தமிழக அரசியல் சிந்தனைகள் - பண்டைய அரசியல் சிந்தனைகள் | 11th Political Science : Chapter 14 : Tamil Nadu Political Thought
பண்டைய அரசியல் சிந்தனைகள்
திருவள்ளுவர் தம் நூலின் முதல் பகுதியாகிய அறத்துப் பாலில் அறத்தின் சிறப்பைத் திடமாக எடுத்துரைத்துக் கற்பவரின் நெஞ்சில் பதியுமாறு செய்கிறார்: இங்கே நெறி தவறாத ஓர் அறவோராக விளங்கி, உணர்ச்சி வயப்படாமல், கற்பனைக்கு இடம் தராமல், நடுநிலையில் நின்று தாம் உணர்ந்த உண்மைகளைத் தெளிவாக விளக்குகிறார். இரண்டாம் பகுதியாகிய பொருட்பாலில் உலக வாழ்க்கையின் இயல்புகளையும் நடைமுறைகளையும் அலசி ஆராயும் ஓர் அனுபவம் நிறைந்த அறிஞராகத் திகழ்கிறார்: பல காலத்தும் பல துறைகளிலும் கண்டும் கேட்டும் அறிந்தவற்றை எல்லாம் தம் சிந்தனைத் திறத்தால் தெளிவாக உணர்ந்து வகைப்படுத்திக் கூறுகிறார். மூன்றாம் பகுதியாகிய காமத்துப் பாலில் படைப்புத் திறன் மிக்க ஒரு கவிஞராக நின்று குறள் மணிகளை இயற்றியுள்ளார்; தாம் மறைந்திருந்து, நாடகப் போக்கில் காதலனையும் காதலியையும் பேசச் செய்துள்ளார்.
"அரசியல் ஐந்து; அமைச்சியல் ஈரைந்து;
உருவவல் இரண்டு; ஒன்று ஒண்கூழ் - இருவியல்
திண்படை; நட்புப் பழனேழ்; குடி பதின்மூன்று
எண்பொருள் ஏழாம் இவை."
என்பது போக்கியார் என்னும் புலவர் பெயரால் அமைந்த பழைய வெண்பா. இதன் படி, பொருட்பால் ஏழு பகுதிகளை உடையது; அரசியல் 25,அமைச்சியல் 10, அரண் 2, கூழ் 1, படை 2, நட்பு 17, குடி 13 ஆக பொருட்பாலின் எழுபது அதிகாரங்கள் ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
"படைகுடி கூழ்அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு" (குறள் :381)
என வரும் பொருட்பாலின் முதல் குறட்பாவிலேயே இந்த வேறுபாட்டிற்கான அடிப்படையும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இக்குறட்பாவில் உள்ளவாறு அரசாங்கம் (அரசின் அங்கம்) என்பதன் அமைச்சு, அரண், கூழ், படை, நட்பு, குடி என்னும் ஆறு அங்கங்களையும் தனித்தனியே வகுத்து, இந்த ஆறு அங்கங்களையும் உடைய ஆட்சித் தலைவனைப் பற்றித் தனியே சில அதிகாரங்களில் கூறி ஏழு வகையாக வேறுபாடு செய்வது திருக்குறளின் அமைப்பு முறைக்கு ஏற்றதாக உள்ளது.
அரசனது இயல்பு கூறும் இருபத்தைந்து அதிகாரங்கள்
பொருட்பாலின் முதலில் அரசனது இயல்பு கூறும் அரசியலை மிக விரிவாக இருபத்தைந்து அதிகாரங்களில் கூறியுள்ளார் திருவள்ளுவர். 'இறைமாட்சி' (அதிகாரம் 39) தொடங்கி 'இடுக்கண் அழியாமை' (அதிகாரம் 63) வரையிலான இருபத்தைந்து அதிகாரங்களில் 'அரசர்', 'வேந்தர்', 'நிலன் ஆண்டவர்', 'மன்னவர்' முதலான பெயர்களால் நாற்பத்தாறு முறை அவர் ஆட்சித் தலைவனைச் சுட்டிக் கூறியிருப்பது நோக்கத்தக்கது.
குடியாட்சிக் காலத்திற்கும் பொருந்தி வரும் அறிவுரைகள்
அரசனைப் பற்றியும், அரசியல் அமைப்பினைப் பற்றியும் திருவள்ளுவர் பொருட்பாலில் கூறியுள்ள கருத்துக்கள் இன்றும் பொன் போல் போற்றத்தக்கனவாக விளங்குகின்றன. திருவள்ளுவர் வாழ்ந்த காலம் முடியாட்சிக்காலம்.எனினும், அந்தக்காலத்தில் அவர் அரசனுக்குச் சொன்னவைகளாக அமைந்த அறிவுரைகள், இன்று குடியாட்சி முறையில் உள்ள தலைவர்களுக்கும் பொருந்தும் நன்மொழிகளாக உள்ளன. திருவள்ளுவர், அரசு எப்படி இருக்க வேண்டும் என்று முடியாட்சி எங்கும் பரவியிருந்த காலத்திலேயே அழகாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.
திருவள்ளுவர் காட்டுகின்ற அரசு எந்தக் காலத்திற்கும், எந்த அமைப்பிற்கும் பொருத்தமாகக் காணப்படுகிற நிலையினை நாம் காண்கின்றோம். அவருடைய அரசியல் கருத்துக்கள் எந்தக் காலத்திற்கும் எந்த அமைப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சிறப்பினைப் பெற்று விளங்குகின்றன.
சுருங்கக் கூறின், திருவள்ளுவருடைய அரசியல் அமைப்பு ஒரு 'மக்கள் நல அரசு' (Welfare State) அடிப்படையில் அமைந்தது எனலாம் (திருக்குறளில் அறிவுத் துறைகள், பக்.114; 118).
"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்" (குறள்: 388)
என்ற குறட்பாவில், 'அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, அரசனாகப் பொறுப்பு ஏற்றால் மட்டுமே ஒருவன் அரசனாகச் சிறக்க முடியாது' என்னும் கருத்தியலைத் தெள்ளத் தெளிவாகப் பறைசாற்றியுள்ளார் திருவள்ளுவர். ஒரு மன்னன் நீதி நெறி வழுவாமல் தன் கடமையைச் சரிவரச் செய்தால் - குடிமக்களைக் காப்பாற்றினான் என்றால் - அவன், 'இறை என்று வைக்கப்படும்' - 'முறை செய்து காப்பாற்றும்' அவனை மக்கள் கடவுளாகவே கருதுவார்கள் என்கிறார் அவர். மன்னனைக் கடவுளாக நினைத்த ஒரு காலக்கட்டத்தில், 'நீ ஒன்றும் கடவுள் அல்ல, நல்ல வண்ணம் நடந்தால், நீதி நெறி வழுவாமல் காப்பாற்றினால் உன்னை மக்கள் கடவுளாகவே கருதுவார்கள்' என்று வள்ளுவர் கூறியிருப்பது, ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. இக்கருத்து, முடியாட்சிக் காலத்திற்கு மட்டுமன்றி, குடியாட்சி மலர்ந்துள்ள இக்காலக்கட்டத்திற்கும் பொருந்தி வருவதே.
திருவள்ளுவரின் கண்ணோட்டத்தில் 'அறம் வழுவாது, தீமைகளை நீக்கி, மறம் வழுவாது, மானம் காப்பது அரசு' ஆகும்.
"அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு" (குறள்:384)
என்னும் குறட்பா இவ்வகையில் கருத்தில் கொள்ளத்தக்கது.
'மன்னர் எவ்வழி; மக்கள் அவ்வழி'. நாடாளும் மன்னன் தனது குடிமக்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டியவன் ஆவான். அவன் ஒருவன் தீய வழியில் நடந்தால், மற்றவர்களுக்கு அதுவே தூண்டுகோல் ஆகிவிடும். அவன் தலைவனாக இருப்பதால், அவனுடைய ஒழுக்கம் மற்றும் தனிவாழ்வு பற்றிய செய்திகள் நாடெங்கும் பரவுதல் எளிது. ஆகவே, அவனுக்கு அறநெறி கட்டாயம் வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்தியுள்ளார். மானம் வேண்டும் என்று கூறும் போதும், தனிவாழ்க்கை பற்றிய மான உணர்ச்சியைக் குறிப்பிடாமல், 'மறன் இழுக்கா மானம்' என வீரத்திற்கு ஏற்புடைய மானத்தைக் குறிப்பிட்டு, நாட்டின் மானமே தன் மானமாகக் கொண்டு மன்னன் வாழ்க்கை நடத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
'செங்கோன்மை' அதிகாரத்திலும் நல்லாட்சி பற்றி எக்காலத்திற்கும் பொருந்தி வருகின்ற அடிப்படையான கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார் திருவள்ளுவர். உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்து வாழ்கின்றன; அது போல், குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை - நல்லாட்சியை - எதிர்பார்த்து வாழ்கின்றனர் என்கிறார்.
"வானோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி" (குறள்: 542)
என்ற குறட்பாவில் 'மன்னவன் கோல்' என்னும் முடியாட்சிக் காலத்திற்கான தொடரின் இடத்தில், 'நல்லாட்சி' என்ற பொதுவான இன்றைய மக்களாட்சிக்கு ஏற்ற தொடரைப் பொருத்திக் கொள்ளும் வகையில் பாடியிருப்பது திருவள்ளுவரின் தனிச்சிறப்பாகும்.
"குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு" (குறள்:544)
என்னும் குறட்பாவும் திருவள்ளுவரின் காலம் கடந்து நிற்கும் பொதுமை நோக்கினைத் தெற்றெனப் புலப்படுத்தி நிற்கின்றது. 'குடிமக்களை அன்போடு அணைத்துக் கொண்டு ஆட்சி புரியும் அரசனுடைய அடிகளைப் பொருந்தி நிற்குமாம் உலகம்'.
இக் கருத்தினையே 'கொடுங்கோன்மை' அதிகாரத்தில் வரும் குறட்பா ஒன்றில் எதிர்மறை வாய்பாட்டால் தெளிவுபடுத்தியுள்ளார் திருவள்ளுவர். கொடுமையைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் துன்புற்றுக் குடிமக்கள் அழும் கண்ணீருக்கு மிகுந்த ஆற்றல் உண்டு; அதுவே ஆற்றல் மிக்க படையாகி முறை செய்யாத மன்னனுடைய அரசையே அடியோடு அழித்துவிடும்.
"அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை." (குறள்: 555)
இங்கே அல்லற்பட்டு ஆற்றாது குடிமக்கள் அழும் 'கண்ணீரை', கொடுங்கோல் அரசையே அடியோடு தேய்த்து அழித்துவிடும் 'படையாக' உருவகம் செய்திருக்கும் திருவள்ளுவரின் சிந்தனை புதியது; இதுவரை யாரும் கூறாதது. ஹிட்லர், முசோலினி, ஜார் மன்னர் முதலான உலகின் கொடுங்கோலர்களுக்கு எதிராகத் திருவள்ளுவர் இக்குறட்பாவில் அடித்திருக்கும் சாவுமணி வலிமையானது.
ஒரு மன்னன் தனது அரசின் வருவாயைப் பெருக்கும் துறையிலும் வரவு-செலவுத் திட்டத்திலும் (Budget) வல்லவனாக விளங்க வேண்டும். இவ்வகையில் திருவள்ளுவர் 'இறைமாட்சி' அதிகாரத்தில் கூறியுள்ள ஓர் அடிப்படையான அரசியல் சிந்தனை வருமாறு:
"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு." (குறள்:385)
முதலாவதாக, ஒரு மன்னன் பொருள் வரும் வழிவகைகளைப் பெருக்க வேண்டும்; இதனை 'இயற்றல்' என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் வள்ளுவர். அடுத்து, அரசுக்குப் பல வழிகளிலே வந்த வருவாயைத் திரட்டி ஒன்றுசேர்க்க வேண்டும்; இதனை 'ஈட்டல்' என்கிறார் வள்ளுவர். மூன்றாவதாக ஒன்று சேர்த்த பொருளை அழிவு நேராமல் காக்க வேண்டும்; இது 'காத்தல்' ஆகும். மிக இன்றியமையாத நான்காவது படிநிலை, இயற்றியும் ஈட்டியும் காத்தும் வைத்துள்ளவற்றைச் செலவிடுவதற்கு உரிய துறைகள் இவை இவை, அவற்றிற்கான தொகைகள் இவ்வளவு இவ்வளவு என்று - வகுத்துச் செலவு செய்தல் ஆகும். இதுவே 'வகுத்தல்' எனப்படும். இங்ஙனம் இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல் என்னும் நான்கு வழிமுறைகளில் அரசின் வருவாயைச் சேர்த்து, பகிர்ந்து, திட்டமிட்டு, பயன்படுத்திக் கொள்வது ஒரு தேர்ந்த மன்னனின் தலையாய கடமை ஆகும் என்கிறார் திருவள்ளுவர்.
இக்கருத்து இன்று அரசியல் மற்றும் பொருளியல் சார்ந்த அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள சமதர்மம் அடிப்படைக் கருத்துக்களில் ஒன்றாகும். ஓர் அரசு தனது வருவாயை எவ்வாறு எல்லாம் சிறந்த முறையில் திட்டமிட்டுக் கையாள வேண்டும் என்ற முற்போக்கான கருத்தினை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நறுக்குத் தறித்தாற் போல் 'இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல்' என நான்கே நான்கு சொற்களில் வடித்துத் தந்துள்ள பாங்கினை இங்கே நம்மால் காண முடிகின்றது.
அரசனுக்கென்று திருவள்ளுவர் பொருட்பாலில் கூறியுள்ள நல்லியல்புகள் நாட்டு மக்கள் எல்லோருக்கும் வேண்டியனவாக, பொருந்தக் கூடியனவாக இருக்கின்றன. அதனால்தான் அவர் அரசனுக்கு என்று கூறத் தொடங்கிய 'கல்வி' முதலாக 'இடுக்கண் அறியாமை' வரையிலான பண்பு நலன்களை 'வாழும் உயிர்க்கு' என்றும் 'மாந்தர்க்கு' என்றும் பலர்க்கும் பொதுவாக்கிக் கூறியுள்ளார். திருவள்ளுவர் பொருட்பாலில் வலியுறுத்தியுள்ள அரசியல் சிந்தனைகளில் அறநெறியே முதன்மையான இடத்தினைப் பெறுகின்றது, அவரது அரசியல் அமைப்பில் மக்கள் நலமே அடிப்படையாக விளங்குகின்றது. வேறு சொற்களில் கூறுவது என்றால், முடியாட்சிக் காலத்தைச் சார்ந்த திருவள்ளுவரின் பெரும்பாலான அரசியல் சிந்தனைகள் இன்றைய குடியாட்சிக் காலத்திற்கும் ஏற்புடையனவாகத் திகழ்கின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
திருக்குறள் ஓர் மதச்சார்பற்ற நூல்
திருக்குறளை நாம் படிக்க ஆரம்பித்த உடனேயே அது ஒரு மதச்சார்பற்ற நூல் என்ற உண்மையை நாம் அறியலாம். திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் பௌத்த மதம், சீக்கிய மதம், ஜைன மதம், மற்றும் இந்து மதம் போன்ற பல மதங்கள் இருந்தன. அதைப்போலவே இறை மறுப்பாளர்களும் இருந்துள்ளனர். ஆனால் மதச்சார்பற்ற தன்மை எனும் கருத்தாக்கத்தை யாரும் அறிந்திருக்கவில்லை. வள்ளுவரே மத நம்பிக்கை உடையவர் தான். கடவுளைப் புகழ்ந்தே பத்து குறள்களை கொண்ட ஒரு அதிகாரத்தை படைத்துள்ளார். அவரும் ஒரு மதத்தில் இருந்திருக்கலாம். ஆனால் எந்த ஒரு மதத்துக்கும் ஆதாரமாக இந்நூல் இல்லை. குறிப்பாக சொல்வதென்றால் எந்த மதத்தைப் பற்றியும் குறிப்பிடவில்லை.