Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | வெள்ளையனே வெளியேறு இயக்கம்

இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் - வரலாறு - வெள்ளையனே வெளியேறு இயக்கம் | 12th History : Chapter 7 : Last Phase of Indian National Movement

   Posted On :  09.07.2022 09:00 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 7 : இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

காந்தியடிகள் மே 1942இல் இந்திய தேசிய காங்கிரசை அடுத்த கட்ட செயல்பாட்டிற்குத் தயார்படுத்தலானார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

காந்தியடிகள் மே 1942இல் இந்திய தேசிய காங்கிரசை அடுத்த கட்ட செயல்பாட்டிற்குத் தயார்படுத்தலானார். இம்முறை, பெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க காந்தியடிகள் முனைந்த நேரத்தில் இராஜாஜியும் நேருவும் தயக்கம் காட்டினர். ஒரு போராட்டத்திற்கு உகந்த சூழல் உருவாகி இருந்தது. பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்ததோடு உணவு தானியங்களுக்குக் கடும் தட்டுப்பாடும் ஏற்பட்டது.

காங்கிரசின் வார்தா கூட்டம்.

இப்பின்புலத்தில் இந்திய தேசிய காங்கிரசின் செயற்குழு 1942 ஜூலை 14இல் வார்தாவில் சந்தித்தது. இக்கூட்டத்தில் நாடு தழுவிய சட்ட மறுப்புப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இத்தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த இராஜாஜியும் புலாபாய் தேசாயும் காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து பதவித் துறப்பு செய்தனர். நேருவும் அதே நிலைப்பாட்டைக் கொண்டிருந்தபோதும் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவுக்குக் கட்டுப்பட்டார்.

'செய் அல்லது செத்துமடி' எனும் முழக்கம்

கிரிப்ஸ் தூதுக்குழுவோடு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவம் காந்தியடிகளையும் நேருவையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரிட்டிஷார் மீது நம்பிக்கை இழக்க வைத்தது. இதை காந்தியடிகள் 1942 மே 16இல் கூடிய பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படுத்தினார்: இந்தியாவைக் கடவுளிடம் விட்டுவிடுங்கள், அது அதீதமான ஒன்றாக இருக்குமானால் அதை இயற்கையின் அராஜகப் போக்கில் கூட விட்டு விடுங்கள் இவ்வரையறுக்கப்பட்ட ஒழுங்குமுறை கொண்ட அராஜகம் நீங்கிச் செல்வதால் முற்றிலும் தறிகெட்டு சட்ட சீர்கேடு ஏற்பட்டாலும் அந்த ஆபத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்." என்றார். அதன்பின் அவர் மக்களை நோக்கி செய் அல்லது செத்துமடி என்று கூறி முடிவை நோக்கிய ஒரு சண்டையாகக் கருதி தனது மறுப்பியக்கத்தைத் துவக்கினார்.


வெள்ளையனே வெளியேறு போராட்டங்கள்

காலனிய அரசு தாமதிக்காமல் காந்தியடிகள் உட்பட அனைத்துக் காங்கிரஸ் தலைவர்களையும் 1942 ஆகஸ்ட் 9 அன்று அதிகாலையில் கைது செய்து சிறையில் தள்ளியது. இந்திய மக்களும் தாமதிக்கவில்லை . விடியலின் முன்பே நடந்த கைது நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில் அனைத்து மாகாணங்களிலும் கடையடைப்புகளும் காவல்துறையினரோடு வன்முறை மோதலும் பதிலடியாகத் தரப்பட்டது. இந்தியா முழுமையிலும் தொழிலாளிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கினர். ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு தொழிற்சாலையில் வேலை நிறுத்தப் போராட்டம் ஆகஸ்ட் 20இல் துவங்கி 13 நாட்கள் நடைபெற்றது. அகமதாபாத்தின் ஜவுளித் தொழிற்சாலை ஊழியர்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் தொழிற்சாலைகளைக் கொண்ட அனைத்து நகர்ப்புறங்களும் சிறிது காலமாவது வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டன.

அரசாங்கத்தின் மனிதத்தன்மையற்ற அடக்குமுறை

காலனிய அரசு கடும் அடக்குமுறை உத்திகளையும் பல இடங்களில் காவல்துறையினரின் மூலம் துப்பாக்கிச் சூட்டையும் கைக்கொண்டது. எதிர்ப்பை ஒடுக்க இராணுவம் வரவழைக்கப்பட்டதிலிருந்து, எந்த அளவிற்கு எதிர்ப்பு இருந்திருக்கும் என்பதையும் அது சார்ந்த அடக்குமுறையையும் உணர்ந்து கொள்ள 57 பட்டாலியன் இராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டதையும் சான்றாகக் கொள்ளலாம். சில இடங்களில் விமானப்படையைக் கொண்டு மக்கள் கலைக்கப்பட்டனர்.நிலைமையின் தீவிரத்தையும் அதன் அழுத்தத்தையும் பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலுக்கு விளக்க விழைந்த லின்லித்கோ பிரபு தாம் எதிர்கொண்ட எதிர்ப்பைப் பற்றி எழுதுகையில் 1857 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின் கவலை கொள்ளவைக்கும் ஒரு வளர்ச்சி; எனினும், அதன் முக்கியத்துவத்தையும் வீரியத்தையும் இராணுவக் காரணங்களுக்காக உலகத்தின் பார்வையில் இருந்து மறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது என்று குறிப்பிடுகிறார்.

எதிர்ப்பின் ஆரம்பகட்டம் நகர்ப்புறங்களை மையமாகக் கொண்டு தொழிலாளர்களையும், மாணவர்களையும் உள்ளடக்கியதாகவும், அது இரும்புக்கரங்கொண்டு அடக்கப்பட்டதாகத் தெரிந்தாலும் மக்கள் எழுச்சி அதோடு முழுமையடையவில்லை. இரண்டாம் நிலையில் அது கிராமப்புறங்களில் பரவியது. உணவு தானியங்களின் விலை ஏப்ரல் 1942இல் இருந்து அதே ஆண்டு ஆகஸ்டுக்குள் அறுபது புள்ளிகள் அளவில் ஏறியதே வெறுப்புக் கிளம்பக் காரணமாக அமைந்தது. மேலும் காங்கிரசிற்குள் இருந்த சோஷலிசவாதிகள் காவல்துறையினரின் ஆகஸ்ட் 9 நடவடிக்கையில் சிக்காமல் கிராமப்புறங்களுக்குள் தலைமறைவாக இருந்து கிராமத்து இளைஞர்களை கொரில்லா நடவடிக்கை மூலம் ஒருங்கிணைத்தார்கள்.

கட்டவிழ்ந்த வன்முறை

இவ்வியக்கம் செப்டம்பர் 1942லிருந்து தாக்குதல்களையும் அரசின் தொலைத்தொடர்பு வசதிகளான தந்திக்கம்பிகளையும் இருப்புப் பாதைகளையும் இரயில் நிலையங்களையும் நாசமாக்குவதையும் அரசு அலுவலகங்களுக்கு நெருப்பு வைப்பதையும் உத்தியாகக் கொண்டிருந்தது. இது நாடு முழுவதும் பரவியபோதும் கிழக்கு ஒருங்கிணைந்த மாகாணங்களிலும் பீகார், மகாராஷ்டிரா மற்றும் வங்காளப் பகுதிகளிலும் அதிதீவிரமாகப் பின்பற்றப்பட்டு வந்தது. புரட்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதிகளில் தேசியவாத அரசை நிறுவிவிட்டதாக பறை சாற்றிக் கொண்டனர். இதன் ஒரு உதாரணமாக வங்காளத்தின் மிட்னாப்பூர் மாவட்டத்தில் செப்டம்பர் 1944 வரை ஏற்படுத்தப்பட்டிருந்த தம்லுக் ஜாட்டியா சர்க்கார் (Tamluk Jatiya Sarkar) அரசைக் கூறலாம். சதாராவிலும் ஓர் இணை அரசாங்கம் செயல்பட்டது.

சோஷலிசவாதிகளான ஜெயபிரகாஷ் நாராயண், அச்சுத் பட்வர்தன், ஆஸப் அலி, யூசுப் மெஹ்ரலி, இராம் மனோகர் லோகியா போன்றோர் தலைமை தாங்கினர். காந்தியடிகள் 1943 பிப்ரவரி 10இல் சிறைச்சாலையில் துவக்கிய 21 நாட்கள் உண்ணாவிரதம் ஒரு திருப்புமுனையாக அமைந்து இயக்கத்திற்கு (சில நெறிமுறைகளுக்கு உட்பட்ட வன்முறைக்கும்) வலுவேற்றியது.

இயக்கத்தின் பரவலும் அதன் தீவிரமும்

இயக்கத்தை ஒடுக்க பிரிட்டிஷார் பயன்படுத்திய வலுவைக்கொண்டே அதன் வேகமான பரவலையும், அது ஏற்படுத்திய தீவிரப்போக்கையும் புரிந்துகொள்ள முடிகிறது. கைதானவர்களின் எண்ணிக்கை 1943ஆம் ஆண்டின் முடிவில் 91,836 என்ற அளவை எட்டியது. அதே காலத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1060 ஆனது. அரசின் 208 காவல் கண்காணிப்பு நிலைகளும் (out post) 332 இருப்புப்பாதை நிலையங்களும் 945 அஞ்சல் அலுவலகங்களும் முற்றிலுமாக அழிக்கப்படவும் சேதத்திற்கு உட்படுத்தப்படவும் இயக்க நடவடிக்கைகள் காரணமாக அமைந்தன. குறைந்தபட்சம் 205 காவல்துறை வீரர்களாவது தங்கள் பணியை விடுத்துப் புரட்சியாளர்களோடு கைக்கோர்த்தார்கள். ஆசம்கரின் ஆட்சியராக இருந்து புரட்சியாளர்களின் மீது போதுமான நடவடிக்கை எடுக்க தவறியதால் பணி நீக்கம் செய்யப்பட்ட R.H . நிப்ளெட் தனது நாட்குறிப்பில் குறித்து வைத்தப் பதிவின்படி பிரிட்டிஷார் காவல்துறையினரின் மூலமாகப்பலகிராமங்களைத் தீக்கிரையாக்கியதோடு பல மைல்களுக்குத் தீயைப் பரவவிட்டு வெள்ளை பயங்கரத்தை அரங்கேற்றி அடக்குமுறையே ஆட்சிமுறை என்ற அளவுக்கு அக்காலகட்டத்தில் நடந்துகொண்டார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு கிராமத்தின் பொதுச்சொத்திற்குச் சேதம் ஏற்பட்டதால் கிராமமக்கள் அனைவரிடம் இருந்தும் அபராதம் பெறப்பட்டது.

இரகசிய வானொலி ஒலிபரப்பு

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் மற்றொரு சிறப்பம்சம் புரட்சியாளர்களால் வானொலி பயன்படுத்தப்பட்டமை ஆகும். பத்திரிகைச் சுதந்திரம் முற்றிலுமாகப் பறிக்கப்பட்ட நிலையில் புரட்சியாளர்கள் பம்பாய் நகரில் இரகசியமாக வானொலி ஒலிபரப்பு முறைமையை நிறுவினர். அதன் ஒலிபரப்பி (transmitter) ஓரிடத்தில் என்றில்லாமல் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டுக்கொண்டே இருந்தது. இந்த இரகசிய வானொலி ஒலிபரப்பிற்கு வித்திட்டவர் உஷா மேத்தா என்பதோடு அதன் ஒலிபரப்பு மதராஸ் வரை கேட்கப்பட்டது என்பது குறிப்பிடப்பட வேண்டிய தகவலாகும்.

இதுவரை இல்லாத அளவிற்கு வெள்ளையனே வெளியேறு இயக்கம் காலனிய அரசுக்குப் பேரிடியாக சென்று விழுந்தது. இவ்வியக்கம் காங்கிரஸ், சோஷலிசவாதிகள், ஃபார்வர்டு பிளாக் கட்சி என்று அனைவரின் பங்களிப்பையும் உள்ளடக்கியதாகும். மேலும் இவ்வியக்கம் எந்நிலையிலும் எதிர்பார்த்திருக்க முடியாத அளவிற்கு மக்களின் பேராதரவைக் கொண்டுவந்து சேர்த்ததோடு அவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தி காலனிய ஆட்சியாளர்களுக்குத் தாங்கள் தவிர்க்க முடியாத பெரும் சக்தி என்ற உண்மையைப் பறைசாற்றியது.

காந்தியடிகளின் விடுதலை

உடல்நலம் சார்ந்த காரணங்களுக்காக 1944 மே 6இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட காந்தியடிகள் தனது ஆக்கபூர்வமானச் செயல் திட்டங்களை மேற்கொள்ளலானார். காங்கிரஸ் அமைப்பும் பொதுவெளிக்கு வராமல் தங்கள் பணியைச் செவ்வனே மேற்கொண்டதன் மூலம் வெள்ளையனே வெளியேறு இயக்க காலத்தின் தடையைச் சுமூகமாக எதிர்கொண்டது. இதற்கிடையே காலனிய அரசு மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த ஒரு திட்டத்தை முன்வைத்தது. லின்லித்கோ பிரபுவிற்குப் பின் அக்டோபர் 1943இல் அரசபிரதிநிதிப் பதவியேற்ற ஆர்கிபால்டு வேவல் பிரபு அடுத்தகட்ட பேச்சுவார்த்தைச் சுற்றுக்கு ஆயத்தப்படுத்தலானார். இதனால் தெளிவாக வெளிப்பட்ட செய்தி ஒன்று தான் : பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர பிரிட்டிஷாருக்கு வேறு வழி இருக்கவில்லை .

Tags : Last Phase of Indian National Movement | History இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் - வரலாறு.
12th History : Chapter 7 : Last Phase of Indian National Movement : Quit India Movement Last Phase of Indian National Movement | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 7 : இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் : வெள்ளையனே வெளியேறு இயக்கம் - இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 7 : இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்