அரசியல் அறிவியல் - ஆட்சித்துறை | 12th Political Science : Chapter 3 : Executive
ஆட்சித்துறை
கற்றலின் நோக்கங்கள்
* குடியரசு வடிவிலான அரசைப் பற்றி புரிந்து கொள்ளுதல்.
*அரசமைப்பில் குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத் துணைத்தலைவரின் -நிலை பற்றி புரிந்து கொள்ளுதல்.
* குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத் துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடைமுறைகளை பற்றி புரிந்து கொள்ளுதல்.
* குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத் துணைத்தலைவரின் அதிகாரங்களையும் செயல்முறைகளையும் பற்றி அறிதல்.
* நாடாளுமன்ற ஆட்சிமுறையைப் பற்றி புரிந்து கொள்ளுதல்.
* மாநில ஆட்சிக் குழுவின் பண்புகளை அறிந்து கொள்ளுதல்.
* அரசு நிர்வாகத்தில் ஆளுநர் பங்கு மற்றும் முதலமைச்சரின் பங்கு.
அறிமுகம்
அரசின் கட்டமைப்பு
ஒன்றிய ஆட்சித்துறை
❖ இந்தியக் குடியரசுத்தலைவர்
❖ இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர்
❖ பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவைக் குழு
இந்திய அரசமைப்பின் முன்னுரையில் இந்தியாவை ஒரு இறையாண்மை, சமதர்ம, மதசார்பற்ற, மக்களாட்சி மற்றும் குடியரசு பெற்ற நாடு என்று அறிவிக்கிறது. இங்கு இங்கிலாந்தைப் போல் முடியாட்சியாக அதாவது அரசரோ, அரசியோ மன்னர்களாக ஆட்சியில் இல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால்தான் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இந்தியக் குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தேசிய அரசின் அனைத்து அரசமைப்புத் துறைகளின் தலைவராக இந்தியக் குடியரசுத்தலைவர் விளங்குகிறார். (எ.கா.) சட்டம், நிர்வாகம், நீதி மற்றும் ஆயுதப்படை ஆகிய துறைகளின் செயல்பாடுகளை குடியரசுத்தலைவர் மேற்பார்வையிடுகிறார். மேலும் அரசமைப்புச் சட்டங்களுக்குட்பட்டு இத்துறைகள் செயல்படுவதை இவர் உறுதிப்படுத்துகிறார். இந்திய நாட்டின் முழு அரசமைப்பு, பிரதிநிதித்துவம் மற்றும் மாநில செயல்பாடுகளை ஒவ்வொரு மண்டலத்திலும் குடியரசுத்தலைவர் நிலை நிறுத்துகிறார். ஆனால் அமெரிக்க குடியரசுத்தலைவரை போல் உண்மையான செயல் அதிகாரம் இல்லாமல் பெயரளவில் மட்டும் அதிகாரத்தைக் கொண்டுள்ளார். குடிரயரசுத்தலைவரது பெயராலும், அவரது மேற்பார்வையிலும் நிர்வாகம் நடைபெறுகின்றதே தவிர, நேரடியான, செயலளவிலான நிர்வாகம் பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவிடம்தான் உள்ளது. அந்த அமைச்சரவையும் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புடையது. இதைத்தான் நாடாளுமன்ற ஆட்சிமுறை என்கிறார்கள். மேலும் நடைமுறையில் உண்மையான அதிகாரங்கள் அனைத்தும் பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவைக் குழுவிடம் உள்ளது. இவ்வாறு இந்தியக் குடியரசானது அமெரிக்க குடியரசிலிருந்து வேறுபடுகிறது.