Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | நேதாஜி சுபாஷ் சந்திர போசும் இந்திய தேசிய இராணுவமும்

இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் - வரலாறு - நேதாஜி சுபாஷ் சந்திர போசும் இந்திய தேசிய இராணுவமும் | 12th History : Chapter 7 : Last Phase of Indian National Movement

   Posted On :  12.07.2022 09:26 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 7 : இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

நேதாஜி சுபாஷ் சந்திர போசும் இந்திய தேசிய இராணுவமும்

பிரிட்டிஷ் பேரரசிற்கு உட்பட்ட மலேயா, பர்மா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒரு பெரும் இந்தியப் படை நிறுத்தப்பட்டது.

நேதாஜி சுபாஷ் சந்திர போசும் இந்திய தேசிய இராணுவமும்

பிரிட்டிஷ் பேரரசிற்கு உட்பட்ட மலேயா, பர்மா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒரு பெரும் இந்தியப் படை நிறுத்தப்பட்டது. இப்படைகளால் ஜப்பானியப் படைகளுக்கு ஈடுகொடுத்து நிற்கமுடியவில்லை. தென்கிழக்கு ஆசியாவில் நிலைகொண்டிருந்த பிரிட்டிஷ் இந்தியப் படைகளின் அதிகாரிகள் அவர்களின் கீழிருந்த படைவீரர்களைப் போர்க்கைதிகளாய் விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.



மலேயாவில் இவ்வாறு கைவிடப்பட்ட பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் அதிகாரியான கேப்டன் மோகன் சிங் ஜப்பானியர்களின் உதவியை நாடியபோது, அவர்களும் அதில் ஒரு நல்ல வாய்ப்பைக் கண்டார்கள். ஜப்பானும் சீனாவில் தனது காலனியை நிறுவ முனைந்ததேயொழிய இந்தியாவைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த போர்க்கைதிகள் யாவரும் மோகன் சிங்கின் தலைமையின் கீழ் விடப்பட்டனர். ஜப்பானிடம் சிங்கப்பூர் வீழ்ந்ததால் மேலும் பல போர்க்கைதிகள் உருவானதில் மோகன் சிங்கின் கட்டுப்பாட்டில் இருந்த வீரர்களின் எண்ணிக்கை 45,000 என்ற அளவை எட்டியது. இவர்களில் இருந்து 40,000 பேரைத் தேர்ந்தெடுத்து 1942இன் இறுதியில் இந்திய தேசிய இராணுவத்தை மோகன் சிங் பலப்படுத்தினார். ஜப்பானியர்களின் ஆதிக்கத்திலிருந்த பகுதியில் வாழ்ந்த இந்தியர்கள் இந்திய தேசிய இராணுவத்தையும் மோகன் சிங்கையும் ஒரு பாதுகாவலராகப் பார்த்தாலும் அவருடன் இருந்த அதிகாரிகள் இந்திய தேசிய காங்கிரஸ் அழைப்புவிடுத்தாலொழிய இந்தியா மீது படைநடத்தி செல்லப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்தனர்.

1943 ஜுலை 2இல் சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூர் சென்று சேர்ந்தார். அங்கிருந்து டோக்கியோ சென்று பிரதமர் டோஜோவைச் சந்தித்தார். ஆனால் இந்தியாவை ஆக்கிரமிக்கும் எண்ணம் ஜப்பானுக்கு இல்லை என்று ஜப்பானிய அரசர் அறிவித்தார். எனவே சிங்கப்பூருக்குத் திரும்பிய போஸ் 1943 அக்டோபர் 21இல் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசை ஏற்படுத்தினார். இத்தற்காலிக அரசு பிரிட்டன் மீதும் பிற நேச நாடுகள் மீதும் போர் அறிவிப்பு செய்தது. அச்சு நாடுகள் போசின் தற்காலிக அரசை தமது நட்பு வளையத்துக்குள் ஏற்றுக்கொண்டன.

போஸும் இந்திய தேசிய இராணுவமும்

போஸ் இராணுவம் சாராத சாதாரண மக்களையும் இந்திய தேசிய ராணுவத்தில் இணைத்ததோடு பெண்களுக்கான ஒரு படைப்பிரிவையும் ஏற்படுத்தினார். மருத்துவராகப் பணியாற்றியவரும் சென்னையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான அம்மு சுவாமிநாதனின் மகளுமான டாக்டர் லட்சுமி, ராணி ஜான்சி என்ற படைப்பிரிவிற்குத் தலைமையேற்றார். சுபாஷ் சந்திர போஸ் 1944 ஜுலை 6இல் தனது ஆசாத் ஹிந்த் ரேடியோவின் மூலம் ரங்கூனிலிருந்து காந்தியடிகளை நோக்கிய ஒரு உரையை ஆற்றினார். காந்தியடிகளைத் தேசத்தின் தந்தையே" என்று அழைத்த அவர் இந்தியாவின் கடைசி விடுதலைப் போருக்கு அவர்தம் ஆசியைக் கோரினார்.

வங்காள காங்கிரஸ் கமிட்டித் தலைவர் உட்பட்ட அனைத்துப் பதவிகளில் இருந்தும் ஆகஸ்டு 1939 இல் இந்திய தேசிய காங்கிரசால் விடுவிக்கப்பட்ட போஸ், தனக்கு ஆதரவு திரட்டி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலானார். இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1940 ஜுலை 3 அன்று கைது செய்யப்பட்ட அவர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். மேற்கொண்டு ஐரோப்பாவில் தொடர்ந்து நடந்தப் போரில் ஜெர்மனியே வெல்லும் என்று போஸ் நம்பினார். அவர் அச்சு நாடுகளோடு கைக் கோர்ப்பதன் மூலம் இந்தியா சுதந்திரம் பெறமுடியும் என்ற சிந்தனையை வளர்த்தெடுத்தார். கல்கத்தாவிலிருந்து 1941 ஜனவரி 16-17இன் நள்ளிரவில் தப்பிய அவர், காபூல் மற்றும் சோவியத் நாடு வழியாக ஒரு இத்தாலியக் கடவுச்சீட்டைக் கொண்டு மார்ச் மாதத்தின் கடைசியில் பெர்லின் சென்று சேர்ந்தார். அங்கு ஹிட்லரையும் கோயபல்ஸையும் சந்தித்தார். இரு நாசிச தலைவர்களும் பெரிதாக இந்திய ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றாலும் ஆசாத் ஹிந்த் ரேடியோவை உருவாக்க அனுமதி வழங்கினர். ஹிட்லரையும், அவருக்கு நெருக்கமான அரசியல் தலைவர்களையும் சந்தித்தபோதும் போஸால் பெரிய மாற்றத்தை உருவாக்க முடியவில்லை. போரில் ஜெர்மனிக்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து, போஸ் 1943 ஜுலையில் சிங்கப்பூர் சென்று சேர்ந்தார்.

போரில் அச்சு நாடுகளோடு இந்திய தேசிய இராணுவம்

இம்பாலை நோக்கிய ஜப்பான் படைகளின் நகர்வில் ஷா நவாஸால் வழி நடத்தப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தின் ஒரு பிரிவும் (battalion) பங்கெடுத்தது. இது அச்சு நாடுகளும் ஜப்பானியப் படைகளும் பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருந்த 1944இன் பிற்பகுதியில் நடந்தேறியது. இம்பாலைக் கைப்பற்றும் முயற்சியில் ஜப்பான் வெற்றிப் பெற முடியாததைத் தொடர்ந்து 1945இன் நடுவில் அது பிரிட்டிஷ் படைகளிடம் சரணடைந்தது. கைது செய்யப்பட்ட ஷா நவாஸ் மீதும் அவரோடிருந்த வீரர்கள் மீதும் இராஜ துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது.

இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை     

டெல்லியின் செங்கோட்டையில் இந்திய தேசிய இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட விசாரணையில் இந்திய தேசிய காங்கிரஸ் தனது மிகச் சிறந்த சட்ட நிபுணர்களைக் கொண்டு அவர்கள் சார்பாக வாதாடியது இந்திய வரலாற்றில் சிறப்பான ஒரு அம்சமாகும். காந்தியடிகளின் குரலுக்கு இசைந்து ஒத்துழையாமை இயக்கத்தின் பின்புலத்தில் 1920களின் ஆரம்பத்தில் தனது சட்டப்பணிகளைத் துறந்த ஜவஹர்லால் நேரு , நீண்ட இடைவெளிக்குப் பின் தனது கருப்பு அங்கியை அணிந்து இந்திய தேசிய இராணுவ வீரர்களின் சார்பில் வழக்கில் ஆஜரானார். இராணுவரீதியாக இந்திய தேசிய இராணுவம் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்ற போதும், அவர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணை பொது மக்களைப் பெரிதும் கவர்ந்ததோடு ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

   

காலனிய அரசின் பிடிவாதமான முரட்டுப்போக்கு மற்றுமொரு பேரியக்கத்திற்கு மேடையமைத்துக் கொடுத்தது. இந்திய தேசிய காங்கிரசும் 1945 ஜூன் 25 முதல் ஜூலை 14 வரை நடைபெற்ற சிம்லா மாநாட்டில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததையடுத்து நேரடியாக மக்களைத் திரட்டும் பொருட்டு நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தியது. அண்மையில் இந்திய அரசியல் சட்டம், 1935இன் கீழ் தேர்தல் வருவதாக இருந்தாலும் இக்கூட்டங்களில் ஓட்டுக் கேட்பதைவிட பெரும்பாலும் இந்திய தேசிய இராணுவ விசாரணையைப் பற்றியே பேசப்பட்டது.

இப்பின்புலத்தில் காலனிய ஆட்சியாளர்கள்ஷா நவாஸ் கான், P.K. ஷெகல் மற்றும் G.S. தில்லான் - ஆகிய இந்திய தேசிய இராணுவத்தின் மூன்று முக்கிய அதிகாரிகளைப் பிரித்தெடுத்து விசாரணை நடத்தியது. இந்திய நாட்டின் பத்திரிகைகள் யாவும் இவ்விசாரணையை உணர்ச்சிகரமாகப் பிரசுரித்ததோடு தலையங்கங்கள் அனைத்திலும் அவர்தம் விடுதலைக்காகக் கோரிக்கை வைத்தன. கடையடைப்புகளும் ஊர்வலங்களும் பொது வேலைநிறுத்தங்களும் இந்திய தேசிய இராணுவ வாரம் கடைபிடிக்கப்பட்டபோது நடந்தேறியதோடு வீரர்களின் உடனடி விடுதலையும் வலியுறுத்தப்பட்டது.

இம்மூன்று அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்ததின் மூலம் அனைத்து அரசியல் கருத்துப் பிரிவினைகளும் ஓரணியின்கீழ் வர வழியேற்பட்டது. அதுவரை வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இருந்து தங்களைத் தனிமைப்படுத்தி வைத்திருந்த முஸ்லிம் லீக் , சிரோமணி அகாலி தளம், இந்து மகாசபை போன்ற அமைப்புகள் எதிர்ப்புக் கூட்டங்களில் கலந்து கொள்ள துவங்கியதோடு சிறைப்பட்ட வீரர்களின் வழக்குச் செலவிற்காக நிதி திரட்டவும் செய்தன. விசாரணை நீதிமன்றம் ஷெகல், தில்லான், ஷா நவாஸ் கான் ஆகியோரின் குற்றத்தை உறுதிப்படுத்தினாலும், முப்படைகளின் தளபதி (Commander-in-chief) அவர்க ளின் தண்டனையைக் குறைத்ததோடு 1946 ஜனவரி 6இல் அவர்களை விடுதலை செய்தார். இந்திய தேசிய இராணுவத்தின் விசாரணை பிப்ரவரி 1946இல் இந்திய தேசிய இயக்கத்தை மற்றுமொரு முக்கியமான நிகழ்வுக்கு எடுத்துச் செல்ல மேடையமைத்தது. அதன்படி இராயல் இந்தியக் கடற்படையின் (RIN) மாலுமிகள் கலகக் கொடியைத் தூக்கினர்.

Tags : Last Phase of Indian National Movement | History இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் - வரலாறு.
12th History : Chapter 7 : Last Phase of Indian National Movement : Netaji Subhas Chandra Bose and the INA Last Phase of Indian National Movement | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 7 : இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் : நேதாஜி சுபாஷ் சந்திர போசும் இந்திய தேசிய இராணுவமும் - இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 7 : இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்