தாவரவியல்: பாரம்பரிய மரபியல் - மரபணுக்குள்ளே நிகழும் இடைச்செயல்கள் | 12th Botany : Chapter 2 : Classical Genetics
மரபணுக்குள்ளே நிகழும் இடைச்செயல்கள் (Intragenic
interactions)
ஒரே மரபணுவிலுள்ள இரு அல்லீல்களுக்கிடையே இடைச்செயல்
நடைபெறுகிறது. அதாவது ஒரே இடத்தில் அமைந்த அல்லீல்களுக்கிடையே நிகழ்கிறது இது கீழ்க்கண்டவற்றை
உள்ளடக்கியது.
(1) முழுமையற்ற ஓங்குத்தன்மை
(2) இணை ஓங்குத்தன்மை
(3) பல்கூட்டு அல்லீல்கள்
(4) பல பண்புகளை வெளிப்படுதுதம் மரபணுக்கள் ஆகியன மரபணுக்குள் நிகழும் இடைச்செயல்களுக்கான பொதுவான எடுத்துக்காட்டுகளாகும்.
ஜெர்மானியத்தாவரவியலாளர்
கார்ல் காரெனிஸ்ஸின் (1905) ஆய்வு
ஒத்த பண்பிணைவு பெற்ற தூய தாவரமாக உள்ள (R1R1)
சிவப்பு மலர்களையுடைய அந்தி மந்தாரை (மிராபிலிஸ் ஜலாபா) - 4 மணித்தாவரம் ஒன்றை மற்றொரு
ஒத்த பண்பிணைப் பெற்ற (R2R2) வெள்ளை மலர்களையுடைய தூய தாவரத்துடன்
கலப்பு செய்த போது முதல் மகவுச்சந்ததியில் இளம் சிவப்பு மலர்கள் பெற்ற கலப்புயிரி தாவரம்
உருவானது. இதில் கலப்புயிரி மலர்களின் பண்பில் இரு பெற்றோர்களிலிருந்தும் வேறுபட்டிருப்பது
குறிப்பிடத்தக்கது.இக்கலப்பு ஓங்குத்தன்மை பெற்றோரின் புறத்தோற்றத்தை வெளிப்படுத்தாமல்
இடைப்பட்ட நிறமான இளஞ்சிவப்பு நிறத்தை வெளிப்படுத்துகிறது. எனவே யாதொரு ஓங்கு அல்லீலும்
பிரிதொரு ஓங்கு அல்லீலை கட்டுப்படுத்தவில்லை. இருவகை அல்லீல்களும் கூட்டாகச் செயல்பட்டு
இடைப்பட்ட நிறமான இளஞ்சிவப்பு நிறம் தோன்றியுள்ளது. இவ்வகை அல்லீல்களுக்கிடையேயான இடையீட்டு
செயலுக்கு முழுமையற்ற ஓங்குத்தன்மை என்று பெயர். முதல் மகவுச்சந்ததி F1
தாவரங்களை உட்கலப்பு செய்தால் இரண்டாம் மகவுச்சந்ததியில் F2 புறத்தோற்ற
மற்றும் மரபணுவாக்க விகிதங்கள் இரண்டுமே 1: 2:1 என இருப்பது குறிப்பிடத்தக்கது. (புறத்தோற்றப்
பண்பு விகிதமும் மரபணுவாக்க விகிதமும் முறையே ஒரே மாதிரியாக 1R1R1
: 2 R2R2 : 1R2R2 என்றும் உள்ளன.) அல்லீல்கள்
எவ்வித மாற்றமுமின்றித் தனித்தியங்கும் தன்மையையும் தொடர்ச்சியற்ற தன்மையையும் கொண்டுள்ளன
என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். ஆனால் இதில் மெண்டலின் தனித்துப் பிரிதல்
விதி நிரூபணமாகிறது. இரண்டாம் மகவுச்சந்ததியில் R1 மற்றும் R2
மரபணுக்கள் தனித்துப் பிரிந்து மற்றும் மறுசேர்க்கைக்கு உட்பட்டுச் சிவப்பு, இளஞ்சிவப்பு,
வெள்ளை நிறத்தில் 1:2: 1 என்ற விகிதத்தில் பண்புகள் தோன்றுகின்றன. R1 அல்லீல்
சிவப்பு நிறத்திற்குக் காரணமான நொதியை உற்பத்தி செய்கிறது. R2 அல்லீல் வெள்ளை
நிறத்திற்குக் காரணமாக உள்ளது. R1 மற்றும் R2 மரபணுவாக்கம் சிவப்பு
நிறக் குறைவுடைய நொதிக்குக் காரணமாகி, இளஞ்சிவப்பு நிற மலரைத் தோற்றுவிக்கிறது. எனவே
R1 R2 இவ்விரு மரபணுக்கள் சேர்ந்திருக்கும்போது மெண்டலின் துகள்
பாரம்பரியக் கொள்கை உறுதி செய்யப்பட்டு மீண்டும் தூய நிறங்கள் தோன்றாமல், இரண்டாம்
மகவுச்சந்ததியில் இளஞ்சிவப்பு நிற மலர்களைத் தோற்றுவிக்கின்றன.
ஓங்குத்தன்மையின்றி இடைப்பட்ட மாற்றுக் கருவுடைய புறத்தோற்ற வகையம்
உருவாவதை எவ்விதம் விளக்குவாய்?
மரபணு வெளிப்பாட்டை அளவுசார்
நிலையில் விளக்கலாம். இயல்பு நிலையிலுள்ள செயல்படும் அல்லீல்கள், இரு பிரதிகளாக உள்ள
நிலையில் (R1 R1) சிவப்பு நிறத்திற்கான செயல்படும் நொதியைச்
சுரக்கிறது. குறைபாடுடைய அல்லீல்களின் இரு நகல்கள் (R2 R2) சடுதி
மாற்றத்திற்குட்பட்ட அல்லீல்களாகத் திகழ்ந்து சிவப்பு நிறத்திற்கு அவசியமான நொதியை
உண்டாக்குவதில்லை. எனவே வெள்ளை நிற மலர்கள் தோன்றுகின்றன. இடைப்பட்ட புறத்தோற்றப் பண்பான
இளஞ்சிவப்பு பெற்ற முதல் மகவுச்சந்ததி கலப்புயிரியில் (R1 R2)
50 சதவீதத் தாவரங்கள் செயல்படும் புரதத்தை உற்பத்தி செய்து இளஞ்சிவப்பு நிறத்தைத் தோற்றுவிக்கிறது.
இப்புரதம் சிவப்பு நிறத்தைத் தோற்றுவிக்க (புறத்தோற்றத்தை) போதுமானதாக இல்லை. இரு ஓங்கு
அல்லீல்களைப் பெற்ற நிலையில் சிவப்பு நிறத்தைத் தோற்றுவிக்க 100% செயல்படும் புரதம்
தேவைப்படுகிறது.
மாற்றுப்பண்பிணைவு கொண்ட தாவரத்தில் இரு அல்லீல்களும்
ஒரே சமயத்தில் பண்பை வெளிப்படுத்தும் முறை - ஒரு உயிரியில் மாற்றுப் பண்புடைய இரு அல்லீல்களும்
ஒரே சமயத்தில் பண்புகளை வெளிப்படுத்தும் நிகழ்விற்கு இணை ஓங்குத்தன்மை என்று பெயர்.
எடுத்துக்காட்டு : கமீலியாவில் சிவப்பு மற்றும் வெள்ளை மலர்கள், கதிர் அரிவாள் வடிவ
ஹீமோகுளோபின், மனிதர்களின் ABO இரத்த வகை. மனிதர்களில் IA மற்றும் IB
அல்லீல்கள் I மரபணுவின் இணை ஓங்குத்தன்மை மெண்டலின் தனித்துப் பிரிதல் விதியைப் பின்பற்றுகிறது.
இணை ஓங்குத்தன்மை தாவரங்களில் மின்னாற்பிரிப்பு (electrophoresis) அல்லது நிறப்பிரிகை
வரைப்படத்தில் (chromatography) புரதம் அல்லது ப்ளேவோனாய்ட் பொருட்களைப் பிரித்தறிவதன்
மூலம் இதை விளக்கலாம். எடுத்துக்காட்டு: காஸிப்பியம் ஹிர்சுட்டம் மற்றும் காஸிப்பியம்
ஸ்டர்டியானம், இவற்றின் முதல் மகவுச்சந்ததி கலப்புயிரியின் இடைப்பட்ட மடியம்
(amphiploid) இரு பெற்றோர்களின் விதைப் புரதங்களை மின்னாற்பிரிப்பின் மூலம் பிரிக்கும்
போது. இரு பெற்றோர்களும், வேறுபட்ட பட்டை அமைப்பினை (bandingpattern) வெளிப்படுத்துகின்றன.
கலப்புயிரியில் ஒருங்கிணைந்த பட்டை அமைப்பு வெளிப்படுகிறது. அவைகளின் கலப்புயிரிகளில்
பெற்றோர்களைப் போன்றே இருவிதப் புரதங்களும் காணப்படுகின்றன.
பெற்றோர்களின் ஒத்த பண்பிணைவிலுள்ள பண்புகளைப்
பெற்றிருப்பதுடன், மாற்றுப் பண்பிணைவிலான புதிய பண்பு தோன்றுவது குறிப்பிடத்தக்கது.
முதல் மகவுச்சந்ததி கலப்புயிரி இரண்டாம் மகவுச்சந்ததியில் புறத்தோற்ற மற்றும் மரபணுவிகிதமாக
1:21 பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
“உயிரினத்தைக்
கொல்லும் திறனுடைய அல்லீல்களுக்கு கொல்லும் மரபணுக்கள் என்று பெயர்." 1907-ஆம்
ஆண்டு , E. பார் என்பவர் கொல்லி மரபணுவை ஸ்னாப்டிராகன் (snapdragon) என்ற ஆன்டிரைனம்
சிற்றினத்தில் கண்டறிந்தார். இது ஒரு ஒடுங்கு கொல்லி மரபணுவிற்கு எடுத்துக்காட்டாகும்.
ஆன்டிரைனத்தில் மூன்றுவகை தாவரங்கள் உள்ளன.
1.பச்சை நிறம் கொண்ட பசும் தாவரங்கள் (CC)
2.மஞ்சள் நிறத்துடன் கூடிய பசும்தாவரங்கள்
கரோடினாய்டுகளைக் கொண்டிருப்பதால் வெளிறிய பச்சை அல்லது தங்க நிறம் பெற்ற ஆரியா தாவரங்கள்
எனப்படுகின்றன. (Cc)
3. பச்சைய நிறமியற்ற வெள்ளை நிறத் தாவரங்கள்.
(cc)
ஒத்தபண்பிணைவு பெற்ற பசும் தாவரங்களில் மரபணுவகையம்
CC எனவும், ஒத்த பண்பிணைவு பெற்ற வெள்ளைத் தாவரங்களின் மரபணுவகையம் cc எனவும் உள்ளது.
ஆரியா தாவரங்களின் மரபணுவாக்கம் CC
ஆகும். இவை பச்சை மற்றும் வெள்ளை நிறம் கொண்ட தாவரங்களாக உள்ளன. இரு ஆரியா தாவரங்கள்
உண்டாக்கும் இரண்டாம் மகவுச்சந்ததிகளில் புறத்தோற்றவகைய மற்றும் மரபணுவகைய விகிதங்களாக
1:2:1 ஆக (முறையே 1 பச்சை (CC) : 2 ஆரியா (Cc) : 1 வெள்ளை (cc) ) உள்ளது. ஆனால் வெள்ளை
தாவரங்கள் பச்சை நிறமியற்றிருப்பதால், அவைகளால் வாழ இயலாமல் போகிறது. எனவே இரண்டாம்
மகவுச்சந்ததியின் விகிதம் மாற்றமுற்று 1: 2 எனும் விகிதத்தில் உள்ளது. இவ்வகையில் ஒத்த
ஒடுங்கு மரபணுவாக்கம் கொண்ட (cc) கொல்லப்படுகிறது.
முழுவதும் ஓங்கு அல்லது முழுவதும் ஒடுங்கு
கொல்லி அல்லீல்களை பெற்ற உயிரினத்தின் அல்லீல்கள் கொல்லி மரபணுக்களாக இருப்பின் அவை
உண்டாக்கும் இரண்டாம் மகவுச்சந்ததியின் மரபணுவாக்க விகிதமானது முறையே 2 : 1 அல்லது
1:2 ஆகக் காணப்படுகின்றன.
பல்பண்புக்கூறுதன்மையில், தனியொரு மரபணுவானது
பலபண்புகளைக் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தி உயிரினத்தின் புறதோற்றப் பண்புகளைத் தீர்மானிக்கிறது.
இவ்வகை மரபணு பல்பண்புக்கூறுத்தன்மைக் கொண்ட மரபணு என்றழைக்கப்படுகிறது. அடர் புள்ளிகள்
கொண்ட பண்புகளையுடைய தாவரத்தை வெள்ளை மலர்கள், வெளிறிய நிறமுடைய விதைகள், புள்ளிகளற்ற
இலை அச்சு ஆகியவற்றைக் கொண்ட பல பட்டாணித் தாவரங்களோடு கலப்புறச் செய்தபோது, இந்த மூன்று
பண்புகளும் ஒற்றைமரபணுவினால் பாரம்பரியமாவதைக் கண்டறிந்தார். மூன்று பண்புக்கூறுகளும்
ஒரே ஒரு மரபணுவின் ஓங்கு மற்றும் ஒடுங்கு அல்லீல்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டுப்
பாரம்பரியமாவது தெரிய வந்தது. எடுத்துக்காட்டு கதிர் அரிவாள் சோகை.