தமிழக அரசியல் சிந்தனைகள் - தேசியவாதம் சுப்ரமணிய பாரதியார் (1882-1921) | 11th Political Science : Chapter 14 : Tamil Nadu Political Thought
தேசியவாதம் சுப்ரமணிய பாரதியார் (1882-1921)
ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே
நாம் சாதி மதங்களைப் பார்க்க வேண்டாம், இந்த நிலத்தில் வாழும் அனைத்து மனிதர்களும் ஒன்றே அவர்கள் எந்த சாதியினரை சார்ந்திருந்தாலும் அல்லது எந்தவேதத்தை போதிப்பவராக இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்றே அது மனிதகுலம் ஆகும். - சுப்ரமணிய பாரதியார்
சி. சுப்ரமணிய பாரதியார் தமிழகத்தின் தலைச்சிறந்த கவிஞர், சுதந்திரப் போராளி மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவர் மகாகவி பாரதியார் என்று மிகவும் போற்றப்படுகிறார். மகாகவி என்றால் மிகப்பெரிய கவிஞர் எனப்பொருள்படும். இவர் இந்தியாவின் தலைசிறந்த கவிஞராகக் கருதப்படுகிறார். இவருடைய பாடல்கள் தேசிய உணர்வைத் தூண்டி தேச விடுதலைக்காக மக்களைத் திரட்ட உதவியதுடன் தமிழகத்தில் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாகவும் இருந்தன.
பாரதி: ஓர் பாடலாசிரியர் மற்றும் ஓர் தேசியவாதி
தமிழ் இலக்கியங்களின் ஓர் புதிய சகாப்தமே சுப்ரமணிய பாரதியாரிடமிருந்து தொடங்கியுள்ளது எனலாம். இவருடைய பெரும்பாலான படைப்புகள் தேசப்பற்று, பக்தி மற்றும் மறைபொருள் பற்றியதாகும். பாரதியார் மிகவும் உணர்ச்சிப் பெருக்குள்ள கவிஞர் ஆவார். "கண்ண ன் பாட்டு" "நிலவும், வான்மீனும் காற்றும்" "பாஞ்சாலி சபதம்" போன்றவை பாரதியாரின் மிகச் சிறந்த படைப்புகளின் வெளிப்பாடுகளாகும்.
உங்களுக்குத் தெரியுமா?
பாரதியாரின் "பாஞ்சாலி சபதம்" என்பது ஓர் தலைசிறந்த படைப்பாகும். இது இந்தியாவை திரௌபதியாகவும், ஆங்கிலேயரை கௌரவர்களாகவும் சுதந்திர போராட்ட வீரர்களை பாண்டவர்களாகவும், உருவகப்படுத்தியிருந்தார். திரௌபதியின் போராட்டம் மூலமாக அவர் இந்திய தாய் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுள்ளதை மறைமுகமாக வெளிப்படுத்தினார்.
பாரதி ஓர் தேசியக் கவிஞராக கருதப்படுகிறார். இவருடைய பாடல்கள் தேசப்பற்று மிக்கதாக மக்கள் மத்தியில் போற்றப்பட்டுள்ளன. இதனால் மக்கள் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஈடுபாடுடன் பங்கேற்று நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டனர். பாரதியார் நாட்டின் பெருமையை மட்டும் கூறாமல் சுதந்திர இந்தியாவைப் பற்றிய தொலைநோக்குப் பார்வையை கோடிட்டுக் காட்டுகிறார். இவர் 1908 ம் ஆண்டு "சுதேச கீதங்கள்" எனப்படும் உணர்ச்சிமிக்க பாடல் தொகுப்பினை வெளியிட்டார்.
ஓர் இதழாசிரியராக பாரதியார்
பாரதியார் (பல வருடங்களைப்) தன்னுடைய வாழ்க்கையில் பத்திரிக்கையாளராக செலவிட்டார். பாரதி இளம் வயதில் தன்னுடைய வாழ்க்கையை ஓர் பத்திரிக்கையாளர் மற்றும் துணை ஆசிரியராக "சுதேச மித்திரன்" என்ற பத்திரிக்கையில் 1904 ஆம் ஆண்டு தொடங்கினர். 1906-ஆம் ஆண்டு மே மாதம் "இந்தியா" எனப்படும் ஓர் புதிய நாளிதழ் தொடங்கப்பட்டது. இது பிரஞ்சு புரட்சியின் மூன்று முக்கிய முழக்கங்களான சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் போன்றவற்றை தனது குறிக்கோளாக அறிவித்தது. இது தமிழ் பத்திரிக்கை துறையில் ஓர் புதிய பாதையை ஏற்படுத்தியது எனலாம். இது புரட்சிகரமான புதிய முயற்சியாக தோன்றியது. தனது புரட்சிகரமான முனைப்புகைளை வெளியிடுவதற்கு பாரதியார் அவர்கள் வார இதழை சிகப்பு தாளில் அச்சிட்டு பிரசுரித்தார். அரசியல் கேலிச் சித்திரத்துடன் வெளியிடப்பட்ட தமிழ் நாட்டின் முதல் நாளேடு 'இந்தியா' என்பதாகும். இவர் மேலும் விஜயா என்கிற தமிழ் தினசரியின் பதிப்பாசிரியராகவும் இருந்து வெளியிட்டார். "பால பாரதா" என்கிற ஆங்கில மாத இதழையும், பாண்டிச்சேரியில் "சூர்யோதயம்" எனும் உள்நாட்டு வார இதழை வெளியிட்டார்.
உங்களுக்குத் தெரியுமா?
"சுயராஜ்ய தினம்" கொண்டாடுவதற்காக 1908-ஆம் ஆண்டு சென்னையில் மிகப்பெரிய பொதுக் கூட்டத்திற்கு இவர் ஏற்பாடு செய்தார். "வந்தே மாதரம்" "எந்தையும் தாயும், ஜெய பாரத்" போன்ற பாரதியாரின் கவிதைகள் அச்சிட்டு இலவசமாக மக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.
ஆணும் பெணும் சமமாகக் கருதப்பட்டால் மட்டுமே இவ்வுலகம் அறிவு மற்றும் புத்திக்கூர்மையில் சிறப்புறும். - பாரதியார்
உங்களுக்குத் தெரியுமா?
சுப்ரமணிய பாரதியார் (டிசம்பர்) பதினோராம் நாளில் 1882-ஆம் ஆண்டு எட்டயபுரம் என்னும் கிராமத்தில் பிறந்தார். இந்த ஊர் தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது, இவருடைய குழந்தை பருவ பெயர் சுப்பையா ஆகும். இவரது தந்தையார் சின்னசாமி, தாயார் லட்சுமி அம்மாள் ஆவார்.
பாரதியார் ஏழு வயதில் தமிழ்க் கவிதைகளை எழுத ஆரம்பித்தார். தன்னுடைய பதினோராம் வயதில் அவருடைய படைப்புகள் மற்றும் திறைமைகள் கற்றறிந்த அறிஞர்களால் புகழப்பட்டது. பதினோராம் வயதில் சுப்பையா அனைத்து பெருமக்கள் மற்றும் அறிஞர்கள் கூடியிருக்கும் சபையில் ஓர் சவால் விட்டார். யாரேனும் என்னுடன் எந்தவித முன்னறிப்பு மற்றும் பயிற்சி இல்லாமல் எந்த தலைப்பில் வேண்டுமானாலும் பேச தயாரா? என சவால் விட்டார். இந்த போட்டி எட்டையபுர அரசவையில் ஓர் சிறப்பு அமர்வாக எட்டயபுர அரசரின் தலைமையில் நடைபெற்றது. சவாலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு கல்வி ஆகும். சுப்பையா பேச்சுப் போட்டியில் வென்றார். இது சுப்பையாவின் வாழ்க்கையில் ஓர் திருப்பு முனையாக அமைந்தது. இந்த மறக்க முடியாத நிகழ்வுக்கு பிறகு 'எட்டயபுர சுப்பையா' என்று அழைக்கப்பட்ட அவர் 'பாரதி' என்றும் பிற்காலத்தில் பாரதியார் என்றும் மரியாதையுடன் அழைக்கப்பட்டார். 'பாரதியார்' என்ற பெயர் அனைவராலும் குறிப்பாக தேசவாதிகளாலும் உலகெங்கிலும் உள்ள கோடான கோடி தமிழ்ப் பற்றாளர்களால் மதியாதையுடனும் நினைவு கூறப்படுகிறது.
ஜூன் 1897-இல் பாரதியாருக்கு பதினைந்து வயது நிரம்பியிருந்த போது செல்லமாளுடன் திருமணம் நடந்தது. இதன்பிறகு பாரதியார் காசிக்கு சென்றார். அங்கு தனது அத்தை குப்பாள் மற்றும் மாமா கிருஷ்ணசிவனுடன் இரண்டு ஆண்டுகள் இருந்தார். அங்கிருந்த போது தான் சமஸ்கிருதம், இந்தி மற்றும் ஆங்கில மொழியறிவினை பெற்றார். அலகாபாத் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் அவர் வெற்றி பெற்றார். காசியில் தங்கியிருந்தது பாரதியின் ஆளுமையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. முறுக்கு மீசை, சீக்கியர்களின் தலைப்பாகை மற்றும் வீறு கொண்ட நடையினை தனக்கே உரித்தானதாக்கினார். இத்தகைய வெளிப்படையான மாற்றங்களும் பாரதியாரிடம் ஏற்பட்டன.
"இந்தியா" என்கிற இதழின் பதிப்பாசிரியராக இருந்து செயல்பட்டதனால் பாரதியாருக்கு கைது ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. இதனால் நிலைமை மிகவும் மோசமானதால் 1908-ஆம் ஆண்டு பாண்டிச்சேரிக்கு செல்ல முடிவு எடுத்து அவர் அங்கே சென்றார். அந்த கால கட்டத்தில் பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அங்கு பாரதியாரின் வாழ்வில் பல்வேறு சாதகமான சூழ்நிலைகள் ஏற்பட்டன, இதன்மூலம் பல தலைவர்களை சந்திக்கவும், சுதந்திரப் போராட்டத்தில் ஆயுதமேந்திய இயக்கத்தின் தலைவர்களான அரவிந்தோ, லாலா லஜபதிராய் மற்றும் வி.வி. சுப்ரமணியம் ஆகியோரையும் பாண்டிச்சேரியில் தஞ்சம் புகுந்திருக்கும் பொழுது சந்தித்தார். மிகவும் ஆதாயத்திற்குரிய பாரதியாரின் வாழ்க்கை என்பது பாண்டிச்சேரியில் பத்து வருடம் அவர் தங்கியிருந்த காலமாகும். இவர் தமிழ் இளைஞர்களை ஒன்று திரட்டி தேசிய பாதைக்கு இட்டுச் சென்றார். பாரதியாரின் படைப்புகள் ஆங்கிலேய அரசுக்கு மிகவும் எரிச்சலூட்டின, இவரின் எழுத்துக்கள் மூலம் தாய் நாட்டுப்பற்றை தமிழ் இளைஞர்களிடம் விதைத்தார். பாரதியார் 1919-ஆம் ஆண்டு சென்னையில் ராஜாஜி வீட்டில் மகாத்மா காந்தியை சந்தித்தார். பாரதியார் ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்டிருந்த இந்தியாவிற்கு அருகில் 1918-ஆம் ஆண்டு கடலூரை நெருங்கிய போது அவர் கைது செய்யப்பட்டார். இவர் சிறையில் இருக்கும்பொழுது தன்னுடைய நேரத்தை சுதந்திரம், தேசியவாதம் மற்றும் நாட்டின் நலத்தைப் பற்றிய கவிதைகள் எழுதுவதற்கு செலவிட்டார். பாரதியார் தன்னுடைய இளமைக்காலத்தில் தமிழ் தேசியத் தலைவர்களிடம் நல்ல உறவுகளை ஏற்படுத்தினார், குறிப்பாக வ.உ. சிதம்பரம், சுப்ரமணிய சிவா, மண்டயம்திருமலச்சாரியார் மற்றும் சீனுவாச்சாரி போன்றவர்களிடம் நல்லுறவுகளை வளர்த்தார். இந்த தலைவர்களிடம் ஆங்கிலேயர் ஆட்சியினால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி விவாதித்தார். பாரதியார் இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்திர மாநாட்டில் கலந்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தார் தேசிய பிரச்சனைகளை தீவிரமான இந்திய தேசியவாதத் தலைவர்களான பிபின். சந்திரபால், பாலகங்காதர திலகர் மற்றும் வி.வி.சுப்ரமணியம் போன்றோரிடம் விவாதித்தார். பாரதியாரின் பங்கேற்பு மற்றும் செயல்பாடுகளால் 1905-ஆண்டு பனாரஸ் மற்றும் 1907-ஆம் ஆண்டு சூரத் மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரசு தலைவர்களை இவரது தேசபற்று மிகவும் கவர்ந்து இழுத்ததுடன் பல தாய் நாட்டை நேசிக்கும் தேசத் தலைவர்களால் மதிக்கப்பட்டார். சில தேசத்தலைவர்களுடன் தேசம் பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார். அதுமட்டும் இல்லாமல் பல்வேறு முறையில் தேசிய இயக்கத்தை வலுப்படுத்துவதற்கு அவர் அறிவுரைகளை வழங்கினார். சந்தேக மில்லாமல் பாரதியாருடைய அறிவுரைகள் மூலமாகப் பல தேசிய தலைவர்கள் புத்துணர்வு பெற்று தேசியவாதத்திற்கு பங்காற்றினார். இவ்வாறு பாரதியார் இந்திய சுதந்திரத்திற்காக முக்கிய பங்காற்றினார் என்பதை நாம் அறிவோம்.
"நாம் ஆயிரம் பிரிவுகளாக வேண்டுமானாலும் பிரிந்து இருக்கலாம். ஆனால், எப்படி இருந்தாலும் அந்நிய படையெடுப்பை நியாயப்படுத்த முடியாது".
ஓர் சமூக சீர்திருத்தவாதியாக பாரதியார்
பாரதியார் சாதிய அமைப்புக்கு எதிராக செயல்பட்டவர். இவர் உலகில் இரண்டு சாதிகள் உள்ளன. ஒன்று ஆண்சாதி மற்றொன்று பெண்சாதி என்பதைத் தாண்டி வேறு ஒன்றுமில்லை என்று பிரகடனப்படுத்தியிருக்கிறார். இவை எல்லாவற்றையும் விட இவர் தனது பூநூலை அகற்றினார். மேலும் அட்டவணை சாதியினரையும் பூநூல் அணியச்செய்து வேதம் ஓதச் செய்தார். இவர் முஸ்லிம்கள் நடத்தும் கடையில் தேநீர் பருகினார். இவர் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் தேவாலாயத்திற்கு அனைத்து விழாக்களிலும் பங்கேற்றார். இவர் பட்டியல் இனத்தவரை கோயிலுக்கு அனுமதிப்பதை ஆதரித்தார். இவருடைய அனைத்து சீர்திருத்தங்களுக்கும் இவருடைய அக்கம் பக்கத்தினரிடையே பெரிய எதிர்ப்பு இருந்தது. பாரதியார் மிகவும் திறமையானவர். இந்தியர், தெளிவாக அனைவரும் பாரதத்தாயின் குழந்தைகள் என ஒன்றுபட்டு செயல்பட்டால் அன்றி இந்திய விடுதலை சாத்தியமாகாது என்று கூறினார். இவர் பெண்களின் உரிமைகள், பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களின் ஆற்றலாதல் ஆகியவற்றை மிகவும் நம்பினார். இவர் குழந்தை திருமணம், வரதட்சணை முறையைத் தீவிரமாக எதிர்த்தார். ஆனால் விதவை திருமணத்தை அவர் ஆதரித்தார்.
உங்களுக்குத் தெரியுமா?
விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதாவுடனான பாரதியாரின் சந்திப்பு பெண்களுக்கான உரிமைகள் பற்றி சிந்தனையைப் பாரதியாரிடம் எற்படுத்தின. இது சாதியப் பிரச்சனையிலிருந்து சுதந்திரம் வரைக்கும் மற்றும் ஆன்மீகம் வரை பாடுபட்டவர். இவர் தற்கால பெண்களுக்கு சக்தி என்கிற அடையாளத்தை ஏற்படுத்தியவர், குறிப்பாக நவீன பெண்களின் அதிகாரம், பலமான, சுதந்திரமான மற்றும் ஆண்களுக்கு சமமான பங்குதாரர் என்று பெண்களை குறிப்பிடுகிறார்.
ஓர் தொலைநோக்குச் சிந்தனையாளராகப் பாரதியார்
பாரதி என்பவர் ஒரு கவிஞர், பத்திரிக்கை ஏழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்த்திருத்தவாதி ஆவார். இவர் தமிழக சமுதாயத்தில் மிகப் பெரியத் தாக்கத்தை எற்படுத்தியவர். இவர் சொன்னதைச் செய்துக் காட்டியவர் என்பது இவரின் உயர்வைக் காட்டுகிறது. இவருடைய தொலை நோக்கான முன்கணிப்பு போல அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் இந்தியா சுதந்திரம் பெற்றது. ஓர் மக்கத்தான இந்தியா பற்றிய இவரின் தொலை நோக்கு சிந்தனைகள் சுதந்திர இந்தியாவில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பாரதியார் தனக்காக வாழாமல் மக்களுக்காகவும் தேசத்திற்காகவும் வாழ்ந்தவர். ஆகையால்தான் மரியாதையுடன் இவரைப் பாரதியார் எனப் போற்றுகின்றனர். பல ஆண்டுகளுக்குப் பிறகும் சுப்ரமணிய பாரதியார் இந்தியசுதந்திரத்தின் சின்னமாகவும் தமிழ் தேசியவாத அதிர்வலையை ஏற்படுத்தியவராகவும் விளங்குகிறார்.
உங்களுக்குத் தெரியுமா?
பாரதியார் செப்டம்பர் பதினோராம் நாள் 1921-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். ஆனால் இவரின் இறுதி சடங்கில் பதினான்கு நபர்கள் மட்டுமே பங்கேற்றனர், இதற்கு சாதியை விட்டு தள்ளி வைக்கப்படுவோம் என்பதுடன் ஆங்கிலேய அரசாங்கத்தின் அடக்கு முறையினால் ஏற்பட்ட பயமே காரணமாகும்.