தமிழக அரசியல் சிந்தனைகள் - வரலாற்றுப் பின்னனி | 11th Political Science : Chapter 14 : Tamil Nadu Political Thought
அலகு 15
தமிழக அரசியல் சிந்தனைகள்
கற்றலின் நோக்கங்கள்
❖ மாணவர்கள் எளிதில் தமிழத்தின் பண்டைய அரசியல் கருத்துக்களைக் கற்பர்
❖ திருவள்ளுவரின் அரசியல் கருத்துக்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுதல்.
❖ பாரதியாரின் மூலமாகத் தேசியவாதத்தை புரிந்துகொள்ளுதல்.
❖ தமிழ்நாட்டில் தோன்றியுள்ள பொதுவுடைமைவாத கருத்துக்கள் குறிப்பாக சிங்காரவேலரின் பொதுவுடைமைவாத படைப்புக்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல்.
❖ திராவிடக் கொள்கையைப் பற்றி புரிந்துகொள்ளுதல் மற்றும் தமிழ்நாட்டின் அரசியல், சமுதாயம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ளதாக்கத்தை பற்றி அறிந்துகொள்ளுதல். குறிப்பாக ஈ.வெ.ரா. பெரியாரின் பங்களிப்பின் மூலமாக சமூகநீதி, சமத்துவம் விடுதலை போன்றவற்றை புரிந்துகொள்ளுதல்.
❖ தமிழ் இயக்கம் மற்றும் திராவிட இயக்கத்தின் முக்கிய விளக்கங்களைத் தெளிவாக விவரித்தல்.
அடிப்படையில் செம்மொழியான தமிழின் தாய்நாடு (தமிழகம்) என்பதை தமிழ்நாடு என்று அழைக்கின்றோம். இதன் அருகில் உள்ள சில பகுதிகளாக கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவை உள்ளடக்கியதாக தமிழகம் இருந்தது. ஸ்டராபோ கி.மு 63-முதல் கி.பி 24 வரை). வாழ்ந்த கிரேக்க வரலாற்று சிந்தனையாளர் மற்றும் புவியியலாளர் ஆவார். இவர் தமிழ் முடியாட்சியின் பாண்டியர்கள் காலத்தில் உள்ள இராஜதந்திர வரலாற்றை உற்றுநோக்கியிருந்தார். கடல் பயணங்களின் மூலமாக சேர, சோழ மற்றும் பாண்டியர்கள் கடலருகில் வாழும் மக்களிடம் தமிழரின் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா மற்றும் மத்தியத்தரைக்கடல் பகுதிகளில் வர்த்தகத்தை வளர்ப்பதற்காக தமிழக கரையோரங்களில் இருந்த துறைமுகங்கள் முக்கிய மையமாக செயல்பட்டன. குறிப்பாக கி.மு 200 முதல் காலகட்டத்தைச் சார்ந்த கி.பி 300 வரையானது ஆகும். பண்டையகால துறைமுகங்களான கொற்கை, பூம்புகார், வசவசமுத்திரம், பெரிமுளா, அரிக்கமேடு, அழகன்குளம், மாமல்லபுரம் போன்றவை சிறந்த முறையில் செயல்பட்டன. குறிப்பாக வர்த்தகம், வாணிபம் மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றங்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகள், இலங்கை, சீனா எகிப்து, கிரேக்க மற்றும் ரோமாபுரி போன்ற நாடுகளுடன் திறம்பட மேற்கொள்ளப்பட்டது. கப்பல் கட்டுதலில் பாரம்பரியமிக்க தமிழர்கள் சிறந்த கடலோடிகளான நமது முன்னோர்கள் உலகின் அடிப்படை தன்மைகளின் தாக்கங்களாக அரசியல், சமுதாயம், பண்பாடு, வர்த்தகம் மற்றும் வாணிபத் தொடர்புகளை உலகின் மற்ற நாடுகளுடன் ஏற்படுத்தினர்.
ஏறத்தாழ (கி.மு 300 முதல் கி.பி 300) வரையிலான சங்க இலக்கியங்களில் முக்கிய ஆதாரங்களாக விளங்குவதுடன் அக்கால சமுதாயம், பொருளாதாரம், பண்பாடு மற்றும் அரசியலை பிரதிபலித்திருக்கின்றன. சங்கப்பாடலின் வகைப்பாட்டியலில் அகம் (அன்பு சார்ந்து இருத்தல்) மற்றும் புறம் (போர், நன்மை மற்றும் தீமை, சமூகம், நீதி மற்றும் முடியரசு) போன்றவற்றால் தமிழ் அரசியல் முறைமை பற்றி கூறியிருக்கின்றன. சங்க இலக்கிய புத்தகங்கள் (எட்டுத்தொகை) எட்டு நூல் திரட்டு ஆகும். அவையாவன: (1) நற்றினை (2) குறுந்தொகை (3) ஐங்குறுநூறு (4) பதிற்றுப்பற்று (5) பரிபாடல் (6) கலித்தொகை (7) அகநானூறு மற்றும் (8) புறநானூறு, இவை தவிர மேலும் ஒன்பதாவது குழுவாக விளங்கும் பாட்டுகளான பத்துப்பாட்டும் காணப்பட்டது. ஆரம்ப காலத்தில் தொல்காப்பியத்தின் முதல் இரண்டு புத்தகங்களும் தமிழ் இலக்கணமாகக் கருதப்பட்டதும் இக்காலக்கட்டத்தில்தான் என்பது நினைவு கூறத்தக்கதாகும்.
சங்க இலக்கியங்களுக்கு பிறகு சேகரிக்கப்பட்ட பிரபலமான நூற்கோவை/ பாடல் திரட்டு என்பது 'கீழ்கணக்கு' என அழைக்கப்படுகிறது. இப்பதினெட்டு நூல்களின் ஒரு பகுதிதான் மிகவும் பிரபலமான சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பதினெட்டு சிறிய நூல்கள் (பதிணென் கீழ்க்கணக்கு, இது திருக்குறளையும் உள்ளடக்கியதாகும்.) அக்காலகட்டத்தில் எழுதியதாகும். பிரபந்த இலக்கியம் பல்வேறு வகையான பாடல்களைக் கொண்டிருந்தது அவை: 'கோவை', என்பது குறிப்பிட்ட கருத்திலான வரிகளைக் கொண்டிருப்பதுடன் (பொதுவாக அன்பைப் பற்றியதாகும்) 'கலம்பகம்' என்பது ஓர் பத்தியின் முடிவு என்பது அடுத்த வரிக்கு ஆரம்பமாக வழி இருப்பதுடன் (பொதுவாக அரசன் மற்றும் வீரத்தை குறிப்பிடுதல்) மேலும் 'பரணி' என்பதற்கும் வழி வகுக்கிறது. இது பாரம்பரியத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக பாண்டிக்கோவை, நந்திக்கலம்பகம் மற்றும் கலிங்கத்துப் பரணி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
பண்டைய கால தமிழ் இலங்கியங்களை திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவை பல சங்க கால அரசியலின் தன்மை, சமுதாயம் மற்றும் பண்பாட்டினைப் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவுடன் படைக்கப்பட்டு இருந்தன. தமிழ் மொழியானது தமிழ் அடையாளம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் மரபுகளின் அடிப்படியாக உள்ளதாகும். நிலம், புவியமைப்பு, ஆட்சியாளர்கள் மற்றும் தலைவர்களால் வேறுபட்டு இருந்தாலும் தமிழ் பேசும் பகுதிகளில் தமிழரின் நாடு மற்றும் தேசக் கூட்டமைவு என்பது இருந்தது. கலிங்க அரசன் காரவேலாகி.மு 165 காலத்தின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்தான் 132 வருடமாக இருந்த 'தமிழ் கூட்டமைவு' என்பதை அழித்தார்' என்று அக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்றே தமிழ் அரசர்களின் கூட்டமைவின் பிறநாட்டு படையெடுப்பிற்கு எதிராக சண்டையிட்டதை சங்க கால இலக்கியமான 'அகநானூறு' விவரித்துள்ளது. ஆனால் தமிழ் தேசியவாதம் என்பது காலனி ஆதிக்கத்தின் விளைவினால் தோன்றியது என்று சாதாரணமாக கூறிவிடமுடியாது.
தமிழ் தேசியத்தின் மூல ஆதாரங்கள் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டினுடைய வரலாற்றுடன் தொடர்புடைய பங்கு வகிப்பதாகும் இதனால் அரசியல் வரையறுக்கப்பட்டிருப்பதனை சங்க காலம் முதல் காணலாம்.
இங்கே அரசு கருத்தாக்கமும், லட்சிய அரசன் எனும் பதமும், கிரேக்கத்தில் நில எல்லைகளில் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்த நகர அரசை போன்று இருந்தது. பண்டைய தமிழ்நாடு என்பது தமிழகம் என்று அழைக்கப்பட்டது. இது மேற்கு மலையைச் சார்ந்த திருப்பதியிலிருந்து கன்னியாகுமரியின் நுனிவரை உள்ளடக்கியதாகும். இந்த நிலமானது பாரம்பரியமாக ஐந்து புவியியல் சார்ந்த பிராந்தியமாக (திணை) இயற்கைத் தன்மையுடன் பிரிக்கப்பட்டுள்ளது. மலையை சார்ந்த பகுதி (குறிஞ்சி), காடுகளை சார்ந்த பகுதி (முல்லை), வயல் சார்ந்த பகுதி (மருதம்), கடல் சார்ந்த பகுதி (நெய்தல்), மணல் சார்ந்த பகுதி (பாலை) ஆகியன ஐந்திணைகள் ஆகும்.
தமிழ் மொழி பேசும் பகுதிகள் சோழர்கள் (தலைநகரம் உறையூர்), பாண்டியர்கள் (தலைநகரம் மதுரை), சேரர்கள் (தற்போதைய கொங்கு நாடு மற்றும் கேரளா), பல்லவர்கள் (தலைநகரம் காஞ்சிபுரம்) என பலவாறு பிரிக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாடு பல்வேறு அரசர்கள் மற்றும் குறுநில மன்னர்களால் ஆளப்பட்டது. கடை ஏழு வள்ளல்கள் புலவர்களுக்கு வாரி வழங்கியதை பற்றி சங்கபுலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். கபிலர் மற்றும் ஔவையார் கடை ஏழு வள்ளல்களான ஆய், பாரி, ஓரி, காரி, அதியமான், பேகன் மற்றும் நல்லியைப் பற்றி குறிப்பிடுகின்றனர். ஓர் சிறந்த அரசனின் குணங்களாக அவன் பாகுபாடற்ற நீதி வழங்கும் அரசனாகவும், மக்களிடத்தில் அன்பு உடையவனாகவும், போர்களத்தில் எதிரிகளிடம் வீரத்தை வெளிப்படுத்துபவனாகவும் இருக்க வேண்டும் என குறிப்பிடுகிறது.
சபை அல்லது மன்றம் எனப்படுவது அரசன் தலைமையேற்று நடத்தும் நாட்டின் உயர்ந்த நீதிமன்றம் ஆகும். இதை போலவே ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு மன்றம் உண்டு. அது அந்த கிராமத்தின் பொது இடத்தில் கூடி அந்த கிராமத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கும். போர் வீரர்கள் மிகவும் மதிப்புடன் நடத்தப்பட்டனர். போரில் அவர்கள் இறக்க நேரிட்டால் அவர்களின் நினைவாக, நினைவுத்தூண் ஒன்று ஊரில் எழுப்படும். ஆனால் போரில் ஒரு வீரன் தன் பின்புறம் காயப்பட்டு அதனால் இறந்தால் சங்க இலக்கிய காலங்களில் அது அவமானமாக கருதப்படும்.
போரின் நல்ல நடைமுறைகள் பலவற்றை சங்க இலக்கியங்கள் நிறைய தெரிவிக்கின்றன. புறநானூறு என்பது ஒரு சங்க இலக்கியம் ஆகும். இது பாண்டிய அரசனை புகழ்கிறது. அவன் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் மற்றும் வயோதிக மக்கள், கால்நடைகள் இவைகள் அனைத்தையும் பாதுகாப்பான இடங்களில் போர்காலங்களில் இடம் பெயரச் செய்தான். நீதி என்பது அரசு மற்றும் அரசனின் மனசாட்சிக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். நீதி என்பது அரசனின் ஆட்சியில் ஒரு முக்கியமான கூறாக இருக்க வேண்டும். ஒரு நல்ல அரசன் எந்த சூழ்நிலையிலும் நீதியை தியாகம் செய்யக் கூடாது. அரசனின் நல்லாட்சி மற்றும் நற்செயல்கள் எப்பொழுதும் நிலையான நீடித்த புகழை கொண்டு வரும். இவைகள் தான் முக்கிய அரசியல் கொள்கைகளாக சங்ககாலங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னராட்சி / முடியாட்சி தன்மையைக் கொண்டிருந்தாலும் அரசனின் சட்டப்படியான முடிவுகள் மக்களின் ஒப்புதலைச் சார்ந்தே இருந்தது. அரசன் மக்களின் ஆதரவு இருக்கும் வரை சட்டப்படியான முடிவுகளை அனுபவிப்பவராகவும் அதே சமயம் அவற்றைத் தவறாக பயன்படுத்தினால் மக்கள் ஆதரவை இழக்கவும் நேரிடும். சங்க இலக்கியம் (பட்டினப்பாலை) பல்வேறு வகையான வரிகளைப் பற்றி கூறுகின்றது. அவைகள் சுங்கவரி, வருமானவரி, பொருள் மீதுள்ள வரி மற்றும் பல வரிகள் அரசின் வருவாய்களை பெருக்கும் ஆதாரமாக கூறப்பட்டுள்ளன எளிமையான நிர்வாக கட்டமைப்பின் வழியே (அமைச்சர்கள், அதிகாரிகள்) தமிழ் அரசர்கள் தமிழகத்தை ஆட்சி புரிந்தனர் வெளிநாட்டு வர்த்தகம், சுங்க வரி முதலானவை அரசின் வருவாயில் பெரும் பங்கு வகித்தன. பாண்டியர் கல்வெட்டில் முத்துக்குளித்தல் (கலாத்திகர்) பற்றியும் மற்றும் முதன்மை எழுத்தர் (கணத்திகன்) பற்றியும் கூறப்பட்டுள்ளது. சோழர்களின் கொடியிலும் மற்றும் நாணயங்களிலும் புலி சின்னத்தை பொறித்து இருந்தார்கள், சேரர்கள் வில் மற்றும் அம்புகளையும், பாண்டியர்கள் மீன் சின்னத்தையும் மற்றும் பல்லவர்கள் சிங்கத்தை சின்னமாக பெற்று இருந்தனர்.
ஒற்றர்கள் மூலம் உளவு பார்த்தல் என்பது நிறுவனப்படுத்தப்பட்டு நாட்டின் முக்கியமானதொரு அங்கமாக இருந்தது. நாட்டின் நிலைத்தன்மையும் அமைதியும் இதன் செயல்பாட்டை பொறுத்தே அமைந்திருந்தது. நிறுவனப்படுத்தப்படாமல் இருந்தாலும் அடிமைகள் இல்லாமலில்லை அடிமைகளை படையெடுத்தபின் பிடிப்பதும், அடிமைகளை வர்த்தகத்திற்கு பயன்படுத்தவும், பரிசுக்காக பரிமாற்றம் செய்யவும் அரசாட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது. குறிப்பாக கட்டுமானம் மற்றும் கட்டிட வேலைகளுக்கு அடிமைகள் பயன்படுத்தப்பட்டனர்.
பண்டைய தமிழில் சாதி முறை என்பது காணப்படவில்லை. வர்க்க கொள்கை மற்றும் வர்க்க கருத்து வேறுபாடுகள் அவரவர்களின் தொழில் சார்ந்த முறையில் காணப்பட்டன. சங்ககால சமுதாயத்தில் சாதிய முறை என்பது வெளியிடத்திற்குரியதாகவும் மற்றும் அறியப்படாததாகவும் இருந்தது. சமுதாயப் பிரிவுகளை வர்க்கத்தின் அடிப்படையில் சங்க புலவர்கள் தரம் பிரித்தினர்.
அவைகள்: (குடி) துடியன், பாணன் மற்றும் கடம்பன் அல்லது அரசர்(ஆட்சிபுரிபவர்), வைசியர்(வர்த்தகர்கள்) மற்றும் வேளாளர் (விவசாயிகள்) என்று குறிப்பிட்டுள்ளனர். தகுதிநிலைகளில் காணப்பட்ட வித்தியாசங்கள் தவிர்க்க முடியாததாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் வர்ண முறை எனும் சாதி அமைப்பு சங்ககால சமுதாயத்தில் சிறிதளவே காணப்பட்டன.
பண்டைய தமிழ் சமூக அமைப்புகளில் மனுதர்மம் மூலமாக சட்டமாக்கப்படவில்லை . ஆரம்பகால ஆரிய-பிராமண சாதிய அமைப்புகள் சங்க காலத்தில் குறிப்பிடப்படவில்லை. இதுபோன்ற அமைப்புகள் சங்க காலத்திற்குப் பிறகே தோன்றின. பண்டைய தமிழ் மதங்கள் நாட்டுபுற கலையை சார்ந்தே இருந்தது. இயற்கையை வழிபடுதல் மற்றும் இயற்கை காரணிகளே பொதுவாக காணப்பட்டன. முருகக்கடவுளை வழிபடுவதே தமிழ்நாடு பழங்குடியினரின் வழிபாட்டு மரபு ஆகும். முருகக் கடவுளை போராளிகளின் மாவீரர்கள் கடவுளாக நாட்டுப்புற கலாச்சாரமாக செயல்படுத்தினர். உலகில் பற்றுடைய கடவுளாக தமிழ்-திராவிட மரபுகளின் கட்டுரைகளில் வேர் ஊன்ற ஆரம்பித்தது. கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகே தமிழ் மற்றும் சமஸ்கிருதம் போன்ற எழுத்துகள் தோன்ற ஆரம்பித்தது.
சமஸ்கிருதமயமாதல் மெதுவாக பொது வெளிக்கு பரவ ஆரம்பித்தது. பிராமணர்கள் அரசனுக்கு ஆசி வழங்குபவர்களாகவும், மற்றவர்களை விட உயர்ந்தவர்களாகவும் கருதும் மனப்பாங்கு தொடங்கியது. இக்கால கட்டத்திற்கு பின் பிராமணர்களிடம் ஆசி பெறுவது சட்டபூர்வ வழியாக துவங்கியது. சமஸ்கிருதமயமாதலுடன் சேர்ந்து, வேத சடங்குகள், மனு கொண்டு வந்த வர்ணாசிரமம் அமைப்பு போன்றவை, ஏற்கனவே தொழில் ரீதியாக பிரிக்கப்பட்டு இருந்த திராவிட சமூகத்தை மேலிருந்து கீழாக சாதி ரீதியாக பிரித்தது.
மரபு வழி கொள்கையும் இயற்கை வழிபாடும் தமிழ் மன்னர்களிடம் பொதுவாக காணப்பட்டது. முடியாட்சியும் கலாச்சார மையத்திலிருந்து அதிகார மையத்தை நோக்கி நகர்ந்தது. இதனால், சங்க காலத்துக்கு பிந்தைய காலத்தில் அரசனின் அதிகாரங்கள் அதிகரித்து நாட்டின் மொத்த அதிகாரமும் பெற்ற ஒரே அமைப்பாக அரியனை உயர்ந்தது
அரசுரிமையானது புனிதத் தன்மையுடையதாகவும், மரபு வழியானதாகவும் பல்லவர்கள் கூறினர். பல்லவர் காலத்தில் வட இந்தியாவில் இருந்த ஆரிய கலாச்சாரம் தமிழ்நாட்டில் ஊடுறுவியது. இரண்டு கலாச்சாரங்களிலும் உள்ள கருத்துக்கள், அமைப்புகள், சில ஒன்றிணையும் முரண்பட்ட சில வழக்கொழிந்து போகவும் இந்த ஊடுறுவல் வழி வகுத்தது. இந்த கலப்பின் விளைவாக தமிழ் பக்தி கலாச்சாரம் தோன்றியது.
பெண்கள் மிகவும் உயரிய மரியாதையுடன் நடத்தப்பட்டனர் மற்றும் இவர்கள் அரசர்களுக்கு பாதுகாவல் மற்றும் பல்வேறு வகையான பணிகளையும் செய்தனர். ஆனால் அதிகாரங்கள் அனைத்தும் ஆண்களிடம் மட்டுமே இருந்தது. பெண்கள் பொது அவையில் பங்கேற்கலாம். ஆனால் ஆண்களே நிர்வாகிகளாகவும் மற்றும் ஆட்சியாளர்களாகவும் இருந்தனர். பெண்கள் சமூக சடங்குகளில் முக்கிய பங்கு வகித்தனர். மேலும் மரபு வழி உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் ஆண்களிடம் இருந்தாலும், குடும்பத்தில் பெண்ணின் பங்கு முக்கியமானதாக இருந்தது.
தமிழகச் சமூகத்தில் பெண்களின் பங்கை பற்றி விவாதிக்கையில் ஒளவையார் பற்றி குறிப்பிடுவது அவசியமாகிறது. (ஔவையார் என்றால் மதிப்புக்குரிய பெண் என்று பொருள்) தமிழ் இலக்கியத்திற்கு எந்த பெண்மணிகளெல்லாம் முக்கிய பங்களித்தனரோ, அவர்கள் ஔவையார் என்று பட்டப்பெயரிட்டு அழைக்கப்பட்டனர். வெவ்வேறு காலத்தில் வாழ்ந்த ஆறு பெண் தமிழ் புலவர்களுக்கு இப்பட்டப்பெயர் வழங்கப்பட்டது.
சங்க காலத்தில் வாழ்ந்த ஒளவையாரும் மற்றும் சோழர்களும் சிறந்த சிறப்புத்தன்மை வாய்ந்தவர்களாக கருதப்பட்டனர். இலக்கியம், கலாச்சாரம், உலகளாவிய அறநெறி, அரசியல் தன்மை, போர், அமைதி மற்றும் இராஜதந்திரம் போன்றவற்றில் இவர்கள் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தினர். ஒளவையார் ஒன்றாம் மற்றும் இரண்டாம் நூற்றாண்டு காலத்தில் வசித்தவர். இவர் அதியமானின் அவையில் இருந்தார். இவர் திருவள்ளுவர் மற்றும் கபிலரின் சம காலத்தவர் ஆவார். நற்றினை குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு இவற்றில் குறிப்பிடத்தக் பங்களிப்பை செய்துள்ளார். இவர் சிறந்த ஒரு தூதராகவும் இருந்தார். அதியமானுக்காக பலமுறை பல அரசர்களிடம் தூதுவனாக சென்றுள்ளார். அதியமான் அவையில் புலவராகவும், அதியமானின் உற்ற தோழராகவும் இருந்தார். தன் தூது திறமையின் மூலம் போர்களைக்கூட இவர் தவிர்த்துள்ளார்.
ஒரு முறை காஞ்சியை ஆண்ட தொண்டைமான், அதியமான் ஆண்ட தகடூரை தாக்கி போர்புரியும் எண்ணத்துடன் இருந்தான் இதை அறிந்த ஒளவையார் காஞ்சி சென்று தொண்டைமானை சந்தித்து பின் வருமாறு கூறினார்.
"தொண்டைமான் அரசரே உங்களுக்கும் அதியமானுக்கும் தான் எவ்வளவு வேறுபாடு உங்களது ஆயுதக்கிடங்கில் ஆயுதங்கள் சுத்தமாகவும் பளபளப்பாகவும் நெய் பூசப்பட்டு அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பாவம் அதியமானின் ஆயுதங்கள் உடைந்தும், ரத்தக்கரை படிந்தும், பட்டறைகளில் பழுது நீக்கும் பணியிலும் உள்ளன" என்றார். தொண்டைமானை புகழ்வது போல், ஔவையார் அவனது போர் அனுபவமின்மையும், அதியமானின் தொடர்ந்த போர்களையும், போர் திறனையும் தெரிவித்து போர் வந்தால் தொண்டைமான் வெற்றி பெறுவது கடினம் என்பதையும் உணர்த்தினார்.
சோழர் காலத்தில் பத்தாம் நூற்றாண்டில் இன்னொரு புகழ்பெற்ற ஒளவையார் இருந்தார். இவரே குழந்தைகளுக்கான நீதி கதைகளையும் ஆத்திச்சூடியையும் கொன்றைவேந்தனையும் எழுதியவர். சற்றே வளர்ந்த குழந்தைகளுக்காக மூதுரை மற்றும் நல்வழி என்ற இரண்டு நூல்களை இவர் எழுதியுள்ளார்.
❖ சமூகத்தில் சமூக மாற்றத்தை ஏற்படுத்திய கொள்கைகள், நிகழ்வுகளுக்குக் காரணியாக இருத்தல்; மக்களின் பொதுப் புத்தியில் மாற்றத்தை உருவாக்குதல்
❖ சமூகத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய அரசியல் முடிவுகளை எடுத்தல்
❖ சமூகத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்த பயனாளர்களுக்கும் பலன்கள் அளித்த அரசு முடிவுகளுக்குக் காரணமாக இருத்தல்
❖ சமூகத்தின் பல பிரிவு மக்களின் முன்னேற்றத்துக்குக் காரணமான அரசியல் கருத்துகளை பொதுக் கருத்தாக உருவாக்குதல்
அரசியல் சிந்தனையாளர்களின் நடவடிக்கைகள் புதிய அரசியல் சிந்தனைகளுக்கு ஆதரவாக மக்களின் ஈடுபாட்டினையும் பகுத்தறிவினையும் உருவாக்குகின்றன. சமகால அரசியல் களங்களில் அவர்கள் கலந்துரையாடல் மூலம் சமுதாயத்தில் தாக்கங்கள் உருவாகின்றன. அடுத்த காலகட்டத்துக்கு அறைகூவல் விடுக்கும் அரசியல் மாற்றத்துக்கான அரசியல் முடிவுகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள். அவர்களது அரசியல் முடிவுகள் அநேக மக்களின் அன்றாட வாழ்வில் நீண்டகால மாற்றங்களை உருவாக்குகின்றன.
உலகம் முழுவதிலும் இத்தகைய அரசியல் சிந்தனையாளர்கள் அரசியல், சமூக மாற்றங்களை உருவாக்கியுள்ளனர். இந்தியாவிலும் தமிழகத்திலும் பண்டைய காலத்திலிருந்து இத்தகைய அரசியல் சிந்தனையாளர்கள் உருவாகியுள்ளனர்.
நவீன அரசியல் கருத்தாக்கங்களின் படி தேசிய அரசியல் சிந்தனையாளர்கள், பொதுவுடைமைவாத் அரசியல் சிந்தனையாளர்கள், திராவிடப் பண்பாட்டு அரசியல் சிந்தனையாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் சிந்தனையாளர்கள் என நாம்பகுக்கலாம்.
இதன்படி தமிழகத்தில் தோன்றிய அரசியல் சிந்தனையாளர்கள் இப்பாடத்தில் அறிமுகம் செய்யப்படுகிறார்கள்.