Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | துணைப்பாடம்: மகனுக்கு எழுதிய கடிதம்

நா. முத்துக்குமார் | இயல் 8 | 9 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: மகனுக்கு எழுதிய கடிதம் | 9th Tamil : Chapter 8 : Enthalai kadane

   Posted On :  19.08.2023 09:19 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே

துணைப்பாடம்: மகனுக்கு எழுதிய கடிதம்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே : துணைப்பாடம்: மகனுக்கு எழுதிய கடிதம் - நா. முத்துக்குமார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

அறம் -

விரிவானம்

மகனுக்கு எழுதிய கடிதம்

- நா. முத்துக்குமார்



நுழையும்முன்

தொலைவில் உள்ளோருக்குக் கருத்தைத் தெரிவிக்கப் புகையில் தொடங்கி ஒலியில் வளர்ந்து விலங்குகள், பறவைகள், மனிதர்கள் எனப் பலராலும் தொடர்ந்து அஞ்சலில் நிலைபெற்றுள்ளோம் நாம். அதுவே இன்று மின்னஞ்சல் உள்ளிட்ட புதுப்புதுப் படிமலர்ச்சிகளில் வளர்ந்து கொண்டே இருக்கிறது. பரிமாற்றங்கள் எவ்வாறாக இருப்பினும் உயர்வான கருத்தும் உயிர்ப்புள்ள மொழியுமே செய்தி அளிப்பவருக்கும் பெறுபவருக்குமான உறவுப்பாலத்தை உறுதியாக்குகிறது! கவிஞர் நா. முத்துக்குமார், தம் மகனுக்கு எழுதுவதாக அமைந்த இக்கடிதம், பிள்ளை வளர்ப்பில் தாயுமானவராகத் திகழ்ந்த ஒருவரை நமக்குக் காட்டிச் செல்கிறது.



அன்புள்ள மகனுக்கு, அப்பா எழுதுவது. இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். இதைப் படித்துப் புரிந்துகொள்ளும் வயதில் நீ இல்லை . மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக்கொண்டு இருக்கிறாய். உன் மொழியில் உனக்கு எழுத, நான் கடவுளின் மொழியை அல்லவா கற்க வேண்டும்.

என் பிரியத்துக்குரிய பூங்குட்டியே! உன் மெத்தென்ற பூம்பாதம் என் மார்பில் உதைக்க... மருத்துவமனையில் நீ பிறந்ததும் உனை அள்ளி என் கையில் கொடுத்தார்கள். என் உதிரம் உருவமானதை, அந்த உருவம் என் உள்ளங்கையில் கிடப்பதை, குறுகுறு கை நீட்டி என் சட்டையைப் பிடித்து இழுப்பதை, கண்ணீர் மல்கப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

உலகிலேயே மிகப்பெரிய இன்பம் எது?.... "தம் மக்கள் மெய் தீண்டல் உயிர்க்கு இன்பம்" என்கிறார் வள்ளுவர். நீ எம் மெய் தீண்டினாய், மெய்யாகவே மெய்யாகவே நான் தூள் தூளாக உடைந்து போனேன். உன் பொக்கை வாய்ப் புன்னகையில் நீ என்னை அள்ளி அள்ளி எடுத்து மீண்டும் மீண்டும் ஒட்டவைத்துக்கொண்டு இருந்தாய்.

நீ அழுதாய்; சிரித்தாய்; சிணுங்கினாய்; குப்புறக் கவிழ்ந்து, தலை நிமிர்ந்து, அந்தச் சாகசத்தைக் கொண்டாடினாய். தரை எல்லாம் உனதாக்கித் தவழ்ந்தாய். தகப்பன் விரல் பிடித்து எழுந்தாய். நீயாகவே விழுந்தாய். தத்தித் தத்தி நடந்தாய். தாழ்வாரம் எங்கும் ஓடினாய். மழலை பேசி, மொழியை ஆசீர்வதித்தாய்.

என் பொம்முக்குட்டியே! இந்த எல்லாத் தருணங்களிலும் நீ நம் வீட்டுக்கு இறைவனை அழைத்து வந்தாய்.

என் செல்லமே! இந்த உலகமும் இப்படித்தான். அழ வேண்டும். சிரிக்க வேண்டும். சிணுங்க வேண்டும். குப்புறக் கவிழ்ந்து, பின் தலை நிமிர்ந்து, அந்தச் சாகசத்தைக் கொண்டாட வேண்டும். தரை எல்லாம் தனதாக்கித் தவழ வேண்டும். எழ வேண்டும். விழ வேண்டும். தத்தித் தத்தி நடக்க வேண்டும். வாழ்க்கை முழுக்க இந்த நாடகத்தைத்தான் நீ வெவ்வேறு வடிவங்களில் நடிக்க வேண்டும்.

என் சின்னஞ்சிறு தளிரே! கல்வியில் தேர்ச்சிகொள். அதே நேரம், அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள். தீயைப் படித்துத் தெரிந்து கொள்வதைவிட, தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக்கொண்டே இருக்கும். இறக்கும்வரை இங்கு வாழ, சூத்திரம் இதுதான், கற்றுப்பார். உடலைவிட்டு வெளியேறி, உன்னை நீயே உற்றுப்பார்.

எங்கும் எதிலும், எப்போதும் அன்பாய் இரு. அன்பைவிட உயர்ந்தது இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. உன் பேரன்பால் இந்தப் பிரபஞ்சத்தை நனைத்துக்கொண்டே இரு.

உன் தாத்தா, ஆகாய விமானத்தை அண்ணாந்து பார்த்தார். அவரது 57ஆவது வயதில்தான் அதில் அமர்ந்து பார்த்தார். உன் தகப்பனுக்கு 27ஆவது வயதில் விமானத்தின் கதவுகள் திறந்தன. ஆறு மாதக் குழந்தைப் பருவத்திலேயே நீ ஆகாயத்தில் மிதந்தாய். நாளை உன் மகன் ராக்கெட்டில் பறக்கலாம்.

இந்த மாற்றம் ஒரு தலைமுறையில் வந்தது அல்ல. இதற்குப் பின்னால் நெடியதொரு உழைப்பு இருக்கிறது. என் முப்பாட்டன் காடு திருத்தினான். என் பாட்டன் கழனி அமைத்தான். என் தகப்பன் விதை விதைத்தான். உன் தகப்பன் நீர் ஊற்றினான். நீ அறுவடை செய்துகொண்டு இருக்கிறாய். என் தங்கமே! உன் பிள்ளைக்கான விதையையும் உன் உள்ளங்கையில் வைத்திரு. உழைக்கத் தயங்காதே. உழைக்கும்வரை உயர்ந்து கொண்டு இருப்பாய்.

இதை எழுதிக்கொண்டு இருக்கையில் என் பால்ய காலம் நினைவுக்கு வருகிறது. கிராமத்தில் கூரை வீட்டிலும், பின்பு ஓட்டு வீட்டிலும் வளர்ந்தவன் நான். கோடைக் காலங்களில் வெப்பம் தாங்காமல் ஓட்டுக்கூரையில் இருந்து கொடிய தேள்கள் கீழே விழுந்துகொண்டே இருக்கும்.

தெரிந்து தெளிவோம்

கைபேசியின் வரவால் இன்று கடிதம் எழுதும் பழக்கம் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம் கடிதங்களைக் கொண்டு பல வரலாறுகளையும் இலக்கியங்களையும் பரிமாறியிருக்கிறார்கள். கடித வடிவில் புதினங்களும் எழுதப்பட்டுள்ளன. தாகூர் நேரு, டி.கே.சி., வல்லிக்கண்ணன், பேரறிஞர் அண்ணா , மு. வரதராசனார், கு. அழகிரிசாமி, கி. இராஜநாராயணன் முதலானோர் கடித வடிவில் இலக்கியங்கள் படைத்துள்ளனர்.

அதற்குப் பயந்து என் தகப்பன் என் அருகே அமர்ந்து இரவு முழுவதும் பனை ஓலை விசிறியால் விசிறிக்கொண்டே இருப்பார். இன்று அந்த விசிறியும் இல்லை. கைகளும் இல்லை. மாநகரத்தில் வாழும் நீ, வாழ்க்கை முழுக்கக் கோடைக்காலங்களையும் வெவ்வேறு வடிவங்களில் கொடிய தேள்களையும் சந்திக்க வேண்டி இருக்கும். எத்தனை காலம்தான் உன் தகப்பன் உன் அருகில் அமர்ந்து விசிறிக்கொண்டு இருப்பான்? உனக்கான காற்றை நீயே உருவாக்கப் பழகு.

வயதின் பேராற்றங்கரை உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும். சிறகு முளைத்த தேவதைகள் உன் கனவுகளை ஆசீர்வதிப்பார்கள். பெண் உடல் புதிராகும். உன் உடல் உனக்கே எதிராகும். என் தகப்பன் என்னிடம் ஒளித்து வைத்த ரகசியங்கள் அடங்கிய பெட்டியின் சாவியை நான் தேட முற்பட்டதைப்போல், நீயும் தேடத் தொடங்குவாய். பத்திரமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய தருணம் அது. உனக்குத் தெரியாதது இல்லை. பார்த்து நடந்துகொள்.

நிறையப் பயணப்படு. பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்குப் பின்னாலும் இரண்டு கண்களைத் திறந்து வைக்கின்றன. புத்தகங்களை நேசி. ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய். உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள். உன் உதிரத்திலும் அந்தக் காகித நதி ஓடிக்கொண்டே இருக்கட்டும்.

தூர்

வேப்பம்பூ மிதக்கும் 

எங்கள் வீட்டுக் கிணற்றில் 

தூர் வாரும் உற்சவம் 

வருடத்திற்கொரு முறை 

விசேஷமாய் நடக்கும்.


ஆழ்நீருக்குள் 

அப்பா முங்க முங்க 

அதிசயங்கள் மேலே வரும்.


கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி, 

கட்டையோடு உள்விழுந்த 

துருப்பிடித்த ராட்டினம், 

வேலைக்காரி திருடியதாய் 

சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர், 

சேற்றிற்குள் கிளறி

எடுப்போம் நிறையவே.


சேறுடா... சேறுடாவென 

அம்மா அதட்டுவாள் 

என்றாலும் 

சந்தோஷம் கலைக்க 

யாருக்கு மனம் வரும்?


பகை வென்ற வீரனாய் 

தலைநீர் சொட்டச் சொட்ட 

அப்பா மேல் வருவார்.


இன்றுவரை அம்மா

கதவுகளின் பின்னிருந்துதான் 

அப்பாவோடு பேசுகிறாள். 

கடைசிவரை அப்பாவும் 

மறந்தே போனார் 

மனசுக்குள் தூரெடுக்க.

- நா. முத்துக்குமார்

கிடைத்த வேலையை விட, பிடித்த வேலையைச் செய். இனிய இல்லறம் தொடங்கு. யாராவது கேட்டால், இல்லை எனினும் கடன் வாங்கியாவது உதவி செய். அதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது.

உறவுகளிடம் நெருங்கியும் இரு, விலகியும் இரு. இந்த மண்ணில் எல்லா உறவுகளையும் விட மேன்மையானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும்.

இவை எல்லாம் என் தகப்பன் எனக்குச் சொல்லாமல் சொன்னவை. நான் உனக்குச் சொல்ல நினைத்துச் சொல்பவை.

என் சந்தோஷமே! நீ பிறந்த பிறகுதான் என் தகப்பனின் அன்பையும் அருமையையும் நான் அடிக்கடி உணர்கிறேன். நாளை உனக்கொரு மகன் பிறக்கையில், என் அன்பையும் அருமையையும் நீ உணர்வாய்.

நாளைக்கும் நாளை நீ உன் பேரன், பேத்திகளுடன் ஏதோ ஒரு ஊரில் கொஞ்சிப் பேசி விளையாடிக்கொண்டு இருக்கையில் என் ஞாபகம் வந்தால், இந்தக் கடிதத்தை மீண்டும் எடுத்துப் படித்துப்பார். உன் கண்களில் இருந்து உதிரும் கண்ணீர்த் துளியில் வாழ்ந்து கொண்டு இருப்பேன் நான்.

இப்படிக்கு, 

உன் அன்பு அப்பா.

Tags : by na. Muthukumar | Chapter 8 | 9th Tamil நா. முத்துக்குமார் | இயல் 8 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 8 : Enthalai kadane : Supplementary: Makanuku ellutheya kaditham by na. Muthukumar | Chapter 8 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே : துணைப்பாடம்: மகனுக்கு எழுதிய கடிதம் - நா. முத்துக்குமார் | இயல் 8 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே