அறிமுகம் - அளவீடு | 9th Science : Measurement and Measuring Instruments
அலகு 1
அளவீடு
கற்றல் நோக்கங்கள்
இப்பாடத்தைக் கற்றபின், மாணவர்கள் பெறும் திறன்களாவன:
❖ அடிப்படை மற்றும் வழி அளவுகள் பற்றியும் அவற்றின் அலகுகள் பற்றியும் புரிந்து கொள்ளுதல்.
❖ SI அலகுகளை எழுதும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளுதல்.
❖ அறிவியல் குறியீடுகளை அறிந்து பயன்படுத்துதல்.
❖ அளவிடும் கருவிகளின் மூன்று முக்கியப் பண்புகளை அறிந்து கொள்ளுதல்.
❖ வெர்னியர் அளவி மற்றும் திருகு அளவியை சிறிய அளவீடுகளுக்குப் பயன்படுத்துதல்.
❖ சுருள்வில் தராசைக் கொண்டு பொருளின் எடையை அளவிட அறிந்து கொள்ளுதல்.
❖ துல்லிய அளவீடுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுதல்.
அறிவியல் சார்ந்த பிரிவுகள் அனைத்திற்கும் அளவீடுகளே அடிப்படை ஆகும். இது, நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. உன் உயரத்தைக் காண்பது, உன் வீட்டிற்குப் பால் வாங்குவது, உனது நண்பன் ஓட்டப்பந்தயத்தில் ஓடிய நேரத்தைக் கணக்கிடுவது போன்ற செயல்களில் அளவீடுகள் தேவைப்படுகின்றன. அளவீடு என்பது எவ்வளவு நீளம், எவ்வளவு கனம், எவ்வளவு வேகம் போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கின்றது. அளவீடு என்பது, ஒரு பொருளின்பண்பையோ அல்லது நிகழ்வையோ மற்றொரு பொருளின் பண்பு அல்லது நிகழ்வுடன் ஒப்பிட்டு அப்பொருளுக்கு அல்லது நிகழ்வுக்கு ஒரு எண்மதிப்பை வழங்குவதாகும். ஒரு பொருளின் அளவு மற்றும் எண் மதிப்பைத் தீர்மானிப்பதே அளவீடு என்று வரையறுக்கப்படுகிறது. இந்தப் பாடப்பகுதியில் அளவீட்டின் அலகுகள் மற்றும் அளவிடும் கருவிகளின் பண்புகள் பற்றி நீங்கள் கற்றுக்கொள்ள இருக்கிறீர்கள்.