வளரிளம் பருவமடைதல் | அலகு 20 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - இரண்டாம்நிலை பால் பண்புகள் | 8th Science : Chapter 20 : Reaching the age of Adolescence
இரண்டாம்நிலை பால் பண்புகள்
இரண்டாம்நிலை பால் பண்புகள் ஆண்கள் மற்றும் பெண்களிடையே உடல்
அமைப்பில் வேறுபாட்டை ஏற்படுத்துகின்றன. ஆண்களில் விந்தகங்களால் சுரக்கப்படும் டெஸ்ட்டோஸ்டீரான்
அல்லது சுரக்கப்படும் ஆண்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோனாலும், பெண்களில் அண்டகங்களால் ஈஸ்ட்ரோஜன்
ஹார்மோனாலும் இரண்டாம்நிலை பால் பண்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன். குரல்வளையின்
வளர்ச்சி, தசை வளர்ச்சி, எலும்பின் அளவு மற்றும் உடல் மற்றும் பிறப்புறுப்பின் வெளிப்பகுதியில்
உரோமத்தின் தோற்றம், வியர்வை சுரப்பிகளின் தூண்டுதல் ஆகியவற்றிற்கு ஆண்ட்ரோஜன் காரணமாக
உள்ளது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரான் ஆகியவை பெண் இனப்பெருக்க ஹார்மோன்களாகும்.
இவை மார்பக வளர்ச்சியையும், பிறப்புறுப்பின் வெளிப்புறப் பகுதி மற்றும் அக்குள் பகுதியில்
காணப்படும் உரோம வளர்ச்சியையும், உடலில் அதிகரிப்பதையும் தூண்டுகின்றன.
1. ஆண்களில்
இரண்டாம்நிலை பால் பண்புகள்
ஆண்களில் தோன்றும் இரண்டாம்நிலை பால் பண்புகள் பின்வருமாறு.
அ. உரோமம்
முதல்நிலை பால் பண்புகளின் வளர்ச்சிக்குப் பின், கை அக்குள்
மற்றும் பிறப்புறுப்பின் வெளிப்புறப் பகுதியில் உரோம வளர்ச்சி தோன்றுகிறது. மெலும்
மற்ற பகுதிகளிலும், முகத்திலும் உரோம வளர்ச்சி ஏற்படுகிறது.
ஆ. தோல்
தோல் கடினத் தன்மை அடைவதுடன், தோலில் காணப்படும் துளைகள் பெரிதாகின்றன.
இ. சுரப்பிகள்
தோலில் காணப்படக்கூடிய எண்ணெய்ச் சுரப்பிகள் பெரிதாவதால் முகத்தில்
முகப்பருக்கள் தோன்றுகின்றன.
ஈ. குரல்
இப்பருவத்தில் குரலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. குரல் கரகரப்பாகின்றது.
பின்னர் சுருதி குறைந்து, ஒலியின் அளவு அதிகரிக்கின்றது.
உ தசை
தசைகளின் பலம் அதிகரிக்கின்றது. இவை கைகள், கால்கள் மற்றும்
தோள்பட்டைகளுக்கு வடிவத்தை அளிக்கின்றன.
பருவமடைதல்
நிகழும் போது, குரல்வளையின் வளர்ச்சியானது பெண்களைவிட ஆண்களில் அதிகமாக உள்ளது. ஆண்களில்
வளர்ந்து பெரிதாகி வெளியே துருத்திக் கொண்டிருக்கும் குரல் ஒலிப் பெட்டகமானது ஆடம்ஸ்
ஆப்பிள் எனப்படுகிறது. இதனால், குரலானது ஆழமாகவும், கரகரப்பாகவும் காணப்படுகிறது. இது
முக்கியமாக வளரிளம் பருவத்தில் சுரக்கக்கூடிய சில ஆண் இன ஹார்மோன்களால் (ஒழுங்குபடுத்தும்
வேதிப்பொருள்கள்) ஏற்படுகின்றது. இதன் விளைவாக, குருத்தெலும்புடன் இணைந்துள்ள தசைகள்
(குரல்வளை) தளர்ச்சியுற்று தடிமனாகின்றன. இந்த தளர்ச்சியுற்ற தடித்த குரல்வளைப் பகுதிக்குள்
காற் நுழையும் போது கரகரப்பான ஒலியானது உருவாகின்றது. பெண்களில் குரல்வளை சிறியதாக
இருப்பதால் அது வெளியில் தெரிவதில்லை. எனவே, குரலானது உரத்த சுருதியுடன் காணப்படுகிறது.
2. பெண்களில்
இரண்டாம்நிலை பால் பண்புகள்
பருவமடைதலின்போது பெண்களில் பின்வரும் இரண்டாம்நிலை பால் பண்புகள்
தோன்றுகின்றன.
அ. இடுப்பு
இடுப்பு எலும்பு விரிவடைவதாலும், தோலுக்கடியில் உருவாகும் கொழுப்பினாலும்,
இடுப்புப் பகுதியானது அகன்று, பரந்து காணப்படுகிறது.
ஆ. மார்பகம்
இடுப்புப் பகுதி விரிவடைந்தவுடன், மார்பகம் வளர்ச்சியுறத் தொடங்குகிறது.
இ. உரோமம்
இடுப்பு மற்றும் மார்பக வளர்ச்சிக்குப் பிறகு உரோம வளர்ச்சி
ஏற்படுகிறது. அக்குள் பகுதி மற்றும் பிறப்புறுப்பின் வெளிப்புறப் பகுதியில் உரோம வளர்ச்சி
ஏற்படுகிறது.
ஈ. தோல்
ஆண்களுக்கு ஏற்படுவது போலவே பெண்களிலும் தோல் கடினமாகிறது. தோலில்
காணப்படும் துளைகள் பெரிதாகின்றன.
உ. குரல்
குரலானது உரத்த மற்றும் கீச்சிடும் ஒலியாகின்றது. குரல் ஒலி
மாறுபடுவதில்லை.
ஊ. தசைகள்
தசைகளின் அதிகப்படியான வளர்ச்சி காரணமாக கைகள், கால்கள் மற்றும்
தோள்பட்டை ஆகியன வடிவம் பெறுகின்றன.
எ. எண்ணெய்ச் சுரப்பி
எண்ணெய்ச் சுரப்பிகள் செயல்படத் துவங்குவதால் பருக்கள் உண்டாகின்றன.
செயல்பாடு 2
கீழ்க்காணும்
வினாக்களுக்கு விடையளி.
.உனது
குரலில் மாற்றம் உண்டாகிறதா?
.உனது
முகத்தில் பருக்கள் தோன்றுகின்றனவா?
உன்னுடைய
உடலில் சில மாற்றங்கள் உண்டாவதாக நீ உணர்கிறாயா?
இந்த
மாற்றங்கள் உனது வளர்ச்சியில் இயல்பானவை. உன் ஆசிரியர் அல்லது ஆலோசகருடன் கலந்துரையாடி
உன் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளவும்.
வளரிளம்
பருவத்தில் வியர்வை மற்றும் தோலுக்கு அடியில் காணப்படக்கூடிய சுரப்பிகளின் (எண்ணெய்ச்
சுரப்பிகள்) செயல்பாடு அதிகரிப்பதால் அவற்றின் சுரப்பு அதிகரிக்கின்றது. தோலில் காணப்படக்கூடிய
இத்தகைய சுரப்பிகளின் அதிகப்படியான சுரப்பின் காரணமாக பல ஆண்கள் மற்றும் பெண்களின்
முகத்தில் பருக்கள் தோன்றுகின்றன. கூடுதல் சுரப்பு காரணமாக சில நேரங்களில் அவர்களின்
உடலிலிருந்து நாற்றமும் உருவாகிறது.