இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் - வரலாறு - இராஜாஜியின் முன்மொழிவும் வேவல் திட்டமும் | 12th History : Chapter 7 : Last Phase of Indian National Movement
இராஜாஜியின் முன்மொழிவும் வேவல் திட்டமும்
இவ்வளர்ச்சிகளுக்கிடையே மதவாதம் எழுப்பிய சவால்களும் முஸ்லிம் லீக்கின் தனிநாடு கோரிக்கையும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. முஸ்லிம் லீக் மார்ச், 1940இல் நிறைவேற்றிய லாகூர் தீர்மானத்தின்படி இந்தியாவில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் என்ற நிலையிலிருந்து அவர்கள் ஒரு தனிநாடு என்ற நம்பிக்கைக்கு மாறிப்போயிருந்தனர். அச்சமயத்தின் ஒரே பிரதிநிதியாக முகமது அலி ஜின்னா தன்னை மட்டுமே நிலைநிறுத்திக் கொண்டார்.
இராஜாஜி திட்டம் (C.R. Formula)
1944 ஏப்ரலில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும்
சிறையில் இருந்த நிலையில் சுமூகமானத் தீர்வை எட்டும் பொருட்டு இராஜாஜி ஒரு முன்மொழிவுத்
தீர்மானத்தை வழங்கினார். அதன் அம்சங்களாவன:
• போருக்குப் பின்பு ஒரு ஆணையத்தின் மூலம்
இஸ்லாமியர்கள் முழுப் பெரும்பான்மையில் வாழும் தொடர் மாவட்டங்களைப் பிரித்தெடுத்து
அங்கே வயதுத்தகுதி அடைந்தோரைக் கொண்டு வாக்கெடுப்பு நடத்தி பாகிஸ்தான் உருவாக்கம் பற்றிய
முடிவை எடுத்தல் வேண்டும்.
• ஒருவேளை ஓட்டெடுப்பின் முடிவில் பிரிவினை
உறுதி செய்யப்பட்டால், அதிமுக்கிய பணிகளான பாதுகாப்பு, தொலைத்தொடர்பு போன்றவற்றை பொதுவில்
செயல்படுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தல் வேண்டும்.
• எல்லையில் அமையப்பெற்ற மாவட்டங்களுக்கு இரு
இறையாண்மை கொண்ட நாடுகளில் ஏதோ ஒன்றில் சேர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
• இத்திட்டங்கள் யாவும் முழுமையான அதிகார மாற்றம்
ஏற்பட்டபின் செயல்முறைக்குக் கொண்டு வரப்படுதல் வேண்டும்.
காந்தியடிகள் ஜூலை, 1944இல் சிறையிலிருந்து
விடுவிக்கப்பட்ட பின் இராஜாஜி திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஜின்னாவோடு பேச்சுவார்த்தை
நடத்த முன்வந்தார். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை
.
வேவல் பிரபு ஜூன், 1945இல் பேச்சுவார்த்தை
நடத்த சிம்லா மாநாட்டைக் கூட்டினார். ஜவஹர்லால் நேரு, சர்தார் பட்டேல், அச்சமயம் காங்கிரஸ்
இயக்கத்தின் தலைவராகப் பதவி வகித்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் போன்றவர்கள் மாநாட்டில்
பங்கெடுப்பதற்காகச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். சிம்லா மாநாட்டிற்கு முகாந்திரம்
அமைக்கும் பொருட்டு மார்ச், 1945இல் லண்டன் சென்ற வேவல் பிரபு சர்ச்சிலிடம் போருக்குப்
பின் எழும் நெருக்கடியைச் சமாளிக்க காங்கிரஸையும், முஸ்லிம் லீக்கையும் இணைத்து ஆட்சியமைக்க
ஒப்புதல் பெற்றார்.
அனைத்துக் கட்சிப் பின்புலத்திலிருந்தும் தலைவர்களைத்
தெரிந்து - அதிலும் குறிப்பாகக் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம்லீக்கின் தலைவர்களை - அவர்களின்
முன்பாக அரச பிரதிநிதி வைத்த முன்மொழிவின்படி அரசபிரதிநிதி, முப்படைகளின் தளபதி
(commander-in-chief), இந்தியாவின் சாதி இந்துக்கள், முஸ்லிம்கள் போன்றோருக்குச் சம
அளவில் பிரதிநிதித்துவமும் பட்டியல் இனங்களுக்கென்று தனிப்பிரதிநிதித்துவமும் வழங்கப்பட்டு
புதிய அரசியல் சாசனம் பற்றிய உரையாடலைத் துவக்கத் திட்டமிடப்பட்டது.
இம்முன்மொழிவு யாருக்கும் திருப்தியாக இல்லை.
தீர்மானமெதையும் எட்டாமலேயே ஜூன் 25 முதல் ஜூலை 14 வரை நடந்த சிம்லா மாநாடு முடிவடைந்தது.
குறிப்பாக அரசபிரதிநிதியின் குழுவிற்கு உறுப்பினர்களை அனுப்புவதில் இந்திய தேசிய காங்கிரசிற்கும்,
முஸ்லிம் லீக்கிற்கும் இருந்த உரிமை பற்றியப் பிரச்சனையை முன்வைத்தே பேச்சுவார்த்தை
முறிவடைந்தது.
முஸ்லிம் லீக் தனக்கு மட்டுமே இஸ்லாமியப் பிரதிநிதிகளை
நியமிக்க உரிமை உள்ளது என்று வாதிட்டதோடு காங்கிரஸ் உயர்வகுப்பு இந்துக்களை மட்டுமே
நியமிக்க முடியும் என்றும் அது ஒரு முஸ்லிமையோ ஒடுக்கப்பட்ட சமூகத்தவரையோ நியமிக்கக்கூடாதென்றும்
வலியுறுத்தியது. இது மக்களை மேலும் இனவாரியாகப் பிரிக்கும் முயற்சி என்றும் அனைத்து
இந்திய மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த காங்கிரஸிற்கு இருந்தத் தகுதியைக் குறைத்து
மதிப்பிடுவதாகவும் கருதப்பட்டது. முஸ்லிம் லீக்கின் பங்களிப்பில்லாமல் ஒரு குழு முழுமைபெறாது
என்று வேவல் பிரபு கருதியதால் அவர் சிம்லா பேச்சுவார்த்தையைக் கைவிட்டார்.
முஸ்லிம்களின் தேசிய அடையாளமானது 1940இன் லாகூர்
தீர்மானத்துக்கும் 1945இன் சிம்லா மாநாட்டுக்கும் பின்னர் முழுமைப்பெற்று அதன் ஒரே
நாயகராக ஜின்னா உறுதியாக நிலைப்பெற்றார். டெல்லியில் ஏப்ரல் 1946இல் நடந்த முஸ்லிம்
லீக்கின் சட்டசபை உறுப்பினர்கள் மாநாட்டில் பாகிஸ்தான் ஒரு இறையாண்மை கொண்ட தனிநாடு
என்று வர்ணிக்கப்பட்டது. முதன்முறையாக அதன் பூகோள வரையறையையும் வெளிப்படுத்திய முஸ்லிம்
லீக் வடகிழக்கில் வங்காளத்தையும், அசாமையும் போன்று வடமேற்கில் பஞ்சாப், வடமேற்கு எல்லை
மாகாணம், சிந்து, பலுசிஸ்தான் ஆகிய முஸ்லிம் மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதிகளைச் சுட்டிக்காட்டியது.
இதை நிராகரித்த காங்கிரஸ் தலைவரான மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர் சார்ந்த இயக்கம் முழு
விடுதலை பெற்ற ஒருங்கிணைந்த இந்தியாவையே ஆதரிக்கும் என்றார்.
இவையாவும் ஜூன் முதல் ஜூலை 1945 வரையான காலத்தில்
நடந்த சிம்லா மாநாட்டையொட்டி நடந்தேறிக் கொண்டிருந்த வேளையில் சர்ச்சில் பதவியிழந்து
அவர் பொறுப்பில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கிளெமண்ட் அட்லி பதவிக்கு வந்தார். காலம்
கணிசமாக மாறிப்போயிருந்தது. பிரிட்டிஷ் பிரதமரான அட்லி விடுதலையை உறுதி செய்ததோடு அதற்கான
நடைமுறைகள் மட்டுமே எஞ்சி இருப்பதாய் அறிவித்தார்.