பொருளாதாரம் - நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் | 12th Economics : Chapter 4 : Consumption and Investment Functions
"மதிப்புக் கோட்பாட்டின் இரு பக்கங்களாக தேவைக் கோட்பாடும் அளிப்புக் கோட்பாடும் உள்ளன. அது போல ஏற்ற இறக்கங்களின் (Business Cycle) கோட்பாட்டின் இருபக்கங்களாக பெருக்கி மற்றும் முடுக்கி கோட்பாடுகள் உள்ளன. இருபக்கங்களும் செயல்படுவதை விளக்குவதே முழுக்கோட்பாடாகும்
- J.R. ஹிக்ஸ்
புரிதலின் நோக்கங்கள்
1. நுகர்வு மற்றும் முதலீடு சார்புகளின் அடிப்படைக் கருத்துக்களைப் புரிந்து கொள்ளல்
2. பெருக்கி, முடுக்கி, சிறப்புப் பெருக்கி (Multiplier, Accelerator and Super Multiplier) ஆகியவற்றின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளல்
அறிமுகம்
இராண்டாம் அத்தியாயத்தில் நாட்டு வருமானம் மற்றும் அதன் அளவீடு, முக்கியத்துவம் மற்றும் சிக்கல்களைப் பற்றி பார்த்தோம். இந்த அத்தியாயம் நுகர்வுச் சார்பு மற்றும் முதலீட்டுச் சார்பு பற்றி விளக்குகிறது. இது நாட்டு வருமானத்தை பாதிக்கும் முக்கிய காரணியாக செயலாற்றுகிறது.
நாட்டு வருமான வளர்ச்சியை முடுக்கி விடுவதுதான் பேரியல் பொருளாதாரத்தின் முக்கிய நோக்கமாகும். தேசிய வருவாயானது நுகர்வு பண்டங்கள் (C) மற்றும் முதலீட்டுப் பண்டங்களை (I) உள்ளடக்கி இருப்பதை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். முதலீட்டுக்கும் தேசிய வருவாய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. முதலீட்டை அதிகரிப்பதால் எந்த அளவுக்கு தேசிய வருவாய் அதிகரிக்கும் என்பதை "பெருக்கி" காட்டுகிறது. அந்த "பெருக்கியின்" மதிப்பு நுகர்வுச் சார்பு அல்லது இறுதிநிலை நுகர்வு நாட்டத்தைப் பொறுத்தே அமைகிறது. நுகர்வுச் சார்பு என்பது நுகர்வுச் செலவுக்கும் தேசிய வருவாயக்கும் உள்ள தொடர்பாகும். தேசிய வருவாயில் செலவிடப்படாமல் உள்ள தொகை சேமிப்பு ஆகும். இது பின் மூலதனமாக மாறுகிறது. நுகர்வுச் செலவிற்கும் மூலதனச் செலவிற்கும் உள்ள தொடர்பை முடுக்கி கோட்பாடு விளக்குகிறது. இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.
இந்த அத்தியாத்தில் நுகர்வுச் சார்பு, நுகர்வு சார்ந்த உளவியல் கோட்பாடு, முதலீட்டுச் சார்பு, பெருக்கி, முடுக்கி போன்றவற்றை அறியலாம்.