Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | அமைச்சரவைத் தூதுக்குழு மற்றும் மௌண்ட் பேட்டன் திட்டம்

இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் - வரலாறு - அமைச்சரவைத் தூதுக்குழு மற்றும் மௌண்ட் பேட்டன் திட்டம் | 12th History : Chapter 7 : Last Phase of Indian National Movement

   Posted On :  27.07.2022 07:21 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 7 : இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

அமைச்சரவைத் தூதுக்குழு மற்றும் மௌண்ட் பேட்டன் திட்டம்

இரண்டாம் உலகப்போருக்குப் பின் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்த சூழலில் அமைச்சரவைத் தூதுக்குழு உருவாக்கப்பட்டது.

அமைச்சரவைத் தூதுக்குழு மற்றும் மௌண்ட் பேட்டன் திட்டம்

அமைச்சரவைத் தூதுக்குழு

இரண்டாம் உலகப்போருக்குப் பின் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்த சூழலில் அமைச்சரவைத் தூதுக்குழு உருவாக்கப்பட்டது. இந்திய நாட்டிற்கென்று நியமிக்கப்பட்டிருந்த அரசு செயலரான சர் ஸ்டாஃப்போர்டு கிரிப்ஸ், A.V. அலெக்ஸாண்டர், பெதிக் லாரன்ஸ் ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அந்தத் தூதுக்குழு மார்ச் 1946இல் இந்தியா வந்தடைந்து முழு அதிகார மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான அரசை உருவாக்க முனைந்தது. இத்தூதுக்குழு மாகாணங்களிலும், சுதேச அரசாட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் தேர்தல் நடத்தி அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு சுதந்திர இந்தியாவிற்கான அரசியல் சாசனத்தை உருவாக்கலாம் என்று முன்மொழிந்தது. இவ்வேளையில் இந்தியப்பிரிவினை பற்றிய சிந்தனைகள் ஏதும் முக்கியத்துவம் பெறவில்லை . எனினும் அதற்கு மாற்றாக வடகிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் முஸ்லிம் லீக்கின் செல்வாக்கை நிறுவும் வகையில் கூட்டாட்சி போன்றதொரு அமைப்பையும், இந்தியாவின் பிற பகுதிகளைக் காங்கிரஸ் நிர்வகிக்குமாறும் யோசனை முன்வைக்கப்பட்டது.

இதற்கு 1946 ஜூன் 6இல் ஜின்னா ஒப்புதல் அளித்தார். இதற்கிடையே காங்கிரசும் அமைச்சரவைத் தூதுக்குழுவின் நோக்கத்தில் சட்டசபையை உருவாக்க இருந்தத் தீவிரத்தைப் புரிந்து கொண்டது. இது குறித்து 1946 ஜூலை 7இல் கூடிய அனைத்திந்திய காங்கிரஸ் குழுவில் பேசிய நேரு இந்திய தேசிய காங்கிரஸ் அந்த முன்மொழிவை ஏற்றுக் கொள்வதாகத் தெரியப்படுத்தினார். ஆனால், இதையடுத்து 1946 ஜூலை 29இல் பேசிய ஜின்னா முஸ்லிம் லீக் அம்முன்மொழிவை நிராகரிப்பதாக அறிவித்தார்.

நீண்ட கலந்தாலோசனைகளுக்குப் பின் 1946 ஜூன் 15இல் அரசபிரதிநிதி இடைக்கால அரசை நடத்த 14 பேருக்கு அழைப்பு விடுத்தார். அவ்வாறு அழைக்கப்பட்டவர்கள் காங்கிரஸ் சார்பாக ஜவஹர்லால் நேரு , வல்லபாய் படேல், இராஜேந்திர பிரசாத், இராஜாஜி மற்றும் ஹரி கிருஷ்ண மஹ்தப் ஆகியோரும் முஸ்லிம் லீக் சார்பாக முகம்மது அலி ஜின்னா , லியாகத் அலி கான், முகம்மது இஸ்மாயில் கான், குவாஜா சர் நஜிமுதீன் மற்றும் அப்துல் ரப் நிஷ்தர் ஆகியோரும், சீக்கியர்கள் சார்பாக சர்தார் பல்தேவ் சிங்கும், பார்சிகளின் சார்பில் சர் N.P. இஞ்சினியரும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் சார்பாக ஜெகஜீவன் ராமும் இந்திய கிறித்தவர்கள் சார்பாக ஜான் மத்தாயும் ஆவர்.


இடைக்காலக் குழுவில் பங்கெடுக்க தங்களுக்கு வழங்கப்பட்ட ஐந்து இடங்களில் ஒன்றனுக்கு ஜாகிர் ஹூசைன் பெயரை காங்கிரஸ் முன்மொழிந்தது. இதற்கு 1946 ஜூலை 29இல் முஸ்லிம் லீக் எதிர்ப்பு தெரிவித்ததோடு தாங்கள் சட்டசபையில் பங்கெடுக்கப் போவதில்லை என்று அறிவித்தது. இதற்கு ஆங்கிலேய நிர்வாகம் கடுமையான எதிர்வினையாற்றியது. அரசபிரதிநிதி 1946 ஆகஸ்ட் 12 அன்று, தான் காங்கிரஸ் தலைவர் நேருவை அழைத்து இடைக்கால அரசை உருவாக்கப் போவதாகத் தெரிவித்தார். நேருவோடு கலந்தாலோசித்த பின் 1946 ஆகஸ்ட் 25இல் தேசிய இடைக்கால அரசின் 12 உறுப்பினர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டது. அவர்கள் நேரு உட்பட வல்லபாய் படேல், இராஜேந்திர பிரசாத், ஆசப் அலி, இராஜாஜி, சரத் சந்திர போஸ், ஜான் மத்தாய், சர்தார் பல்தேவ் சிங், சர் ஷாஃப்த் அகமது கான், ஜெகஜீவன் ராம், சையது அலி ஸாகீர் மற்றும் குவர்ஜி ஹொர்முஸ்ஜி பாபா ஆகியோர் ஆவர். மேலும் இரு இஸ்லாமியர்களின் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

ஐந்து இந்துக்கள், மூன்று முஸ்லிம்கள், பட்டியல் இனம், இந்திய கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள் போன்றோரில் இருந்து தலா ஒரு நபர் என்ற அடிப்படையில் பட்டியல் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஹரி கிருஷ்ண மஹ்தபின் இடத்தில் சரத் சந்திர போஸ் நியமிக்கப்பட்டார். அது போலவே பார்சி இனத்தில் N.P. இஞ்சினியர் இடத்தில் குவர்ஜி ஹொர்முஸ்ஜி பாபா நியமிக்கப்பட்டார். முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் காங்கிரஸ் தனது உறுப்பினர்களை நியமித்தது. அவர்கள் ஆசப் அலி, ஷாபத் அகமது கான், மற்றும் சையது அலி ஸாகீர் ஆகியோர்.

முஸ்லிம் லீக் 1946 ஆகஸ்ட் 16இல் நேரடி நடவடிக்கை செயலில் இறங்க இஸ்லாமியர்களுக்கு அறைகூவல் விடுத்தது. கல்கத்தாவிலும், டெல்லி உட்பட பிற பகுதிகளிலும் இரத்த ஆறு ஓடியது. ஒரு சில சீடர்களை அழைத்துக்கொண்ட காந்தியடிகள் கல்கத்தாவை வந்தடைந்து அங்கே பேலிகாத்தா என்ற மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியின் புறக்கணிக்கப்பட்ட ஒரு வீட்டில் தங்க முடிவுசெய்தார். டெல்லியில் வீடுகளை இழந்த இஸ்லாமியர்கள் தற்காலிக முகாம்களில் (புராணா கிலா என்ற பழையக் கோட்டை போன்ற இடங்களில்) தங்கவைக்கப்பட்டனர். டெல்லியை காந்தியடிகள் வந்தடைந்தபின் (1946 செப்டம்பர் 9) அவர் இஸ்லாமியர்களும் இந்தியர்களே! அதனால் அவர்களைப் பாதுகாப்பது இந்திய அரசின் பொறுப்பேயாகும் (நேரு அச்சமயம் இடைக்கால அரசிற்குத் தலைமை ஏற்றிருந்தார்) என்று வலியுறுத்திய பின்பே டெல்லியின் அதிகாரமட்டம் அவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி கழிவறை வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்தது.


உண்மையில் இப்பின்புலத்தில்தான் காங்கிரஸ் இடைக்கால அரசு உருவாக்கத்தை ஏற்றுக்கொண்டது. நேருவும் மற்ற பதினோரு நபர்களும் 1946 செப்டம்பர் 2இல் பதவியேற்றனர். அதன்பின் ஒரு இனக்கலவரம் வெடித்துக் கிளம்பிய போது அது பம்பாயையும், அகமதாபாத்தையும் கடுமையாகத் தாக்கியது. வேவல் பிரபு மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தி நேருவின் ஆலோசனையைப் பெற்று மீண்டும் முஸ்லிம் லீக்கை இடைக்கால அரசில் பங்கெடுக்க அழைப்புவிடுத்தார். முஸ்லிம் லீக் அவரது அழைப்பை ஏற்றாலும் ஜின்னா அமைச்சரவையில் பங்கெடுக்க மறுத்துவிட்டார்.

இடைக்கால அமைச்சரவை 1946 அக்டோபர் 26இல் மறுசீரமைக்கப்பட்டது. முஸ்லிம் லீக் சார்பில் பங்குபெற்றோர் லியாகத் அலி கான், ... சுந்துரிகர், A.R. நிஷ்தர், கஸன்பர் அலி கான் மற்றும் ஜோகேந்திர நாத் மண்டல் ஆகியோர் ஆவர்.

ஆனால் காங்கிரசிற்கும் முஸ்லிம் லீக்கிற்கும் இடையிலான பகைமை குறையாமல் அது இடைக்கால அமைச்சரவைக் குழுவின் செயல்பாடுகளில் (உண்மையில் செயல்பாடற்ற நிலை) எதிரொலித்தது. லீக் அரசியல்சாசன சபையை உருவாக்க ஒத்துழைக்கப் பிடிவாதமாக மறுத்து வந்தது. மற்றொருபுறம் நாடு கடுமையான இனக்கலவரத்தில் சிக்கிப் பெரும் வேதனையை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. கிழக்கு வங்காளத்தின் நவகாளி இனக்கலவரத்தால் சூறையாடப்பட்டிருந்தது. இடைக்கால அரசில் பங்கு பெற்ற லீக்கின் உறுப்பினர்கள் முறையான கூட்டம் துவங்குவதற்கு முன் நேரு அரசபிரதிநிதி முன்னிலையில் நடத்திய அலுவலகக் குறிப்புக்குட்படாத கலந்தாலோசனைக் கூட்டங்களைப் புறக்கணித்தனர். இடைக்கால அரசின் செயல்பாடுகளை உள்ளிருந்து கெடுக்கும் நோக்கம் கொண்டது போன்றே முஸ்லிம் லீக்கின் செயல்பாடுகள் அமைந்தன.


காங்கிரஸ் ஜூலை - ஆகஸ்ட் 1946இல் நடந்த தேர்தலில் 210ற்கு 199 பொது இடங்களைப் பெற்றுப் பெரும் வெற்றியைக் குவித்தது போன்றே முஸ்லிம் லீக்கும் இஸ்லாமியருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நன்கு வெற்றி பெற்றது. அதன் அணியில் 76 இடங்கள் இருந்தன. இஸ்லாமியருக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடங்களில் ஒன்று நீங்கலாக 76 இடங்களை அது பெற்றிருந்தது. எனினும் சட்டசபையில் பங்கெடுப்பதைப் புறக்கணிக்க அது முடிவு செய்தது. ஆகவே 1946 டிசம்பர் 9இல் கூடிய முதல் சட்டசபையில் 207 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இதற்கிடையே காங்கிரசிற்கும் முஸ்லிம் லீக்கிற்கும் முற்றிக் கொண்டே போன பிணக்கின் விளைவாக இடைக்கால அரசு சுமூகமாக நடக்கமுடியாமல் தவித்தது. வேற்றுமைகளைக் களையும் பொருட்டு அரசபிரதிநிதியின் தலைமையில் நடத்தப்படும் அலுவலகக் குறிப்புக்குட்படாத கூட்டங்களைத் தொடக்கத்திலிருந்தே நடத்த முடியவில்லை .

இவையாவற்றுக்கும் உச்சமாக மார்ச் 1947இல் லியாகத் அலி கான் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை அமைந்தது. தொழிற்சாலைகள் மீதும், தொழில்கள் மீதும் அடுக்கடுக்காகப் பல வரிகளைச் சுமத்திய நிதியமைச்சர் ஒரு ஆணையத்தின் மூலம் 150 பெரும் வர்த்தக அமைப்புகளின் செயல்பாடுகளையும் அவைகளின் மீது இருந்த வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க நிர்பந்தித்தார். கான், அவரது அறிக்கையை சோஷலிஸ நிதிநிலை அறிக்கை என்று வர்ணித்தார். இவரின் இந்த நடவடிக்கை காங்கிரஸை ஆதரித்த பெரும் வர்த்தகர்களை நேரடியாகக் குறிவைப்பதாகவே இருந்தது. அவரது நோக்கம் தெளிவானது: இந்தியப் பிரிவினையை ஏற்படுத்தத் தளம் அமைக்கும் விதமாக காங்கிரசும், லீக்கும் ஒன்றிணைந்த செயல்பாட்டின் மூலம் தேசம் விடுதலை பெறமுடியாது என்பதை உணரவைப்பதே அதுவாகும்.

பிரிட்டிஷ் பிரதமரான அட்லி 1947 பிப்ரவரி 20இல் பாராளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவின் அடுத்தகட்ட நகர்வுக்கு வழி ஏற்படுத்தும் வகையில் பிரிட்டிஷார் ஜூன் 1948வாக்கில் அந்நாட்டைவிட்டு வெளியேறுவதில் தீர்மானமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. வேவல் பிரபு 1947 மார்ச் 22இல் அரசபிரதிநிதி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அப்பதவிக்கு மௌண்ட்பேட்டன் பிரபு நியமிக்கப்பட்டார்.

மௌண்ட்பேட்டன் திட்டம்

மௌண்ட்பேட்டன் இந்தியப் பிரிவினையை ஏற்படுத்த ஒரு தெளிவான திட்டத்தைக் கொண்டிருந்தார் அதன்படி பஞ்சாபை மேற்கு - கிழக்காகப் பிரிப்பதும் (மேற்குப் பகுதி பாகிஸ்தானுக்கு மௌண்ட்பேட்டன் பிரபு வழங்கப்படும்), அது போன்றே வங்காளத்தைப் பிரித்து அதன் மேற்குப் பகுதியை இந்தியா வைத்துக்கொள்ளவும் கிழக்குப்பகுதியைப் பாகிஸ்தானின் அங்கமாக மாற்றவும் அம்சங்கள் இருந்தன. காங்கிரஸ் செயற்குழு 1947 மே 1இல் இந்திய பிரிவினைத் திட்டத்திற்கு உடன்படுவதாக மௌண்ட்பேட்டனிடம் தெரிவித்தது. இதையடுத்து லண்டன் சென்று திரும்பிய அரசபிரதிநிதி இந்திய பிரிவினைக்கான வரைவை வெளியிட்டதோடு பிரிட்டிஷார் குறித்த தேதிக்கு முன்பாகவே 1947 ஆகஸ்ட் 15இல் இந்தியாவைவிட்டு மொத்தத்தில் விலக விரும்புவதாகத் தெரிவித்தார். அவர் அறிவித்த அன்றிலிருந்து 11 வாரங்களே இந்திய விடுதலைக்கு எஞ்சியிருந்தது. அனைத்திந்தியக் காங்கிரஸ் குழு 1947 ஜூன் 15இல் கூடிய போது கோவிந்த் பல்லப் பந்த் இந்தியப் பிரிவினைக்கான தீர்மானத்தை முன்னெடுக்க அது நிறைவேற்றப்பட்டது. நேரு, படேல் போன்றவர்களின் அதிகாரமட்ட வலியுறுத்தும் திறனும், காந்தியடிகளின் தார்மீக சக்தியுமே அனைத்திந்திய காங்கிரஸ் குழுவில் அத்தீர்மானம் வெற்றி பெறகாரணிகளாக அமைந்தன.


பல கொந்தளிப்பான சம்பவங்கள் மார்ச் 1946லிருந்து 1947 ஆகஸ்ட் 15 வரையிலான காலத்தில் நடந்தேறியதில் 1) அமைச்சரவைத் தூதுக்குழு நியமிக்கப்பட்டமை , 2) இடைக்கால அரசின் உருவாக்கம், 3) சட்டமன்றத்தின் தோற்றம், 4) காங்கிரசிற்கும், முஸ்லிம் லீக்கிற்குமிடையே ஏற்பட்ட பிளவு நாட்டின் பிரிவினைக்கும் இறுதியாக விடுதலைக்கும் இட்டுச்சென்றமை, போன்றவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

Tags : Last Phase of Indian National Movement | History இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் - வரலாறு.
12th History : Chapter 7 : Last Phase of Indian National Movement : Cabinet Mission and Mountbatten Plan Last Phase of Indian National Movement | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 7 : இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் : அமைச்சரவைத் தூதுக்குழு மற்றும் மௌண்ட் பேட்டன் திட்டம் - இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 7 : இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்