Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

வரலாறு - இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் | 12th History : Chapter 7 : Last Phase of Indian National Movement

   Posted On :  12.07.2022 08:42 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 7 : இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

இரண்டாம் உலகப்போரின் துவக்கமும் அதை தொடர்ந்து, மாகாணங்களில் வீற்றிருந்த காங்கிரஸ் அமைச்சரவைகளின் ஒப்புதல் பெறாமல் பிரிட்டிஷார் இந்தியாவைப் போரில் பங்கெடுக்க முடிவுசெய்தமையும் இந்திய தேசிய காங்கிரசையும் காந்தியடிகளையும் அரசியல் ரீதியாகத் தூண்டும் வகையில் அமைந்தது.



கற்றலின் நோக்கங்கள்

கீழ்க்காணும் அம்சங்களோடு அறிமுகமாதல்

 

• கிரிப்ஸ் தூதுக்குழுவின் வருகையும் அதன் தோல்வியும்

• வெள்ளையனே வெளியேறு இயக்கமும் காந்தியடிகளின் செய் அல்லது  செத்துமடி முழக்கமும்

 •சுபாஷ் சந்திர போசும் இந்திய தேசிய இராணுவமும்

• இராஜாஜியின் சமரச முன்மொழிவும் வேவல் திட்டமும்

• இராயல் இந்திய கடற்படையின் கலகம் (1946)

• மௌண்ட் பேட்டன் திட்டமும் இந்தியப் பிரிவினையும்


அறிமுகம்

இரண்டாம் உலகப்போரின் துவக்கமும் அதை தொடர்ந்து, மாகாணங்களில் வீற்றிருந்த காங்கிரஸ் அமைச்சரவைகளின் ஒப்புதல் பெறாமல் பிரிட்டிஷார் இந்தியாவைப் போரில் பங்கெடுக்க முடிவுசெய்தமையும் இந்திய தேசிய காங்கிரசையும் காந்தியடிகளையும் அரசியல் ரீதியாகத் தூண்டும் வகையில் அமைந்தது. தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்யும் விதமாக காங்கிரஸ் அமைச்சர்கள் பதவி துறந்தனர். காந்தியடிகள் அக்டோபர் 1940இல் தனிநபர் சத்தியாகிரகத்தைத் துவங்கியதன் மூலமாக காங்கிரஸ் இயக்கத்தின் மனவலிமையை உறுதிப்படுத்தினார். இதற்கிடையே, இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக சுபாஷ் சந்திர போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது காந்தியடிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியதால் சுபாஷ் தம் பதவியைத் துறந்தார். பின்னர் ஃபார்வர்ட் பிளாக் கட்சியைத் துவக்கினார். பிரிட்டிஷாரின் கைது நடவடிக்கையால் சுபாஷ் ஜெர்மனி மற்றும் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்று அங்கு இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கி காங்கிரஸ் இயக்கத்திலிருந்து தனித்துப் புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

அதிருப்தியிலிருந்த தேசியவாதிகளை அரவணைக்கும் பொருட்டு மார்ச் 1942இல் கிரிப்ஸ் தூதுக்குழு வருகை புரிந்தது. ஆனால், அதன் முன்மொழிவில் எந்தப் பலனும் இருப்பதாகத் தெரியவில்லை . காந்தியடிகள் ஆகஸ்ட் 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நடத்த முடிவு செய்தார். ஆனால் பிரிட்டிஷாரோ காங்கிரசின் அனைத்துத் தலைவர்களையும் கைது செய்ததோடு, இயக்கத்தையும் இரும்புக்கரங்கொண்டு அடக்கினர். காந்தியடிகள் மே 1944 வரை சிறையில் கடும் நெருக்கடிகளுக்கு உட்படுத்தப்பட்டார். அதன்பின் வந்த அமைச்சரவைத் தூதுக்குழுவின் திட்டம் காங்கிரசாருக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. எனினும், பாகிஸ்தானின் உருவாக்கத்தை எதிர்பார்த்த ஜின்னாவும் அவர்தம் முஸ்லிம் லீக் கட்சியும் நேரடி நடவடிக்கை நாள் என்று விடுத்த அறைகூவலில் கிழக்கு வங்காளத்தில் வன்முறை வெடித்துக் கிளம்பியது. கலவர பூமியாக மாறியிருந்த நவகாளியில் இருந்து காந்தியடிகள் தமது அமைதிப் பயணத்தைத் துவக்கினார். இராஜாஜியின் சமரச முயற்சியும் வேவல் திட்டமும் அதை நிறைவேற்றும் பொருட்டு கூடிய சிம்லா மாநாடும் பேச்சுவார்த்தை முடக்கத்தைச் சரி செய்ய தவறின. இதற்கிடையே, இராயல் இந்தியக் கடற்படை, கலகத்தில் ஈடுபட்டமை பிரிட்டிஷாரை வேகமாக விடுதலை வழங்கத் துரிதப்படுத்தியது. விடுதலை வழங்கவும் இந்தியா - பாகிஸ்தான் என்று இத்துணைக்கண்டம் பிரிக்கப்படுவதை மேற்பார்வையிடவும் மௌண்ட் பேட்டன் அரசப்பிரதிநிதி நியமிக்கப்பட்டார்.


தனிநபர் சத்தியாகிரகம்

இதற்கு முன்பு பெருவாரியான மக்களை உள்ளடக்கிய இயக்கங்களை நடத்தி வந்த காந்தியடிகள், சர்வாதிகாரத்திற்கு எதிரான போரை வலுவிழக்கச் செய்யாமலிருக்கத் தனிநபர் சத்தியாகிரகம் என்ற வழியைக் கைக்கொண்டார். காந்தியடிகளால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சத்தியாகிரகிகளை அவர்களின் பேச்சுரிமையை மையப்படுத்தி போருக்கு எதிரானப் பிரச்சாரத்தை மேற்கொள்ள தூண்டினார். தேர்ந்தெடுக்கப்பட்ட சத்தியாகிரகிகள் தாங்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் தேதி, நேரம், இடம் போன்ற தகவல்களை மாவட்ட நீதிபதிக்குத் தெரிவித்துவிட வரையறுக்கப்பட்டது. குறித்த நேரத்தில் சரியான இடத்தை வந்தடைந்த சத்தியாகிரகிகள் முழங்க வேண்டியதாவது: பிரிட்டிஷாரின் போர் முயற்சிக்கு மனிதசக்தியாகவோ பணமாகவோ உதவிபுரிதல் தவறாகும். ஒரே உருப்படியான செய்கை என்பது வன்முறையைக் கைக்கொள்ளாமல் எல்லாவிதத்திலும் போர் முயற்சிகளை எதிர்ப்பதேயாகும். இவ்வாறு பிரச்சாரம் செய்வதன் மூலம் கைதாவது அடுத்தகட்டமாகும்.


வினோபா பாவே மகாராஷ்டிரத்தில் அமைந்த தனது பாவ்னர் ஆசிரமத்தருகே 1940 அக்டோபர் 17இல் முதல் சத்தியாகிரகத்தை நடத்தியதின் வாயிலாக இவ்வியக்கம் தொடங்கப் பெற்றது. காந்தியடிகள் டிசம்பர் 1940இல் இவ்வியக்கம் முடிவுக்கு வந்ததாக அறிவித்தார். மேற்கொண்டு சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட பின் மீண்டும் ஜனவரி 1941இல் குழு சத்தியாகிரகமாக உருவெடுத்தபோதும் அதை ஆகஸ்ட் 1941இல் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

 

ஆகஸ்ட் கொடை

தனிநபர் சத்தியாகிரகம் என்பது அரசபிரதிநிதி லின்லித்கோ பிரபுவின் ஆகஸ்ட் கொடைக்கு காங்கிரஸ் கொடுத்த பதிலடியாகும். லின்லித்கோ பிரபு 1940 ஆகஸ்ட் 8இல் அளிக்க முன்வந்ததாவது: வரையறுக்கப்படாத ஒரு தேதியில் டொமினியன் அந்தஸ்து, அதிகமான இந்தியர்களைக் கொண்டு அரசபிரதிநிதியின் குழுவை (செயற்குழு ) விரிவாக்கம் செய்தல், இந்திய உறுப்பினர்களைக் கொண்ட போர் ஆலோசனைக் குழுவை உருவாக்குதல், சிறுபான்மையினரின் உரிமைகளை அங்கீகரித்தல், போருக்குப் பின் இந்திய மக்கள் தங்களுக்கென்ற ஒரு அரசியல் சாசனத்தை இயற்ற உள்ள உரிமையை ஏற்று அதற்கு எதிர்காலத்தில் வாய்ப்பளிக்க உறுதியளித்தல் ஆகியவையாகும்.


 

காங்கிரஸில் இருந்து போஸ் நீக்கப்படுதல்

ஆகஸ்ட் கொடை மிகத்தாமதமாக அறிவிக்கப்பட்டதால் அது குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தக் கூட காங்கிரசுக்கு நேரமில்லை . இக்காலகட்டத்தில் காங்கிரசும் தனது ஆதரவாளர் பின்புலத்தை வெகுவாக இழந்திருந்தது. அதன் உறுப்பினர் எண்ணிக்கை 1938-39இல் 4.5 மில்லியன் என்ற நிலையிலிருந்து 1940-41இல் 1.4 மில்லியன் என்ற அளவுக்குச் சரிந்திருந்தது. காங்கிரசிற்குள் சுபாஷ் சந்திர போஸ் ஓரங்கட்டப்பட்டதால் அவ்வமைப்பின் முக்கிய மேல் மட்டத் தலைவர்கள் அவரோடு ஒத்துழைக்க மறுத்தனர். அதனால் கல்கத்தாவில் கூடிய அனைத்து இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் போஸ் பதவித் துறப்பு செய்யவே, இராஜேந்திரப் பிரசாத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். போஸ் காங்கிரசிற்குள் செயலாற்ற விரும்பி ஃபார்வர்டு பிளாக் கட்சியை உருவாக்கினாலும், ஆகஸ்ட் 1939இல் அவர் காங்கிரசின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.


 

லாகூர் தீர்மானம்

ஒருபுறம், தேதி அறிவிக்கப்படாத டொமினியன் அந்தஸ்து என்ற நிலைக்கும் போரில் பங்கெடுத்தால் அதன் முடிவிற்குப் பின் விடுதலை வழங்க வலியுறுத்திய இந்தியர்களின் நிலைப்பாட்டிற்கிடையே சுமூகமான தீர்வை எட்ட அனுமதிக்காத காலனிய அராஜகப்போக்கு சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது என்றால் மறுபுறம் வேறொரு சிக்கல் முளைத்தது. அது இஸ்லாமியர்களுக்கான தனிநாடு கோரிக்கையாகும். இதன் துவக்கம் 1930களில் கிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் தனிப்பகுதி அல்லது சில பகுதிகள் என்ற நிலையிலிருந்து 1940 மார்ச் 23இல் லாகூரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் இது ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியது.

இத்தகைய கோரிக்கையை முஸ்லிம் லீக் கட்சியும் அதன் ஆதரவாளர்களும் முன்வைக்க காலனி ஆட்சியாளர்களே தூண்டுதலாக இருந்ததற்கான ஆதாரங்கள் வெகுவாக உள்ளன. இத்தீர்மானத்தின் மூலம் பிரிட்டிஷார் போர் நடவடிக்கைகளில் காங்கிரசின் ஆதரவை வேண்டிய போதும் அவர்களோடு பேச்சுவார்த்தையை நிராகரிக்க ஒரு தெம்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

அமைப்புரீதியில் காங்கிரஸ் இக்கால கட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுவிழந்து காணப்பட்டது. அதன் தலைவர்கள் அச்சு நாடுகளின் - ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் - கொள்கைக்கு எதிரான பிரிட்டிஷாரின் போர் என்பதால் தங்கள் ஆதரவை சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் மக்களாட்சியைப் பாதுகாக்கும் பொருட்டும் உறுதி செய்ய வேண்டிய நிலை இருப்பதை உணர்ந்தனர். போஸ் ஒருவர் மட்டுமே நேசநாடுகளோடு ஒத்துழையாமல் அச்சு நாடுகளை ஆதரித்தார்.

இவையெல்லாம் 1940இன் முக்கிய போக்குகளாகும். ஜப்பான் தென்கிழக்கு ஆசியப் பகுதியில் முன்னேறி வந்ததும் பிரிட்டிஷ் படைகளின் வீழ்ச்சியும் நிலைமையைப் பெரிதும் மாற்றின. இதனால் விடுதலைக்கு ஒப்புதல் வழங்காமலேயே போர் முயற்சிகளில் இந்தியர்களின் ஒத்துழைப்பைப் பெறவேண்டிய அவசரமான சூழல் உதித்தது. போர்க்கால அமைச்சரவையைத் தலைமையேற்று நடத்திக்கொண்டிருந்த வின்ஸ்டன் சர்ச்சில், சர் ஸ்டாஃப்போர்டு கிரிப்ஸை காங்கிரசோடு பேச்சுவார்த்தை நடத்த அனுப்பிவைத்தார்.

Tags : History வரலாறு.
12th History : Chapter 7 : Last Phase of Indian National Movement : Last Phase of Indian National Movement History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 7 : இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் : இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 7 : இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்