பொருளாதாரம் - முடுக்கி கோட்பாடு | 12th Economics : Chapter 4 : Consumption and Investment Functions
முடுக்கி கோட்பாடு
தோற்றம் அஃடாலியின் (1909), ஹாட்ரி (1913) மற்றும் பிக்கர் டைக் (1914) போன்றவர்களின் கருத்துக்களை ஆராய்ந்து பெறப்பட்டது. இருந்த போதிலும், இந்த கருத்தை செம்மைப்படுத்தி மேம்படுத்தி எளிமையான முடுக்கி மாதிரியாக 1917லில் தந்தவர் ஜே.எம்.கிளார்க் ஆவார். பின்னர் இதனை வணிகச் சூழலுடன் தொடர்பு படுத்தி மேம்படுத்தியவர்கள் ஹிக்ஸ், சாமுவேல்சன் மற்றும் ஹராடு போன்றவர்களாவர்கள்.
1. பொருள்
பொருளாதாரத்தில் நுகர்வு பொருட்களின் தேவை அதிகரிக்கின்ற போது பொதுவாக இயந்திரங்களின் (முதலீட்டு பொருட்கள் ) தேவையை முடுக்கிவிட்டு அதிகரிக்க வழி செய்யும். முடுக்கி என்பது அதிகரித்த நுகர்வு மற்றும் அதன் விளைவினால் ஏற்படும் அதிகரிக்கும் முதலீட்டுக்கான தொடர்பை குறிக்கும் எண் மதிப்பு ஆகும்.
முடுக்கி விளைவுகள்
முடுக்கி (β)= ∆I/∆C
இதில் β = முடுக்கி
∆I = முதலீட்டுச் செலவில் மாற்றம் (100 என்போம்)
∆C = நுகர்வுத் தேவையில் மாற்றம் (50 என்போம்)
முடுக்கியானது முதலீட்டு மாற்றத்திற்கும் நுகர்வின் மாற்றத்திற்கும் உள்ள விகிதத்தை வெளிப்படுத்துகின்றது.
2. வரைவிலக்கணம்
"தூண்டப்பெற்ற முதலீட்டிற்கும் தொடக்கத்தில் நுகர்வுச் செலவில் ஏற்படும் மாற்றத்திற்கும் இடையேயுள்ள விகிதம்'
- கே.கே. குரிஹாரா
அனுமானமாக ₹50 கோடி நுகர்வுப் பொருட்களின் தொழில்களில் செலவு செய்யும் போது, ₹100 கோடி முதலீட்டு பொருட்கள் தொழில்களில் முதலீடு செய்ய வழி வகுக்கிறது. அப்படியானால் முடுக்கி 2 ஆகும்.
முடுக்கி = 100 / 50 = 2
3. எடுகோள்கள்
1. நுகர்வு பொருட்கள் தொழில் துறையில் எச்ச சக்தியின்மை .
2. நிலையான மூலதனம் - வெளியீடு விகிதம்
3. தேவையின் அதிகரிக்கும் தன்மை நிலையாக இருக்கும் என்று அனுமானித்தல்.
4. நிதி அளிப்பு மற்றும் மற்ற உள்ளீடுகள் நெகிழ்ச்சியுடையது.
5. மூலதனப் பொருட்கள் தேவைப்படும் அளவுக்கு பகுக்க முடியும்.
4. முடுக்கி கோட்பாடு செயல்படும் விதம்
ஒரு எளிமையான எடுத்துக்காட்டின் மூலம் முடுக்கியின் செயல்பாட்டை பின்வருமாறு விளக்கலாம். 1000 நுகர்வு பொருட்களை தயாரிப்பதற்கு 100 இயந்திரங்கள் தேவைப்படுவதாக எடுத்துக் கொள்வோம். 10 வருடங்கள் அந்த இயந்திரங்களின் வாழ்நாள் என்று கொள்வோம். அதாவது ஒவ்வொரு வருடமும் 10 எந்திரங்களை மாற்றியமைக்கப்படுகிறது. காரணம் நிலையான 1000 நுகர்வு பொருட்களை தயாரிப்பதற்காக இதனை மாற்றியமைக்கும் தேவை எனப்படுகிறது.
10 சதவீதம் அளவிற்கு (அதாவது 1000லிருந்து 1100 ஆக) நுகர்வு பொருட்களின் தேவை அதிகரிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதன் விளைவாக மேலும் 10 இயந்திரங்களின் தேவை அதிகரிக்கும். எனவே மொத்த இயந்திர தேவை 20 ஆகும். (10 மாற்றமைப்பதற்காக மற்றும் 10 அதிகரித்த தேவையை சந்திப்பதற்காக) இங்கே 10 சதவீதம் நுகர்வு பொருட்கள் தேவையானது 100 சதவீதத்திற்கு இயந்திரத்தின் தேவை அதிகரிக்கின்றது என்பது குறிக்கின்றது (10 லிருந்து 20 வரை) ஆதலால் இறுதியாக ஒரு சிறிய நுகர்வு பொருட்களின் தேவையில் மாற்றம் அதிகப்படியான முதலீட்டு மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
முடுக்கியின் செயல்பாடு
வரைப்பட விளக்கம்
SS என்பது சேமிப்பு கோடு. II என்பது முதலீட்டு கோடு E1 புள்ளியில் பொருளாதாரம் OY1 வருமானத்துடன் சமநிலையில் இருக்கிறது. சேமிப்பும் முதலீடும் OI2, ல் சமநிலையாக உள்ளது. இப்பொழுது முதலீடு OI2 லிருந்து OI4 ஆக அதிகரிக்கிறது. இது வருமானத்தை OY1 லிருந்து OY3 ஆக அதிகரிக்கிறது. E3 சமநிலைப் புள்ளியில் முதலீடு I2I4 ஆக முழுவதுமாக வெளிப்புற காரணியில் அதிகரிக்கின்றது என்றால், வருமானமும் Y1Y3 ஆக முடுக்கியின் விளைவாக அதிகரிக்கும். ஆனால் இவ்வரைப்படத்தில் வெளிபுற முதலீடு I2I3 ஆகவும், தூண்டப்பட்ட முதலீடு I3I4 ஆகவும் இருக்கிறது என்று அனுமானித்துக் கொள்வோம். ஆதலால், அதிகரித்த வருமானம் Y1Y2 ஆனது பெருக்கியின் விளைவாலும் மற்றும் அதிகரித்த வருமானம் Y2Y3 ஆனது முடுக்கியின் விளைவாலும் ஏற்படுகின்றது.
5. வரையறைகள்
1. நிலையான மூலதனம் - வெளியீடு விகிதம் என்ற எடுகோள் உண்மையானது அல்ல.
2. முழு நிலை வேலைவாய்ப்பிற்கு முன்பு வரை மட்டுமே வளங்கள் கிடைக்கும்.
3. மூலதன பொருட்கள் தொழிற்சாலையில் உபரி சக்தி உள்ளதாக அனுமானிக்கப்படுகிறது.
4. முடுக்கியானது தேவை அதிகரித்தல் நிலையானது என்ற நிலையில் மட்டுமே வேலை செய்யும்.
5. கடன் எளிதாக கிடைத்தால் மட்டுமே முடுக்கி செயல்படும்.
6. நுகர்வு பொருட்கள் தொழிலில் பயன்படுத்தாத அல்லது மிகுதியான திறன் இருந்தால், முடுக்கி கோட்பாடு செயல்படாது.