பண்டைய நாகரிகங்கள் | வரலாறு - மெசபடோமிய நாகரிகம் | 9th Social Science : History : Ancient Civilisations
மெசபடோமிய நாகரிகம்
மெசபடோமியா என்பது மேற்கு ஆசியாவின் ஈராக், குவைத் பகுதிகளைக் குறிக்கிறது. கி.மு.
(பொ.ஆ.மு.) மூன்றாவது ஆயிரமாண்டின் துவக்கத்தில் இப்பகுதியின் பல நகரங்களைச் சுற்றிப் பல அரசுகள் உருவாகின. இப்பகுதியில் சுமேரிய,
அகேடிய, பாபிலோனிய, அஸிரிய நாகரிகங்கள் தழைத்தோங்கின.
கிரேக்க மொழியில்
"மெஸோ" என்றால் 'நடுவில்' என்றும்,
"பொடோமஸ்" என்றால் ஆறு என்றும் பொருள். இங்கு பாயும் யூப்ரடிஸ்,
டைக்ரிஸ் என்ற நதிகள் பாரசீக வளைகுடாவில் இணைகின்றன. இந்த இரண்டு ஆறுகளுக்கிடையில் இருப்பதால் மெசபடோமியா எனப்படுகின்றது. மெசபடோமியாவின் வடபகுதி அஸிரியா என்று அழைக்கப்பட்டது. தென்பகுதி பாபிலோனியா ஆகும்.
சுமேரியர்கள்
மெசபடோமியாவின் பழமையான நாகரிகம் சுமேரியர்களுடையதாகும். சுமேரியர்கள் சிந்துவெளி மற்றும் எகிப்திய நாகரிகங்களின் சமகாலத்தவர்கள். இவர்கள் அனைவரும் ஒருவரோடொருவர் வணிகத் தொடர்புகொண்டிருந்தனர். கி.மு.(பொ.ஆ.மு.)50004000 காலகட்டங்களில் சுமேரியர்கள் கீழ் டைக்ரிஸ் பள்ளத்தாக்கில் குடியேறினார்கள். அவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்ததாகக் கருதப்படுகிறது. அவர்கள் பல நகரங்களை உருவாக்கினார்கள். நிப்பூர் என்பது ஒரு முக்கியமான நகரம். அவர்கள் கியூனிபார்ம் என்ற முக்கோணவடிவ எழுத்து முறையை உருவாக்கினார்கள்.
சுமேரிய நாகரிகத்தின் தொடக்க காலகட்டத்தில் அரசர்களே தலைமை மத குருக்களாக இருந்தார்கள். இவர்களது அரசியல் ஆதிக்கம் கி.மு.
(பொ.ஆ.மு.)2450 வாக்கில் முடிவிற்கு வந்தது.
அக்காடியர்கள்
கி.மு.
(பொ.ஆ.மு.) 2450 முதல் 2250 வரை குறுகிய காலத்திற்கு அக்காடியர்கள் சுமேரியாவில் ஆதிக்கம் செலுத்தினார்கள். சார்கான் என்பவர் ஒரு புகழ்பெற்ற அக்காடிய அரசர். சார்கானும் அவரது வாரிசுகளும் 100 ஆண்டுகளுக்கு மேல் (கி.மு. (பொ.ஆ.மு.) 2334 முதல் 2218 வரை) ஆட்சிபுரிந்தார்கள். அக்காடியர்களின் கியூனி பார்ம் ஆவணங்கள் சிந்துவெளி நாகரிகத்தைக் குறிப்பிடுகின்றன. சார்கானின் கியூனிபார்ம் ஆவணங்க ள் (கி.மு. (பொ.ஆ.மு.) 2334 - 2279) மெலுஹா, மாகன், தில்முன் ஆகிய இடங்களிலிருந்து வந்த கப்பல்கள் அக்காடிய துறைமுகங்களில் நின்றதாகக் கூறுகின்றன. மெலுஹா சிந்துவெளி என அடையாளப்படுத்தப்படுகின்றது.
உங்களுக்குத் தெரியுமா?
அக்காட் நகரம் தான் பின்னர் பாபிலோன் என்று அழைக்கப்பட்டது. இது மேற்கு ஆசியாவின் வணிக, பண்பாட்டு மையமாக திகழ்ந்தது.
அமோரைட்ஸ் என்றழைக்கப்பட்ட யூத மக்கள் அரேபியப் பாலைவனங்களிலிருந்து மெசபடோமியாவிற்குக் குடிபெயர்ந்தார்கள். பாபிலோனைத் தமது தலைநகரமாகக் கொண்டார்கள். அவர்கள் பாபிலோனியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
பாபிலோனிய அரசர் ஹமுராபி தமது ஆதிக்கத்தை மெசபடோமியாவின் மேற்குப் பகுதிக்கு விரிவாக்கினார். இதைத் தொடர்ந்து சக்தி வாய்ந்த அரசுகளான உர் (கி.மு. (பொ.ஆ.மு.)2112 முதல் 2004 வரை),பாபிலோன்(கி.மு.(பொ.ஆ.மு.)1792 முதல் 1712 வரை) உருவாகின. கில்காமெஷ் என்ற உலகின் முதல் காவியத்தின் கதாநாயகன் ஒரு சுமேரிய அரசராக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. பாபிலோனின் ஆறாவது அரசரான ஹமுராபி (கி.மு. (பொ.ஆ.மு.) 1792 - 1750) மாபெரும் சட்டங்களை இயற்றியதற்காகப் புகழ் பெற்றவர்.
அஸிரியர்கள்
கி.மு.
(பொ .ஆ.மு.) 1000 காலகட்டத்தில் மெசபடோமியாவில் அஸிரிய அரசு அரசியல் ரீதியாகச் செல்வாக்காக இருந்தது. அஸிரியாவின் தலைமைக் கடவுளான அஸுர் அஸிரிய அரசர்களால் வணங்கப்பட்டது. அஸிரிய அரசு பேரரசரால் கட்டுப்படுத்தப்பட்டது. அங்கு மாகாண ஆளுநர்கள் இருந்தார்கள். அஸிரியாவின் தலைநகரம் அஸுர் ஆகும். அஸிரியப் பேரரசின் புகழ்பெற்ற அரசர் அஸுர்பனிபால் (கி.மு. (பொ.ஆ.மு.) 668-627) என்பவர். அவர் கியூனிபார்ம் ஆவணங்கள் கொண்ட புகழ் பெற்ற நூலகத்தை உருவாக்கினார். அஸிரியர்கள் லமாஸு என்ற காக்கும் தெய்வத்தை வழிபட்டனர்.
சுமேரிய நாகரிகத்தில் பல நகர அரசுகள் இருந்தன. அவர்களது நகரம் வேளாண்மை நிலங்களால் சூழப்பட்டிருந்தது. மதில்சுவர்களால் சூழப்பட்ட சுமேரிய நகரங்களில் மத்தியில் சிகுராட் எனப்படும் கோவில் இருக்கும். கோவில் மதகுருமார்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. மதகுருமார்கள்,
எழுத்தர்கள், பிரபுக்கள் ஆகியோர் அரசாங்கத்தின் அங்கங்களாக இருந்தனர். சமூகப் படிநிலையின் உச்சியில் ஆட்சிசெய்வோரும், மதகுருமார்களும் இருந்தனர். அரசரே தலைமை மதகுருமாராகவும் இருந்தார். எழுத்தர்கள்,
வணிகர்கள், கைவினைக் கலைஞர்கள் அடுத்த நிலையில் இருந்தனர். எழுத்தர்கள் வரி வசூல் கணக்குகளை நிர்வகித்தனர்.
மதகுருமார்கள் வரி வசூல் செய்தனர். வரியாக வசூலிக்கப்பட்டவற்றைச் சேமித்து வைக்கும் கிடங்காகக் கோவில்கள் பயன்பட்டன. அரசு நிர்வாகத்தின் அங்கமாக சபைகள் இருந்தன. சாகுபடி செய்யத் தகுந்த நிலங்கள் அனைத்தும் அரசருக்கும் உயர் வகுப்பினருக்கும் சொந்தமானவையாக இருந்தன. ஆரம்பகாலத்தில் கோவில்களுக்கு அடிமைகளாக இருந்தவிவசாயிகள் பின்னர் விடுதலை பெற்றனர். மக்கள் அனைவரும் நகரத்தில் வசிக்க அனுமதிக்கப்படவில்லை .
உங்களுக்குத் தெரியுமா?
அஸிரியப் பேரரசு உலகின் முதல் இராணுவ அரசு எனக் கருதப்படுகின்றது.
அவர்கள் ஒரு வலிமையான இராணுவ சக்தியாக உருவாவதற்கான காரணம், இரும்புத் தொழில் நுட்பத்தை நன்கு பயன்படுத்தியமைதான்.
உணவும் வேளாண்மையும்
மெசபடோமியர்களின் முக்கியத் தொழில் வேளாண்மையாகும். அவர்கள் வேளாண்மைக்குத் துணைபுரிய நீர்ப்பாசனமுறைகளை மேம்படுத்தியிருந்தனர். கோதுமை,
பார்லி, வெங்காயம். நூல்கோல், திராட்சை, ஆப்பிள், பேரிச்சை ஆகியவற்றைப் பயிரிட்டனர். மாடுகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகள் ஆகியவற்றை வளர்த்தனர். மீன் அவர்களது முக்கிய உணவாக இருந்தது.
வணிகமும் பரிமாற்றமும்
வணிகம் மெசபடோமிய சமூகத்தின் முக்கியமான பொருளாதார நடவடிக்கையாக இருந்தது. மட்பாண்டம் செய்வோர், கைவினைக் கலைஞர்கள் ஆகியோரது உற்பத்திகளின் பரிமாற்றத்திற்கு வணிகர்கள் உதவினார்கள். அவர்கள் மேற்கில் சிரியா,
ஆசியா மைனர், கிழக்கில் ஈரான், சிந்துவெளி ஆகிய இடங்களோடு வணிகம் செய்தனர். அவர்கள் கப்பல்களைப் பயன்படுத்தினர். அவர்களது கோவில்கள் வங்கிகளாகச் செயல்பட்டு கடன் வழங்கின. வட்டியுடன் அல்லது வட்டியில்லாமல் கடன் வழங்கப்பட்டதும், திருப்பி செலுத்தப்பட்டதும் மெசபடோமிய ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது. கடனுக்கு வட்டி வாங்குவது குறித்த உலகின் முதல் எழுத்துபூர்வமான ஆதாரமாக இது இருக்கக் கூடும்.
நகரங்களும், நகர அமைப்பும்
நகரங்களின் வீடுகள் களிமண் அல்லது சுட்ட செங்கற்களாலான சுவர்களுடன், கதவுகளையும் கொண்டிருந்தன. சிலர் நகருக்கு வெளியே நாணல் குடிசைகளில் வசித்தார்கள். நகரின் மையத்தில் மேடை மீது சிகுராட் எனப்படும் கோயில்கள் கட்டப்பட்டன. அவை செங்குத்தான பிரமிடுகள் போல் காட்சியளித்தன. உச்சிக்குச் செல்வதற்குப் படிக்கட்டுகளுடன் அவை அமைந்திருந்தன.கோவிலைச் சுற்றி சடங்குகளுக்கான தாழ்வாரங்கள்,
புனித இடங்கள், ஆண் மற்றும் பெண் மதகுருமார்களின் கல்லறைகள்,
சடங்குகளுக்கான விருந்து அரங்குகள், தொழிற் கூடங்கள், களஞ்சியங்கள், கிடங்குகள், நிர்வாகக் கட்டிடங்கள் அடங்கிய வளாகங்கள் இருந்தன.
சமயம்
சுமேரிய மதம் பல கடவுள் கோட்பாடு கொண்டது. அவர்கள் பலவிதமான ஆண், பெண் கடவுள்களை வணங்கினர். சுமேரியர்கள் என்லில் என்ற காற்று மற்றும் ஆகாயத்திற்கான கடவுளை வணங்கினர். இக்கடவுளின் கோவில் நிப்பூரில் இருந்தது. நின்லின் என்பது தானியத்திற்கான பெண்தெய்வம். பாபிலோனியர்கள் மர்டுக் என்ற கடவுளை வழிபட்டார்கள். அஸிரியர்களின் தலைமைக் கடவுள் அஸுர் ஆகும். இஸ்டார் என்ற பெண்தெய்வம் அன்பு மற்றும் வளமைக்கான தெய்வம் ஆகும்.
கடல் மற்றும் குழப்பத்திற்கான கடவுள் டியாமட் ஆகும். சந்திரக் கடவுள் சின் ஆகும். பூமியில் தெய்வங்களின் பிரதிநிதிகளாக அரசர்கள் கருதப்பட்டார்கள். மெசபடோமியர்கள் புனைவுகளாலும் கட்டுக்கதைகளாலும் ஏராளமான புராணங்களை உருவாக்கினார்கள். இவற்றில் ஒன்றான கில்காமெஷ் இன்றளவும் புகழ்பெற்று விளங்குவதை கியூனிபார்ம் எழுத்து வடிவங்கள் மூலம் அறியலாம். பைபிளில் சொல்லப்படும் நோவாவின் பேழை,
இந்து புராணங்களில் உலகம் தோன்றியது பற்றி வரும் வெள்ளம் குறித்த கதைகளைப் போலவே இதிலும் வெள்ளம் பற்றிய கதை உள்ளது.
ஹமுராபியின் சட்டத் தொகுப்பு
பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களைக் கூறும் ஒரு முக்கியமான சட்ட ஆவணம் ஹமுராபியின் சட்டத் தொகுப்பு ஆகும். குடும்ப உரிமைகள்,
வணிகம், அடிமை முறை, வரிகள், கூலி போன்ற பல்வேறு குறிப்பிட்ட வழக்குகள் குறித்து இதில் 282 பிரிவுகள் உள்ளன. ஹமுராபி இந்த சட்டத் தொகுப்பைச் சூரியக் கடவுளான சமாஷிடமிருந்து பெறுவது போல் கல்லில் வடிக்கப்பட்ட சிற்பம் உள்ளது. இது பழைய சட்டங்களின் தொகுப்பாகும். இது பழிக்குப் பழி வாங்கும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. "கண்ணுக்குக் கண்","பல்லுக்குப் பல்"
என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்தது.
சுமேரிய எழுத்து முறை கியூனிபார்ம் என்று அழைக்கப்படுகிறது. எழுத்துகள் ஆப்பு வடிவில் இருப்பதால்,
அதற்கு இப்பெயர் இடப்பட்டது. கி.மு.
(பொ .ஆ.மு.) 3000 காலகட்டத்தில் உருவான இம்முறை,
உலகின் பழமையான எழுத்து முறைகளில் ஒன்றாகும். வணிகப் பரிமாற்றங்களுக்கும், கடிதங்கள், கதைகள் எழுதுவதற்கும் இந்த எழுத்து முறையைச் சுமேரியர்கள் பயன்படுத்தினார்கள். இந்த எழுத்துகள் எழுதப்பட்ட சுட்ட களிமண் பலகைகள் சுமேரிய நாகரிகம் பற்றி ஏராளமான தகவல்களைத் தருகின்றன.
கலை
மெசபடோமியக் கலையில் கல் மற்றும் களிமண்ணில் செய்த சிற்பங்களும் அடங்கும். சில ஓவியங்களும், வண்ணம் தீட்டப்பட்ட சிற்பங்களும் இன்றும் காணப்படுகின்றன. ஆடுகள், கிடாக்கள், காளைகள், சிங்கங்கள் போன்ற விலங்குகளைச் சிற்பமாக வடித்துள்ளார்கள். மனிதத் தலை கொண்ட சிங்கம்,
காளை போன்ற புராண வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. அஸிரிய, பாபிலோனியப் பேரரசுகளின் காலங்களில் மிக பிரம்மாண்டமான சிலைகள் உருவாக்கப்பட்டன.
எழுத்து மற்றும் எழுத்துமுறை உருவாக்கம்
எழுத்து உருவாக்கப்பட்டது மனிதகுல வரலாற்றில் ஒருமுக்கியமானமைல்கல்லாகும்.கி.மு.(பொ.ஆ.மு) 4000 ஆண்டின் பிற்பகுதியில். சுமேரியாவில் எழுத்துமுறை உருவானது. ஹைரோகிளிபிக் எனப்படும் சித்திர எழுத்துமுறை என்ற எகிப்திய எழுத்து முறை கி.பி (பொ.ஆ.மு) மூன்றாம் ஆயிரமாண்டின் துவக்கத்தில் உருவானது. இதே காலகட்டத்தில் ஹரப்பா மக்களும் ஒரு வித எழுத்து முறையை பின்பற்றினார்கள். எனினும் சிந்துவெளி எழுத்துகள் இன்னமும் வாசித்துப் புரிந்துகொள்ளப் படவில்லை . சீனநாகரிகமும் ஆரம்ப காலத்திலிருந்தே தனக்கென்று ஒரு எழுத்துமுறையை உருவாக்கியது.
அறிவியல்
மெசபடோமியர்கள் கணிதம், வானவியல், மருத்துவம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள். பெருக்கல், வகுத்தல், மும்மடிச் சமன்பாடு ஆகிய கருத்துகளையும் அவர்கள் உருவாக்கினார்கள். அவர்கள் 60ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு எண் முறையைக் கண்டுபிடித்தார்கள். அதன் மூலமாகத்தான் நமக்கு 60 நிமிடங்கள் கொண்ட ஒரு மணி நேரம்,
24 மணிநேரம் கொண்ட ஒரு நாள், 360 பாகைகள் கொண்ட வட்டம் ஆகியவை கிடைத்தன. சுமேரிய நாட்காட்டியில் ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள். அவர்களது எண் முறையில் இலக்கங்களுக்கு இட மதிப்பு உண்டு. அவர்கள் நீர்க் கடிகாரத்தையும்,
சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியையும் உருவாக்கினார்கள். அவர்கள் பரப்பளவு,
திடப்பொருட்கள் ஆகியவற்றை அளவிடுவதற்கான முறைகளைக் கண்டுபிடித்தார்கள். மேம்பட்ட எடை மற்றும் அளவை முறைகளை பயன்டுத்தினார்கள்.
சந்திரனை அடிப்படையாக வைத்து 12 மாதங்கள் கொண்ட நாட்காட்டி முறையை உருவாக்கினார்கள். அவர்களது கருத்துகள் கிரேக்க வானவியல் மீது தாக்கம் செலுத்தின. அவர்கள் மருத்துவ முறையையும் உருவாக்கினார்கள். கி.மு. (பொ.ஆ.மு.) 11ம் நூற்றாண்டில் நோய் அறிதலுக்கான ஒரு கையேட்டையும் உருவாக்கினார்கள். இது நோய்களுக்கான அறிகுறிகளையும்,
அவற்றிற்கான மருந்துகளையும் பட்டியலிடுகிறது. இது மூலிகைகள்,
தாதுக்கள் பற்றிய அவர்களது அறிவியல் அறிவை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
● சுமேரியர்கள்தான் குயவர்களின் சக்கரத்தை முதலில் கண்டுபிடித்தார்கள்.
● 360 நாட்கள் கொண்ட நாட்காட்டியைத் தயாரித்தார்கள். ஒரு வட்டத்தை 360 பாகைகளாகப் பிரித்தார்கள்.
● கியூனிபார்ம் எழுத்துமுறை அவர்களது பங்களிப்புதான்.
● ஹமுராபியின் சட்டத் தொகுப்பு மெசபடோமியர்களின் மற்றொரு சாதனை.