Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | வாழ்வியல்: திருக்குறள்

இயல் 6 | 10 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள் | 10th Tamil : Chapter 6 : Nila muttram

   Posted On :  22.07.2022 04:52 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம்

வாழ்வியல்: திருக்குறள்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் : வாழ்வியல்: திருக்குறள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கலை

வாழ்வியல் இலக்கியம்

திருக்குறள்அமைச்சு (64)

1. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்ட தமைச்சு.

பொருள்: தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்.

 

2. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ

டைந்துடன் மாண்ட தமைச்சு.

பொருள்: மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல் , நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவார்.

 

3. மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம்

யாவுள முன்நிற் பவை.

பொருள்: இயற்கையான நுண்ணறிவும் நூலறிவும் உடைய அமைச்சர்களுக்கு முன், எந்த நுட்பமான சூழ்ச்சிகள் நிற்க முடியும்? (எந்த சூழ்ச்சியும் நிற்க இயலாது).

 

4. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்

தியற்கை அறிந்து செயல்.*

பொருள்: ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல்வழியாக அறிந்திருப்பினும், உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்.

 

பொருள்செயல் வகை (76)

5. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள்.*

பொருள்: ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம். அஃது அல்லாமல் உலகில் சிறந்த பொருள் வேறு இல்லை.

அணி: சொல் பின்வருநிலை அணி

 

6. அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்.

பொருள்: முறையறிந்து தீமையற்ற வழியில் சேர்த்த பொருள் ஒருவருக்கு அறத்தையும் தரும்; இன்பத்தையும் தரும்.

 

7. அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

புல்லார் புரள விடல்.

பொருள் : மற்றவர்களிடம் இரக்கமும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருளை ஏற்றுக்கொள்ளாமல் நீக்கிவிடவேண்டும்.

 

8. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

றுண்டாகச் செய்வான் வினை.*

பொருள்: தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவர் ஒரு செயலைச் செய்வது, மலைமேல் பாதுகாப்பாக நின்றுகொண்டு யானைப்போரைக் காண்பது போன்றது.

அணி: உவமை அணி

 

9. செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற் கூரிய தில்.

பொருள்: ஒருவர் பொருளை ஈட்ட வேண்டும்; அவருடைய பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் அதைவிட வேறு இல்லை.

 

கூடாநட்பு (83)

10. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுதகண் ணீரும் அனைத்து.

பொருள்: பகைவரின் தொழுது நிற்கும் கையின் உள்ளும், கொலைக்கருவி மறைந்து இருக்கும். அது போல் அவர் அழுத கண்ணீரின் உள்ளும் வஞ்சகம் மறைந்து இருக்கும் என்பதை உணர வேண்டும்.

 

பகை மாட்சி (87)

11. அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்

என்பரியும் ஏதிலான் துப்பு.

பொருள்: சுற்றத்தாரிடம் ஒருவர் அன்பு இல்லாமலும் பொருந்திய துணை இல்லாமலும், வலிமையில்லாமலும் இருந்தால் அவர் எப்படிப் பகைவரின் வலிமையை எதிர்கொள்வார்?

 

12. அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்

தஞ்சம் எளியன் பகைக்கு.

பொருள்: மனத்தில் துணிவு இல்லாதவராய், அறிய வேண்டியவற்றை அறியாதவராய், பொருந்தும் பண்பு இல்லாதவராய், பிறர்க்குக் கொடுத்து உதவாதவராய் இருந்தால் எளிதில் பகைக்கு ஆட்பட நேரும்.

 

குடிசெயல் வகை (103)

13. ஆள்வினையும் ஆன்ற அறிவு மெனவிரண்டின்

நீள்வினையால் நீளும் குடி.

பொருள்: விடா முயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்ந்து விளங்கும்.

 

14. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு.*

பொருள்: குற்றம் இல்லாமல் தன் குடிப்பெருமையை உயரச்செய்து வாழ்பவரை உலகத்தார் உறவாகக் கொண்டு போற்றுவர்.

 

நல்குரவு (105)

15. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது.*

பொருள்: ஒருவருக்கு வறுமையைப் போன்று துன்பம் தருவது எது என்றால் அது வறுமையே ஆகும்.

அணி: சொற்பொருள் பின்வருநிலை அணி

 

இரவு (106)

16. கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை

எல்லாம் ஒருங்கு கெடும்.

பொருள்: தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லாரைக் காணின் வறுமையின் கொடுமை முழுதும் கெடும்.

 

17. இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்

உள்ளுள் உவப்ப துடைத்து.

பொருள்: இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும்.

 

கயமை (108)

18. மக்களே போல்வர் கயவர்; அவரன்ன

ஒப்பாரி யாம்கண்ட தில்.

பொருள்: கயவர் மக்களைப் போலவே இருப்பர்; கயவர்க்கும் மக்களுக்கும் உள்ள தோற்ற ஒப்புமையை வேறெதிலும் நாம் கண்டதில்லை.

 

19. தேவர் அனையர் கயவர் அவரும்தாம்

மேவன செய்தொழுக லான்.

பொருள்: தேவரும் கயவரும் ஒரு தன்மையர்; எவ்வாறு எனில் தேவர்களைப் போலக் கயவர்களும் தாம் விரும்புவனவற்றைச் செய்து ஒழுகுவர்.

அணி: வஞ்சப் புகழ்ச்சி அணி

 

20. சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்பு போல்

கொல்லப் பயன்படும் கீழ்.

பொருள்: ஒருவர் தம் குறையைச் சொல்வதைக் கேட்டவுடனேயே உதவிசெய்வர் சான்றோர்; கரும்பைப் பிழிவது போல நெருக்கிப் பிழிந்தால்தான் பயன்படுவர் கயவர்.

அணி: உவமை அணி

 

கற்பவை கற்றபின்....

1. புதுக்கவிதையையும் குறளையும் ஒப்பிட்டுப் பேசுக.

புதுக்கவிதை

தக்காளியையும் வெண்டைக்காயையும்

தள்ளுவண்டிக்காரர் தராசில் நிறுக்கையில்,

தள்ளி நிற்கும் பிள்ளை

அவசியமாகக் கேட்கும் ஆயிரம் ரூபாயை

எப்படிக் கொடுக்க என்றே அவர் மனம் யோசிக்கும்....

"அத்தனைக் காய்களையும் விற்றால்தான்

மீதி ஐந்நூறாவது மிஞ்சும்; என்ன செய்ய..."

காய்கறி வாங்கியவர்

கவனக் குறைவாகக் கொடுத்த

இரண்டாயிரம் ரூபாயைக்

கூப்பிட்டுத் தந்துவிட்டுப்

பிள்ளைக்கு உதவ யாரிடம் கேட்கலாம்

என்பதை அடுத்தபடி யோசிக்கும் அவர் மனம்!

குறள்

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

புல்லார் புரள விடல்.

2. குறிப்புகள் உணர்த்தும் குறளின் கருத்துகள் குறித்துக் கலந்துரையாடுக.

அ) அவருக்கு அறிவும் அதிகம்; படிப்பும் அதிகம். யாராலும் அவருக்கெதிராகச் செயல்படமுடியாது.

ஆ) எச்சரிக்கையாக இரு. பழகுபவர்களில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்று கண்டுபிடிப்பது கடினம்.

இ) அவர் குடும்பம் முன்னேறியிருப்பதற்குக் காரணம் தொடர்ந்து முயல்வதும் தொழிலில் அவருக்கிருந்த அறிவும்.

ஈ) வாழ்க்கையில் நன்றாகப் பொருளீட்டு. அதுதான் உன்னைத் தாழ்வாக நினைத்தவர்களின் வாயை அடைக்கும்.

உ) அக்கம்பக்கத்தாரிடம் பழகாமல் ஒதுங்கியே இருந்தார்; துணைக்கும் யாரும் இல்லை. இப்போது உடம்பு சரியில்லாதபோது உதவ யாருமின்றித் திண்டாடுகிறார்.

 

குறுவினா


1. கரப்பிடும்பை இல்லார் - இத்தொடரின் பொருள் கூறுக.

தம்மிடம் உள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லவர் என்பது இத்தொடரின் பொருள்

 

2. தஞ்சம் எளியர் பகைக்கு - இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்ப்பாடுகளையும் எழுதுக.

தஞ்சம் - நேர் நேர் - தேமா

எளியர் - நிரை நேர் - புளிமா

பகைக்கு - நிரை நேர் - புளிமா

 

3. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்து குறளின் கருத்து என்ன?

இகழ்ந்து ஏளனம் செய்யாமல் உதவி செய்ய வேண்டும். பொருள் கொடுக்க வேண்டும். இப்போது உதவி பெறுபவரின் (இருப்பவரின்) உள்ளத்தில் உள்ளே மகிழ்ச்சி பொங்கும். 

 

4. பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப் போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக?

பெரிய கத்தி, இரும்பு, ஈட்டி உழைத்தால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்.

• இக்குறளில் கூரான ஆயுதம் உழைத்ததால் கிடைத்த ஊதியம் ஆகும்.

• மற்ற உலக ரீதியான ஆயுதங்கள் எல்லா நேரங்களிலும் கூர்மையாக செயல்படுவதில்லை நிலையாக இருப்பதில்லை. ஆனால், உழைத்து ஈட்டிய செல்வமே எப்போதும் கூரான ஆயுதமாகத் திகழ்கிறது.

 

சிறுவினா


1. வள்ளுவம் சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைப் குறள் வழி விளக்குக?

தொழில் செய்வதற்கு தேவையான கருவி அதற்கு ஏற்ற காலம். செயலின் தன்மை செய்யும் முறை ஆகிறவற்றை அறிந்து அரிய செயலைச் செய்பரே அமைச்சர் ஆவர்.

• மனவலிமை குடிகளைக் காத்தல் ஆட்சிமுறைகளைக் கற்றல் நூல்களைக் கற்றல் விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவர்.

• ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்.

• மேற்கூறிய பண்புகள் நம் வாழ்விலும் இருந்தால் தான் நாமும் நம்மை ஆள முடியும்.

 

2. பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர். அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

• சுற்றத்தாரிடம் ஒருவர் அன்பு இல்லாமல் பொருந்திய துணை இல்லாமலும் வலிமையில்லாமலும் இருந்தால் அவர் எப்படிப் பகைவரின் வலிமையை எதிர் கொள்வார்?

• மனத்தில் துணிவு இல்லாதவராய் அறிய வேண்டியவற்றை அறியாதவராய் பொருந்தும் பண்பு இல்லாதவராய் பிறர்க்குக் கொடுத்து உதவாதவராய் இருந்தால் எளிதில் பகைக்கு ஆட்பட நேரிடும்.

 தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லாரைக் காணின் வறுமையின் கொடுமை முழுதும் கெடும்.

 

 

Tags : Chapter 6 | 10th Tamil இயல் 6 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 6 : Nila muttram : Valviyal: Thirukkural Chapter 6 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் : வாழ்வியல்: திருக்குறள் - இயல் 6 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம்