Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | இராயல் இந்திய கடற்படையின் கலகம்

இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் - வரலாறு - இராயல் இந்திய கடற்படையின் கலகம் | 12th History : Chapter 7 : Last Phase of Indian National Movement

   Posted On :  09.07.2022 09:07 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 7 : இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

இராயல் இந்திய கடற்படையின் கலகம்

போரினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு விலைவாசி ஏற்றத்திலும் உணவு தானியப் பற்றாக்குறையிலும் போர்க்காலத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதின் மூலமாகவும் அதனால் ஏற்பட்ட ஆட்குறைப்பு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் மூலமும் எதிரொலித்தது.

இராயல் இந்திய கடற்படையின் கலகம்

போரினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு விலைவாசி ஏற்றத்திலும் உணவு தானியப் பற்றாக்குறையிலும் போர்க்காலத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதின் மூலமாகவும் அதனால் ஏற்பட்ட ஆட்குறைப்பு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் மூலமும் எதிரொலித்தது. இவையாவும் பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வாகக் கிளம்பி ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருந்த இந்திய தேசிய இராணுவ விசாரணை எதிர்ப்பு இயக்கங்களோடு கலந்தன.

HMIS தல்வார் என்ற போர்கப்பலில் மாலுமியாகப் பணியாற்றிய (ஆங்கிலத்தில் ரேட்டிங் என்று வழங்கப்பட்ட இப்பதவிப் பெயரே பல்வேறுபட்ட போர்கப்பல்களிலும் இராயல் இந்திய கடற்படையின் போர்கப்பல்களிலும் பணியாற்றிய மாலுமிகளைக் குறிப்பதாக அமைந்தது) B.C. தத் என்பவர் அக்கப்பலின் பக்கவாட்டில் வெள்ளையனே வெளியேறு என்று எழுதினார். இதனையடுத்து அக்கப்பலில் மாலுமியாகப் பணியாற்றிய 1,100 மாலுமிகள் உடனடியாகப் போராட்டத்தில் இறங்கினர். ஆங்கிலேய அதிகாரிகளின் நிறவெறியையும் மோசமான உணவு வழங்கப்பட்டமையையும் பிற தரக்குறைவான செயல்பாடுகளையும் மாலுமிகள் கண்டனம் செய்தனர். தத்தின் கைது நடவடிக்கை 1946 பிப்ரவரி 18இல் வெடித்துக் கிளம்பிய கலகத்திற்கு உந்துவிசையாக அமைந்தது. அதன் மறுநாள் கோட்டைக் கொத்தளத்தில் பணியிலிருந்த மாலுமிகளும் அதிக எண்ணிக்கையில் கலகத்தில் இணைந்ததோடு, பம்பாய் நகரை வாகனங்களில் வலம் வந்தவாறே காங்கிரஸ் கொடியை ஏந்தி அசைக்கவும் பிரிட்டிஷ் விரோதக் கூச்சல்களை எழுப்பி ஆரவாரிக்கவும் செய்தனர்.


விரைவில் பம்பாய் ஜவுளித் தொழிற்சாலை ஊழியர்களும் ஆதரவுப் போராட்டத்தில் இறங்கினர். பம்பாய் மற்றும் கல்கத்தாவின் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் இறங்கியதில் இரு நகரங்களும் போர்முனைகள் போல் காட்சியளித்தன. நகர் முழுவதிலும் தடுப்பரண்கள் ஏற்படுத்தப்பட்டு முழுவீச்சில் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஆங்காங்கே குறுகிய நேரச் சண்டைகள் நடந்தேறின. நாள்தோறும் வியாபாரிகள் கடைகளை அடைத்துச் சென்றதில் பொதுவான வர்த்தகம் பெரிதும் தடைப்பட்டது. இருப்புப்பாதைகளில் மக்கள் வந்து கூட்டமாக அமர்ந்ததில், இருநகரங்களிலும் இரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பம்பாயின் கலகச் செய்தி கராச்சியை அடைந்ததும் பிப்ரவரி 19இல் HMIS ஹிந்துஸ்தான் கப்பலின் மாலுமிகளும் கராச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிறரும் மின்னல் வேகத்தில் போராட்டத்தைத் துவக்கினர். போராட்ட அலை கடற்படை முழுவதும் பரவியதால் 78 கப்பல்களிலும் 20 கரைசார்ந்த பணியிடங்களிலும் இருந்த 20,000 மாலுமிகள் 1946 பிப்ரவரி 18க்குப் பின் போராட்டத்தில் இறங்கியிருந்தனர். மாலுமிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பம்பாய், பூனா, கல்கத்தா, ஜெசூர், அம்பாலா நகரங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இராயல் இந்திய விமானப்படை ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். ஜபல்பூரில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவச் சிப்பாய்களும் போராடலாயினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாலுமிகள் பல்வேறு துறைமுகங்களிலும் கப்பலின் முகட்டில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளின் கொடிகளை ஒருங்கே கட்டியிருந்தனர்.

இவ்வனைத்தையும் காலனிய அரசு கடும் அடக்குமுறையை வெளிப்படுத்தியே எதிர்கொண்டது. உண்மையில் இக்கலகம் தலைவனில்லாத ஒன்றாகும் என்பதோடு மாலுமிகள் குறிப்பான எந்தத் திசையிலும் நகரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். பம்பாய், கல்கத்தா, மதராஸ் நகரங்களின் தொழிற்சங்கப் போராட்டங்கள் மாலுமிகளுக்கு ஆதரவாக வெளிப்பட்டுக் காலனிய ஆட்சிக்கு எதிரான உணர்வுக் குவியலாகத் தெரிந்தாலும் அவை நீண்டகாலம் நீடிக்க முடியாததால் இறுதியில் மாலுமிகள் சரணடைய வேண்டியதாயிற்று.

அப்போது பம்பாய் நகரில் இருந்த சர்தார் வல்லபாய் படேல் கலகத்தை முடிவிற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டார். எவ்வாறாயினும், இராயல் இந்தியக் கடற்படை மாலுமிகளின் போராட்டம் இந்திய தேசிய இயக்க வரலாற்றில் ஒரு உன்னதமானப் பக்கம் என்பதோடு ஒரு நீண்ட விடுதலைப் போராட்டத்தின் கடைசி அத்தியாயமாகவும் திகழ்கிறது.

மார்ச் 23, 1940 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு கூறுகிறது: பூகோளரீதியில் தொடர்ச்சியாக அமையப்பெற்ற பகுதிகள் பிரிக்கப்பட்டும் தேவைக்கேற்ப இந்தியாவின் வடமேற்கிலும் கிழக்குப் பகுதியிலும் எண்ணிக்கை அளவில் இஸ்லாமியப் பெரும்பான்மை இருப்பது போன்றப் பகுதிகளை உருவாக்கி இவையாவற்றையும் இணைத்து தன்னாட்சியும் இறையாண்மையும் கொண்டவைகளாக மாற்றி அதிலிருந்து ஒரு தனி நாட்டை உருவாக்க வேண்டும். (மூலம்: சுமித் சர்க்கார், மாடர்ன் இந்தியா 1885-1947 (ஆங்கிலம்), பியர்சன், 2018, பக்கம் 324)

Tags : Last Phase of Indian National Movement | History இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் - வரலாறு.
12th History : Chapter 7 : Last Phase of Indian National Movement : The Royal Indian Navy Revolt Last Phase of Indian National Movement | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 7 : இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் : இராயல் இந்திய கடற்படையின் கலகம் - இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 7 : இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்