பாறை மற்றும் மண் | அலகு 1 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மண் மற்றும் அதன் உருவாக்கம் | 8th Social Science : Geography : Chapter 1 : Rocks and Soils
மண் மற்றும்
அதன் உருவாக்கம்
மண் என்பது
பல்வகை கரிமப்பொருள்கள், கனிமங்கள், வாயுக்கள், திரவப் பொருள்கள் மற்றும் பல உயிரினங்கள்
கலந்த கலவையாகும். இது உயிரினங்கள் வாழ துணைபுரிகிறது. மண்ணில் உள்ள கனிமங்கள் மண்ணை
உருவாக்கும் ஒரு அடிப்படை காரணியாகும். புவிபரப்பின் மேல் மண் உருவாவதால் இது
"புவியின் தோல்" (Skin of the Earth) என்று அழைக்கப்படுகிறது. பாறைகள், வானிலை
சிதைவு மற்றும் அரித்தல் செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படும் பொழுது மண்ணாக உருவாகிறது.
நீர், காற்று, வெப்ப நிலைமாறுபாடு, புவி ஈர்ப்பு விசை, வேதிபரிமாற்றம், உயிரினங்கள்
மற்றும் அழுத்த வேறுபாடுகளால் தாய்ப்பாறைகள் சிதைவுறுகின்றன. மேலும், தாய்ப்பாறையை
தளர்ந்த பாறைகளாக மண் மாற்றுகின்றன. காலப்போக்கில் இப்பாறைகள் உடைபட்டு மிருதுவான துகள்களாக
மாறுகிறது. இந்தச் செயல்முறைகள் பாறைத் துகள்களிலிருந்து தாதுக்கள் வெளிப்படக் காரணமாகின்றன.
பின்னாளில் தாவரங்கள் வளர்ந்து அம் மண்ணிற்கும் இலைக்கும் சத்தை ஊட்டுகின்றன. இச்சீரான
செயல்முறைகள் மண்ணை வளமடையச் செய்கின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ஆம் நாள் உலக மண் நாளாக கொண்டாடப்படுகிறது.
மண்ணின் கூட்டுப் பொருள்கள் (Soil Composition)
மண்ணின்
கூட்டுப் பொருள்களான கனிமங்கள், கரிமப்பொருள்கள், நீர், மற்றும் காற்று ஆகும். பொதுவாக
மண்ணில் கனிமங்கள் 45% கரிமப்பொருள்கள் 5%, நீர் 25% மற்றும் காற்று 25% கொண்டுள்ளது.
மண்ணின் கலவையானது இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் வேறுபடுகிறது.
மண்ணின் குறுக்கமைப்பு (Soil Profile)
மண்ணின்
குறுக்கமைப்பு என்பது புவி மேற்பரப்பிலிருந்து தாய் பாறை வரை உள்ள மண் அடுக்குகளின்
செங்குத்து குறுக்கு வெட்டுத் தோற்றமாகும்.
செயல்பாடு
தங்கள் பகுதியிலுள்ள பல்வேறு மண் மாதிரிகளைச் சேகரித்து உனது வகுப்பறையில்
காட்சிப்படுத்தவும்.)
மண்ணின் வகைபாடு
மண் உருவாகும்
விதம், அவற்றின் நிறம் பௌதீக மற்றும் இரசாயன பண்புகளின் அடிப்படையில் ஆறு பெரும் பிரிவுகளாக
வகைப்படுத்தப்படுகின்றன.
அவைகள்
பின்வருமாறு,
1. வண்டல்
மண்
2. கரிசல்
மண்
3. செம்மண்
4. சரளை
மண்
5. மலை
மண்
6. பாலை
மண்
1. வண்டல் மண்
வண்டல் மண் ஆற்றுச் சமவெளிகள், வெள்ளச் சமவெளிகள், கடற்கரைச் சமவெளிகளில் காணப்படுகிறது. இவை ஓடும் நீரின் மூலம் கடத்தப்படும் நுண்ணிய துகள்களால் படிய வைக்கப்பட்டு உருவாகிறது. இது மற்ற மண் வகைகளைக் காட்டிலும் வளம்மிக்கது. இது நெல், கரும்பு, கோதுமை, சணல் மற்றும் மற்ற உணவுப் பயிர்கள் பயிரிட ஏற்றது.
2. கரிசல் மண்
கரிசல்
மண், தீப்பாறைகள் சிதைவடைவதால் உருவாகின்றன. கரிசல் மண் இயற்கையிலேயே களிமண் தன்மையையும்,
ஈரப்பதத்தையும் தக்க வைத்துக் கொள்ளும் திறன் கொண்டது. கரிசல் மண்ணில் பருத்திப் பயிர்
நன்கு வளரும்.
3. செம்மண்
செம்மண்,
உருமாறியப் பாறைகள் மற்றும் படிகப் பாறைகள் ஆகியவை சிதைவடைவதால் உருவாகிறது. இம்மண்ணில்
உள்ள இரும்பு ஆக்சைடு அளவைப் பொருத்து மண்ணின் நிறமானது பழுப்பு முதல் சிகப்பு நிறம்
வரை வேறுபடுகிறது இம்மண் பொதுவாக அரை வறண்ட பிரதேசங்களில் காணப்படுகிறது. இது வளம்
குறைந்த மண்ணாக இருப்பதால் தினைப் பயிர்கள் பயிரிட ஏற்றது.
4. சரளை மண்
சரளை
மண் அயனமண்டல பிரதேச காலநிலையில் உருவாகிறது. இம்மண் அதிக வெப்பநிலை மற்றும் அதிக மழைப்பொழிவு
கொண்ட பகுதிகளில் சுவருதலின் (Leaching) செயலாக்கத்தினால் உருவாவதால் இம்மண் வளம் குறைந்து
காணப்படுகிறது. இது தேயிலை, காப்பி போன்ற தோட்டப் பயிர்கள் பயிரிட ஏற்றது.
5. மலை மண்
மலைமண்,
மலைச்சரிவுகளில் காணப்படுகிறது. இப்பகுதிகளில் கார தன்மையுடன் குறைந்த பருமன் கொண்ட
அடுக்காக உள்ளது. உயரத்திற்கு ஏற்றவாறு இம்மண்ணின் பண்புகள் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன.
6. பாலை மண்
பாலை
மண் அயன மண்டல பாலைவனப் பிரதேசங்களில் காணப்படுகிறது. இது உவர்தன்மை, மற்றும் நுண்துளைகளைக்
கொண்டது. வளம் குறைந்த இம்மண்ணில் வேளாண்மையை மேற்கொள்ள இயலாது.
மண்ணரிப்பு
மண்ணரிப்பு
என்பது இயற்கை காரணிகள் மற்றும் மனித செயல்பாடுகளினால் மண்ணின் மேலடுக்கு நீக்கப்படுதல்
அல்லது அரிக்கப்படுதல் ஆகும். மண்ண ரிப்பு மண்ணின் வளத்தை குறைத்து வேளாண்மை உற்பத்தியைக்
குறைக்கிறது. ஓடும் நீர் மற்றும் காற்று மண்ணரிப்புக்கு முக்கிய காரணிகளாக உள்ள ன.
அடுக்கு அரிப்பு (Sheer Erosion), ஓடை அரிப்பு (Rill Erosion) மற்றும் நீர் பள்ள அரிப்பு
(Gully Erosion) ஆகியவை மண்ண ரிப்பின் முக்கிய வகைகள் ஆகும்.
மண் உருவாக எவ்வளவு காலம் ஆகும்?
காலநிலையைப்
பொருத்து மண் உருவாகிறது. மித வெப்பமண்டல காலநிலைப் பிரதேசங்களில் 1 செ.மீ மண் உருவாக
200 முதல் 400 வருடங்கள் ஆகும். அயன மண்டல ஈரக் காலநிலைப் பகுதிகளில் மண் விரைவாக உருவாகிறது.
இதற்கு சுமார் 200 வருடங்கள் ஆகும். நன்கு வளமான மண் உருவாக ஏறத்தாழ 3000 வருடங்கள்
ஆகும்.
மண்ணின் அடுக்கு
O - இலை மக்கு அடுக்கு - இந்த அடுக்கு கரிமப் பொருட்களால் உருவானவை (இலைகள், சருகுகள், கிளைகள், பாசிகள் போன்ற)
A - மேல்மட்ட அடுக்கு - கரிம மற்றும் கனிமப் பொருட்களால் ஆன அடுக்கு
E- உயர்மட்ட அடுக்கு - இவ்வடுக்கு உயர்மட்ட அடுக்காகும். அதிக அளவு சுவர்தலுக்கு (Leaching), உட்பட்ட அடுக்கு, களிமண், இரும்பு மற்றும் அலுமினிய ஆக்ஸைடு போன்ற தாதுக்கள் இவ்வடுக்கில் கனிசமாக காணப்படுகின்றன.
B- அடி மண் - இவ்வடுக்கு தாய்பாறையின் இரசாயன, (அ) பௌதீக மாற்றத்திற்கு உட்பட்டவை. இரும்பு, களிமண், அலுமினிய ஆக்ஸைடு மற்றும் கனிமப் பொருட்களால் தோன்றிய அடுக்கு அல்லது திரள் மண்டலம் (Zone of Accumulation) என அழைக்கப்படுகிறது
C- தாய்பாறை அடுக்கு - இவ்வடுக்கில் தாய்ப்பாறைகள் குறைந்த அளவே சிதைக்கப்படுகின்றன.
R- சிதைவடையாத தாய்ப்பாறை - இவ்வடுக்கு சிதைவடையாத அடிமட்ட பாறையாகும்.
மண் வளப்பாதுகாப்பு
மண் வளப்பாதுகாப்பு
என்பது மண் அரிப்பிலிருந்து பாதுகாத்து மண் வளத்தை மேம்படுத்தும் செயல்முறையாகும்.
காடுகள் வளர்த்தல், மேய்ச்சலை கட்டுப்படுத்துதல், அணைகளைக் கட்டுதல், பயிற்சுழற்சி
முறை, பட்டை முறை வேளாண்மை (strip farming) நிலத்தில் சம உயரத்திற்கு ஏற்ப உழுதல்,
படிக்கட்டு முறை வேளாண்மை, இடம்பெயர்வு வேளாண்மை தடுத்தல், மரங்கள் வளர்த்து காற்றின்
வேகத்தை குறைத்தல் போன்ற முறைகளைக் கொண்டு மண் வளத்தை பாதுகாக்கலாம்.
மண்ணின் பயன்கள்
•மண்
என்பது ஒரு முக்கியமான இயற்கை வளங்களில் ஒன்று.
•மண்
புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கும் தாவரங்கள் வளர்வதற்கும் அடிப்படையாக உள்ளது.
•மண்ணில்
உள்ள கனிமங்கள், பயிர்கள் மற்றும் தாவரங்களை ஊட்டமாக வளரச் செய்கின்றன.
•மண்,
பீங்கான்கள் மற்றும் மண் பொருள்கள் தயாரிக்க பயன்படுகிறது.
•கைவினைப்
பொருள்கள் மற்றும் கட்டுமான வேலைப்பாடுகளுக்கு மண் ஆதாரமாக உள்ளது.
•இது
இயற்கை முறையில் நீரை வடிகட்டவும் சுத்திகரிக்கவும் பயன்படுகிறது.
•மண் சுற்றுச்சூழலுக்கும், நில மேலாண்மைக்கும் துணைப்புரிகிறது.
பாறைகள் மற்றும் மண் வகைகள் புதுப்பிக்கத்தக்க இயற்கை
வளங்கள் ஆகும். இவை இரண்டும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும்
முக்கிய பங்காற்றுகின்றன. தற்போது பாறைகள் சார்ந்த தொழிலகங்கள் அதிகரித்துள்ளதால் குறிப்பிடத்தக்க
அளவு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கின்றன. மக்களின் குடியிருப்புகள் மற்றும் பொருளாதார
நடவடிக்கைகளுக்கும், மண் ஆதாரமாக உள்ளது. வேளாண்மை நாடான இந்தியாவில் முறையான மண்வள
மேலாண்மை மூலம் நிலைநிறுத்தக் கூடிய உணவு உற்பத்தி வளர்ச்சி மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கு
வழிவகுக்கிறது. ஆகவே நாம் மண் வளத்தை கட்டாயம் பாதுகாக்க வேண்டும்.