 3 : நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

கலவைகளைப் பிரித்தல்

அனைத்துக் கலவைகளையும் அவை அமைந்துள்ளவாறு அப்படியே பயன்படுத்த இயலுமா? அல்லது கலவைகளின் பகுதிப் பொருள்களைப் பிரிக்கவேண்டியது அவசியமா? நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் பல பொருள்கள், பல்வேறு மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன. அவை, பெரும்பாலும் பிற பொருள்களுடன் கலந்தே காணப்படுகின்றன.

கலவைகளைப் பிரித்தல்

அனைத்துக் கலவைகளையும் அவை அமைந்துள்ளவாறு அப்படியே பயன்படுத்த இயலுமா? அல்லது கலவைகளின் பகுதிப் பொருள்களைப் பிரிக்கவேண்டியது அவசியமா? நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் பல பொருள்கள், பல்வேறு மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன. அவை, பெரும்பாலும் பிற பொருள்களுடன் கலந்தே காணப்படுகின்றன.

காபி மற்றும் ஐஸ்கிரீம் போன்ற கலவைகளை அப்படியே உண்கிறோம். அவற்றின் பகுதிப் பொருள்களைப் பிரிக்க

வேண்டியதில்லை. உலோகங்கள் பூமியின் மேல் ஓட்டிற்கு அடியில் தாதுக்களாக தூய உலோகத்தினை அமைந்துள்ளன. நாம் பெற வேண்டுமெனில், பல படிகளை உள்ளடக்கிய செயல்முறைகளைப் பின்பற்றி தாதுக்களிலிருந்து அவற்றைப் பிரித்தெடுக்க வேண்டும்.

பிரித்தெடுத்தல் என்றால் என்ன? ஒரு கலவையில் இருந்து அவற்றின் பல பகுதிப் பொருள்களைத் தனித்தனியே பிரிக்கும் முறைக்கு பிரித்தெடுத்தல் என்று பெயர். பகுதிப் பொருள்களின் உண்மையான பண்புகள் மற்றும் பயன்பாட்டினை அறிய பொருள்களைப் பிரித்தல் அவசியம்.

கலவைகளை எப்பொழுது, ஏன் பிரிக்க வேண்டும்?

கலவைகளில் உள்ள மாசுக்களையும், தீங்கு விளைவிக்கும் பகுதிப் பொருள்களையும் நீக்குவதற்கு. எ.கா: அரிசியில் உள்ள கற்களை நீக்குதல்.

பயனளிக்கும் ஒரு பகுதிப் பொருளினை மற்றபகுதிப்பொருள்களில் இருந்து தனியே பிரிப்பதற்கு. எ.கா: பெட்ரோலியத்தில் இருந்து பெட்ரோல் பெறுதல்.

ஒரு பொருளை மிகுந்த தூய நிலையில் பெறுவதற்கு. எ.கா: தங்கச் சுரங்கத்தில் இருந்து தங்கம் பெறுதல்.

 

நாம் செல்வியின் குடும்பத்தைப் பற்றி அறிந்துகொள்வோமா?

ஒரு நாள் காலை ஏழு மணியளவில் செல்வியின் குடும்பம் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. செல்வியின் தாயார் சமையலறையில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தார். பாட்டி தயிரிலிருந்து வெண்ணெய் எடுத்துக் செல்வியின் தந்தையும், களத்தில் கொண்டிருந்தார். அவளுடைய மாமாவும் அறுவடைக்குப்பின் நெல்மணிகளைச் சேகரித்துக் கொண்டிருந்தனர். செல்வி அவளுடைய தாயாருக்கு உதவிபுரியும் வகையில் அரிசியில் இருந்து கல்லை நீக்கிக் கொண்டிருந்தாள். செல்வியின் தம்பி பாலு அவனுடைய நண்பன் கொடுத்த காந்தத்தினைக் கொண்டு மணலில் ஆர்வமுடன் உருட்டி விளையாடிக் கொண்டிருந்தான்.

செல்வியின் குடும்ப உறுப்பினர்கள் ஈடுபட்டிருந்த பல்வேறு செயல்பாடுகளை உனது குறிப்பேட்டில் பட்டியலிட முடியுமா?

மேற்கண்ட செயல்பாடுகளில் அடங்கியுள்ள பிரித்தெடுத்தல் முறைகளை ஆராய்வோம். மேலும், வேறு சில பிரித்தெடுத்தல் முறைகளைப் பற்றியும் அறிந்துக்கொள்வோம்.

கலவையில் அடங்கியுள்ள பகுதிப் பொருள்களின் பண்புகளைப் பொருத்தே, கலவைகளைப் பிரித்தெடுக்கும் முறை தேர்வு செய்யப்படுகிறது. பொருள்களின் அளவு, வடிவம், இயற்பியல் தன்மை (திட, திரவ, வாயு) ஆகியவற்றைப் பொருத்து பிரித்தெடுக்கும் முறை தேர்வு செய்யப்படலாம்.


வடிகட்டுதல்

செல்வியின் தாயார் தேநீரில் இருந்து தேயிலைத்தூளைப் பிரிப்பதற்கென வடிகட்டியைப் பயன்படுத்தினார். பெரிய அளவிலான தேயிலைத்தூள்கள் வடிகட்டியில் தக்கவைக்கப்பட்டு தெளிந்த தேநீர் கரைசல் மிகச் சிறிய துளை வழியே வெளியேற்றப்படுகிறது. இதற்கு வடிகட்டுதல் என்று பெயர்.


வடிகட்டிய பிறகு, தேயிலைத்தூளை என்ன செய்வீர்? தூக்கி எறிவீர்களா? அவற்றை மீண்டும் பயன்படுத்தும் முறை ஒன்றினை உங்களால் பரிந்துரைக்க முடியுமா?


சலித்தல்

ஒரு சல்லடை என்பது வடிகட்டியைப் போன்றதாகும். வெவ்வேறு அளவுடைய திடப் பொருள்களைப் பிரித்தெடுக்கும் முறைக்கு சலித்தல் என்று பெயர். எ.கா: மாவில் இருந்து தவிடை நீக்குதல், மணலில் இருந்து சரளைக் கற்களை நீக்குதல். கட்டுமானப் பணிகளில், மணலிலிருந்து சரளைக் கற்களை நீக்குவதற்கு கம்பியாலான சல்லடை பயன்படுத்தப்படுகிறது.

 

செயல்பாடு 6

சிந்தித்து அறிக! மாவிலிருந்து தவிடை நீக்குதல் சரியா? உனது விடையினை குறிப்பேட்டில் எழுதவும்.


கடைதல்

மிகச் சிறிய அளவிலான திடப்பொருள்களை கரையாத திரவத்திலிருந்து பிரித்தெடுப்பதற்கு கடைதல் முறையினைக் கையாளலாம். எ.கா: தயிரிலிருந்து வெண்ணெய் எடுத்தல்.

வேகமாகக் கடையப்படும்போது திண்ம வெண்ணெயானது பாத்திரத்தின் பக்கங்களில் சேர்கிறது. கடைந்தபின் கிடைக்கும் வெண்ணெய் மற்றும் மோர் ஆகிய இரு பொருள்களுமே உண்பதற்கு உகந்தவையாகும்.


துணி துவைக்கும் இயந்திரம் மூலம் ஈரம் நிறைந்த துணிகளிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு அவை உலர்த்தப்படுகின்றன இம்முறைக்கு மைய விலக்கல் என்று பெயர்.


கதிரடித்தல்

நாம் செடிகளில் இருந்து பூக்களைப் பறிக்கும்போது தண்டுகளில் இருந்து அவற்றைப் பிரிக்கிறோம். தாவரத் தண்டுகளில் இருந்து பெறப்படும் நெல் மற்றும் கோதுமை போன்ற தானியங்களையும் அதேபோல் பிரிக்கின்றோமா? அது இயலாது. ஏனெனில், தானியங்கள் சிறிய அளவிலானவை; மேலும், அவற்றின் எண்ணிக்கை அதிகம். தானியங்களை அவற்றின் தாவரத் தண்டுகளில் இருந்து பிரிப்பதற்காக விவசாயிகள் தண்டுகளை கடினமான பரப்பில் அடிக்கின்றனர். இம்முறைக்கு கதிரடித்தல் என்று பெயர்.



தூற்றுதல்

அரிசி, கோதுமை மற்றும் பிற உணவு தானியங்கள் உமியால் மூடப்பட்டிருக்கும். உமியை நம்மால் உண்ண முடியாது. உமி மிகவும் மென்மையாக இருப்பதால் காற்றினால் எளிதாக அடித்துச் செல்லப்படும். தானியங்களிலிருந்து உமியை அகற்றுவதற்குப் பயன்படும் முறைக்கு தூற்றுதல் என்று பெயர்.


கலவையினை குறிப்பிட்ட உயரத்தில் இருந்து காற்றடிக்கும் திசையில் விழச் செய்யவேண்டும். உமி போன்ற லேசான திடப்பொருள்கள் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு தனியே ஒரு குவியலாகச் சேர்ந்திருக்கும். எடை அதிகமுள்ள திடப்பொருள்கள் அதாவது தானியங்கள் தூற்றுபவரின் அருகே சிறு குவியலாகச் சேரும்.

 

உமி என்பது விதை அல்லது தானியத்தைச் சுற்றிக் கடினமான காணப்படும் அல்லது பாதுகாப்பான உறையாகும். அரிசியின் வளர்நிலைக் காலங்களில் இது அரிசியைப் பாதுகாக்கிறது. கட்டுமானப் பொருளாகவும், உரமாகவும், மின்காப்புப் பொருளாகவும் எரிபொருளாகவும் இது பயன்படுகின்றது.

 

கைகளால் தெரிந்தெடுத்தல்

அரிசியிலிருந்து கற்களை எவ்வாறு பிரிக்கிறோம்? கற்கள் தானியங்களிலிருந்து மாறுபட்ட உருவத்தைப் பெற்றிருக்குமானால் அவற்றை நாம் எளிதாக அடையாளம் கண்டு கைகளால் நீக்குகிறோம். இம்முறைக்கு கைகளால் தெரிந்தெடுத்தல் என்று பெயர். ஒருவேளை கற்கள் அரிசியைப் போன்ற உருவ அமைப்பையே பெற்றிருந்தால் அவற்றை நீக்குவது கடினம்.



காந்தப் பிரிப்பு முறை

இரும்புத் துகள்கள் கலந்திருக்கும் ஒரு கலவையில் இரும்பானது காந்தத்தால் கவரப்படும் என்ற பண்பினைப் பயன்படுத்தி காந்தத் தன்மையுடைய பொருள்களை காந்தத்தன்மையற்ற பொருள்களில் இருந்து பிரிக்கலாம். காந்தத்தால் கவரப்படும் பொருள்கள் காந்தத்தன்மையுடைய பொருள்கள் எனப்படும். காந்தத்தினைப் பயன்படுத்தி திண்மங்களைப் பிரிக்கும் முறைக்கு காந்தப்பிரிப்பு முறை என்று பெயர்.



படிய வைத்தல் (அ) வண்டல் படிவாக்கல்

அரிசி மற்றும் பருப்பு வகைகளில் சிறிய வைக்கோல் துகள்கள், உமி, தூசு போன்றவை கலந்திருக்கும். சமைக்கும் முன் அவற்றை நீக்குதல் வேண்டும். உங்கள் வீட்டில் அவற்றை நீக்குவதற்குப் பின்பற்றப்படும் முறைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இத்தகைய பொருள்களை நீக்க அரிசியையோ பருப்பையோ நீரில் கழுவ வேண்டும். அவ்வாறு கழுவும்போது லேசான மாசுக்கள் நீரில் மிதக்கும்; எடை அதிகமுள்ள அரிசி போன்ற தானியங்கள் நீரில் மூழ்கி அடியில் தங்கும். இம்முறைக்கு படிய வைத்தல் (அ) வண்டல் படிவாக்கல் என்று பெயர். தூய்மையான அரிசி நீருக்கடியில் தங்கியபின், நீரில்உள்ளமாசுக்கள் அனைத்தையும் கவனமாக வெளியேற்ற வேண்டும். இம்முறைக்கு தெளிய வைத்து இறுத்தல் என்று பெயர்.

 

கலங்கலான நீரிலிருந்து சேறை நீக்குதல்

கலங்கலான நீர் மிக நுண்ணிய களிமண் துகள்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும். ஒரு கண்ணாடிக் குவளையில் உள்ள கலங்கிய நீரினை அசைக்காமல் வைக்கும்போது என்ன நிகழும்? களிமண் துகள்கள் கனமாக இருப்பதால் அவை குவளையின் அடியில் வண்டலாகத் தங்கும். நீரானது மேல் அடுக்காக தெளிந்த நிலையில் இருக்கும்.


ஒரு கலவையில் கனமான பொருள்கள் இருப்பின் அவற்றைச் சிறிது நேரம் அசைக்காமல் வைக்கும்பொழுது எடை அதிகமான பொருள்கள் வண்டலாக தங்கி விடும். மேலடுக்கில் தெளிந்த நீர்மம் கிடைக்கும். இம்முறைக்கு படியவைத்தல் என்று பெயர்.


தெளிய வைத்து இறுத்தல்

இச்செயல் படிய வைத்தலைத் தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது. அடியில் தங்கிய வண்டலைப் பாதிக்காத வண்ணம் மேல் அடுக்கில் உள்ள நீர் மற்றொரு கலனிற்கு மாற்றப்படுகிறது. வண்டலில் இருந்து நீர்மத்தைப் பிரிக்கும் முறைக்கு தெளிய வைத்து இறுத்தல் என்று பெயர். அடியில் தங்கும் பகுதி வண்டல் என்றும், தெளிந்த நிலையில் உள்ள பகுதி தெளிந்த நீர் என்றும் அழைக்கப்படும்.

தெளிய வைத்து இறுத்த பிறகும் நீரில் நுண்ணிய களிமண் துகள்கள் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. அவற்றை எவ்வாறு நீக்கலாம்? வடிகட்டி மூலம் அவற்றை நாம் நீக்கலாம். ஒரு வடிகட்டியோ அல்லது துணியோ இத்தகைய நுண்ணிய களிமண் துகள்களை நீக்குவதற்கு உதவும் என்று கருதுகிறீர்களா? இச்செயலைச் செய்துபார்த்து, கண்டுபிடியுங்கள்.


வடிகட்டுதல்

நுண்ணிய மாசுக்களை நீக்குவதற்காக நாம் வடிதாளைப் பயன்படுத்துகிறோம். ஒரு வடிதாளில் களிமண் துகள்களைக் காட்டிலும் அளவில் சிறிய நுண்துளைகள் உள்ளன. ஒரு வடிதாளினை எவ்வாறு பயன்படுத்துவது என இப்பொழுது பார்க்கலாம்.

ஒரு வடிதாளை எடுத்துக் கொண்டு அதனைக் கூம்பு வடிவில் மடிக்கவும் (படத்தைப் பார்க்கவும்). கலங்கிய நீரினை வடிதாளில் மெதுவாக, கவனமுடன் ஊற்றவும். வடிகட்டுதலின் போது தெளிந்த நீர் புனல் வழியே கீழேயுள்ள கலனை அடையும், எஞ்சியுள்ள களிமண் துகள்கள் (வீழ்படிவு) வடிதாளிலேயே தங்கி விடும்.


ஒரு கலவையில் உள்ள களிமண், மணல் போன்ற கரையாத பொருள்களை வடிதாளைப் பயன்படுத்தி பிரித்தெடுக்கும் முறைக்கு வடிகட்டுதல் என்று பெயர்.. வடிகட்டியைக் கடந்து கீழே இறங்கும் திரவத்திற்கு வடிநீர் என்றும், வடிதாளில் தங்கும் கரையாத பகுதிக்கு வண்டல் என்றும் பெயர்.

மேலும் அறிவோம்

பிரித்தெடுத்தலை முழுமையாக்குவதற்கு, முறைகளை ஒன்றாக செயல்படுத்தலாம். பல பிரித்தல் இணைத்தும் உதாரணமாக, நீரில் கலந்துள்ள மணலும் உப்பும் கலந்த கலவையினைப் பிரிப்பதற்கு படிய வைத்தல், தெளியவைத்து இறுத்தல், வடிகட்டுதல், ஆவியாக்குதல் மற்றும் குளிரவைத்தல் போன்ற பல முறைகளை வெவ்வேறு படிநிலைகளில் நிகழ்த்த வேண்டும்.



செயல்பாடு 7

குழுச் செயல்: வகுப்பில் உள்ள மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரிக்கவும். ஒவ்வொரு குழுவும் கலவைகளைப் பிரிப்பதற்குத் தகுந்த முறைகளைப் பரிந்துரைக்க வேண்டும். அக்குழுவில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கலவைகளில் உள்ள பகுதிப் பொருள்களை எந்தப் பண்பின் அடிப்படையில், எந்தச் செயல்முறையின் மூலம் பிரித்தார்கள் என்பதையும் கூறவேண்டும். கலவைகளுக்கான எடுத்துக்காட்டுகளை மாணவர்களது அன்றாட வாழ்வில் இருந்து எடுத்துரைக்க வேண்டும். ஒரு குழு தான் பரிந்துரைக்கும் முறைகளை வகுப்பிலுள்ள மற்ற மாணவர்களிடம் பகிர்ந்தவுடன், முழு வகுப்பும் கலந்தாலோசித்து பரிந்துரைக்கப்பட்ட முறைகள் பொருத்தமாக உள்ளனவா என்று முடிவு செய்து கீழ்க்காணும் அட்டவணையில் பூர்த்தி செய்ய வேண்டும்.

 


Tags : Matter Around Us | Term 1 Unit 3 | 6th Science நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | பருவம் 1 | அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 1 Unit 3 : Matter Around Us : Separation of Mixtures Matter Around Us | Term 1 Unit 3 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 3 : நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் : கலவைகளைப் பிரித்தல் - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | பருவம் 1 | அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 3 : நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்