Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | வாக்குரிமை மற்றும் பிரதிநிதித்துவத்தின் பொருள் மற்றும் தன்மை

அரசியல் அறிவியல் - வாக்குரிமை மற்றும் பிரதிநிதித்துவத்தின் பொருள் மற்றும் தன்மை | 11th Political Science : Chapter 10 : Election and Representation

   Posted On :  04.10.2023 01:14 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 11 : தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம்

வாக்குரிமை மற்றும் பிரதிநிதித்துவத்தின் பொருள் மற்றும் தன்மை

இது பொதுத் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான ஒரு உரிமையாகும். 'வாக்குரிமை' எனும் சொல், 'சுதந்திரம்' என்று பொருள் படக்கூடிய 'பிராங்க்' என்ற ஆங்கிலோ-பிரெஞ்சு கலவைச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.

அலகு 11 

தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம்



கற்றலின் நோக்கங்கள் 

தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம் பற்றி மாணவர்கள் புரிந்து கொள்ளுமாறு செய்தல் 

  தேர்தலியல்' என்னும் சொல்லை விளக்குதல்

தேர்தலின் பல்வேறு முறைகளை மாணவர்கள் புரிந்து கொள்ளுமாறு செய்தல்

இந்திய தேர்தல் ஆணையத்தைப் பற்றி விழிப்புணர்வு பெறுதல்

கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் முக்கியத்துவத்தினை அறிதல்

சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்களின் தேவையை பற்றி அறிவுறுத்துதல்

அரசியலில் இளைஞர்களின் பங்கை வெளிக்கொணர்தல்


வாக்குரிமை மற்றும் பிரதிநிதித்துவத்தின் பொருள் மற்றும் தன்மை


வாக்குரிமை மற்றும் தேர்தல் என்றால் என்ன?

இது பொதுத் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான ஒரு உரிமையாகும். 'வாக்குரிமை' எனும் சொல், 'சுதந்திரம்' என்று பொருள் படக்கூடிய 'பிராங்க்' என்ற ஆங்கிலோ-பிரெஞ்சு கலவைச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். தேர்தல் என்பது தங்களின் சார்பாக யாரேனும் ஒருவரை அரசியல் தலைவராகவோ அல்லது பிரதிநிதியாகவோ அரசாங்கத்தில் பங்குபெற தெர்ந்தெடுப்பதற்காக வாக்களிக்கும் நடைமுறையாகும்.

உங்களுக்குத் தெரியுமா?

இந்திய அரசமைப்பின் பகுதி XV, உறுப்புகள் 324-329 தேர்தலைப் பற்றியதாகும்.


உங்களுக்குத் தெரியுமா?

மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என இந்திய அரசமைப்பின் உறுப்பு 326 விளக்குகிறது.


பிரதிநிதித்துவம் என்றால் என்ன?

பிரதிநிதித்துவம் என்பது பிறருக்காக பேசும் நடவடிக்கை அல்லது பிறருக்காக செயல்படுதல் அல்லது பிரதிநிதித்துவம் பெறும் நிலையாகும்.

இந்திய அரசமைப்பில் 'தேர்தல்கள்' என்னும் தலைப்பிலான பகுதி XV மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நமது அரசமைப்பினை உருவாக்கியவர்கள் இதில் உள்ள அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இதை அரசமைப்பின் ஓர் பகுதியாக இணைத்தனர். இம்முக்கிய காரணத்தினால் தான் 'தேர்தல்' என்னும் கருப்பொருளுக்கு நமது நாட்டில் அரசமைப்பிலான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னரே 'தேர்தல்கள்' என்பவை பண்டைய ஏதென்ஸ், ரோமாபுரி ஆகியவற்றிலும் போப் ஆண்டவர் மற்றும் ரோமானியப் பேரரசர்கள் தேர்வு ஆகியவற்றிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்கால தேர்தல்களின் தோற்றம் என்பது 17-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் படிப்படியாக எழுச்சி கண்ட பிரதிநிதித்துவ அரசாங்கங்கள் மூலமாகவும் பின்னர் வட அமெரிக்காவிலும் தோன்றியது. பிரதிநிதித்துவ மக்களாட்சியில் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவையாகும்.

உங்களது குரல் ஓங்கி ஒலிப்பதற்கு தேர்தலில் வாக்களிப்பதே சிறந்த வழியாகும். சட்டங்களின் மூலமாக அரசியல் கட்சிகள் மக்களை வாக்களிக்க விடாமல் செய்யும் போது தேர்தல்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன என்பது உண்மையாகும். தேர்தல்கள் மற்றும் பிரதிநிதித்துவம் ஆகியவை அரசாங்கத்தை உருவாக்குவதன் அடிப்படையாகும்.


மக்களாட்சியின் வாக்காளர் முறைமை

ஓர் மக்களாட்சியின் வாக்காளர் முறைமையின் மிகவும் அடிப்படையான இயல்புகளைப் பற்றி நாம் கற்றுக்கொள்வோம். ஓர் மக்களாட்சியின் வாக்காளர் முறைமை என்பது பின்வருமாறு உள்ளதாகும்.



தேர்தல்கள் ஏன் நமக்கு தேவைப்படுகின்றன?

குறிப்பிட்ட இடைவெளிகளில் மக்கள் தங்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கும், விருப்பப்படி அவர்களை மாற்றுவதற்கும் தகுந்த வழிமுறைகள் தேவைப்படுகின்றன. அதுவே தேர்தலாகும் ஆகவே தற்காலத்தில் எவ்வகையான பிரதிநிதித்துவ அரசாங்கத்திற்கும் தேர்தல் அடிப்படையானதாகும். ஆகையால் பெரும்பாலான மக்களாட்சிகளில் மக்கள் தங்களின் பிரதிநிதிகள் மூலமாகவே ஆட்சி செய்கின்றனர்.


ஓர் தேர்தலில் வாக்காளர் பல்வேறு தேர்வுகளை மேற்கொள்கிறார். அவையாவன

தங்களுக்கான சட்டங்களை உருவாக்குபவரை தேர்வு செய்வர்.

அரசாங்கத்தை அமைத்து பெரும்பான்மை முடிவுகளை எடுப்போரைத் தேர்வு செய்வர்.

அரசாங்கம் மற்றும் சட்டமியற்றுதலில் வழிகாட்டக் கூடிய கொள்கைகளைக் கொண்ட கட்சியைத் தேர்வு செய்வர்.


எது தேர்தலை மக்களாட்சியிலானதாக ஆக்குகிறது

அனைவருக்கும் தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு வாக்கு மற்றும் ஒவ்வொரு வாக்கிற்கும் சமமமான மதிப்பு என்பது இதன் பொருளாகும்

அரசியல் கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள் சுதந்திரமாகத் தேர்தலில் போட்டியிடுவதுடன் வாக்காளர்களுக்குத் தகுந்தவாறு உண்மையான தேர்வுகளுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்

அத்தேர்வுகள் தகுந்த இடைவெளிகளில் வழங்கப்பட வேண்டும். ஒருசில ஆண்டுகளுக்கு ஒருமுறை தகுந்த இடைவெளியில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்

மக்களால் விரும்பப்படும் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்

மக்கள் தங்களின் விருப்பங்களுக்குத் தகுந்தவாறு தேர்ந்தெடுக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் என்பது ஓர் முறையான முடிவாக்க நடைமுறையாகும். அதில் மக்கள் பொதுப்பதவி வகிப்பவர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். தேர்தலின் மூலமாக சட்டமன்றங்களில் உள்ள பதவிகள் மட்டுமல்லாமல் ஆட்சித்துறை, நீதித்துறை மற்றும் வட்டார, உள்ளாட்சி அரசாங்கங்களில் உள்ள பதவிகளும் நிரப்பப்படுகின்றன.

உங்களுக்குத் தெரியுமா?

தேர்தல்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முடிவுகளை கற்றறியும் கல்வியே தேர்தலியல் ஆகும்.

Tags : Political Science அரசியல் அறிவியல்.
11th Political Science : Chapter 10 : Election and Representation : Meaning and nature of Franchise and Representation Political Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 11 : தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம் : வாக்குரிமை மற்றும் பிரதிநிதித்துவத்தின் பொருள் மற்றும் தன்மை - அரசியல் அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 11 : தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம்