அளவீடு - வெர்னியர் அளவி | 9th Science : Measurement and Measuring Instruments
வெர்னியர் அளவி
நமது அன்றாட வாழ்வில் பொருட்களின் நீளங்களை அளக்க நாம் மீட்டர் அளவுகோலைப் பயன்படுத்துகிறோம். அவை செமீ அளவிலும் மிமீ அளவிலும் குறிக்கப்பட்டிருக்கும். ஒரு மீட்டர் அளவுகோலினால் அளக்க முடிந்த மிகச் சிறிய அளவு அதன் மீச்சிற்றளவு எனப்படும். ஒரு மீட்டர் அளவியின் மீச்சிற்றளவானது 1 மிமீ ஆகும். இதனைப் பயன்படுத்தி பொருட்களின் நீளத்தினை மிமீ அளவுக்கு துல்லியமாக நாம் கணக்கிடலாம். வெர்னியர் அளவியைக் கொண்டு 0.1மிமீ துல்லியமாகவும், திருகு அளவியைக் கொண்டு 0.01 மிமீ துல்லியமாகவும் நம்மால் அளவிட முடியும்.
செமீ மற்றும் மிமீ அளவீடுகள் குறிக்கப்பட்ட ஒரு மெல்லிய உலோகப் பட்டையை வெர்னியர் அளவி கொண்டுள்ளது. இது முதன்மை அளவுகோல் எனப்படுகிறது.
உலோகப் பட்டையின் இடப்பக்க முனையில் மேல்நோக்கிய மற்றும் கீழ் நோக்கிய தாடைகள் முதன்மைக் கோலுக்குச் செங்குத்தாகப் பொருத்தப்பட்டுள்ளன. இவை நிலையான தாடைகள் எனப்படும்.
மேல் மற்றும் கீழ் நோக்கிய இயங்கும் தாடைகளை உடைய நழுவி நிலையான தாடையில் வலது புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. திருகினைப் பயன்படுத்தி,
நழுவியை நகர்த்தவும், நிலையாக ஓரிடத்தில் பொருத்தவும் முடியும். வெர்னியர் அளவுகோலின் அளவீடுகள் நழுவியில் குறிக்கப்பட்டு, அது நழுவியுடனும் இயங்கும் தாடையுடனும் நகர்கிறது. கீழ்நோக்கிய தாடைகள் ஒரு பொருளின் வெளிப்புற அளவுகளை அளவிடவும், மேல்நோக்கிய தாடைகள் உட்புற அளவுகளை அளவிடவும் பயன்படுகின்றன. வெர்னியர் அளவுகோலின் வலது புறத்தில் இணைக்கப்பட்ட மெல்லிய பட்டை உள்ளீடற்ற பொருள்களின் ஆழத்தை அளவிடப் பயன்படுகிறது.
படம் 1.2 வெர்னியர் அளவுகோல்
வெர்னியர் அளவியினைப் பயன்படுத்தும் போது மீச்சிற்றளவு, அளவிடும் எல்லை மற்றும் சுழிப்பிழையைக் கண்டறிவதே முதல்படி ஆகும்.
அ. மீச்சிற்றளவு
கருவியின் மீச்சிற்றளவு =
முதன்மைக் கோலின் ஒரு மிகச்சிறிய பிரிவின் மதிப்பு / வெர்னியர் கோல் பிரிவுகளின் மொத்த எண்ணிக்கை
பெரும்பாலும் முதன்மைக்கோல் பிரிவு சென்டிமீட்டரிலும், அதன் உட்பிரிவுகள் மில்லி மீட்டரிலும் குறிக்கப்பட்டிருக்கும். எனவே,
முதன்மைக்கோலின் மிகச்சிறிய அளவு ஒரு மில்லி மீட்டர் ஆகும். வெர்னியர் அளவுகோலில் மொத்தம் 10 பிரிவுகள் உள்ளன.
எனவே, மீச்சிற்றளவு =
1மிமீ/10=0.1மி.மீ=0.01செ.மீ
ஆ. சுழிப்பிழை
திருகினை நெகிழ்த்தி நழுவியை இடப்பக்கம் நகர்த்தி, வெர்னியர் அளவியின் தாடைகள் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு வைக்கவேண்டும். வெர்னியர் அளவுகோலின் சுழிப்பிரிவு முதன்மை அளவுகோலின் சுழிப்பிரிவுடன் பொருந்தியுள்ளதா என்று சோதிக்கவும். அவை ஒன்றுடன் ஒன்று பொருந்தினால் சுழிப்பிழை இல்லையென்று பொருள்படும். அவ்வாறுபொருந்தவில்லையென்றால் அளவியில் சுழிப்பிழை உள்ளது என்று பொருள்படும். சுழிப்பிழையானது நேர் சுழிப்பிழையாகவோ அல்லது எதிர் சுழிப்பிழையாகவோ இருக்கும். வெர்னியர் அளவுகோலின் சுழிப்பிரிவு முதன்மை அளவுகோலின் சுழிப்பிரிவிற்கு வலப்புறமாக அமைந்தால் அது நேர்சுழிப்பிழை எனப்படும். மாறாக,
இடப்புறமாக அமைந்தால் அது எதிர்சுழிப்பிழை எனப்படும்.
நேர் சுழிப்பிழை
படம் 1.3 நேர்சுழிப்பிழையைக் குறிக்கிறது. இப்படத்தில் வெர்னியர் அளவுகோலின் சுழிப்பிரிவு,
முதன்மை அளவுகோலின்சுழிப்பிரிவிற்கு வலப்புறமாக நகர்ந்துள்ளது. அப்படியென்றால்,
நாம் அளக்கும் அளவானது உண்மையான அளவை விட அதிகமாக இருக்கும். எனவே இப்பிழையானது திருத்தப்படவேண்டும். இப்பிழையைத் திருத்துவதற்கு,
முதலாவதாக, வெர்னியர் அளவுகோலின் எந்தப்பிரிவு முதன்மை அளவுகோலின் ஏதாவது ஒரு பிரிவுடன் ஒன்றியிருக்கிறது எனப் பார்க்க வேண்டும். இங்கு,
ஐந்தாவது வெர்னியர் பிரிவு முதன்மைக் கோலின் பிரிவு ஒன்றுடன் ஒன்றியிருக்கிறது. எனவே, நேர்சுழிப்பிழை =
+5×
LC = +5× 0.01 = 0.05 செ.மீ
அப்படியெனில் சுழித்திருத்தம் எதிர்குறி ஆகும். எனவே,
சுழித்திருத்தம் = - 0.05 செ.மீ.
கணக்கீடு 1
முதன்மை அளவுகோலின் அளவு 89 செ.மீ வெர்னியர் ஒன்றிப்பு 4 மற்றும் நேர் சுழிப்பிழை 0.05 செ.மீ எனில், சரியான அளவைக் கணக்கிடு.
தீர்வு
சரியான அளவு = 8 + (4 × 0.01) - 0.05
= 8+ 0.04-0.05
= 8-0.01 =7.99 செ.மீ
எதிர் சுழிப் பிழை
இப்பொழுது படம் 1.4 ஐப் பார்க்கவும். வெர்னியர் அளவுகோலின் சுழிப்பிரிவு,
முதன்மை அளவுகோலின் சுழிப்பிரிவிற்கு இடது புறமாக நகர்ந்துள்ளதை நாம் காணலாம். எனவே,
நாம் பெறும் அளவானது உண்மையான அளவை விட குறைவாக இருக்கும். இப்பிழையை சரி செய்ய வேண்டுமெனில், நாம் ஏற்கனவே செய்தது போல வெர்னியர் அளவுகோலின் எந்தப் பிரிவு, முதன்மை அளவுகோலின் ஏதாவது ஒரு பிரிவுடன் ஒன்றியுள்ளது என்பதைக் காண வேண்டும். இப்படத்தில், ஆறாவது பிரிவு ஒன்றியிருக்கிறது. ஆனால் எதிர்சுழிப்பிழையைக் கணக்கிடும்போது பின்புறத்திலிருந்து கணக்கிட வேண்டும் (10 வது பிரிவிலிருந்து). அப்படியெனில்,
நான்காவது கோடு ஒன்றியிருக்கிறது. எனவே, எதிர்சுழிப்பிழை = -4
× LC = -4 × 0.01 = -0.04 செ.மீ
அப்படியெனில் சுழித்திருத்தம் நேர்குறி ஆகும். எனவே,
சுழித்திருத்தம் = +0.04 செ.மீ.
கணக்கீடு 2
வெர்னியர் கோலின் அளவீடு 8 மிமீ, வெர்னியர் ஒன்றிப்பு 4 மற்றும் எதிர்சுழிப்பிழை - 0.2 மிமீ எனில், சரியான அளவைக் கணக்கிடு.
தீர்வு
சரியான அளவு = 8 + (4 × 0.1) - (-0.2)
= 8+ 0.4-0.2
= 8 + 0.6 = 8.6 மி.மீ
பொதுவாக, வெர்னியர் அளவியைப் பயன்படுத்தி பல்வேறு பொருள்களின் பரிமாணங்களைக் கணக்கிடலாம். பொருள்களின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றைக் கணக்கிட்டுவிட்டால் அவற்றின் கனஅளவைக் கணக்கிடலாம். எடுத்துக்காட்டாக,
ஒரு முகவையின் உள்விட்டத்தையும் (சரியான தாடைகளைப் பயன்படுத்தி) அதனுடைய ஆழத்தையும் (ஆழம் கணிப்பானைப் பயன்படுத்தி) கணக்கிட்டு,
அதன் மூலம் முகவையின் உட்புற கன அளவையும் கணக்கிடலாம்.
செயல்பாடு 1
வெர்னியர் அளவியைப் பயன்படுத்தி உன்னுடைய பேனா முடியின் வெளியூஆத்தைக் கணக்கிடவும்
இன்று நாம் எண்ணிலக்க உலகில் (Digital
world) வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, வெர்னியர் அளவியும் எண்ணிலக்க வெர்னியர் அளவி என்ற புதிய பரிணாமத்தைப் பெற்றுள்ளது.
எண்ணிலக்க வெர்னியர் அளவியின் நழுவியின் மீது ஒரு எண்காட்டி அமைப்பும் மின்னணு கணக்கிட்டுக் காவியும் அமைக்கப்பட்டுள்ளன. இது அளவீட்டினைக் கணக்கிட்டு எண்காட்டி மூலம் காட்சிப்படுத்தும். இதனால் பயன்படுக்கப்படும் கருவியின் மீச்சிற்றளவு கழிப்பிழைத் திருத்தம் போன்றவற்றைக் கணக்கிட வேண்டிய தேவை இல்லை.