Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | கோதுமையில் பல்மரபணு பாரம்பரியம் (விதையுறை நிறம்)

தாவரவியல்: பாரம்பரிய மரபியல் - கோதுமையில் பல்மரபணு பாரம்பரியம் (விதையுறை நிறம்) | 12th Botany : Chapter 2 : Classical Genetics

   Posted On :  29.07.2022 10:56 pm

12 வது தாவரவியல் : அலகு 2 : பாரம்பரிய மரபியல்

கோதுமையில் பல்மரபணு பாரம்பரியம் (விதையுறை நிறம்)

பல்மரபணு பாரம்பரியம் - பல்வேறு மரபணுக்கள் கூட்டாகச் சேர்ந்து ஒரு பண்பைக் கட்டுப்படுத்துதல்

பல்காரணியப் பாரம்பரியம் - கோதுமையில் பல்மரபணு பாரம்பரியம் (விதையுறை நிறம்) - Polygenic Inheritance in Wheat (Kernel colour)

பல்மரபணு பாரம்பரியம் - பல்வேறு மரபணுக்கள் கூட்டாகச் சேர்ந்து ஒரு பண்பைக் கட்டுப்படுத்துதல்.

ஒரு உயிரினத்தின் பல மரபணுக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பண்பைத் தீர்மானிக்கும் முறைக்குப் பல் மரபணு பாரம்பரியம் என்று பெயர். இங்குத் தொடர் பண்புகளின் பாரம்பரிய விளக்கங்கள் மெண்டலின் விதிகளுடன் ஒப்பிட்டு விளக்கப்படுகிறது.

ஸ்வீடன் நாட்டுத் தாவரவியலறிஞர் H. நில்சன் - ஹீல் (1909) கோதுமை விதையுறைகளில் ஆய்வை நிகழ்த்தி இப்பாரம்பரியத்தை விளக்கினார். விதை நிறம் இரு மரபணுக்களின் இரு அல்லீல்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. சிவப்பு விதையுறை நிறம் வெள்ளை நிறத்திற்கு ஓங்குத்தன்மை கொண்டது. இவர் தூய சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களைப் பெற்ற இரு தாவரங்களைக் கலப்புறச் செய்தார். அடர் சிவப்பு விதையுறைக்கான மரபணுவாக்கம் R1R1R2R2 எனவும், வெள்ளைநிற விதையுறைக்கான மரபணுவாக்கம் r1r1r2r2 எனவும் இருந்தன. முதல் மகவுச்சந்ததியில் (F1.) மிதமான சிவப்பு நிற விதையுறை R1r1R2r2 என்ற மரபணுவாக்கத்தில் பெறப்பட்டது. முதல் மகவுச்சந்ததியின் (F1) கோதுமைத் தாவரங்கள் R1R2,R1r2,r1,R2,r1,r2  என்ற நான்கு வகை கேமீட்களை தோற்றுவித்தன. இரண்டாம் மகவுச்சந்ததியின் (F1) தாவரங்களில் உள்ள R மரபணுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சிவப்பு நிறத்தின் தீவிரம் தீர்மானிக்கப்படுகிறது.

நான்கு R மரபணுக்கள் ஒரு அடர் சிவப்பு விதையுறை நிறத்தையும், மூன்று R மரபணுக்கள் மிதமான - அடர் சிவப்பு விதையுறை நிறத்தையும், இரண்டு R மரபணுக்கள் மிதமான சிவப்பு விதையுறை நிறத்தையும், ஒரு R மரபணு இலேசான சிவப்பு விதையுறை நிறத்தையும் தோற்றுவிக்கின்றன. R மரபணு இல்லாமை வெள்ளை விதையுறையாக உள்ளது.

R மரபணு தொகுப்பு முறையில் சிவப்பு விதையுறை நிறம் தோன்ற உதவுகிறது. ஒவ்வொரு வகை புறத்தோற்றத்தையும், சிவப்பு நிறத்தின் செறிவுகள் தொடர்புபடுத்திக் கிடைக்கும் வரைபடம் மணி வடிவத்தில் அமைந்திருக்கும். புறத்தோற்றப் பண்புகளின் பரவல் முறையை விளக்கும் படமாக இது உள்ளது. பல்மரபணு பாரம்பரியதிற்கு எடுத்துக்காட்டுகளாக மனிதனின் உயரம், தோல் நிறம் ஆகியவற்றின் பாரம்பரியத்தைக் குறிப்பிடலாம். இப்பண்புகள் மூன்று வெவ்வேறு வகை மரபணுக்களின் அல்லீல்களால் தீர்மானிக்கப்படுகின்றன.



முடிவு

நில்சன் - ஷீல் ஆய்வு செய்த மரபணுக்கள் பிணைப்புற்றிருக்கவில்லை. அவை சார்பின்று ஒதுக்கமடைகின்றன.

கோதுமை விதையுறை நிறத்தை மூன்றாவது மரபணுவும் நிர்ணயிக்கிறது என்பதை பின்னர் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மூன்று தனித்த இணை அல்லீல்கள் இந்த விதையுறை நிறத்தில் பங்கு கொள்கின்றன. நில்சன்-ஷீல் F2 சந்ததியில் புறத்தோற்ற வகையம் 63 சிவப்பு : 1 வெள்ளை எனவும், மரபணுவாக்க வகையம் 1:6:15:20:15:6:1 எனவும் உள்ளது என்று கண்டறிந்தனர்.


மேற்குறிப்பிட்ட முடிவுகளிலிருந்து நில்சன் - ஹீல் குறிபிட்டுள்ள கலப்பு பாரம்பரியம் கோதுமை விதையுறையில் (கர்னலில்) தென்படவில்லை . இரண்டாம் மகவுச்சந்ததியில் (F2) அதிக அளவில் நிற வேறுபாடுகள் விதையுறை நிறத்தில் காணப்பட்டது. இதற்குக் காரணம் மரபணுக்களின் தனித்தொதுங்குதல் மற்றும் மறுசேர்க்கை நடைபெறுவதேயாகும். மற்றொரு சாட்சியாகக் கலத்தல் பாரம்பரியத்தில் பெற்றோருடைய புறத்தோற்றங்களாக அடர் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் மீண்டும் இரண்டாம் மகவுச்சந்ததியில் இல்லாமல் போனது. ஆதலால் மரபணுக்களில் எவ்விதக் கலப்பும் ஏற்படாமல் புறத்தோற்றத்தில் மட்டுமே தென்பட்டது. பல மரபணு இணைகளின் ஒட்டுமொத்த விளைவால் கோதுமை விதையுறை நிறத்தில் பல்வேறு நிறச்சாயல்கள் தோன்றுகிறது. அவர் கருதுகோளின்படி இரு அமைவிடங்களும் கூட்டாக இணைந்து கோதுமை விதையுறை நிறத்தைத் தோற்றுவிக்கின்றன.

Tags : Botany: Classical Genetics தாவரவியல்: பாரம்பரிய மரபியல்.
12th Botany : Chapter 2 : Classical Genetics : Polygenic Inheritance in Wheat (Kernel colour) Botany: Classical Genetics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 2 : பாரம்பரிய மரபியல் : கோதுமையில் பல்மரபணு பாரம்பரியம் (விதையுறை நிறம்) - தாவரவியல்: பாரம்பரிய மரபியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 2 : பாரம்பரிய மரபியல்