Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | சிந்துவெளி நாகரிகம்

பண்டைய நாகரிகங்கள் | வரலாறு - சிந்துவெளி நாகரிகம் | 9th Social Science : History : Ancient Civilisations

   Posted On :  04.09.2023 02:28 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பண்டைய நாகரிகங்கள்

சிந்துவெளி நாகரிகம்

ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படும் சிந்துவெளி நாகரிகம் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் சுமார் 1.3 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் பரவியிருந்தது.

சிந்துவெளி நாகரிகம்

ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படும்  சிந்துவெளி நாகரிகம் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் சுமார் 1.3 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் பரவியிருந்தது. மேற்கே பாகிஸ்தான் - ஈரான் எல்லையில் உள்ள சுட்காஜென்-டோர், வடக்கே ஷோர்டுகை (ஆப்கனிஸ்தான்) கிழக்கே ஆலம்கீர்பூர் (உத்திரப்பிரதேசம் - இந்தியா), தெற்கே டைமாபாத் (மஹாராஷ்ட்ரா - இந்தியா) ஆகிய இடங்களை எல்லைகளாகக் கொண்டது இந்நாகரிகம். இப்பரப்பில் ஹரப்பா நாகரிகத்துக்கான பல சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நாகரிகம், பரவியுள்ள முக்கிய பகுதிகள் குஜராத், பாகிஸ்தான், இராஜஸ்தான் மற்றும் ஹரியனா.


திட்டமிடப்பட்ட நகரங்கள்

ஹரப்பா (பஞ்சாப், பாகிஸ்தான்), மொஹஞ்சதாரோ (சிந்து, பாகிஸ்தான்), தோலாவிரா (குஜராத், இந்தியா), கலிபங்கன் (ராஜஸ்தான், இந்தியா), லோதால் (குஜராத், இந்தியா), பானவாலி (ராஜஸ்தான், இந்தியா) ராகிகரி (ஹரியானா, இந்தியா) சுர்கொட்டா (குஜராத், இந்தியா) ஆகியவை சிந்துவெளி நாகரிகத்தின் முக்கியமான நகரங்கள்.

ஹரப்பா நகரங்களில் கோட்டை சுவர்கள், நன்கு திட்டமிடப்பட்ட தெருக்கள், சந்துகள், கழிவுநீர்க் கால்வாய்கள் ஆகியவை காணப்படுகின்றன. ஹரப்பா மக்கள் சுட்ட, சுடாத செங்கற்களையும், கற்களையும் கட்டுமானங்களுக்குப் பயன்படுத்தினார்கள். உள்ளாட்சி அமைப்பு ஒன்று நகரங்களின் திட்டமிடலை கட்டுப்படுத்தியிருக்கக் கூடும். சில வீடுகளில் மாடிகள் இருந்தன. மொஹஞ்சதாரோவில் உள்ள மாபெரும் குளியல் குளம் ஒரு முக்கியமான கட்டுமானமாகும்.


இக்குளத்தின் அருகே நன்கு தளமிடப்பட்ட பல அறைகளும் உள்ளன. தோண்டியெடுக்கப்பட்ட சில கட்டுமானங்கள் களஞ்சியங்கள் போல் காணப்படுகின்றன. ஹரப்பர்களின் அரசு அமைப்பு பற்றி நமக்கு விபரங்கள் தெரியவில்லை . ஆனால், பண்டைய அரசு போன்ற ஒரு அரசியலைமைப்பு ஒன்று இருந்திருக்க வேண்டும். மொஹஞ்சதாரோவிலிருந்து கிடைத்துள்ள ஒரு சிலை "பூசாரி அரசன்" என்று அடையாளம் காட்டப்படுகிறது. ஆனால் அது சரியானதா என்று உறுதிப்படுத்த முடியவில்லை .

உங்களுக்குத் தெரியுமா?

ஹரப்பா தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடம் என்பதால், சிந்துவெளி நாகரிகம். ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாகரிகம் சிந்து நதிக்கு அப்பாலும் பரவியுள்ளதால் சிந்து சமவெளி நாகரிகம் என்று முன்னர் அழைக்கப்பட்டதற்கு மாறாக ஹரப்பா நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது.

 

வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும்

ஹரப்பா மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டனர். அவர்கள் கோதுமை, பார்லி மற்றும் பலவிதமான தினை வகைகளைப் பயிரிட்டார்கள். இரட்டைச் சாகுபடி முறையையும் அவர்கள் கடைப்பிடித்தார்கள். ஆடு மாடு வளர்த்தலும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. மாடுகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகளையும் அவர்கள் வளர்த்தார்கள். யானை உள்ளிட்ட பல விலங்குகள் பற்றி அறிந்திருந்தார்கள். ஆனால் குதிரைகளைப் பயன்படுத்தவில்லை . ஹரப்பாவின் மாடுகள் ஜெபு என்றழைக்கப்படும். இது ஒரு பெரிய வகை மாட்டின் இனம், சிந்துவெளி முத்திரைகளில் இவ்வகையான பெரிய காளை உருவம் பரவலாகக் காணப்படுகிறது.

மட்பாண்டக் கலை


ஹரப்பா மக்கள் ஓவியங்கள் தீட்டப்பட்ட மட்பாண்டங்களைப் பயன்படுத்தினார்கள். மட்பாண்டங்கள் ஆழமான சிவப்பு வண்ணம் பூசப்பட்டு கருப்பு நிற ஓவியங்கள் தீட்டப்பட்டவை. பீடம் வைத்த தட்டு, தானியம் போன்றவற்றைச் சேமித்து வைப்பதற்கான ஜாடிகள், துளையிடப்பட்ட ஜாடிகள், கோப்பைகள், 'S' வடிவ ஜாடிகள், தட்டுகள், சிறுதட்டுகள், கிண்ணங்கள் , பானைகள் என்று பல விதமான மட்பாண்டங்களைச் வண்ணம் தீட்டிய செய்தார்கள். அவர்கள் மட்பாண்டங்கள், ஹரப்பா மட்பாண்டங்களில் சித்திரங்களைத் தீட்டினார்கள். அரசமர இலை, மீன் செதில், ஒன்றையொன்று வெட்டும் வட்டங்கள், குறுக்கும் நெடுக்குமான கோடுகள், கிடைக் கோட்டுப் பட்டைகள், கணித வடிவியல் (ஜியோமதி) வடிவங்கள், செடி, கொடிகள் எனப் பல்வேறு ஓவியங்களைக் கருப்பு நிறத்தில் தீட்டினார்கள்.

 

உலோகக் கருவிகளும் ஆயுதங்களும்

ஹரப்பா பண்பாட்டு மக்கள் செர்ட் என்ற சிலிகா கல் வகையில் செய்த பிளேடுகள், கத்திகள், செம்புப் பொருட்கள், எலும்பாலும் தந்தத்தாலும் செய்யப்பட்ட கருவிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்கள். இரும்பின் பயனை அவர்கள் அறியவில்லை . கூர்மையான கருவிகள், உளிகள், ஊசிகள், மீன் தூண்டில் முட்கள், கத்திகள், நிறுவைத் தட்டுகள், முகம் பார்க்கும் கண்ணாடி, அஞ்சனம் தீட்டும் குச்சி ஆகியவை செம்பால் செய்யப்பட்டன. செம்பில் செய்த அம்புகள், ஈட்டிகள், உளி, கோடரி ஆகிய கருவிகளைப் பயன்படுத்தினார்கள். மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ள நடனமாடும் பெண்ணின் சிலை, அவர்களுக்கு மெழுகு அச்சில் உலோகத்தை உருக்கி ஊற்றி சிலை வார்க்கும் 'லாஸ்ட் வேக்ஸ்' தொழில் நுட்பம் இழந்த மெழுகு செயல்முறை (lost - wax process) தெரிந்திருந்தது என்பதைக் காட்டுகிறது.


ரோஹ்ரி சேர்ட் என்பவை பாக்கிஸ்தானிலுள்ள ரோஹ்ரி என்ற பகுதியிலிருந்து பெறப்பட்ட செர்ட் மூலப்பொருள்களைக் குறிக்கிறது. இவை ஹரப்பா மக்களால் கூர் ஆயுதங்களை (Blades) உருவாக்க பயன்படுத்தப்பட்டன. ஹரப்பா மக்கள் கல் மற்றும் வெண்கலத்தினாலான ஆயுதங்களைப் பயன்படுத்தினர்.

ஆடை, அணிகலன்கள்

ஹரப்பா பண்பாட்டு மக்கள் பருத்தி மற்றும் பட்டு பற்றி அறிந்திருந்தார்கள். உலோகத்தாலும் கல்லாலுமான அணிகலன்களைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் செம்மணிக்கல் (கார்னிலியன்), செம்பு மற்றும் தங்கத்தாலான அணிகலன்களைச் செய்தார்கள். கல் அணிகலன்களையும் சங்கு வளையல்களையும் செய்தார்கள். சிலவற்றில் அணி வேலைப்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இவற்றை அவர்கள் மெசபடோமியாவிற்கு ஏற்றுமதி செய்தார்கள்.



வணிகமும் பரிமாற்றமும்

ஹரப்பாமக்களுக்கு மெசபடோமியர்களுடன் நெருங்கிய வணிகத் தொடர்பு இருந்தது. மேற்காசிய பகுதிகளான ஓமன்,பஹ்ரைன், ஈராக், ஈரான் போன்ற பகுதிகளில் ஹரப்பா முத்திரைகள் கிடைத்துள்ளன. கியூனிபார்ம் ஆவணங்கள் மெசபடோமியாவிற்கும், ஹரப்பர்களுக்கும் இடையே இருந்த வணிகத் தொடர்பை வெளிபடுத்துகின்றன. கியூனிபார்ம் எழுத்துகளில் காணப்படும் மெலுஹா என்ற குறிப்பு சிந்து பகுதியைக் குறிப்பதாகும்.

 

எடைகளும் அளவுகளும்


ஹரப்பா மக்கள் முறையான எடைகளையும் அளவுகளையும் பயன்படுத்தினார்கள். வணிகப் பரிமாற்றங்களில் ஈடுபட்ட காரணத்தால் அவர்களுக்கு முறைப்படுத்தப்பட்ட அளவுகள் தேவையாக இருந்தது. ஹரப்பாநாகரிகப்பகுதிகளில் கனசதுரமான செர்ட் எடைகள் கிடைத்துள்ளன. தராசுகளுக்கான செம்புத் தட்டுகள் கிடைத்துள்ளன. எடைகள் அவர்களுக்கு ஈரடிமான எண் முறை (பைனரி) பற்றி தெரிந்திருந்ததைக் காட்டுகின்றன. எடைகளின் விகிதம் 1: 2 : 4 : 8 : 16 : 32 என்று இரண்டிரண்டு மடங்காக அதிகரித்தன.

 

முத்திரைகள், எழுத்துருக்கள்


ஹரப்பா பண்பாட்டுப் பகுதிகளில் நுரைக்கல், செம்பு, சுடுமண் தந்தம் ஆகியவற்றால் செய்யப்பட்ட முத்திரைகள் கிடைத்துள்ளன. இவை வணிக நடவடிக்கைகளுக்காகப் எழுத்துக்களுடன் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். கூடிய முத்திரை ஹரப்பா எழுத்துகள் இதுவரை வாசிக்கப்படவில்லை . ஹரப்பா பகுதிகளிலிருந்து சுமார் 5000 சிறு எழுத்துத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சில அறிஞர்கள் இவை திராவிட மொழியின என்று உறுதியாகக் கருதுகிறார்கள். சிந்துவெளி நாகரிகமே இந்தியப் பண்பாட்டு உருவாக்கத்துக்கான அடித்தளம் எனலாம்.

 

கலைகள், பொழுதுபோக்குகள்



ஹரப்பா பகுதிகளில் கிடைத்துள்ள சுடுமண்ணாலான சிறுசிலைகள், மட்பாண்டங்களில் உள்ள ஓவியங்கள், வெண்கலச் சிலைகள் ஆகியவை ஹரப்பா மக்களின் கலைத் திறமையைக் காட்டுகின்றன. மாக்கல்லில் செய்யப்பட்ட 'மதகுரு அல்லது அரசன்', செம்பில் வார்க்கப்பட்ட நடனமாடும் பெண் சிலை (இரண்டும் மொஹஞ்சதாரோவில் கிடைத்தவை), ஹரப்பா, மொஹஞ்சதாரோ, தோலாவிராவில் கிடைத்த கற்சிலைகள் ஆகியவை இப்பகுதியின் முக்கியமான கலைப் படைப்புகள். பொம்மை வண்டிகள், கிலுகிலுப்பைகள், பம்பரங்கள், கோலிக்குண்டுகள், பல்வேறு விளையாட்டிற்கான சுடுமண் சில்லுகள் ஆகியவை ஹரப்பா மக்களின் பொழுதுபோக்கு விடையாட்டுகளைக் காட்டுகின்றன.



 

சமயம்

சிந்துவெளி மக்கள் இயற்கையை வணங்கினார்கள். அரசமரத்தை வழிபட்டார்கள். சில சுட்ட களிமண் சிலைகள் பெண் தெய்வத்தைக் குறிப்பது போன்று உள்ளன. காலிபங்கனில் நெருப்புக் குண்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இறந்தவர்களைப் புதைப்பது வழக்கத்திலிருந்தது. இறந்தவர்களை எரிக்கும் வழக்கம் இருந்ததற்கான சான்றுகள் அரிதாகக் கிடைத்துள்ளன.

 

ஹரப்பா மக்களும், பண்பாடும்

ஹரப்பா மக்களின் எழுத்துகளுக்கான பொருள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், ஹரப்பா நாகரிகம் பற்றி முழுமையாக அறிய முடியாமல் உள்ளது. அவர்கள் திராவிட மொழியைப் பேசினார்கள் என்று அறிஞர்களில் ஒரு சாரார் கூறுகிறார்கள். தொல்லியல் ஆய்வுகள் நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு அவர்கள் கிழக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் இடம் பெயர்ந்ததைக் காட்டுகின்றன. ஹரப்பா மக்களில் சிலர் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் குடிபெயர்ந்திருக்க வாய்ப்புகள் உண்டு. அவர்களது எழுத்துகளுக்குப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே பல கேள்விகளுக்கு உறுதியான பதில் கிடைக்கும்.

சிந்துவெளி நாகரிகத்தில் ஒன்றுக்கும் அதிகமான குழுக்கள் இருந்தன. சிந்துவெளியில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், வேட்டையாடுவோர் - உணவு சேகரிப்போர் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். சிந்துவெளி கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படுகிறது: கி.மு. (பொ..மு) 3300 முதல் கி.பி (பொ..மு) 2600 வரையான காலகட்டம் தொடக்க ஹரப்பா என அழைக்கப்படுகிறது. கி.மு. (பொ..மு) 26001900 வரையான காலகட்டம் முதிர்ந்த ஹரப்பா நாகரிகம் எனப்படுகிறது. பிந்தைய ஹரப்பா கி.மு. (பொ..மு) 1700 வரை நீடித்திருக்கலாம்.

 

சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி

சுமார் கி.மு. (பொ..மு) 1900லிருந்து சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சி பெறத் துவங்கியது. பருவநிலை மாற்றம், மெசபடோமியாவுடனான வணிகத்தில் வீழ்ச்சி, நதியின் வறட்சி அல்லது வெள்ளப்பெருக்கு, அந்நியர் படையெடுப்பு ஆகியவை இந்த நாகரிகம் வீழ்ச்சி பெறவும், மக்கள் தெற்கு மற்றும் கிழக்கு திசை நோக்கி இடம் பெயரவும் சில முக்கியமான காரணங்களாக அமைந்தன எனக் கருதப்படுகிறது. சிந்துவெளி நாகரிகம் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை . அது கிராமப் பண்பாடாக இந்தியாவில் தொடர்ந்தது.

 

சிந்துவெளி எழுத்துகள் - ஆய்வு


ஹரப்பா மக்கள் எழுதும் கலையை அறிந்திருந்தனர்.

இந்த எழுத்துகள் இலச்சினைகள், சுடுமண் முத்திரைகள், மட்பாண்டங்கள் ஆகியவற்றில் காணப்படுகின்றன.

பொறிப்புகள் மிகவும் குறுகியவை. தொடர்கள் சராசரியாக ஐந்துக்கும் குறைவான குறியீடுகளையே கொண்டுள்ளன.

ரோசட்டா கல்லில் காணப்பட்டது போல மும்மொழிகள் பயன்படுத்தப்படவில்லை.

எழுத்துகள் வலப் பக்கத்திலிருந்து இடப் பக்கமாக எழுதப்பட்டுள்ளன.

கணினி மூலம் பகுப்பாய்வு செய்த இரஷ்ய அறிஞர் யூரி நோரோசோவ் சிந்துவெளி எழுத்துகள் திராவிட மொழிக் குடும்பம் போன்ற வார்த்தை வரிசையைப் பெற்றுள்ளன என்கிறார்.

சிந்துவெளி நாகரிகம் குறித்து விரிவான ஆய்வு செய்துள்ள அறிஞரான ஐராவதம் மகாதேவன் "ஹரப்பா மொழியின் மூல வேர்கள் தென்னிந்திய திராவிட மொழிகளை ஒத்திருப்பதை நாம் காணலாம்" என்கிறார்.

மயிலாடுதுறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்கோடரியில் உள்ள குறியீடுகள் சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்டவையில் உள்ள குறியீடுகளை ஒத்திருக்கின்றன என்று கூறுகிறார் ஐராவதம் மகாதேவன்.

மே 2007ஆம் ஆண்டு தமிழ்நாடு தொல்லியல் துறையால் பூம்புகாருக்கு அருகில் மேலபெரும்பள்ளம் என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பானைகளில் உள்ள அம்பு போன்ற குறியீடுகள் மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட இலச்சினைகளைப் போன்று உள்ளன.


Tags : Ancient Civilisations | History பண்டைய நாகரிகங்கள் | வரலாறு.
9th Social Science : History : Ancient Civilisations : Indus Civilisation Ancient Civilisations | History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பண்டைய நாகரிகங்கள் : சிந்துவெளி நாகரிகம் - பண்டைய நாகரிகங்கள் | வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பண்டைய நாகரிகங்கள்