Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | துணைப்பாடம்: மங்கையராய்ப் பிறப்பதற்கே...

இயல் 7 | 10 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: மங்கையராய்ப் பிறப்பதற்கே... | 10th Tamil : Chapter 7 : Vithai nel

   Posted On :  22.07.2022 02:44 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல்

துணைப்பாடம்: மங்கையராய்ப் பிறப்பதற்கே...

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல் : துணைப்பாடம்: மங்கையராய்ப் பிறப்பதற்கே... | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

நாடு

விரிவானம்

மங்கையராய்ப் பிறப்பதற்கே...



நுழையும்முன்

உலகம் பரந்து விரிந்த திடல்; அதில் ஆடுவாரும் உளர்; பாடுவாரும் உளர்: பிறதிறன் காட்டுவாரும் உளர்; இவர்களுள் வென்றாரே மிகுதி; இதனையே ஆளுமை என்கிறோம். அத்தகைய ஆளுமை மிக்க பெண்களுள் சிலர் இதோ...


பூம்பாறை, அரசு உயர்நிலைப்பள்ளி விழாக்கோலம் பூண்டிருந்தது. பெற்றோர் வருகையால் மாணவர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். சிறப்பு விருந்தினரான மாவட்ட ஆட்சியரின் உரைக்குப்பின், மாணவச் செல்வங்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்தன. மாணவியர் பாட்டு, நடனம், நாடகம் எனக் கலைவிருந்து படைத்துப் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக மாறுவேட நிகழ்வு தொடங்கியது.

தொகுப்பாளர் - தமிழரின் பெருமையை உலக அரங்கான ஐ.நா. அவையில் பரப்பும் வகையில் அங்குத் தமிழ்நாட்டின் செவ்வியல் இசையைப் பாடியவர்; 'காற்றினிலே வரும் கீதமாய்' மக்கள் மனத்தில் நீங்கா இடம்பெற்றவர்; இசைப்பேரரசி என்று நேரு பெருமகனாரால் அழைக்கப்பட்ட எம்.எஸ். சுப்புலட்சுமியாகப் பேச வருகிறார் பத்தாம் வகுப்பு மாணவி முகில்நாச்சி.

முகில்நாச்சி (எம்.எஸ்.சுப்புலட்சுமி - நான் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. நான் இசைச் சூழலில் வளர்ந்தேன். வீணைக் கலைஞரான என் தாயே எனக்கு முதல் குரு. பத்து வயதில் இசைத்தட்டுக்காகப் பாடலைப் பாடிப் பதிவு செய்தேன். இசை மேதைகளின் வழிகாட்டுதல்களில் என்னை வளர்த்துக்கொண்டேன்.


ஐந்தாம் வகுப்பு வரைதான் கல்வி பயிலும் வாய்ப்புக் கிட்டியது. பதினேழு வயதில் சென்னை மியூசிக் அகாதெமியில் மேதைகள் பலர் முன்பு கச்சேரி செய்து பாராட்டைப் பெற்றேன். திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு என்னைத் தேடிவந்தது. எனக்கு மீரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. அது எனது கடைசித் திரைப்படமாகவும் அமைந்தது. இந்தியா முழுவதிலும் உள்ள பலரின் பாராட்டுகளையும் பெற்றேன். காற்றினிலே வரும் கீதம், பிருந்தாவனத்தில் கண்ணன் முதலிய பாடல்களுக்கு மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்தது. ஜவகர்லால் நேரு, சரோஜினி நாயுடு போன்ற பெரியோர் பாராட்டியதைப் பெருமையாகக் கருதுகிறேன்.

ஒருமுறை காந்தியடிகளைத் தில்லியில் சந்தித்தபோது ‘இரகுபதி இராகவ இராஜாராம்’ என்ற பாடலைப் பாடினேன். என்னைப் பாராட்டிய அண்ணல், மீரா எழுதிய பாடல் ஒன்றைக் குறிப்பிட்டுப் பாடச் சொன்னார். பின் சிறிது நாள்களில் முனைந்து அந்தப் பாடலைக் கற்றுப் பயிற்சி செய்தேன். சென்னை வானொலி, 1947இல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று அப்பாடலை ஒலிபரப்பியது. அப்பாடல் ‘ஹரி தும் ஹரோ’ என்னும் மீரா பஜன்.

1954இல் நான் தாமரையணி விருது பெற்றபோது, என்னைத் தொட்டுத் தடவிப் பாராட்டிய பார்வையிழந்த ஹெலன் கெல்லரை என்னால் மறக்கமுடியாது! 1963 இல் இங்கிலாந்திலும் 1966இல் ஐ.நா. அவையிலும் பாடினேன்.

இதே ஆண்டில் என் குரலில் பதிவு செய்யப்பட்ட வெங்கடேச சுப்ரபாதம் திருப்பதியில் ஒலிக்கத்தொடங்கியது.

1974இல் நோபல் பரிசுக்கு இணையான மகசேசே விருது என் இசைக்குக் கிடைத்த மகுடம். இவ்விருது பெறும் முதல் இசைக் கலைஞராகவும் ஆனேன்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும்கூடப் பாடியுள்ளேன். இந்தியா, மிக உயரிய விருதான 'இந்திய மாமணி' விருதளித்து என்னைச் சிறப்பித்தது.

என்னுடைய பல இசைக் கச்சேரிகள் ஏதாவது ஒரு அமைப்பின் நன்கொடைக்காக நடந்தவை என்பது எனக்குப் பெரும் மகிழ்வை அளிக்கிறது. ஒரு பெண் நினைத்தால், முயன்றால், முன்னேறலாம், வெல்லலாம். நீங்களும் முயலுங்கள்; முன்னேறுங்கள்; வெல்லுங்கள்.

தொகுப்பாளர் - தாழம்பூ குங்குமமிட்ட மலர்ச்சியான முகம், புன்னகை தவழ... நீலப் பட்டுப்புடவையின் ஒளியில் ..... வெள்ளிக்கம் பிகள் மின்னுவது போல் தலைமுடியில் இடையிடையே வெள்ளைமுடி.... கையில் ஒலி வாங்கி... தம்புரா சுருதி கூட்ட ராகமாலிகாவில்,

குறையொன்று மில்லை மறைமூர்த்தி கண்ணா

குறையொன்று மில்லை கோவிந்தா...

என்று இசைத்துவந்து நம்முன் எம்.எஸ்.சுப்பு லட்சுமியாகவே தோன்றிய மாணவிக்கு நன்றி.

நம் நிகழ்வில் அடுத்ததாக, பொதுவெளியில் ஆடுவது தண்டனைக்குரிய குற்றம் எனும் சட்டம் இயற்றப்பட்டிருந்த காலத்தில் நடன வாழ்வைத் தொடங்கியவர்; நாட்டியம் ஆடுவது கீழ்மையானது என்ற எண்ணம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பரவலாக இருந்து வந்த நிலையை மாற்றியவர்; இவர் இந்திய அரசின் தாமரைச் செவ்வணி விருது பெற்றவர்; அவர் யாரென்ற உங்கள் வினாவுக்கு விடையாக நம் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி மோகனா, பாலசரசுவதியாக தோன்றுகிறார். (கரவொலி)

மோகனா (பாலசரஸ்வதி) - வணக்கம்.


எனக்கு ஏழு வயதாக இருக்கும்போது காஞ்சிபுரத்தில் பரத நாட்டிய அரங்கேற்றத்திற்காக முதன் முதலில் மேடை ஏறினேன். பதினைந்து வயதில் சென்னையில் உள்ள சங்கீத சமாஜம் என்னும் அரங்கில் நடன நிகழ்ச்சி நடந்தது. எனது நடனத்தைப் பார்த்த பிறகே மரபுசார் நாட்டியத்தைப் பலரும் தீவிரமாக வரவேற்கத் தொடங்கினர்.

சென்னையில் என் நாட்டியக் கச்சேரியைப் பார்க்க பண்டிட் இரவிசங்கர் அவர்கள் மிகவும் பாராட்டினார். அவரது தம்பியின் மூலமாக வட இந்தியாவின் பல படங்களில் நடனமாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, கல்கத்தாவிலும் காசியில் நடத்த அனைத்திந்திய இசை மாநாட்டிலும் சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கண்காட்சியிலும் நம் நாட்டுப் பண்ணாகிய “ஜன கண மன” பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு ஆடினேன். நாட்டுப்ண்ணுக்கு நடனமாடியது அதுவே முதலும் இறுதியுமாகும்,

ஐரோப்பா, அமெரிக்கா முதலிய வெளிநாடுகளிலும் நடன நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளேன். டோக்கியோவில் உள்ள ‘கிழக்கு மேற்கு சந்திப்பு’ நிகழ்வில் இந்தியாவின் சார்பாகக் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடினேன். இந்நிகழ்வு பரதநாட்டியத்திற்கு உலகளாவிய புகழைப் பெற்றுத் தந்தது. பரதநாட்டியக் கலையை முறையாக அணுகினால் ஆன்மிகப் பட்டறிவை நடனத்தால் வழங்க முடியும். இதை நானும் உணர்ந்து உலகிற்கும் உணர்த்தியுள்ளேன். நன்றி!

தொகுப்பாளர் - தமிழகத்தில் ஒரு காலத்தில் புறக்கணிக்கப்பட்ட கலைக்கு இந்திய அரங்கிலும் உலக அரங்கிலும் மதிப்பையும் ஏற்பையும் பெற்றுத் தந்தவர்; தமிழகத்தின் பெருமைக்குரிய கலைகளில் ஒன்றாகச் செவ்வியல் நடனம் திகழக் காரணமானவர்; அத்தகு பரதநாட்டியக் கலைஞர் பாலசரசுவதியாக வேடமிட்டு வந்த மாணவி மோகனாவிற்கு நன்றி!

இனி, அடுத்தபடியாக ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, பெண் என்ற வகையில் குடும்ப அமைப்பின் நெருக்கடிகளை எதிர்கொண்டு, தம்மை ஓர் இலக்கியவாதியாக அடையாளப்படுத்தியவர்; தமிழில் எழுதிய பெண்களில் முதன்முதலில் களத்திற்குச் சென்று மக்களிடம் செய்திகளைத் திரட்டிக் கதைகள் எழுதியவர்; புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், குறு நாவல், குழந்தை இலக்கியம், வரலாற்று நூல் என எழுத்துலகின் எல்லாத் தளங்களிலும் தடம் பதித்தவர்; வேருக்கு நீர் என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர்.

இத்தகைய பெருமைமிக்க எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனை நம் கண்களுக்குக் காட்சிப்படுத்த வருகிறார் ஒன்பதாம் வகுப்பு மாணவி வளர்மதி.

(கரவொலி)

வளர்மதி (ராஜம் கிருஷ்ணன்) - என் பள்ளிப் பருவத்தின் பசுமை மாறா நினைவுகள் நெஞ்சில் எழுகின்றன. வணக்கம்.


பெண்கள் என்றால் குடும்பக்கதை எழுதவேண்டும் என்ற படிமத்தை உடைத்துச் சமூகச் சிக்கல்களைக் கதைகளாக எழுதினேன். நான் கற்பனையாக எழுத விரும்பவில்லை. சமூகத்தில் இடர்ப்பட்ட மக்களைப் பற்றி எழுதும் முன்பு அந்த மக்கள் வாழும் பகுதிக்குள் சென்று களப்பணியாற்றிக் கதைகளாக உருவாக்கினேன்.

எப்போதும் ஓர் ஒலிப்பதிவுக் கருவியுடனேயே இருப்பேன். எனது கள ஆய்வுப் புதினங்கள் ஒவ்வொன்றும் மக்களைச் சேரவேண்டும் என்றே நினைப்பேன்.

நான் எழுதிய 'பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி' என்னும் பாரதியின் வரலாற்றுப் புதினம் அனைவராலும் பாராட்டப்பெற்ற ஒன்றாகும்.

தூத்துக்குடியில் பல மாதம் தங்கியிருந்து உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கையைக் “கரிப்பு மணிகள்” புதினமாக ஆக்கினேன், நீலகிரி, படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்களைக் குறித்து நான் பதிவு செய்ததே “குறிஞ்சித் தேன்” புதினம். கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்களைப் பேசுவதே “அலைவாய்க் கரையில்” புதினம். அமைப்புசாரா வேளாண் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதைச் சுட்டிக்காட்டியவையே “சேற்றில் மனிதர்கள்”, “வேருக்கு நீர்” ஆகிய புதினங்கள்.

உங்களைப் போன்ற குழந்தைகளைத் தீப்பெட்டித் தொழிலில் முடக்கி, தீக்குச்சிகளை அந்தப் பெட்டியில் அடைப்பதைப் போன்று, குழந்தைகளின் உடலையும் மனத்தையும் நொறுக்கும் அவல உலகைக் “கூட்டுக் குஞ்சுகள்” புதினமாக அளித்தேன்.

பெண்குழந்தைக் கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து எழுதியதே “மண்ணகத்துப் பூந்துளிகள்”. இப்படிச் சமூக அவலங்களை உற்று நோக்கி எழுத்தின் வழியாகக் கட்டவிழ்த்து உலகிற்குக் காட்டியிருக்கிறேன். எழுத்துகளில் நேர்மையான சினம். அறச் சீற்றம் இருக்கவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

வாய்ப்புக்கு நன்றி!. வணக்கம்!.

தொகுப்பாளர் - கற்பனைக் கதைகளை எழுதுவதற்குப் பதிலாகக் களத்திற்குச் சென்று, உண்மையான நிகழ்வுகளை நூல்களாகத் தந்த ராஜம் கிருஷ்ணனைப் போன்று வேடமிட்டு வந்த மாணவி வளர்மதிக்கு நன்றியைக் கூறுகின்றோம்.

உள்ள வலுவுடன் இன்றுவரை களத்தில் நிற்கும் போராளி; மதுரையின் முதல் பட்டதாரிப்பெண்: இந்திய அரசின் தாமரைத்திரு விருது, சுவீடன் அரசின் வாழ்வுரிமை விருது, சுவிட்சர்லாந்து அரசின் காந்தி அமைதி விருது எனப் பல உயரிய விருதுகளைப் பெற்றுப் பெண்குலத்திற்குப் பெருமை சேர்த்தவர்.

அவர் யார்? என அறிய ஆவலோடு இருப்பீர்கள். அவர்தாம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். இப்போது மாணவி அன்பரசி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனாகப் பேச வருகிறார். (கரவொலி)

அன்பரசி (கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்) - வணக்கம்! நாட்டின் விடுதலைக்கு முன்பு கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் போராடிக் கற்றேன். கல்லூரிப்பருவத்தில் காந்தியச் சிந்தனையில் கவரப்பட்டேன். அவரது சர்வோதய இயக்கத்தில் களப்பணி ஆற்றினேன். ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் பங்கு பெற்றேன். நாட்டின் விடுதலைக்குப் பின் கணவருடன் இணைந்து "பூதான" இயக்கத்தில் பணிபுரிந்தேன்.


“உழுபவருக்கே நில உரிமை இயக்கம்" (LAND FOR THE TILLER'S FREEDOM - LAFTI) தொடங்கி வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறுபணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்தேன்.

நான் சொல்ல விரும்புவது,

"உங்களுடைய ஆற்றலை நீங்கள் உணருங்கள்.

உங்களால் எதையும் சாதிக்க இயலும்”

என்பதுதான்.

தொகுப்பாளர் - காந்தியடிகளுடனும் வினோபாபாவேயுடனும் பணியாற்றி இன்னமும் நம் நாட்டு மக்களுக்காக உழைக்கும் கிருஷ்ணம்மாள் அம்மையாரைக் கண்முன்னே கொண்டு வந்த மாணவி அன்பரசிக்கு வாழ்த்துகள்.

இன்றைய மகளிர் நாள் விழா மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. முத்தாய்ப்பாக இவ்விழாவை மேலும் மெருகேற்ற மண்ணின் மணம் கமழ வருகிறார்; பள்ளிப்பருவத்தில் பாடம் பயிலாவிட்டாலும் பட்டறிவால் இவர் கற்றுக்கொண்டவை ஆயிரமாயிரம். எழுதப் படிக்கத் தெரியாத இவரைப்பற்றி எழுதாத ஊடகங்களே இல்லை. முதுமைப் பருவத்தில் பயணித்தாலும் இவர் இன்னும் சின்னப் பிள்ளைதான்! ஆம்!

சின்னப்பிள்ளை அம்மாவின் வேடம் ஏற்று வருபவர் நம் பள்ளியின் சின்னப்பிள்ளை ஒன்பதாம் வகுப்பு மாணவி மாதவி.

(கரவொலியுடன் மேடை ஏறுகிறார்.)

மாதவி (சின்னப்பிள்ளை) - இங்க கூடியிருக்கிற எல்லாருக்கும் வணக்கமுங்க. ரொம்ப நேரமா பார்த்துக்கிட்டு இருக்கிற எம் மனசுக்கு சொம்ப மகிழ்ச்சியா இருக்குதுங்க. நான் பள்ளிக்கூடமெல்லாம் போனதில்லிங்க.


முதல்ல பெண்கள் எல்லாம் குழுவாச் சேர்ந்தோம். விவசாய நிலத்தக் குத்தகைக்கு எடுத்தோம். கூலி வேலைக்கு ஆளுகளைச் சேர்த்து, நடவு, களையெடுப்பு, அறுவடை போன்ற வேலைகளைச் செய்தோம். வர்ற கூலிய சரிசமமா பிரிச்சுக்கொடுத்தோம். இதுல வயசானவங்களையும் மாற்றுத் திறனாளிகளையும் சேர்த்து வேலை கொடுத்து அவங்க குடும்பத்துக்கும் உதவியா இருந்தோம். இதைப்பத்திக் கேள்விப்பட்ட மதுரை மாட்ட ஆட்சியர் கண்மாய்ல மீன் பிடிக்கிற குத்தகைய எங்களுக்குக் கொடுத்தாரு. இரண்டாயிரத்து நாலாம் வருஷம் சுனாமி வந்து ஊரெல்லாம் பாதிப்பு அடஞ்சப்போ நாங்க குழுவா போயி மீட்புப் பணியெல்லாம் செஞ்சோம்.

காசு சேர்த்துக் குழு ஒண்ணு ஆரம்பிச்சு “களஞ்சியம்”னு பேர் வெச்சோம். பத்துப் பேரோட ஆரம்பிச்ச மகளிர் குழு இன்னக்கிப் பல மாநிலங்களுக்குப் போய் பல லட்சம் பேரோட வேலை செய்யுது. எத்தனையோ பேரோட குடும்பத்த இந்தக் குழுதான் தாங்கிக்கிட்டு இருக்கு. முப்பது ஆண்டுகளா முகம் சுளிக்காம வேலை செஞ்சிட்டு வர்றேன். வேற என்னத்த நான் சொல்ல? பொறப்புக்கு ஒரு பொருள் கிடைக்கிற மாதிரி வேலை செஞ்சாச்சு. நீங்க எல்லாம் நல்லாப் படிங்க. உங்க வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது பண்ணுங்க!.

தொகுப்பாளர் - சின்னப்புள்ள அம்மா, உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா? இந்தியாவின் முதன்மை அமைச்சரிடம் நீங்கள் விருது வாங்கியதைச் சொல்லவே இல்லையே!.

சின்னப்பிள்ளை - டெல்லியில விருது வாங்கும்போது, மதுரைச் சின்னப்பிள்ளைன்னு அவரு கூப்பிட்டவுடேன என் கண்ணுலேர்ந்து கண்ணீரே வந்துருச்சு. நாட்டுக்கே பெரிய தலைவர் அவரு, விருதைக் குடுத்துட்டுப் பொசுக்குனு எங்கால்ல விழுந்துட்டாரு. எனக்கு மேலுகாலெல்லாம் ஆடிப்போச்சு. நான் போயிட்டு வாரேன்! (கண்களைத் துடைத்துக் கொள்கிறார்)

தொகுப்பாளர் - நம் இந்திய நாட்டு நடுவண் முதன்மை அமைச்சராக இருந்த மாண்புமிகு. வாஜ்பாய் அவர்களின் கைகளால் பெண் ஆற்றல் விருது (ஸ்திரீ சக்தி புரஸ்கார்) பெற்றதோடு தமிழக அரசின் "ஔவை விருதையும்" தூர்தர்ஷனின் "பொதிகை விருதையும்" பெற்றுள்ளார். அண்மையில் "தாமரைத்திரு விருதையும்" பெற்றுத் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். இன்னும் மகளிரின் வாழ்வு மேம்படத் தொடர்ந்து பாடுபட்டு வருகின்ற சின்னப்பிள்ளை வேடமணிந்து வந்து தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்திய மாணவி மாதவிக்கு நன்றி!. சமுதாயத்திற்கு உழைத்த மகளிரைப்பற்றி மாறுவேடத்தில் அறிமுகப்படுத்திய நிகழ்வு இனிதே இத்துடன் நிறைவடைகின்றது.

 

கற்பவை கற்றபின்...

உங்கள் ஊரில் கடின உழைப்பாளர் - சிறப்புமிக்கவர் - போற்றத்தக்கவர் - என்ற நிலைகளில் நீங்கள் கருதுகின்ற பெண்கள் தொடர்பான செய்திகளைத் தொகுத்து வழங்குக.

குறிப்பு : பூ விற்பவர், சாலையோர உணவகம் நடத்துபவர் ......

 

Tags : Chapter 7 | 10th Tamil இயல் 7 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 7 : Vithai nel : Supplementary: Mangayaraap pirappatharke Chapter 7 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல் : துணைப்பாடம்: மங்கையராய்ப் பிறப்பதற்கே... - இயல் 7 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல்