தமிழக அரசியல் சிந்தனைகள் - திராவிடக்கொள்கைவாதம் பெரியார் (1879-1973) | 11th Political Science : Chapter 14 : Tamil Nadu Political Thought
திராவிடக்கொள்கைவாதம்
அறிமுகம்
தமிழக அரசியல் சிந்தனையாளர்களில் இ.வெ.ரா. பெரியார் மிகச்சிறந்த சிந்தனையாளராக கருதப்படுகிறார். ஏனெனில் இவர் தமிழகத்தின் தலை சிறந்த சீர்திருத்தவாதி ஆவார். இவரைப்பற்றி விரிவாக இப்பாடத்தில் காணலாம்.
பன்னெடுங்காலமாக தமிழகத்தைப் பீடித்திருந்த மூடப்பழக்க வழக்கங்கள், பெண்ணடிமை, சமூகப் பின்னடைவுகளுக்கு அறிவையும், சுய மரியாதையையும் அடிப்படையாகக் கொண்டு தனது நெடிய வாழ்நாள் முழுவதும் போராடியவர். இதற்காகத் தந்தை பெரியார் என்று தமிழக மக்களால் அழைக்கப்படுபவர். பண்பாட்டு ரீதியாக அவர் வகுத்துத் தந்த திராவிடக் கருத்துக்கள் இன்று இந்தியா முழுவதும் ஒளி வீசுகிறது என்று புகழ்பெற்ற சமூக நீதி அறிஞர்கள் கூறுகிறார்கள்.
உங்களுக்குத் தெரியுமா?
ஈ.வெ.ராமசாமி என்ற இயற்பெயரைக் கொண்ட தந்தை பெரியார் ஈரோட்டில் செல்வச் செழிப்புள்ள வணிகக் குடும்பத்தில் 1879-இல் பிறந்தார். இளமைப் பருவத்திலேயே தனது குடும்பத்திலும், சுற்றியுள்ள சமுதாயத்திலும் நிலவிய மூட நம்பிக்கையை எள்ளி நகையாடிய பெரியார், தொடக்கத்தில் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை . ஆனாலும், ஈரோடு நகர்மன்றத்தலைவர் போன்ற பொறுப்புகளை வகித்தார்.
காந்தியின் அரசியல் வருகையால் ஈர்க்கப்பட்ட பெரியார் காங்கிரசு இயக்கத்தில் இணைந்து சுதந்திரப் போராட்ட இயக்கத்திலும், சமூக சீர்திருத்தத்திற்காகவும் தீவிரமாகப் பங்காற்றினார். காங்கிரசு இயக்கத்தில் மேட்டுக்குடியினரின் செல்வாக்கு கோலோச்சிய 1920-களில் அடித்தட்டு மக்களிடம் காங்கிரசு பேரியக்கத்தைக் கொண்டு சென்றதிலும், ஆலய நுழைவு போராட்டங்கள் வெற்றி பெற்றதிலும் பெரியார் பெரும் பங்காற்றினார். ஆனால், காங்கிரசு கட்சியில் வர்ணாசிரம கொள்கை கடைப்பிடிக்கப்பட்டதால் அதிலிருந்து விலகி நீதிக்கட்சியில் இணைந்து சுய மரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். இதற்குப் பின்னர் தந்தை பெரியாரின் பங்களிப்புகள் மற்றும் செயல்பாடுகள் இந்திய மற்றும் தமிழக அரசியலில் பிரிக்க முடியாத வரலாறாயின.
தேசத்தின் பெயரால் ஓர் குழு மக்களைச் சுரண்ட நினைத்தால் அத்தேசம் போராடிப்பெற்ற உண்மையான சுதந்திரம் அதுவல்ல என்றார் ஈ.வெ.ரா.பெரியார் பல்வேறு நிலைகளில் தேசம், இனம் மற்றும் தேசியவாதம் ஆகியவற்றை பெரியர் கடுமையாக விமர்சித்தார். தேசம், தேசியவாதம், மற்றும் தேசிவாதம் ஆகியவை ஒரே மாதிரியான கருத்தாக்கங்களே என அவர் கருதினார். இவ்வேறுபாடுகளே அந்நாட்டிலுள்ள ஒட்டுமொத்த குடிமக்களின் சுயமரியாதையைக் குறிப்பதாக அவர் கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில் தமிழகத்தில் தேசியவாதத்தைப் பற்றி யாரேனும் பேசுகையில் அவர்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கிறார்களா? என தாம் வியப்பதாகப் பெரியார் வினவுகிறார்.
தேசியவாதம் என்பது சுரண்டலாகும்
இந்தியர்கள் மற்றும் தமிழர்களை மட்டுமல்லாமல் மக்களின் சுயமரியாதையைப் பற்றியும் கவலைப்படாத மனிதர்களும் உள்ளனர். அவர்கள் தங்களின் சுயநலன் மற்றும் மேம்பாட்டிற்காக மக்களை தேசம் மற்றும் தேசியவாதத்தினை நம்பவைத்து ஏமாற்றுவர், தேசம் மற்றும் தேசியவாதத்திற்காக சுயமரியாதை மறைக்கப்படுமானால் அது தேசத்திற்கு எதிரான குற்றமாகும் என்றார் பெரியார்.
தேசியவாதம் என்பது ஓர் கற்பனையான உணர்வாகும். ஆகவே தேசிய உணர்வு என்பது வசதிமிக்க மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களால் மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்மறை உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் சதியாகும். அது ஓர் தவறான அனுமானமாகும். இதனை வசதிபடைத்த உயர் குடியினர் ஏழை சமுதாயத்தின் உரிமைகளைத் தடுப்பதற்காகப் பயன்படுத்துகின்றனர்.
தேசியவாதம் என்பது மக்களுக்கு ஓர் மயக்கத்தையும் உணர்வுப்பூர்வமான வெறியையும் குறிக்கும் சொல்லாகி விட்டது எனக் கூறுகிறார்.
பெரியார் தனது இலங்கைப் பேருரையில், தேசம், தேசியவாதம் என்பதைக் கடுமையாக எதிர்த்துள்ளார். இந்திய தேசியவாதம்' என்ற கருத்தை சிலர் தங்கள் ஆயுதமாகக் கையிலெடுத்த காலத்தில் தேசியவாதத்தைப் பற்றி பெரியார் எதிர்த்துப் பேசியுள்ளார். இந்திய தேசியவாதத்தை மட்டுமின்றி, உலகில் உள்ள மற்ற நாடுகளின் தேசியங்களையும் சான்றாகக் காட்டி, தேசியவாதத்தை மறுக்கிறார் பெரியார்.
"தேசியவாதம் என்பது முதலாளித்துவவாதிகள் தங்கள் தங்கள் மூலதனத்தை பெருக்கிக் கொள்ள ஏழை மக்களை பலி கடாவாக்குவதற்காகக் கற்பித்துக் கொண்ட தந்திர வார்த்தையாகும்.
உதாரணமாக, "இங்கிலாந்து நாட்டின் பணக்கார சமூகத்திற்கு அமெரிக்கா நாட்டின் பணக்கார சமூகத்துடன் மோதல் வந்தால் இங்கிலாந்து தேசத்து முதலாளிகள், அந்நாட்டின் ஏழைமக்களைப் பார்த்து "ஓ இங்கிலாந்து மக்களே! தேசபக்தர்களே! தேசத்துக்கு நெருக்கடி வந்து விட்டது, என்று கூறி ஏழை சமுதாயத்தை தூண்டுகின்றனர். இவ்வகைப் பொய்யுரைகள் மூலம் மக்களைச் சுரண்டி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்கிறார்கள் என்று கூறுகிறார். பல்வேறு தேசிய இனங்களையும் - தேசங்களையும் உள்ளடக்கிய நாடு ரஷ்யா. அந்த ஒன்றுபட்ட ரஷ்யாவில் எந்த வகையான ஏற்றத் தாழ்வுகளும் இல்லை என்றுகூறி, அந்தவகையான புரட்சிக்கு ஆதரவாக நின்றவர் பெரியார்.
"கடவுள், மதம், மற்றும் தேசியவாதம் ஆகியவை அடியோடு அழிக்கப்பட்ட நாடுகளில் பணக்காரக் கொடுமையும், சோம்பேறி வாழ்க்கையும், பட்டினி கஷ்டமும், உயர்வு தாழ்வு நிலையும் காணப்படவில்லை. அதுபோன்ற நாடுகளில் கடவுள், மதம் மற்றும் தேசப்பற்று ஆகியவை இல்லை. ஆனால் மனித சமூக சமத்துவ சமுதாயமே அந்நாடுகளில் முக்கியமாக்ககருதப்பட்டது. அங்கு பணக்காரன் - ஏழை, முதலாளி - தொழிலாளி, அதிகாரி - குடிமக்கள் என்கின்ற பாகுபாடு காணப்படவில்லை. மேன்மக்களுக்கு சமத்துவ விரும்பிகளும் கடவுள் மற்றும் தேசியவிவாதத்திற்கு முன்னுரிமை தரும் தேசத்திற்கு சமமானவர்கள் அல்ல.
உலகில் உள்ள அனைத்து தேசங்களையும், தேசியங்களையும் கடுமையாக எதிர்த்தது போல 'இந்திய தேசம்' என்பது, பல்வேறு தேசிய இனங்களை - பல்வேறு தேசங்களை இணைத்து உருவாக்கப்பட்ட ஒன்று - அந்த இணைப்பு ஒரு சிலரின் ஆதிக்கத்திற்குக் கருவியாக இருப்பதால் அதையும் பெரியார் எதிர்க்கிறார்.
'தேசம்' என்ற கருத்தியல் இந்தியாவுக்குப் பொருந்துமா? என்ற கேள்விக்கு அவரே சிறப்பான பதில் அளித்துள்ளார்.
"மதராஸ்' என்பது ஒரு தனித் தேசம் அல்லவென்றும் அது தனித்து செயல்பட முடியாது என்றும் தோழர்கள் சிலர் சொல்கிறார்கள். மதராஸ் ஒரு தனி தேசமாக இருந்தது. இன்றும் இருக்கிறது. அதுதான் 'திராவிடம்'. அதனுடைய நாகரிகம், பண்பாடு பழக்கவழக்கங்கள் ஆகியவை வங்காளம், பம்பாயிடம் இருந்து வேறுபட்டது. ஆங்கிலேயர் ஆட்சியால் ஆங்கில மொழி அறிமுகம் ஆகி இருக்கிறது. ஆங்கிலமும் ஆங்கிலேயர் ஆட்சியும் ஒழிந்து ஹிந்தி மொழி வந்தால் அன்றே மதராசானது ஜெர்மனி, இத்தாலி, பிரான்சு முதலிய ஏதோ ஒரு நாட்டுடன் சேர்ந்துவிடும்.
"இந்தியா ஒரு 'தேசம்' என்று சொல்வதைவிட, 'திராவிடநாடு' ஒரு 'தேசம்', ஆந்திரநாடு ஒரு 'தேசம்' வங்காளநாடு ஒரு 'தேசம்' என்று சொன்னாலும் பொருந்தும். உதாரணமாக திராவிட நாட்டை எடுத்துக்கொண்டால் திராவிடநாடு என்று தனிப்பட்ட பண்பாடு கலை, மொழி, நாகரிகம், மற்றும் ஆட்சியின் கீழ் ஆயிரக்கணக்கான வருடங்கள் இருந்து வந்ததென்று சரித்திரம் கூறுவதை யாராலும் மறைக்க முடியாது.
மாறுபட்ட ஆட்சிகளின் கீழ் இருந்துவரும் ஒரு நாட்டை ஒரு 'தேசம்' என்று சொல்லி எல்லா மக்களையும் ஒன்றுபடுத்தி அன்னியனிடமிருந்து விடுதலையடைந்த பின்னர் ஒரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரை ஆளலாம் என்றால், இதை யார் ஒப்புகொள்வார்கள் என்று கேட்கிறார். பெரியார் முன்மொழிந்த 'திராவிட தேசியவாதம்' முற்றிலும் பெருவாரியாக மத ஆதிக்கங்களுக்கு எதிராக இருந்தது.
"அவரவர் மொழியைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அவரவருக்கு உரிமை உண்டு. இந்த உரிமை திராவிட சமதர்மக் குடியாட்சியில் பாதுகாக்கப்படும். எந்த ஒரு மொழியும், மற்றொரு மொழி பேசுபவர் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படக்கூடாது. பிரிவினை வாதத்திற்கான ஆயுதமாக மொழி பயன்படுத்தப்படக்கூடாது. மக்களின் அனைத்து தேவைகளுக்கும் மத்திய அரசாங்கத்தைச் சார்ந்திருப்பது எதனையும் வெளிப்படுத்தாது. ஒருவேளை மொழியானது தேசியமயமாக்கப்பட்டால் மக்களுக்கு அதனால் பட்டினியில் இருந்து விடுதலை கிடைக்குமா? தெளிவாகக் கூறுவதெனில் தமிழ் உழைப்பாளர்கள் தமிழ் பேசும் முதலாளிகளாலேயே சுரண்டப்படுகின்றனர்.
பெரியார் 'தமிழ்நாடு தமிழருக்கே, திராவிடநாடு திராவிடருக்கே' என்று தொடர்சியான பரப்புரைகள், போராட்டங்களை நடத்தினார். பொதுச்செயல்திட்டம், பொதுவேலைத்திட்டம், இஸ்லாமுக்கு மதமாற்றம், திராவிடநாட்டுப் பிரிவினை போன்றவற்றில் பல்வேறு வடிவங்களில் ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடினார்.
ஆனால், ஆதிக்க சக்திகள் மிக எளிதாக, தமிழன், தமிழ்த்தேசியவாதம், தேசிய இனம் போன்ற உணர்வுகளை ஏற்றி, சில தமிழ் தேசியத் தலைவர்கள் மூலமாக மீண்டும் தங்களது ஆதிக்கத்தைத் தொடரும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டபோது, ஒருகால கட்டத்தில் பெரியார், இந்தத் திராவிடநாடே கூட வேண்டாம். சாதி ஒழிப்பே முக்கியம் என்ற முடிவுக்கு வந்தார் என்பதை அவரின் சிந்தனைத் தொகுப்புகள் வழியாக அறியலாம்.
“திராவிடநாடு பெறாவிட்டாலும் சரி; சில ஆதிக்க சக்திகளை ஒழிக்க முடியாவிட்டாலும் சரி; முதலாளித்துவத்தை அழிக்க முடியாது போனாலும் சரி; சாதியை ஒழிக்கின்ற ஒரே காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடித்தால் போதும் என்கிறார். இது ஒன்றே திராவிடர் கழகத்தின் லட்சிய வெற்றி என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அந்த அளவுக்கு இந்த சாதி வெறியானது, திராவிட இனத்தைச் சின்னாபின்னப்படுத்தி ஆரியத்துக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறது.” என்று 1950களின் தொடக்கத்தில் அவர் தனது அரசியல் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
உங்களுக்குத் தெரியுமா?
பெரியார் ஓர் கடவுள் மறுப்புக் கொள்கையுடைய முற்போக்கான சமூக சீர்திருத்தவாதி
பெரியாரின் படைப்புகள் மற்றும் மரபு
சராசரித் தமிழனுக்குப் பெரியார் ஓர் கொள்கையாக உள்ளார். சமூக சமத்துவம், சுயமரியாதை மற்றும் மொழியின் பெருமையை முன்னிறுத்தும் அரசியலை வழி நடத்தினார். ஓர் சமூக சீர்திருத்தவாதியாக அவர் சமூகம், பண்பாடு மற்றும் பாலின சமத்துவமின்மை போன்றவற்றில் கவனம் செலுத்தினார். அவர் மக்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் போது பகுத்தறிவின் அடிப்படையில் செயல்பட வலியுறுத்தினார். பெண்கள் அனைவரும் சுதந்திரமாக இருப்பதுடன் பிள்ளை பெற்றுக் கொடுப்பதற்காக எனும் நிலையை மாற்றி அவர்களுக்கு வேலை சுயமரியாதை இயக்கம், சடங்குகளற்ற திருமணங்களை ஊக்குவித்ததுடன் பெண்களுக்கு சொத்துரிமை மற்றும் விவாகரத்து செய்யும் உரிமைகளும் வழங்க வேண்டும் எனப் போராடினார். அவர் மக்கள் தங்களின் பெயருக்கு பின் உள்ள சாதிப் பெயரை கைவிடுமாறும் அதனைக் குறிப்பிட வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தார். 1930-களில் பட்டியல் இனத்தவரால் சமைக்கப்பட்ட உணவை பொதுக்கூட்டங்களின் பின்னர் சமபந்தியாக நடத்திக் காட்டினார். காலப்போக்கில் சாதி, மத அரசியல் வேறுபாடுகளைக் கடந்த பெருமதிப்புடன் ‘பெரியார்’ நவீன தமிழகத்தின் தந்தையென அழைக்கப்படுகிறார்.
நன்றி அருண் ஜனார்த்தனன், தி.நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 13.3.2018