Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | ஆட்சித்துறை: மாநிலங்கள்

ஆளுநரின் நியமனம், பதவி மற்றும் காலம், அதிகாரங்கள் பணிகள் | இந்திய அரசியல் - ஆட்சித்துறை: மாநிலங்கள் | 12th Political Science : Chapter 3 : Executive

   Posted On :  13.05.2022 08:06 pm

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : ஆட்சித்துறை

ஆட்சித்துறை: மாநிலங்கள்

ஆட்சித்துறை: மாநிலங்கள் : ஆளுநர். மத்திய அரசில் காணப்படும் நாடாளுமன்ற நிர்வாக முறையே மாநிலத்திலும் உள்ளது. மாநில நிர்வாகமும், ஆளுநர் மற்றும் முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சர்கள் குழு ஆகியவற்றைக் கொண்டது.

ஆட்சித்துறை: மாநிலங்கள்

இந்திய அரசமைப்பின் IV-வது பகுதியிலுள்ள 153 முதல் 167 வரையிலான உறுப்புகள் மாநில நிர்வாகத்தைக் குறிப்பிடுகின்றன. மத்திய அரசில் காணப்படும் நாடாளுமன்ற நிர்வாக முறையே மாநிலத்திலும் உள்ளது. மாநில நிர்வாகமும், ஆளுநர் மற்றும் முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சர்கள் குழு ஆகியவற்றைக் கொண்டது. மத்தியில் குடியரசுத்தலைவரைப் போன்று மாநிலத்திலும் ஆளுநரே நிர்வாகத்தின் தலைவராக உள்ளார். அனைத்து மாநிலங்களிலும் இதே முறைதான் உள்ளது. ஆனால் சில மாநிலங்களில் ஒற்றை அவைகளைக் கொண்ட சட்டமன்றமும், மற்ற சில மாநிலங்களில் இரண்டு அவையைக் கொண்ட சட்டமன்றமும் உள்ளன. ஆனால் IV-வது பகுதியில் காணப்படும் இப்பிரிவுகள் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்குப் பொருந்தாது. அரசமைப்பு 370-வது உறுப்பின்படி அம்மாநிலம் சிறப்புநிலை கொண்ட ஒன்றாகவும், தனக்கென தனி அரசமைப்புக் கொண்ட ஒன்றாகவும் இருந்தது.

மாநில நிர்வாகம்

ஆளுநர்

முதலமைச்சர் தலைமையிலான அமைச்சர்கள் குழு




1.  ஆளுநர்

ஆளுநரின் தேர்வுமுறை

அரசமைப்பின் 153-வது உறுப்பு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநர் இருப்பார் என்கிறது. பொதுவாக, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார். ஆனால் 1956-ஆம் ஆண்டின் அரசமைப்பு திருத்தப்படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக ஒருவரே இருக்க முடியும்.

விவாதம்

பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் இடையே ஓர் கொள்கையில் கருத்து ஒற்றுமை ஏற்படாவிடில் என்ன நிகழும்? இதில் யாருடைய கருத்து ஏற்றுக்கொள்ளப்படும்? ஏன்?

ஆளுநரின் நியமனம்

ஒரு மாநில ஆளுநர் இந்தியக் குடியரசுத்தலைரால் நியமிக்கப்படுகிறார். (உறுப்பு-155). அவர் ஆளுநராக நியமிக்கப்பட கீழ் கண்ட தகுதிகள் வேண்டும்

 இந்தியாவின் குடிமகன் 

 35 வயதை நிறைவு செய்தவர் 

 ஊதியம் பெறும் எந்த பதவியிலும் இருக்கக்கூடாது 

நாடாளுமன்ற அல்லது மாநிலச் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடாது.

பதவி மற்றும் காலம்

ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். (உறுப்பு -156). அவர் எந்த நேரத்திலும் குடியரசுத்தலைவரால் பதவி நீக்கப்படலாம். குடியரசுத்தலைவரால் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றப்படலாம். நாடாளுமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை ஆளுநர் பெறுகிறார். அதன்படியே சில சலுகைகளையும் படிகளையும் பெறுகின்றார்.

இந்திய அரசமைப்பின்படி, மாநில அரசமைப்பு மற்றும் நிர்வாகத்தின் தலைவராக ஆளுநர் இருக்கிறார். மாநில நிர்வாகத்தின் ஆட்சிப்பொறுப்பு ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து ஆட்சி நடிவடிக்கைகளும் அவரது பெயரால் நடைபெறுகின்றன. ஆனால் நடைமுறையில், மாநிலத்தின் உண்மையான செயல் அதிகாரங்கள் முதலமைச்சரின் தலைமையிலான அமைச்சர்கள் குழுவுக்கே உள்ளது. மாநிலத்தின் சட்டசபைக்கு ஒட்டுமொத்தமாக கூட்டுப் பொறுப்புள்ள அமைச்சர்களின் ஆலோசனைப்படி, ஆளுநர் செயல்படுகிறார்.

செயல்பாடு

துணைநிலை ஆளுநர் என்பவர் யார்?

 இந்தியாவில் எந்த இடங்களில் ஒரு துணைநிலை ஆளுநர் பதவி உள்ளது என்பதைக் கண்டுபிடி.

 இந்தியாவில் உள்ள துணைநிலை ஆளுநர் பற்றி இரண்டு அல்லது மூன்று வாக்கியங்களை எழுதுங்கள்.


ஆளுநரின் அதிகாரங்களும் பணிகளும் பின்வருமாறு

1. நிர்வாக அதிகாரங்கள்

(i) ஆளுநர் மாநில அரசின் நிர்வாகத் தலைவராக உள்ளார். ஆளுநர் நிர்வாக அதிகாரங்களை நேரடியாகவோ அல்லது அவருக்கு கீழுள்ளவர்களாலோ (154-வது உறுப்பின்படி அமைச்சர்கள்) செயல்படுத்துகிறார். அனைத்து நிர்வாகச் செயல்பாடுகளும் அவருடைய பெயரில் நடத்தப்படுகின்றன. மாநில பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்திலும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு

(ii) சட்டமன்றத்தில் பெரும்பான்மை கட்சியின் தலைவரை முதலமைச்சராக ஆளுநர் நியமிக்கிறார். முதலமைச்சரின் ஆலோசனையின்படி, பிற அமைச்சர்களை அவர் நியமிக்கிறார். முதலமைச்சர் விரும்பும் வரையில் மட்டுமே அமைச்சர்கள் அப்பதவியில் இருப்பர். ஏனெனில் முதலமைச்சரின் ஆலோசனைப்படிதான் ஆளுநர் செயல்படுகிறார்.

(iii) மாநில அரசின் தலைமை வழக்குரைஞர், மாநிலப் பொதுப் பணி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஆளுநர் நியமிக்கிறார். துணை சார்பு நீதிமன்றங்களின் நீதிபதிகளின் நியமனங்கள், பதவிகள், பதவி உயர்வு போன்றவற்றை ஆளுநர் தீர்மானிக்கிறார்.

(iv) மாநில நிர்வாகத்தை சீராக இயக்கும் பொறுப்பு ஆளுநருடையதாகும். மாநில அரசமைப்பு இயந்திரம் நிலைகுலைந்து விட்டாலோ அல்லது மாநில நிர்வாகம் அரசமைப்பின் விதிமுறைகளுக்கு இணக்கமாக செயல்படாவிட்டாலோ, அரசமைப்பு விதிகளின்படி அரசமைப்பு அவசர நிலையை பிரகடனப்படுத்தி குடியரசுத்தலைவர் ஆட்சியை அரசமைப்பு 356-வது உறுப்பின்படி பரிந்துரைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. குடியரசுத்தலைவரது நேரடி ஆட்சி என்றால் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி என்று பொருள்படும். அமைச்சரவை இல்லாத மாநில ஆட்சி என்றும் பொருள்படும்

2. சட்டமன்ற அதிகாரங்கள்

ஆளுநர் மாநிலச் சட்டமன்றத்தின் ஒரு பகுதி (உறுப்பு-168) ஆவார். எனவே, அவர் சட்ட அதிகாரங்களையும் கொண்டிருக்கிறார். அவரது சட்ட அதிகாரங்கள் பின்வருமாறு

(i) ஆளுநர் சட்டமன்றத்தை கூட்டவும், முடித்து வைக்கவும், ஒத்தி வைக்கவும், கலைத்து விடவும் அதிகாரம் படைத்தவர்.

(ii) ஆளுநர் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றுகிறார்.

(iii) ஆளுநரின் அனுமதியின்றி, எந்த முன்வரைவும் சட்டமாக்க முடியாது. அது மாநிலச் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டாலும் அவரது ஒப்புதலின்றிச் சட்டமாகாது. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் முன்வரைவுகள் அவரது ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அவற்றிற்கு ஒப்புதலைத் தரவோ அல்லது அந்த முன்வரைவை நிறுத்தி வைக்கவோ அல்லது குடியரசுத்தலைவரின் கருத்திற்காக முன்வரைவை ஒதுக்கி வைக்கவோ முடியும், மறுபரிசீலனை செய்யுமாறு ஆளுநரால் இந்த முன்வரைவுகள் அவை நடுவருக்கு திருப்பி அனுப்ப முடியும். முன்வரைவு மீண்டும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டால் (திருத்தங்கள் இல்லாமலும்), ஆளுநர் தனது ஒப்புதலை அளித்தே ஆகவேண்டும்

(iv) சட்டம் 213-ன் கீழ், சட்டமன்றம் அமர்வில் இல்லாத காலங்களில் ஆளுநர் அவசர சட்டங்களையும் பிறப்பிக்கலாம். (எனினும், இத்தகைய அவசர சட்டங்கள் தொடர்வதற்கு, அவை மாநிலச் சட்டமன்றம் மீண்டும் கூடியதிலிருந்து ஆறு வாரங்களுக்குள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.) 

(v) மாநிலச் சட்டமன்றம் இரண்டு அவைகளை கொண்டிருந்தால், அதன் மேலவைக்கு ஆற பில் ஒரு பங்கு உறுப்பினர்களை இலக்கியம், அறிவியல்,கலை,கூட்டுறவு இயக்கம்,சமூகப்பணி போன்றவற்றில் சிறப்பு அறிவும் அனுபவமும் உள்ளவர்களை நியமிக்கலாம். அத்துடன் கீழவைக்கு ஆங்கிலோ - இந்திய பிரதிநிதியையும் நியமிக்கலாம்.

3. நிதி அதிகாரங்கள்

ஆளுநருக்கு பின்வரும் நிதி அதிகாரங்கள் உள்ளன

(i) நிதி அமைச்சர் மாநிலச் சட்டமன்றத்தில் வரவு-செலவு திட்டத்தை அல்லது நிதிநிலை அறிக்கையை சமர்பிக்கிறார். ஆனால் எந்த நிதி முன்வரைவும் ஆளுநரின் முன் ஒப்புதலின்றி சட்டமன்றத்தில் கொண்டுவரமுடியாது

(ii) ஆளுநரின் பரிந்துரையின்றி மானியங்களுக்கான கோரிக்கை எதுவும் கோரப்பட முடியாது

(iii) மாநிலத்தின் ஒதுக்கு நிதியின் பாதுகாவலர் ஆளுநர் ஆவார். நிதி நெருக்கடியான கட்டங்களில் சட்டமன்றத்தின் முன் அனுமதியின்றியும் அவரால் இந்நிதியை பயன்படுத்த முடியும்.

4. நீதித்துறை அதிகாரங்கள்

ஆளுநரின் நீதித்துறை அதிகாரங்கள் பின்வருமாறு 

(i) மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட கிளை நீதிமன்றங்கள் உள்ளிட்ட சார்பு நீதிமன்றங்களின் பதவிகள், நியமனங்கள், பதவி உயர்வுகள் போன்றவற்றை தீர்மானித்தல்.

(ii) உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமனம் செய்யும் போது அவர் இந்தியாவின் குடியரசுத்தலைவரால் கலந்தாலோசிக்கப்படலாம்.

 (iii) மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்ட வழக்குகளில் தண்டிக்க தக்கவர்களில் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு நபரின் தண்டனையைக் குறைப்பதற்கும் மன்னிப்பு வழங்குவதற்கும், நிறுத்துவதற்கும், விலக்குவதற்கும் அல்லது மாற்றுவதற்கும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.

5. விருப்ப அதிகாரங்கள் 

(i) எந்தவொரு கட்சி அல்லது தலைவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெறாத சூழ்நிலையில் ஒரு புதிய முதலமைச்சரை நியமித்தல். (ii) அவையின் பெரும்பான்மை ஆதரவை இழந்தபோதும் அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் பதவி விலக மறுக்கும் நிலையில் அமைச்சரவையை பதவி நீக்கம் செய்வது

(iii) பெரும்பான்மை ஆதரவை இழந்த ஒரு முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் சட்டசபையைக் கலைத்துவிடுதல்

(iv) அரசமைப்பு இயந்திரச் சீர்குலைவது பற்றி குடியரசுத்தலைவருக்கு அறிக்கை அனுப்புதல் - மற்றும் குடியரசுத்தலைவர் ஆட்சியை மாநிலத்தில் கொண்டுவருதல்.

(v) சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் அளித்தல்.

குடியரசுத்தலைவர் ஆட்சி: வெளிநாட்டு ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சியிலிருந்து எழும் நெருக்கடி நிலைகளை சமாளிப்பதற்கான அவசர நிலையை பிரகடனம்செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை .ஆனால் அரசமைப்பின் விதிமுறைகளுக்கு இணங்க மாநில அரசை நடத்த இயலாத சூழல் ஏற்பட்டால் அது பற்றி குடிரயசுத்தலைவருக்கு அறிவுறுத்தி அறிக்கை தரும் அதிகாரம் உள்ளது. (உறுப்பு-356). இதன் மூலம் குடியரசுத்தலைவர் தாமே மாநில அரசின் ஆட்சிப்பொறுப்பினை ஏற்று நடத்திச் செல்வதற்கு வகை செய்கிறார்.

தலைமை வழக்குரைஞர்

ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அரசின் தலைமை வழக்குரைஞருக்கு இணையாக ஒரு அரசின் தலைமை வழக்குரைஞர் நியமிக்கப்படுகிறார். உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகும் தகுதியுடையவர்களையே ஆளுநர் தலைமை வழக்குரைஞராக நியமனம் செய்கிறார்.

செயல்பாடு

குடியரசுத்தலைவரின் அதிகாரங்களுடன் ஆளுநரின் அதிகாரங்களை ஒப்பிடுக. ஏதாவது வேறுபாடுகளை காண்கிறாயா?

விவாதம்

தலைமைச் செயலர் மற்றும் அமைச்சரவைச் செயலருக்கு இடையிலான ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள்.


Tags : Powers, Functions, Position, Term of Office | India Political ஆளுநரின் நியமனம், பதவி மற்றும் காலம், அதிகாரங்கள் பணிகள் | இந்திய அரசியல்.
12th Political Science : Chapter 3 : Executive : The Executive of the Constituent State Powers, Functions, Position, Term of Office | India Political in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : ஆட்சித்துறை : ஆட்சித்துறை: மாநிலங்கள் - ஆளுநரின் நியமனம், பதவி மற்றும் காலம், அதிகாரங்கள் பணிகள் | இந்திய அரசியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : ஆட்சித்துறை