தமிழக அரசியல் சிந்தனைகள் - பொதுவுடைமைவாதம் ம. சிங்காரவேலர் (1860-1946) | 11th Political Science : Chapter 14 : Tamil Nadu Political Thought
பொதுவுடைமைவாதம்
ம. சிங்காரவேலர் (1860-1946)
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுச்சிபெற்ற சுதேசி மற்றும் தன்னாட்சி இயக்கங்களால் நாடு முழுவதும் விடுதலை உணர்வு பரவியது. சமூகரீதியிலும் இந்து மதத்திற்குள் சில சீர்த்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அரசியல் ரீதியாக இந்தியத் தன்மை அல்லது தேசிய உணர்வு உருவாவதில் இந்த இயக்கங்கள் முக்கியப் பங்கு வகித்தன.
இருந்த போதும் இவை மதவாதத் தன்மையை கொண்டிருந்தன. அதேபோல இந்த இயக்கங்களில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் படித்த மேல்தட்டு வர்க்கத்தினராக இருந்தனர். அவர்கள் கோரும் விடுதலை மட்டுமே அரசியல் விடு தலையாக இருந்தது. அடித்தட்டு மக்களான விவசாயிகள், தொழிலாளர்களின் பொருளாதார நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பெரும்பாலான விவசாயிகள் ஏழைகளாக இருந்தனர். மேலும், காங்கிரசு கட்சிக்குள் சாதிப் பாகுபாடுகள் நிலவின. குறிப்பாக, தமிழகத்தில் பிராமணர், பிராமணரல்லாதவர் என்ற பாகுபாடு நிலவியது.
இந்த நிலைமையில் தமிழக அரசியல் இயக்கத்தில் பகுத்தறிவு கருத்துகள், அறிவியல் பார்வை ஆகியன உருவாவதிலும் விடுதலைப் போராட்டங்களுக்கு ஒரு வட்டாரத் தன்மை அளிப்பதிலும், விடுதலைப் போராட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் நலன்களை இணைப்பதிலும் இந்திய அரசியலில் சமதர்மக் கருத்துகள் பரவியதிலும் ம. சிங்காரவேலரின் அரசியல் சிந்தனைகள் முக்கியப் பங்காற்றின.
தொடக்கத்தில் இந்தியாவில் இருந்து இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து மூலப்பொருட்களாகத் தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்த ஆங்கிலேய அரசு, தங்கள் தேவைகள் அதிகரித்ததால் இந்தியாவிலேயே தொழிற்சாலைகளைத் தொடங்கியது. ஏற்கனவே இந்தியாவில் பாரம்பரியத் தொழில்களை காலனியாதிக்க அரசு முடக்கிவிட்டதால் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து பசி, பட்டினி, வறுமையில் வாடினர். இதனால் மக்களின் வாழ்க்கை தரத்தினை மேலும் மோசமாக்கியது. இதனால கூலி வேலை கிடைத்தால் போதும் என்ற நிலைக்குத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர். இதனால் பின்னர் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் அனைத்திலும் தொழிலாளர்கள் மிகக் குறைவான கூலிக்கு வேலையில் அமர்த்தப்பட்டனர். அடிமைகளைப் போல் உழைத்தனர். போராடினால் கடுமையான அடக்குமுறையால் ஒடுக்கப்பட்டனர்.
இவ்வாறு பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்காகத் தொழிலாளர் அமைப்புகள் உருவாகத் தொடங்கின. அன்றைய சென்னைமாகாணத்தில் இந்த அமைப்புகளுக்கு திரு. வி. கல்யாணசுந்தரனார், தி. வரதராஜுலு போன்றோர் தலைமை தாங்கினர். இந்த தொழிலாளர் அமைப்புகள் உருவாக முன்முயற்சிகள் எடுத்து பாடுபட்டவர் ம. சிங்காரவேலர் ஆவார் என்பது மிகையில்லை.
இந்த தொழிலாளர்களை அரசியல் மையப்படுத்தி விடுதலை இயக்கத்தோடு இணைக்க வேண்டும் என்று ம. சிங்காரவேலர் விரும்பினார். ஆனால் காங்கிரசு கட்சி இதனை விரும்பவில்லை. ம. சிங்காரவேலர் இதனைக் கடுமையாக விமர்சித்து 1920ஆம் ஆண்டிலேயே காங்கிரசு தலைமைக்கு தந்தி அனுப்பினார். தொடர்ந்து அண்ணல் காந்திக்குப் பகிரங்கக் கடிதமும் எழுதினார். அத்துடன் ஹிந்து, சுதேசமித்திரன் உள்ளிட்ட முன்னணி நாளிதழ்களிலும் நவசக்தி போன்ற பருவ இதழ்களிலும் ஏராளமான கட்டுரைகள் எழுதினார். காங்கிரசு தொண்டர்கள் மத்தியிலும் பிரச்சாரம் செய்தார். இச் சமயத்தில் 1922-ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய காங்கிரசு குழுவின் கூட்டத்தில் தமிழகப் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட அவர் அங்கும் விவாதத்தை உருவாக்கி தமக்கு ஆதரவு திரட்டினார். அவரது கருத்துக்கள் வருமாறு:
❖ இந்திய விடுதலை என்பது விவசாயிகள், தொழிலாளர்களின் பொருளாதார சுதந்திரத்தை உள்ளடக்கியதாகும்.
❖ தொழிலாளர்கள், விவசாயிகள் நலன்களுக்காகவும் காங்கிரசு பேரியக்கம் போராட வேண்டும்.
❖ விடுதலைப் போராட்டத்தில் தொழிலாளர்கள், விவசாயிகளையும் இணைத்துக்கொள்ளவேண்டும்.
❖ பல்வேறு அமைப்புகளில் உள்ள மக்களை ஒன்று திரட்ட காங்கிரசு தலைவர்கள் உதவ வேண்டும்.
இதன்விளைவாக 1922 - இல் இந்திய தேசிய காங்கிரசு தொழிலாளர்களை அமைப்பு ரீதியாக ஒன்று திரட்டத் தீர்மானம் நிறைவேற்றியதுடன் இதற்கென ஓர் குழுவினை அமைத்தது. ஆறுபேர்கொண்ட அக்குழுவில் சிங்காரவேலரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று போராடினார். அதனை வலியுறுத்தி அன்றைய முன்னணி நாளிதழ்களில் தொடர்ந்து எழுதினார். இதுபோன்ற முயற்சிகளின் பலனாக முதல் முறையாக 1926-இல் தொழிலாளர் நலன்களைப் பேணும் சட்டம் இயற்றப்பட்டது.
இதேபோல காங்கிரசு தலைவர்கள் அந்தந்த வட்டார மொழிகளில் பேசினால்தான் விடுதலைக் கருத்துகள் மக்களைச் சென்றடையும் என்பதுடன் மக்களுக்கும் காங்கிரசு பேரியக்கத்துக்கும் இடையே நெருக்கம் உருவாகும் என்றார். மக்கள் பிரச்சனைகளைப் பொதுமக்களிடம் பேசும்போது தமிழ் மொழியிலேயே பேச வேண்டும் என உறுதியாக இருந்தார். இதையொட்டி 1918-இல் சென்னை மாகாண சங்கத்தின் மாநாட்டில் இது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் சிங்காரவேலர் மற்றும் ஈ.வெ.ரா பெரியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிராமணர், பிராமணரல்லாதோர் பாகுபாடு காங்கிரசு கட்சியில் நிலவுவதைக் கண்டித்து பெரியார் விலகியபோது ம.சிங்காரவேலர் அவரை ஆதரித்தார். சோவியத் ஒன்றியம் சென்று வந்த ஈ. வெ.ரா பெரியார் அதன் தாக்கத்தில் பொதுவுடைமைவாதக் கருத்துகளை ஏற்றுக்கொண்டு சுயமரியாதை இயக்கத்தினை சுயமரியாதை சமூக நீதிக் கட்சி என்று பெயர் மாற்றினார். அதற்கான கொள்கைத் திட்டங்களை வகுத்தளிப்பதில் ம. சிங்காரவேலர் உறுதுணையாக நின்றார். இந்த அமைப்பு தமிழ்நாடு முழுவதும் பரவ ம. சிங்காரவேலர் அயராது பாடுபட்டார்.
பெரியார் நடத்திய 'குடியரசு' உள்ளிட்ட இதழ்களில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ஏராளமான கட்டுரைகளையும் எழுதினார். அவரது கட்டுரைகள் எளிமையான நடையில் புரிந்துகொள்ளும் வகையில் இருந்தன.
ம. சிங்காரவேலர் பொதுவுடைமைவாதத் தத்துவத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டவர். காங்கிரசு பேரியக்கம் தொழிலாளர் அமைப்புகளை ஆதரிக்க வேண்டும் என்று 1920-இல் தலைமைக்குத் தந்தி அனுப்பினார். அது சென்னை சமதர்மவாதிகள் சார்பில் அனுப்பப்படுவதாக அதில் தெரிவித்திருந்தார். அகில இந்திய காங்கிரசு குழுவின் கூட்டங்களிலும், மாநாடுகளிலும் பொதுவுடைமைவாதப் பிரதிநிதியாகவே வாதிட்டார். தொழிலாளர்கள் பலமாகத் திகழ்ந்த சென்னை நகரில் இந்தியாவின் முதல் உழைப்பாளர் தினத்தை 1923 மே முதல் நாளன்று நடத்திக்காட்டினார். அதே நாளில் தொழிலாளர் விவசாயிகள் கட்சி அமைக்கப்படுவதாகவும் அறிவித்தார்.
அக்கட்சியின் குறிப்பிடத்தக்க கோரிக்கைகள் பின்வருமாறு:
தொழிலாளர்களுக்கான கோரிக்கைகள்
❖ எட்டுமணிநேர வேலை
❖ சங்கம் அமைக்கும் உரிமை
❖ தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க கடைசி ஆயுதமாக வேலைநிறுத்தம் செய்யும் உரிமை
❖ கோரிக்கைகளை பரிசீலிக்க முத்தரப்பு பேச்சுவார்த்தைக் குழு
❖ குறைந்தபட்ச ஊதியம்
❖ அடிப்படை வசதிகளுடன் கூடிய சுகாதாரமான குடியிருப்பு வசதி
❖ மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடு
❖ வருங்கால வைப்பு நிதி
❖ சம்பளத்துடன் கூடிய ஈட்டிய விடுப்பு
❖ இலவச மருத்துவ உதவி
❖ பேறுகால விடுப்பு
❖ ஒப்பந்த முறை ஒழிப்பு
விவசாயிகளுக்கு
❖ இலவச நீர்ப்பாசானம்
❖ சமீன்தார் முறை ஒழிப்பு
பொது மக்களுக்கு
❖ அனைவருக்கும் வாக்குரிமை
❖ அடித்தட்டு மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் போன்றோர் தேர்தலில் போட்டியிட அனுமதி
1925ல் கான்பூர் நகரில் இந்தியாவின் முதல் பொதுவுடைமைவாதம் மாநாடு நடந்தபோது அதற்குத் தலைமை ஏற்று நடத்தித் தந்தார். அப்போது "வன்முறையற்ற மார்க்சியப் பாதை"யை வலியுறுத்திப்பேசினார். மேலும், "இந்தியாவுக்கேற்ற மார்க்சியப் பாதையைத் திட்டமிட வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார். "காங்கிரசு கட்சியில் இருந்துகொண்டே பொதுவுடைமைவாதிகள் தனிப்பிரிவாக இயங்க வேண்டும்" என்றார். இதையொட்டி காங்கிரசு கட்சிக்குள் சமதர்ம பிரிவு உருவானது.
ம. சிங்காரவேலர் இளம் வயதிலேயே இந்து மதத்தில் நிலவும் வர்ண அமைப்பிலும் மூட நம்பிக்கைகளிலும் அதிருப்தி அடைந்திருந்தார். இதன் விளைவாக 1890 களிலேயே பல இடங்களில் பௌத்த சங்கம் அமைத்து வர்ண அமைப்புக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் எதிராகப் பரப்புரை செய்தார்.
வசதி மிக்க குடும்பத்தில் பிறந்து சட்டம் பயின்ற சிங்கார வேலர் சென்னை மாநகராட்சி மன்றத்தில் உறுப்பினராகவும் அதன் சுகாதாரக் குழுவிலும் பணியாற்றினார். அப்போது குடிசைப் பகுதிகளில் கொள்ளை நோய் தாக்கம் அதிகமாக இருந்ததால் சுகாதாரம், கல்வி ஆகிய பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்தார்.
தொடர்ந்து குடிசைப் பகுதிகளில் வாழ்ந்த தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடினார். இதன் அடிப்படையிலேயே காங்கிரசு இயக்கத்தில் செயலாற்றினார். பின்னர் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். தனது ஐம்பது வயதைக் கடந்தபின்பே அரசியலில் இறங்கினாலும் சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக முதுமையையும் பொருட்படுத்தாமல் பகுத்தறிவு மற்றும் பொதுவுடைமைவாதக் கருத்துகளையும் விடாது பிரசாரம் செய்தார். ம. சிங்காரவேலர் தென்னிந்தியாவின் பொதுவுடைமைவாதி என்று நேசத்துடன் நினைவு கூறப்படுகிறார்.