தேர்தல், தகுதிகள், பதவிக்கான வரையறைகள், பொறுப்புகளும் பணிகளும் | இந்திய அரசியல் - குடியரசுத் துணைத்தலைவர் | 12th Political Science : Chapter 3 : Executive
குடியரசுத் துணைத்தலைவர்
அமெரிக்க அரசமைப்பினைப் போன்று இந்திய அரசமைப்பும் துணைக் குடியரசுத்தலைவர் பதவியை (இந்திய அரசமைப்பு உறுப்பு-63) வழங்குகிறது. இந்தியாவின் துணைத் குடியரசுத்தலைவர் பதவி நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த பதவியாகும்.
இந்தியத் குடியரசுத் துணைத்தலைவர் நாடாளுமன்றத்தின் ஈரவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் விகிதாச்சார முறையில் மாற்றத்தக்க ஒற்றை வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இந்திய குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர் கீழ்க்காணும் தகுதிகளைக் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
(அ) இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும்.
(ஆ) 35 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.
(இ) மாநிலங்களவை உறுப்பினராவதற்கு தகுதிவாய்ந்தவராக இருக்க வேண்டும்.
(ஈ) ஊதியம் பெறும் எந்த பதவியிலும் இருக்கக்கூடாது.
குடியரசுத் துணைத்தலைவர் ஐந்து வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார். குடியரசுத்தலைவரிடம் தனது பதவி விலகல் கடிதத்தை கொடுப்பதன் மூலம் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாக அவர் தனது பதவியிலிருந்து தாமாகவே பதவி விலகலாம். மாநிலங்களவை உறுப்பினர்களின் அறுதிப் பெருபான்மை ஆதரவோடு, மக்களவையின் ஒப்புதலோடு அவருக்கெதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதின் மூலம் அப்பதவியிலிருந்து அவரை நீக்க முடியும். ஆனால் அத்தகைய தீர்மானத்திற்கு 14 நாட்கள் முன்னறிப்பு அவசியமாகும்.
குடியரசுத் துணைத்தலைவர் அப்பதவியினால்மாநிலங்களவையின் அலுவல்வழி தலைவராகிறார் (இந்திய அரசமைப்பின் 64-வது உறுப்பு). அவர் மாநிலங்களவைக் கூட்டங்களை நடத்துகிறார். மக்களவையில் சபாநாயகர் போன்றே, இவருக்கு மாநிலங்களவையில் அதிகாரம் உள்ளது. மாநிலங்களவையின் தலைவர் என்ற நிலையில் மட்டுமே இவர் ஊதியம் பெறுகிறார், ஏனெனில் குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்கு என எந்த ஊதியமும் இல்லை . குடியரசுத்தலைவரின் இறப்பு அல்லது பதவி நீக்கம் ஆகியவற்றின் காரணமாக காலியிடம் ஏற்பட்டால் அல்லது வேறு ஒரு குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படும்வரை குடியரசுத் துணைத்தலைவரே அந்த பதவியை கூடுதலாக வகிப்பார். இந்த காலம் ஆறு மாதங்களுக்கு மட்டுமானது ஆகும். இந்தியக் குடியரசுத்தலைவராக செயல்படும் போது குடியரசுத் துணைத்தலைவரின் ஊதியம், இதர படிகள், நாடாளுமன்ற முடிவுகள்படி பெறுகிறார். அதே நேரத்தில் அவர் மாநிலங்களவையின் தலைவராக செயல்பட முடியாது.
பயிற்சி
இந்திய அரசமைப்பின் 63 முதல் 70 வரையான உறுப்புகள் குடியரசுத் துணைத்தலைவர் பற்றியவை, இது குறித்து ஒரு கட்டுரையை சமர்ப்பிக்கவும்.