Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | எகிப்திய நாகரிகம்

பண்டைய நாகரிகங்கள் | வரலாறு - எகிப்திய நாகரிகம் | 9th Social Science : History : Ancient Civilisations

   Posted On :  04.09.2023 01:42 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பண்டைய நாகரிகங்கள்

எகிப்திய நாகரிகம்

பழமையான நாகரிகங்களில் ஒன்றான எகிப்திய நாகரிகம் பண்டைய காலத்திலேயே தனது கட்டடக்கலை, வேளாண்மை , கலை , அறிவியல், கைவினைத் தொழில் ஆகியவற்றின் வளர்ச்சியுடன் சிறப்பானதாகத் திகழ்ந்தது.

எகிப்திய நாகரிகம்

பழமையான நாகரிகங்களில் ஒன்றான எகிப்திய நாகரிகம் பண்டைய காலத்திலேயே தனது கட்டடக்கலை, வேளாண்மை , கலை , அறிவியல், கைவினைத் தொழில் ஆகியவற்றின் வளர்ச்சியுடன் சிறப்பானதாகத் திகழ்ந்தது.


 

புவியியல்

ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடகிழக்கு மூலையில் எகிப்து உள்ளது. கிழக்கே செங்கடலாலும் வடக்கே மத்தியதரைக்கடலாலும் சூழப்பட்டுள்ளது. எகிப்து நைல் நதியால் செழிப்படைகிறது. விக்டோரியா ஏரியில் உற்பத்தியாகி எகிப்தில் பாயும் நைல் நதி மத்தியதரைக் கடலில் கலக்கிறது.

எகிப்திய நாகரிகம் நைல் நதியின் செழிப்பை நம்பி இருந்தது. அதனால், கிரேக்க வரலாற்றாளர் ஹெரோடோடஸ் எகிப்தை "நைல் நதியின் நன்கொடை" என்று குறிப்பிட்டார். இந்நதி ஆண்டுதோறும் புதிய வண்டல் மண்ணைக் கொண்டு வந்து படிவித்ததால் மத்திய நைல் சமவெளி செழிப்பாக இருந்தது. இந்த வண்டல் மண் வேளாண்மையைச் செழிக்க வைத்து உபரி உற்பத்திக்கு உதவியது. எகிப்திய நாகரிக வளர்ச்சிக்கு வித்திட்டது. நைல் நதியின் இரு பக்கங்களிலும் பாலைவனங்களையும் காணலாம்.

ஹைக்ஸோஸ் - எகிப்தின் 15வது வம்சத்தைச் சேர்ந்த ஆட்சியாளர்கள். இவர்கள் மேற்கு ஆசியாவிலிருந்து வந்திருக்கலாம்.

பாரசீகர்கள் - பண்டைய ஈரானின் பகுதியான பாரசீகத்திலிருந்து வந்தவர்கள்

கிரேக்கம் - ஐரோப்பாவிலுள்ள இன்றைய கிரீஸ் நாட்டில் உள்ள மக்களையும் மொழியையும் குறிப்பிடுகிறது.

ரோமானியர்கள் - பண்டைய ரோமானியப் பேரரசைச் சேர்ந்தவர்கள். இப்பேரரசின் தலைநகரம் இத்தாலியில் உள்ள ரோம்.

 

பாரோக்கள், சமூகம் மற்றும் நிர்வாகம்

எகிப்திய அரசர் பாரோ (Pharoah) என்ற சொல்லால் அழைக்கப்பட்டார். பாரோ தெய்வீக சக்தி பொருந்தியவராகக் கருதப்பட்டார். பாரோவின் ஆட்சியின் கீழ் விசியர்கள் (Vizier), ஆளுநர்கள், உள்ளுர் மேயர், வரி வசூலிப்போர் என அதிகாரிகளின்படிநிலைகள் இருந்தன. இந்த அமைப்பு முழுவதையும் கல்வெட்டுவோர், கல்தச்சர்கள், மட்பாண்டம் செய்வோர், தச்சர்கள். செம்புக் கருவி செய்வோர், தங்க வேலை செய்வோர், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட கைவினைக் கலைஞர்களின் உழைப்பு தாங்கிப் பிடித்தது. நிலம் அரசருக்குச் சொந்தமானது. அது அதிகாரிகளுக்குப் பிரித்துத் தரப்பட்டிருந்தது. பொதுவாக அடிமை முறை இல்லை என்றாலும், சிறைபிடிக்கப்பட்டோர் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்டார்கள்.

விசியர் (Vizier): பாரோவின் கீழ் மாகாணங்களை ஆளும் நிர்வாகி

எகிப்தியர்கள் மரணத்திற்குப் பிறகு வாழ்வு இருப்பதாக நம்பினார்கள். எனவே அவர்கள் இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி வைத்தார்கள். இவ்வாறு உடலைப் பதப்படுத்தி வைக்கும் முறைக்கு மம்மியாக்கம் (mummification) என்று பெயர். பாரோக்களின் உடலைப் பாதுக்காக்க பிரமிடுகளையும் சமாதிகளையும் கட்டினார்கள்.

பல்வேறு விலையுயர்ந்த பலி பொருட்களுடன் உள்ள புகழ் பெற்ற எகிப்திய பாரோவான டூடன்காமனின் (கி.மு. (பொ..மு.) 1332 முதல் 1322 வரை ஆட்சிபுரிந்தவர்) சமாதி மம்மி எகிப்தில் லக்ஸருக்கு அருகே உள்ள அரசர்களின் பள்ளத்தாக்கில் உள்ளது. அவரது மம்மியின் முகமூடி தங்கத்தால் செய்யப்பட்டு, பல்வேறு விலையுயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அது எகிப்திய நாகரிகத்தின் முக்கியமான செய்பொருளாகும்.


எகிப்திய மம்மிகள்

பதப்படுத்தப்பட்ட இறந்த உடல் மம்மி எனப்படும். இறந்தவர்களின் உடல்களை சோடியம் கார்பனேட், சோடியம் பைகார்பனேட் ஆகியவற்றின் DNRMTV கலவையான நாட்ரன் உப்பு என்ற ஒரு வகை உப்பை வைத்துப் பாதுகாக்கும் வழக்கம் எகிப்தியரிடையே இருந்தது. நாற்பது நாட்களுக்குப் பிறகு, உப்பு உடலின் ஈரப்பதம் அனைத்தையும் உறிஞ்சிய பிறகு, உடலை மரத்தூளால் நிரப்பி, லினன் துண்டுகளால் சுற்றி, துணியால் மூடி வைத்துவிடுவார்கள். உடலை சார்க்கோபேகஸ் எனப்படும் கல்லாலான சவப்பெட்டியில் பாதுகாப்பார்கள்.

 

வேளாண்மை மற்றும் வணிகம்

எகிப்தியர்கள் கோதுமை, பார்லி, சிறு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், காகித நாணல் (பாப்பிரஸ்), பருத்தி ஆகியவற்றைப் பயிர் செய்தார்கள். காதித நாணல் கயிற்றுப் பாய், செருப்பு செய்யவும், பின்னர் காகிதம் செய்யவும் பயன்படுத்தப்பட்டது. அவர்கள் மாடுகள், செம்மறி மற்றும் வெள்ளாடுகள், பன்றிகள் ஆகியவற்றைப் பழக்கப்படுத்தி வளர்த்தார்கள். காட்டு விலங்குகளை வேட்டையாடினார்கள். நாய்கள், பூனைகள், குரங்குகள் போன்ற செல்லப் பிராணிகளை வளர்த்தார்கள். எகிப்தியர்களுக்கு லெபனான், கிரீஸ், ஃபொனீசியா, பாலஸ்தீனம், சிரியா ஆகியவற்றோடு வணிக உறவு இருந்தது. தங்கம், வெள்ளி, தந்தம் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன. லாபிஸ் லாசுலீ எனப்படும் நீல வகைக் கல்லை ஆப்கனிஸ்தானிலிருந்து பெற்றார்கள்.


 

கலையும், கட்டடக் கலையும்

எகிப்தியர் கட்டடக் கலையிலும் பல்வேறு கலை வண்ணங்களிலும் சிறப்புற்றிருந்தனர். அவர்களது எழுத்துமுறைகூடச் சித்திர வடிவில் இருந்து வந்ததுதான். இங்கு காணப்படும் எண்ணற்ற சிற்பங்கள், ஓவியங்கள், படைப்புகள், எகிப்தியர்களின் கலையாற்றலுக்கு சான்று பகர்கின்றன.

பாரோக்களின் சமாதிகளாகக் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச்சின்னங்கள் பிரமிடுகள் ஆகும். கெய்ரோவிற்கு அருகில் உள்ள பிரமிடுகள் கிஸா பிரமிடுகள் என்றழைக்கப்படுகின்றன.

ஸ்பிங்க்ஸின் பிரம்மாண்டமான சிலை சிங்க உடலும் மனித முகமும் கொண்ட சுண்ணாம்புக்கல் படிமம். பாரோ காஃப்ரெ ஆட்சிக் காலத்தில் (கி.மு. (பொ..மு.) 2575-2465) எழுப்பப்பட்ட இப்படைப்பு எழுபத்துமூன்று மீட்டர் நீளமும், இருபது மீட்டர் உயரமும் கொண்டது. உலகின் உயரமான சிற்பங்களில் ஒன்றாக ஸ்பிங்க்ஸ் கருதப்படுகிறது.


 

சமயம்


எகிப்தியர்கள் பல தெய்வக் கொள்கையைக் கடைபிடித்தனர். அமோன்,ரே,சேத், தோத், ஹோரஸ், அனுபிஸ் ஆகிய பல கடவுள்கள் எகிப்தில் இருந்தன. அவற்றில் சூரியக் கடவுளான ரே முதன்மையான கடவுளாக இருந்தது. பின்னர் இக்கடவுள் அமோன் என்று அழைக்கப்பட்டது.


தத்துவம், அறிவியல், இலக்கியம்

எகிப்திய நாகரிகம் அறிவியல், இலக்கியம், தத்துவம், வானவியல், கணிதம், அளவீடு முறைகளில் சிறந்து விளங்கியது. சூரிய கடிகாரம், நீர் கடிகாரம், கண்ணாடி ஆகியவை எகிப்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை. அவர்கள் சூரியனை அடிப்படையாக வைத்து ஒரு நாட்காட்டியை உருவாக்கினார்கள். அதில் 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் இருந்தன. ஆண்டின் இறுதியில் ஐந்து நாட்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த முறை கி.மு. (பொ..மு.) 4200லேயே உருவாக்கப்பட்டு விட்டது. இலக்கியப் படைப்புகளில் கணிதம், வானவியல், மருத்துவம், மாந்திரீகம், மதம் குறித்து எழுதப்பட்டவையும் உண்டு. எகிப்தியர்கள் ஓவியம் தீட்டல், சிற்பம், மட்பாண்டம் செய்தல், இசை, நெசவு ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினார்கள்.

 

எழுத்து முறை


எகிப்தியர்கள் தமது எழுத்து முறைக்காகப் புகழ்பெற்றவர்கள். இவர்களது எழுத்து ஹைரோகிளிபிக் (சித்திர எழுத்து முறை) என்று அழைக்கப்படுகிறது. இந்த எழுத்து வகை நினைவுச்சின்னங்களில் உள்ள முத்திரை மற்றும் இதர பொருட்களில் பயன்படுத்தப்பட்டது. பொதுவான தகவல் தொடர்புக்கு ஹெரிடிக் எழுத்து பயன்படுத்தப்பட்டது. இது பிக்டோகிராம் எனப்படும் சித்திர எழுத்து வடிவமாகும். இது சுமார் கி.மு. (பொ..மு.) 3000இல் உருவாக்கப்பட்டது. இந்த எழுத்தைப் பயன்படுத்தி ஏராளமான புத்தகங்களும் பிரதிகளும் எழுதப்பட்டன. இப்போது லண்டனில் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.


எகிப்திய நாகரிகத்தின் தன்மைகளும் பங்களிப்பும்

எகிப்தியர்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியை உருவாக்கினார்கள்

பிரமிடுகளும், அவற்றின் வடிவமைப்பும் அவர்களது நிலஅளவை மற்றும் கணிதத் திறன்களை வெளிப்படுத்துகின்றன.

ஹைரோகிளிபிக்ஸ் எழுத்து முறை, அவர்களின் குறியீடுகளைப் பயன்படுத்தும் திறனைக் காட்டுகின்றன.

மம்மிகளும், இறந்த உடல்களைப் பாதுகாப்பதும் மற்றொரு முக்கியமான பங்களிப்பாகும்.

அறிவியல், தொழில்நுட்பங்களில் புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

உங்களுக்குத் தெரியுமா?

பேப்பர் என்ற சொல் "பாப்பிரஸ்' - (Papyrus) என்ற தாவரத்தின் பெயரிலிருந்து - வந்ததுஎகிப்தியர்கள் காகித நாணல் (பாப்பிரஸ்) என்ற தாவர தண்டிலிருந்து தாள்களைத் தயாரித்தனர். இத்தாவரம் நைல் பள்ளத்தாக்கில் அதிகமாக வளர்ந்தது. 

Tags : Ancient Civilisations | History பண்டைய நாகரிகங்கள் | வரலாறு.
9th Social Science : History : Ancient Civilisations : Egyptian Civilisation Ancient Civilisations | History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பண்டைய நாகரிகங்கள் : எகிப்திய நாகரிகம் - பண்டைய நாகரிகங்கள் | வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பண்டைய நாகரிகங்கள்