Home | 12 ஆம் வகுப்பு | 12வது விலங்கியல் | மனித இனப்பெருக்கம் : வினா விடை

புத்தக வினாக்கள் | சரியான விடையைத் தேர்ந்தெடு | குறுகிய வினா விடை - மனித இனப்பெருக்கம் : வினா விடை | 12th Zoology : Chapter 2 : Human Reproduction

   Posted On :  13.04.2022 12:00 am

12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 2 : மனித இனப்பெருக்கம்

மனித இனப்பெருக்கம் : வினா விடை

விலங்கியல் : மனித இனப்பெருக்கம் : புத்தக வினாக்கள் / சரியான விடையைத் தேர்ந்தெடு / குறுகிய வினா விடை

மதிப்பீடு



I. சரியான விடையைத் தேர்ந்தெடு 

1. முதிர்ந்த விந்து செல்கள் சேகரிக்கப்படும் இடம் 

அ) விந்தக நுண் குழல்கள்

ஆ) விந்து நாளம் 

இ) விந்தகமேல் சுருள் குழல்

ஈ) விந்துப்பை 

விடை : இ) விந்தகமேல் சுருள் குழல் 



2. ஆண்பால் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன் சுரக்கும் இடம் 

அ) செர்டோலி செல்கள்

ஆ) லீடிக் செல் 

இ) விந்தகமேல் சுருள் குழல்

ஈ) புரோஸ்டேட் சுரப்பி 

விடை : ஆ) லீடிக் செல் 



3. விந்து திரவத்தின் பெரும்பான்மைப் பகுதியைச் சுரக்கும் துணைச் சுரப்பி 

அ) விந்துப்பை

ஆ) பல்போயுரித்ரல் சுரப்பி 

இ) புரோஸ்டேட் சுரப்பி

ஈ) கோழைச் சுரப்பி 

விடை : அ) விந்துப்பை 



4. பெண்ணின் சுமரி ஆணின் எவ்வுறுப்புக்கு ஒப்பானது?

அ) விதைப்பை

ஆ) ஆண்குறி 

இ) சிறுநீர் வடிகுழல்

ஈ) விந்தகம்

விடை : ஆ) ஆண்குறி 



5. கரு பதியும் இடம் 

அ) கருப்பை

ஆ) வயிற்றுக்குழி 

இ) கலவிக் கால்வாய்

ஈ) ஃபெல்லோப்பியன் குழாய் 

விடை : அ) கருப்பை 



6. தொப்புள் கொடியை உருவாக்கும் கரு சூழ் படலத்தின் அடிப்படை 

அ) ஆலன்டாயிஸ்

ஆ) ஆம்னியான் 

இ) கோரியான்

ஈ) கரு உணவுப்பை 

விடை : அ) ஆலன்டாயிஸ் 



7. குழந்தை பிறப்புக்குப்பின் பால் சுரத்தலைத் தொடங்கி வைப்பதும் தொடர்ச்சியாகச் சுரக்க வைக்கவும் உதவும் முக்கிய ஹார்மோன் 

அ) ஈஸ்ட்ரோஜன் 

ஆ) FSH

இ) புரோலாக்டின்

ஈ) ஆக்ஸிடோசின் 

விடை : இ) புரோலாக்டின் 



8. பாலூட்டியின் முட்டை 

அ) மீசோலெசித்தல், ஓடற்றது

ஆ) மைக்ரோலெசிதல், ஓடற்றது 

இ) ஏலெசித்தல், ஓடற்றது

ஈ) ஏலெசித்தல், ஓடுடையது

விடை : இ) ஏலெசித்தல், ஓடற்றது 



9. அண்ட செல்லைத் துளைத்துச் செல்வதற்கு முன் விந்து செல்லில் நடைபெறும் நிகழ்வு 

அ) ஸ்பெர்மியேஷன்

ஆ) கார்டிகல் வினைகள் 

இ) ஸ்பெர்மியோஜெனிசிஸ்

ஈ) திறனேற்றம்

விடை : ஈ) திறனேற்றம் 



10. குழந்தை பிறந்தவுடன் உடனடியாகச் சுரக்கும் பாலின் பெயர் 

அ) கோழை 

ஆ) சீம்பால் 

இ) லாக்டோஸ் 

ஈ) சுக்ரோஸ்

விடை : ஆ) சீம்பால்



11. சீம்பாலில் அதிகம் காணப்படுவது 

அ) IgE

ஆ) IgA 

இ) IgD

ஈ) IgM 

விடை : ஆ) IgA 



12. ஆண்ட்ரோஜன் இணைவுப்புரதத்தை உற்பத்தி செய்பவை 

அ) லீடிக் செல்கள்

ஆ) ஹைபோதலாமஸ் 

இ) செர்டோலி செல்கள்

ஈ) பிட்யூட்டரி சுரப்பி 

விடை : இ) செர்டோலி செல்கள் 



13. தவறான இணையைக் கண்டுபிடி.

அ) இரத்தப்போக்கு நிலை - ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் குறைதல் 

ஆ) நுண்பை செல்கள் ஃபாலிகுலார் நிலை - ஈஸ்ட்ரோஜன் அதிகரித்தல் 

இ) லூட்டியல் நிலை - FSH அளவு அதிகரிப்பு 

ஈ) அண்டம் விடுபடு நிலை - LH எழுச்சி 

விடை : இ) லூட்டியல் நிலை - FSH அளவு அதிகரிப்பு 


பின்வரும் வகையான வினாக்களுக்கு விடையளி. 

கூற்று (A) மற்றும் காரணம் (R) 

அ) A மற்றும் R உண்மை, R என்பது A யின் சரியான விளக்கம் 

ஆ) A மற்றும் R உண்மை, R என்பது A யின் சரியான விளக்கம் இல்லை 

இ) A உண்மை, R பொய்

ஈ) A மற்றும் R இரண்டுமே பொய் 

விடை : அ) A மற்றும் R உண்மை, R என்பது A யின் சரியான விளக்கம் 




14. A - ஆணில் விந்தகங்கள் வயிற்றுக்கு வெளியே விதைப்பையினுள் காணப்படுகின்றன. 

R - விதைப்பை வெப்ப நெறிப்படுத்தியாகச் செயல்பட்டு விந்தகத்தின் வெப்பநிலையை 20°C குறைத்து இயல்பான விந்தணு உற்பத்திக்கு உதவுகிறது.

விடை : அ) A மற்றும் R உண்மை , R என்பது A யின் சரியான விளக்கம் 



15. A - அண்டம் விடுபடுதல் என்பது கிராஃபியன் நுண்பையிலிருந்து அண்டம் வெளியேறும் நிகழ்ச்சியாகும். 

R - இது மாதவிடாய் சுழற்சியின் நுண்பை (ஃபாலிகுலார்) நிலையில் நடைபெறுகிறது.

விடை : இ) A உண்மை, R பொய் 



16. A - விந்து செல்லின் தலைப்பகுதியில் அக்ரோசோம் மற்றும் மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டிருக்கிறது. 

R - அக்ரோசோம் திருகு வடிவிலமைந்த மைட்டோகாண்ட்ரியங்களைக் கொண்டுள்ளது.

விடை : ஈ) A மற்றும் R இரண்டுமே பொய் 



17. ஸ்பெர்மியோஜெனிசில் மற்றும் ஸ்பெர்மட்டோஜெனிசிஸ் - வேறுபடுத்துக. 

ஸ்பெர்மியோஜெனிசில்

விந்து செல் உருவாக்கத்தில், ஸ்பெர்மாடிட்கள் முதிர்ந்த, முழுமையான விந்து செல்லாக மாறும் செயல் ஸ்பெர்மியோஜெனிசில் எனப்படும். 


ஸ்பெர்மட்டோஜெனிசிஸ் 

விந்தகங்களில், விந்து நுண் குழல்களில் வரிசையாக நடைபெறும் செயல்களினால் ஆண் இனச் செல்கள் அல்லது விந்துக்கள் உற்பத்தி செய்யப்படுதல்  விந்துசெல் உருவாக்கம் எனப்படும். 



18. புதிதாய் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளில் கருவளர்ச்சியின் எந்நிலையில் இனச்செல் உருவாக்கம் நிகழ்கிறது? 

ஆண் குழந்தைகளில் இனச்செல் உருவாக்கம் :

பூப்பெய்தும் வயதில், ஹைபோதலாமஸ் சுரக்கும் கொனடோடிராபின் வெளிவிடு ஹார்மோனின் (GnRH) அளவு அதிகரிக்கும் போது விந்து செல்லாக்க நிகழ்ச்சி தொடங்குகிறது. 

பெண் குழந்தைகளில் இனச்செல் உருவாக்கம் :

சிசுவின் அண்டகங்களில் இனச்செல் எபிதீலியம் உள்ளது. இது கருவளர்ச்சியின்போது, மறைமுகப் பிரிவினால் ஊகோனியா எனும் அண்ட தாய் செல்களை உற்பத்தி செய்யும். அண்ட தாய் செல்கள், குன்றல் பிரிவு 1 ன் முதற்பிரிவு நிலையில் முதல் நிலை அண்ட செல்களைத் தோற்றுவிக்கின்றன. இந்நிலையில் இச்செல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். பூப்பெய்தலின் போது, முதல்நிலை அண்ட செல்கள் குன்றல் பகுப்பு 1 ஐ நிறைவு செய்து இரண்டாம் நிலை அண்ட செல்லை உருவாக்கும். கருவுறுதலின் போது இரண்டாம் நிலை அண்ட செல் குன்றல் பகுப்பு - II க்கு உட்பட்டு, அண்ட செல்லை உருவாக்கும்.  


19. விரிவாக்கம் தருக. 

அ) FSH - நுண்பை செல் தூண்டும் ஹார்மோன் 

ஆ) LH - லூட்டினைசிங் ஹார்மோன் 

இ) hCG - மனித கோரியானிக் கொனடோடிராபின் 

ஈ) hPL - மனித பிளாசன்டல் லாக்டோஜன் 



20. மனிதரில் பல விந்து செல் கருவுறுதல் எவ்விதம் தடுக்கப்படுகிறது? 

* கருவுறுதல் நிகழ்ந்தவுடன், அண்டத்தின் சைட்டோபிளாசத்தில் காணப்படும், கார்டிகல் துகள்கள் அண்டத்தைச் சுற்றி, கருவுறுதல் சவ்வு (Fertilization) என்ற தடையை ஏற்படுத்தும். 

* இதனால் மேலும் விந்து செல்கள் உள் நுழைவது தடுக்கப்படும். இதனால் பல விந்து செல்களால் கருவுறுதல் (Polyspermy) தடுக்கப்படும். 



21. சீம்பால் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது?

*  குழந்தை பிறந்ததிலிருந்து சில நாட்களுக்கு, பால் சுரப்பிகள், மஞ்சள் நிற சீம்பாலைச் சுரக்கின்றன. 

* இதில் லாக்டோஸ் குறைவாயுள்ளது. புரதம், தாது உப்புக்கள், விட்டமின் A அதிக அளவில் உள்ளன. 

* சீம்பாலில் கொழுப்பு கிடையாது. 

* IgA வகை எதிர்ப்பொருட்கள் உள்ளன. இவை குழந்தையின் உணவுப்பாதை பாக்டீரியத் தொற்றை தடுக்கின்றன. 

* எளிதில் செரிக்கக் கூடிய, அனைத்து ஊட்டச்சத்து கொண்ட சரியான உணவு.

* முதல் 6 மாதம் தாய்ப்பால் ஊட்டுவதால் குழந்தை நலமுடன் வளரும். 



22. தாய்சேய் இணைப்புத்திசு ஒரு நாளமில்லாச் சுரப்பித் திசு - நியாயப்படுத்து.

கர்ப்ப காலத்தில், தாய்சேய் இணைப்புத்திசு, தற்காலிக நாளமில்லாச் சுரப்பியாக செயல்பட்டு, கீழ்க்கண்ட ஹார்மோன்களைச் சுரக்கிறது.

* hcG - மனித கோரியானிக் கொனடோடிராபின்

*  hcs - மனித கோரியானிக் சொமட்டோமம்மோடிராபின்

* hPL - மனித பிளாசன்டல் லாக்டோஜன்

* ஈஸ்ட்ரோஜன் 

* புரோஜெஸ்டிரான் 

*  ரிலாக்ஸின் ஹார்மோன் இடுப்பு எலும்பிணைப்பு நார்களைத் தளர்வடையச் செய்து, குழந்தை பிறத்தலை எளிதாக்குகிறது. 

hcG, hPL, ரிலாக்ஸின் போன்றவை கர்ப்ப காலத்தில் மட்டுமே உற்பத்தியாகின்றன.



23. முதிர்ந்த விந்தணுவின் படம் வரைந்து பாகங்கள் குறி. 




24. இன்ஹிபின் என்றால் என்ன? அதன் பணிகள் யாவை? 

* விந்தக நுண்குழல்களில் உள்ள அடுக்கு எபிதீலியம், 2 வகைச் செல்களைக் கொண்டுள்ளது.

i) செர்டோலி (செவிலி) செல்கள். 

ii) விந்து உற்பத்தி செல்கள் 

* செர்டோலி செல்கள் விந்து செல் உற்பத்தியின் போது, இன்ஹிபின் என்ற ஹார்மோனைச் சுரந்து, எதிர்மறை பின்னூட்டக் கட்டுப்பாட்டை மேற்கொள்கின்றன. 



25. விந்தக அமைவிடத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடு.

* இயல்பான மனித உடல் வெப்பத்தில், வீரியமான விந்தணுக்களை உற்பத்தி செய்ய முடியாது. 

* எனவே விதைப்பையானது வயிற்றறையின் வெளியில் அமைந்துள்ளது.

* இதனால் இயல்பான உடல் வெப்பநிலையை விட 2 முதல் 3°C குறைவான வெப்பநிலை அடைகிறது. 

* இவ்வாறாக, விதைப்பையானது ஒரு வெப்ப நெறிப்படுத்தியாகச் செயல்பட்டு, விந்து செல்லை உருவாக்குகிறது. 



26. விந்துத்திரவத்தில் அடங்கியுள்ள பொருட்கள் யாவை?

* விந்துப் பைகள் செமினல் பிளாஸ்மா என்ற காரத்தன்மை கொண்ட திரவத்தைச் சுரக்கின்றன. 

* புரோஸ்டேட் சுரப்பி, பல்போயுரித்ரல் சுரப்பி போன்றவற்றின் சுரப்புக்கள் மற்றும் செமினல் பிளாஸ்மா சேர்ந்த பால் போன்ற வெண்மை நிறத் திரவமே 'விந்துத் திரவம்' எனப்படும். 

* இது விந்து செல்களைக் கடத்தும் ஊடகமாகவும், உணவூட்டமளிக்கவும் பயன்படும். விந்து செல்களின் பாதுகாப்பு, இயக்கத்திற்குத் தேவையான பொருட்களைக் கொண்டுள்ளது. 

* செமினல் பிளாஸ்மா திரவத்தில் பிரக்டோஸ், அஸ்கார்பிக் அமிலம், புரோஸ்டகிளான்டின்கள் உள்ளன. விந்து திரவத்தை உறைய வைக்கும் நொதியான வெஸிகுலேஸ் உள்ளது. இந்நொதி விந்து செல் இயக்கத்தைத் துரிதப்படுத்தும். 



27. கர்ப்ப காலத்தில் தாய்சேய் இணைப்புத்திசுவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் யாவை?

* hcG - மனித கோரியானிக் கொனடோடிராபின் 

* hcs - மனித கோரியானிக் சொமட்டோமம்மோடிராபின் 

*  hPL - மனித பிளாசன்டல் லாக்டோஜன்

* ஈஸ்ட்ரோஜன் * புரோஜெஸ்டிரான் * ரிலாக்ஸின் 



28. இனச்செல் உருவாக்கம் - வரையறு?

பாலினப் பெருக்க உயிரிகளில் முதல் நிலை பாலுறுப்புகளினின்று (விந்தகம், அண்டகம்) விந்துக்களும், அண்டமும் உருவாகும் நிகழ்ச்சி, இனச்செல் உருவாக்கம் எனப்படும். 



29. அண்ட செல்லின் அமைப்பைத் தகுந்த வரைபடங்களுடன் விவரி.


* மனித அண்ட செல் நுண்ணிய, ஓடற்ற, கரு உணவு அற்ற செல். 

* இதன் சைட்டோபிளாசம் 'ஊபிளாசம்' எனப்படும். 

* இதன் பெரிய உட்கரு 'வளர்ச்சிப்பை ' (Germinal visicle) எனப்படும். 

* அண்ட செல் 3 உறைகளைக் கொண்டது.

i) உட்புற மெல்லிய ஒளி ஊடுருவும் விட்டலின் சவ்வு. 

ii) தடித்த நடு அடுக்கு 'சோனா பெலூசிடா' 

iii) வெளிப்புற தடித்த 'கரோனா ரேடியேட்டா', நுண்பை செல்களால் சூழப்பட்டது. 

* விட்டலின் சவ்வுக்கும், சோனா பெலூசிடாவுக்கும் இடையே விட்டலின் புற இடைவெளி (Perivitelline - Space) உள்ளது.



30. மனித விந்து செல் உருவாக்கம் மற்றும் அண்ட செல் உருவாக்கம் நிகழ்வுகளை வரைபடம் மூலம் விளக்குக.


விந்து செல் உருவாக்கம்: 

1. பெருக்க நிலை :

* கருமூல இனச்செல்கள் விந்தகங்களுக்கு நகர்ந்து செல்கின்றன. 

* விந்தக நுண்குழலின் உட்பகுதியில், முதிராத ஸ்பெர்மட்டோகோனியா அல்லது விந்து தாய் செல்களாக உருப்பெறுகின்றன. 

* பூப்பெய்தலின் போது, இச்செல்களில் மறைமுகச் செல் பிரிவு தொடங்குகின்றது. பின் இது வாழ்நாளெல்லாம் தொடர்கின்றது. 

2. வளர்ச்சி நிலை : 

* விந்து தாய் செல்கள், விந்து நுண்குழலின் உள்ளீடற்ற மையப்பகுதியை நோக்கிச் செல்கின்றன.

* அங்கு அவை மாறுபாடடைந்து, முதல் நிலை விந்து செல்களாக உருப்பெறுகின்றன. 

3. முதிர்ச்சி நிலை : 

* முதல் நிலை விந்து செல்கள், முதல் குன்றல் பகுப்பின் விளைவாக 2 இரண்டாம் நிலை விந்து செல்களை உருவாக்குகின்றன. 

* இரண்டாம் குன்றல் பகுப்பின் இறுதியில், இரண்டாம் நிலை விந்து செல்கள், 4 ஒற்றை மைய ஸ்பெர்மாடிட்களை உருவாக்கும். ஸ்பெர்மாடிட்கள், ஸ்பெர்மியோஜெனிசிஸ் (Spermiogenesis) மூலம் விந்து செல்லாகின்றன. 

அண்ட செல் உருவாக்கம்: 

1. பெருக்க நிலை : 

* கரு வளர்ச்சியின் போது சிசுவின் அண்டகங்களில் உள்ள, இனச்செல் எபிதீலியம், மறைமுகப் பிரிவினால் ஊகோனியா எனும் அண்ட தாய் செல்களை உற்பத்தி செய்கின்றன. 

2. வளர்ச்சி நிலை : 

* அண்ட தாய் செல்கள் குன்றல் பிரிவு 1-ன் மூலம் முதற்பிரிவு நிலையை அடைந்து, முதல்நிலை (Prophase) அண்ட செல்களைத் தோற்றுவிக்கின்றன. 

* இச்செல்கள் ஓரடுக்கு கிரானலோசா செல்களால் சூழப்பட்டு, முதல்நிலை நுண்பை செல்களாக (Primary Follicles) மாறுகின்றன. பிறப்புக்கும், பூப்பெய்தலுக்கும் இடையே அது அதிக நுண்பை செல்கள் மறைகின்றன. 

* முதல்நிலை நுண்பை செல்கள் பல அடுக்கு கிரானுலோசா செல்கள் தீக்கா அடுக்கினால் சூழப்படும். இவை இரண்டாம் நிலை நுண்பை செல்கள் எனப்படும். 

* பின் இவை ஆண்டரம் எனும் திரவம் நிரம்பிய மூன்றாம் நிலை நுண்பை செல்களாகின்றன. 

3. முதிர்ச்சி நிலை : 

* முதல் நிலை அண்ட செல்கள் வளர்ந்து குன்றல் பகுப்பு 1 - ன் மூலம் இரண்டாம் நிலை அண்ட செல்களாகும். 

* குன்றல் பகுப்பு II மூலம் இரண்டாம் நிலை அண்ட செல் பெரிய அண்ட செல்லை உருவாக்கும் துருவ உறுப்புக்கள் சிதைவடைகின்றன.



31. மாதவிடாய் சுழற்சியின் பல்வேறு நிலைகளை விளக்குக. 

மாதவிடாய் சுழற்சி :

பூப்படைதல் முதல் மாதவிடாய் நிறைவு வரை கர்ப்ப காலம் தவிர, சுமார் 28/29 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி (அண்டகச் சுழற்சி) நிகழும். 


1. மாதவிடாய் நிலை (3 - 5 நாட்கள்) (Menstrual Phase) :

*  புரோஜெஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவு குறைகிறது. 

* கருப்பைச் சுவர் எண்டோமெட்ரியம், அதன் இரத்தக் குழல்கள் சிதைந்து, மாதவிடாய் ஒழுக்கு வெளியாகும்.

* அண்டம் கருவுறாவிட்டால் மாதவிடாய் ஏற்படும். 

* மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது, கருவுற்று இருப்பதன் அறிகுறி.

* மன அழுத்தம், ஹார்மோன் கோளாறுகள், இரத்தச் சோகை போன்றவற்றால் மாதவிடாய் ஏற்படாது. 

2. நுண்பை நிலை (பெருகு நிலை) (Follicular Phase, Proliferative Phase) :

* மாதவிடாயின் 5 ஆம் நாளினின்று, அண்டம் விடுபடும் வரை உள்ள காலகட்டம். 

* FSH, LH ஹார்மோன்களின் சுரப்பு சீராக அதிகரிக்கிறது. 

* முதல் நிலை நுண்பை செல்கள், முதிர்ந்த கிராபியன் நுண்பை செல்களாக மாறுகின்றன. 

* எண்டோமெட்ரியம் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. 

* நுண்பை செல்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது. அவற்றினின்று சுரக்கும் ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரிக்கின்றது. 

3.  அண்ட செல் விடுபடு நிலை (Ovulatory Phase) (14 ஆம் நாள்) :

* LH, FSH ஹார்மோன்கள் உச்ச நிலையை அடைகின்றன. 

* LH எழுச்சியினால் முதிர்ந்த கிராபியன் நுண்பை உடைகிறது. 

* இரண்டாம் நிலை அண்ட செல், அண்டகச் சுவர் வழியாக வயிற்றுக்குழியை அடைகிறது. இது அண்டம் விடுபடுதல் எனப்படும். 

4. லூட்டியல் அல்லது சுரப்பு நிலை (Luteral (or) Secretory Phase) :

* எஞ்சியுள்ள கிராபியன்பாலிக்கிள், கார்ப்பஸ்லூட்டியம் எனும் இடைக்கால நாளமில்லாச் சுரப்பியாகும். 

* கார்பஸ் லூட்டியம் டிரோஜெஸ்டிரானைச் சுரக்கிறது. இது கருமுட்டை பதிய ஏற்ற சூழலை உருவாக்கும். 

* கருப்பை உட்சுவர் ஊட்டச்சத்து நிறைந்த, திரவத்தை கருவிற்கு உற்பத்தி செய்கிறது. இது சுரப்பு நிலை.

* கருவுறுதல் நிகழாவிடில், கார்பஸ் லூட்டியம் சிதைந்து, கார்பஸ் அல்பிகன்ஸ் எனும் வடுவாகிறது. 



32. குழந்தை பிறப்பு மற்றும் பாலூட்டுதலில் ஆக்ஸிடோசின் மற்றும் ரிலாக்சின் ஹார்மோன்களின் பங்கினை விளக்குக.

குழந்தை பிறப்பு, பாலூட்டுதலில் ஆக்ஸிடோஸின், ரிலாக்ஸின் பங்கு. 

ரிலாக்ஸின் : 

* ரிலாக்ஸின் இடுப்பு எலும்பு மூட்டுக்களைத் தளர்வடையச் செய்கிறது. 

* கருப்பையின் வாய்ப்பகுதியை, வலிமையான சுருக்கங்களால் விரிவடையச் செய்கிறது. 

ஆக்ஸிடோஸின் : 

* பால் சுரப்பியின் மீச்சிறு கதுப்புக்களிலிருந்து, விசையுடன் பாலை வெளித்தள்ள ஆக்ஸிடோஸின் உதவுகின்றது. இது நிர்ப்பந்த அனிச்சைச் செயல் (Let Down Reflex) எனப்படும். 

* கருப்பையை, கர்ப்ப காலத்தின் முந்தைய நிலைக்கு மாற்றுகின்றது. 



33. கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் கண்டறிந்து 'அ', 'ஆ', 'இ' மற்றும் 'ஈ' எனக் குறியிடப்பட்டுள்ள பாகங்களின் பெயர்களைக் குறிக்க.


அ) விட்டலின் சவ்வு 

ஆ) உட்கரு 

இ) சோனா பெலூசிடா 

ஈ) கரோனா ரேடியேட்டா



34. கீழேயுள்ள படத்தில் பெண்ணின் அண்டகத்தில் ஏற்படும் தொடர் நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன.


அ) அண்ட செல் விடுபடும் படத்தை அடையாளம் கண்டு, அண்ட செல் உருவாக்கத்தில் அது எந்த நிலையைக் குறிக்கிறது என்பதையும் கண்டறிக. 

ஆ) மேற்கண்ட நிகழ்வுகளுக்குக் காரணமான அண்டக மற்றும் பிட்யூட்டரி ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக. 

இ) அதே நேரத்தில், எதிர் பார்க்கப்படும் கருப்பை மாற்றங்களை விளக்குக. 

ஈ) C மற்றும் H நிலைகளுக்கிடையேயுள்ள வேறுபாட்டை எழுதுக. 

விடை :

அ) அண்ட செல் விடுபடுநிலை 

ஆ) அண்டக ஹார்மோன்கள் - புரோஜெஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன் 

பிட்யூட்டரி ஹார்மோன் - FSH - நுண்பை செல்களை தூண்டும் ஹார்மோன்

                       -  LH - லூட்டினைசிங் ஹார்மோன் 

இ) i) எண்டோமெட்ரியம் புதுப்பிக்கப்படுதல். 

ii) கருமுட்டை பதிவதற்கு ஏற்ற சூழலை கருவுறுதல் உண்டாக்கும், 

iii) கருப்பையின் உட்சுவர் ஊட்டச்சத்து நிறைந்த திரவத்தை உற்பத்தி செய்கிறது. இது 'சுரப்பு நிலையில்' நடக்கிறது. 

ஈ) C - இரண்டாம் நிலை நுண்பை செல்கள்.

H - கார்பஸ் லூட்டியம். 

 இரண்டாம் நிலை நுண்பை செல்கள்

1. நுண்பை நிலையில் காணப்படும்.

2. இவற்றைச் சுற்றி கிரானுலோசா செல்களும், தீகா அடுக்கும் காணப்படும்.

3. இவை மூன்றாம் நிலை நுண்பை செல்களாகி, பின்னர் முதிர்ந்த கிராபியன் பாலிகிள்களாகின்றன.

கார்பஸ் லூட்டியம்

1. இவை லூட்டியல் நிலையில் உருவாகும். 

2. இந்த இடைக்கால நாளமில்லாச் சுரப்பி, புரோஜெஸ்டிரானைச் சுரக்கின்றது. 

3. கருவுறுதல் நிகழாவிடில், இது கார்பஸ் அல்பிகன்ஸ் என்ற வடுத்திசுவை உருவாக்கும்.





Tags : Book Back Important Questions Answers | Choose the Correct Answers | Short, brief Answers புத்தக வினாக்கள் | சரியான விடையைத் தேர்ந்தெடு | குறுகிய வினா விடை.
12th Zoology : Chapter 2 : Human Reproduction : Human Reproduction: Questions and Answers (Evaluation) Book Back Important Questions Answers | Choose the Correct Answers | Short, brief Answers in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 2 : மனித இனப்பெருக்கம் : மனித இனப்பெருக்கம் : வினா விடை - புத்தக வினாக்கள் | சரியான விடையைத் தேர்ந்தெடு | குறுகிய வினா விடை : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 2 : மனித இனப்பெருக்கம்